82. சொல் ஒன்று - செயல் ஒன்று

தனத்திலே மிகுத்தசெழுந் தண்டலையார்

     பொன்னிவளம் தழைத்த நாட்டில்,

இனத்திலே மிகும்பெரியோர் வாக்குமனம்

     ஒன்றாகி எல்லாம் செய்வார்;

சினத்திலே மிகுஞ்சிறியோர் காரியமோ

     சொல்வதொன்று! செய்வதொன்று!

மனத்திலே பகையாகி உதட்டிலே

     உறவாகி மடிவர் தாமே.


இதன் பொருள் ---

        தனத்திலே மிகுந்த செழுந்தண்டலையார் பொன்னி வளம் தழைத்த நாட்டில் - செல்வத்திலே சிறப்புற்ற வளமிக்க திருத்தண்டலை இறைவருடைய காவிரியின் வளங்கொழிக்கும் நாட்டிலே, இனத்திலே மிகும் பெரியோர் மனம் வாக்கு ஒன்று ஆகி எல்லாம் செய்வார் - நட்பிலே சிறந்த பெரியோர்கள் நினைவும் சொல்லும் ஒன்றுபட்டு யாவற்றையும் இயற்றுவார்கள்; சினத்திலே மிகும் சிறியோர் காரியமோ சொல்வது ஒன்று செய்வது ஒன்று - செற்றத்திலே சிறந்த கீழ்மக்களின் வேலையெனிலோ கூறுவது ஒன்று, செய்வது மற்றொன்று, மனத்திலே பகை ஆகி உதட்டிலே உறவு ஆகி மடிவர் - உள்ளத்திலே பகை வைத்துக்கொண்டு பேச்சிலே உறவு காண்பித்துக் காலத்தைக் கழிப்பர்.


         ‘உள்ளே பகை, உதட்டில் உறவு,' என்பது பழமொழி. "கனவினும் இன்னாது மன்னோ, வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு" என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. பின்வரும் பாடல்களின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.


“யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்

தேருந் துணைமை உடையவர், - சாரல்

கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்

மனம்வேறு செய்கையும் வேறு.” --- நாலடியார்.

இதன் பொருள் ---

யார் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் துணைமை உடையவர் - யாருக்கு ஒருவரது உள்ளத்தைத் தேர்ந்து அறியும் ஆற்றல் உள்ளது?, சாரல் கன மணி நின்று இமைக்கும் நாட கேள் – மலைச் சாரலில் பெரிய மாணிக்க மணிகள் கிடந்து ஒளிவிடும் நாடனே! கேள்;  மக்கள் மனம் வேறு செய்கையும் வேறு - உலகத்தில் மக்களின் உள்ளமும் வேறு செய்கையும் வேறாகவே இருக்கின்றனவே!


“மனம்வேறு சொல்வேறு மன்னு தொழில்வேறு

வினைவேறு பட்டவர்பால் மேவும், - அனமே,

மனமொன்று சொல்லொன்று வான்பொருளும் ஒன்றே

கனம்ஒன்று மேலவர்தம் கண்.” ---  நீதிவெண்பா.

இதன் பொருள் ---

அன்னம் போன்றவளே! ஒழுங்கற்ற செயலைச் செய்யும் கீழோரிடத்தில் மனமும் சொல்லும் செய்யும் செயலும் ஒன்று பட்டு இராது. வேறு வேறாக இருக்கும். ஆனால், பெருமை பொருந்திய பெரியோரிடத்தில் மனமும் சொல்லும் உயர்ந்த செயலும் ஒன்றாகவே இருக்கும்.


No comments:

22. புல்லர் இருமலுக்கு ஒப்பு

“துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே, மன்னும் இனிமையால் மாறாகிப் - பன்னும் கடுவும் கடுநேர் கடுமொழியும் கண்டால் கடுக வசமாகை யால்.” — ...