84. வழுவழுத்த உறவு

இழைபொறுத்த முலைபாகர் தண்டலையார்

     வளநாட்டில் எடுத்த ராகம்

தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய்

     இருப்பதுவே தக்க தாகும்!

குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும்

     கல்லாமை குணமே! நாளும்

வழுவழுத்த உறவதனின் வயிரம்பற்

     றியபகையே வண்மை யாமே.


இதன் பொருள் ---


    இழை பொறுத்த முலைபாகர் தண்டலையார் வளநாட்டில் – அணிகள் தாங்கிய முலைகளை உடைய உமையம்மையாரைத் தமது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்ட திருத் தண்டலை இறைவரின்  வளம்பொருந்திய  நாட்டிலே,  எடுத்த ராகம் தழுதழுத்துப்  பாடுவதின்  மௌனமாய் இருப்பதுவே தக்கது ஆகும் - தொடங்கிய இசையைத் தடுமாற்றத்துடன் பாடுவதைக்  காட்டினும் பாடாமல் இருப்பதே நலம் தரும்; குழை குழைத்த கல்வியினும்  கேள்வியினும் கல்லாமை குணமே - தெளிவற்ற  கல்வி  கேள்விகளை விடக்  கல்லாமையே நன்மை தருவதாகும்; நாளும் வழுவழுத்த உறவதனின் வயிரம் பற்றிய பகையே வண்மை ஆம் - எப்போதும் மனத் தெளிவற்ற உறவைக் காட்டிலும் நீங்காத சினத்தைப் பொருந்திய பகையே வளம் உடையதாகும்.


No comments:

பொது --- 1117. பக்கமுற நேரான

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பக்கம்உற நேரான (பொது) முருகா! உடம்பில் இருந்து உயிர் நீங்குமுன்,   உமது திருவடியை வழிபட்டு நல்வாழ்வு பெற அ...