அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மக்கள் ஒக்கல் (பொது)
முருகா!
தேவரீரது திருவடி மலர்களை வழிபட்டு உய்யும் புத்தியை அடியேனுக்கு அருள்வாயாக.
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
தத்தனத் தத்ததன ...... தனதான
மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்
மற்றுமுற் றக்குரவ ...... ரனைவோரும்
வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு
மட்டுமற் றுப்பெருகு ...... மடியாரும்
புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது
பொய்க்குமெய்க் குச்செயலு ...... முருகாதே
புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு
புத்திமெத் தத்தருவ ...... தொருநாளே
செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு
செக்கமுற் றச்சலமு ...... மதிசூடி
சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு
சித்தமுத் திச்சிவமு ...... மருள்வோனே
கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை
கொத்தினொக் கக்கொலைசெய் ...... வடிவேலா
கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது
குத்திவெட் டிப்பொருத ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மக்கள், ஒக்கல், தெரிவை, பக்கம் மிக்கத் துணைவர்,
மற்றும் உற்றக் குரவர், ......அனைவோரும்
வைத்த செப்பில் பணமும், ரத்ன முத்தில் பணியும்,
மட்டும் அற்றுப் பெருகும் ...... அடியாரும்,
புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்கப் புகுது
பொய்க்கு மெய்க்குச் செயலும் ...... உருகாதே,
புஷ்பம் இட்டு, கருணை நற்பதத்தைப் பரவு,
புத்தி மெத்தத் தருவது ...... ஒருநாளே?
செக்கர் கற்றைச் சடையில் மிக்க கொக்கில் சிறகு,
செக்கம் உற்றச் சலமும், ...... மதிசூடி,
சித்தம் உற்றுத் தெளிய மெத்த மெத்தத் திகழும்,
சித்த முத்திச் சிவமும் ...... அருள்வோனே!
கொக்கு உறுப்புக் கொடு மை நிற்கும் வட்டத்து அசுரை
கொத்தின் ஒக்கக் கொலை செய் ...... வடிவேலா!
கொற்ற வெற்றிப் பரிசை ஒட்டி எட்டிச் சிறிது
குத்தி வெட்டிப் பொருத ...... பெருமாளே.
பதவுரை
செக்கர் கற்றைச் சடையில் --- சிவந்து திரண்டுள்ள திருச்சடையில்,
மிக்க கொக்கின் சிறகு --- நிரம்ப கொக்கின் இறகையும்,
செக்கம் உற்றச் சலமும் --- பூதலத்தில் வரும் கங்கை நதியையும்,
மதி சூடி --- பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபரம்பொருளுக்கு,
சித்தம் உற்றுத் தெளிய --- அவரது சித்தத்தில் பதிந்து தெளிவு உண்டாகும்படியாக,
மெத்த மெத்தத் திகழு(ம்) சித்த முத்திச் சிவமும் அருள்வோனே --- மிகவும் சிறந்து விளங்கும் திடமான முக்தி நிலையை அருள்வதாகிய நன்மைப் பொருளை உபதேசித்து அருளியவரே!
கொக்கு உறுப்புக் கொடு --- மாமரத்தின் உறுப்புக்களோடு கூடி,
மை நிற்கும் வட்டத்து அசுரரை --- கறுத்த வட்டமாகிய கடலில் நின்ற சூரபதுமனையும், அவனைச் சார்ந்தவர்களையும்,
கொத்தின் ஒக்கக் கொலை செய் வடிவேலா --- ஒரே கொத்தாக மொத்தமாக அழித்த கூர்மை பொருந்திய வேலாயுதத்தை ஏந்தியவரே!
கொற்றம் வெற்றிப் பரிசை ஒட்டி எட்டிச் சிறிது குத்தி வெட்டிப் பொருத பெருமாளே --- வீரமும், வெற்றியும் கொண்ட கேடயத்துடன், அருகில் நின்றும், தூரத்தில் நின்றும், சிலரை வேலால் குத்தியும், சிலரை வாளால் வெட்டியும் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!
மக்கள் ஒக்கல் தெரிவை --- பிள்ளைகள், சுற்றத்தார், மனைவி,
பக்கம் மிக்கத் துணைவர் --- பக்கத்தில் உள்ள உடன்பிறந்தார்கள், நண்பர்கள் முதலியோர்,
மற்றும் உற்ற குரவர் அனைவோரும் --- மற்றும் உள்ள பெரியோர்கள் முதலிய எல்லோரும்,
வைத்த செப்பில் பணமும் --- அடியேன் சேர்த்து வைத்த பணமும்,
ரத்னம் முத்தில் பணியும் --- இரத்தினம், முத்து ஆகியவைகளால் செய்யப்பட்ட அணிகலன்களும், (ஆகிய இவை யாவும் என்னுடன் வராது ஒழிய)
மட்டும் அற்றுப் பெருகும் அடியாரும் --- (எனது பிணத்தின் பின்னே) அளவில்லாது திரண்டு கூடுகின்ற அடியார்களும்,
புக்கு துக்கித்து --- கூடித் துக்கம் கொண்டு,
எரிகள் தத்த வைக்கப் புகுது --- கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் வைக்கப் போகின்ற
பொய்க்கு மெய்க்குச் செயலும் உருகாதே --- நிலையில்லாத இந்த உடலினை ஓம்புதற்பொருட்டும், உலக இன்பங்களை அனுபவித்தற் பொருட்டும் ஆகிய செயல்களில் மனத்தை ஈடுபடுத்தாமல்,
புஷ்பம் இட்டுக் கருணை நல் பதத்தைப் பரவு புத்தி மெத்தத் தருவது ஒரு நாளே --- மலர்களை இட்டு, தேவரீருடைய கருணைக்கு இருப்பிடமான திருவடிகளைப் போற்றிப் பரவுகின்ற புத்தியை அடியேனுக்கு நிரம்பக் கொடுக்கும் நாள் ஒன்று உண்டாகுமா?
பொழிப்புரை
சிவந்து திரண்டுள்ள திருச்சடையில், நிரம்ப கொக்கின் இறகையும், பூதலத்தில் பாயும் கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபரம்பொருளுக்கு, அவரது சித்தத்தில் பதிந்து தெளிவு உண்டாகும்படியாக, மிகவும் சிறந்து விளங்கும் திடமான முக்தி நிலையை அருள்வதாகிய நன்மைப் பொருளை உபதேசித்து அருளியவரே!
மாமரத்தின் உறுப்புக்களோடு கூடி, கறுத்த வட்டமாகிய கடலில் நின்ற சூரபதுமனையும், அவனைச் சார்ந்தவர்களையும், ஒரே கொத்தாக மொத்தமாக அழித்த கூர்மை பொருந்திய வேலாயுதத்தை ஏந்தியவரே!
வீரமும், வெற்றியும் கொண்ட கேடயத்துடன், அருகில் நின்றும், தூரத்தில் நின்றும், சிலரை வேலால் குத்தியும், சிலரை வாளால் வெட்டியும் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!
பிள்ளைகள், சுற்றத்தார், மனைவி, பக்கத்தில் உள்ள உடன்பிறந்தார்கள், நண்பர்கள் முதலியோர், மற்றும் உள்ள பெரியோர்கள் முதலிய எல்லோரும், அடியேன் சேர்த்து வைத்த பணமும், இரத்தினம், முத்து ஆகியவைகளால் செய்யப்பட்ட அணிகலன்களும் ஆகிய இவை யாவும் என்னுடன் வராது ஒழிய,
எனது பிணத்தின் பின்னே அளவில்லாது திரண்டு கூடுகின்ற அடியார்களும் கூடித் துக்கம் கொண்டு, கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் வைக்கப் போகின்ற நிலையில்லாத இந்த உடலினை ஓம்புதற்பொருட்டும், உலக இன்பங்களை அனுபவித்தற்பொருட்டும் ஆகிய செயல்களில் மனத்தை ஈடுபடுத்தாமல், மலர்களை இட்டு, தேவரீருடைய கருணைக்கு இருப்பிடமான திருவடிகளைப் போற்றிப் பரவுகின்ற புத்தியை அடியேனுக்கு நிரம்பக் கொடுக்கும் நாள் ஒன்று உண்டாகுமா?
விரிவுரை
செக்கர் கற்றைச் சடை ---
சிவபரம்பொருளினது திருச்சடையானது சிவந்து திரண்டுள்ளது என்பதை, “செஞ்சடைக் கற்றை” என்னும் அப்பர் வாக்கால் அறிக.
மிக்க கொக்கின் சிறகு ---
“கொக்கிறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு
அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே” என்பதும்
“கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்” என்பதும் அப்பர் அருள்வாக்கு. “கொக்கு இறகும் பாடி” என்பது மணிவாசகம்.
“கொக்கின் தூவலும், கூவிளம் கண்ணியும்,
மிக்க வெண்டலை மாலை விரிசடை
நக்கன் ஆகிலும் நாரையூர் நம்பனுக்கு,
அக்கின் ஆரமும், அம்ம அழகிதே.”. – திருஞானசம்பந்தர்.
கொக்கின் வடிவில் இருந்த குரண்டாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதன் அடையாளமாக கொக்கின் இறகினை ஆபரணமாகச் சிவபெருமான் என்பது புராண வரலாறு.
செக்கம் உற்றச் சலமும் ---
“செகம்” என்னும் சொல், “செக்கம்” என்று வந்தது. செகம் – உலகம்.
சலம் – நீர். இங்கே கங்கை நதியைக் குறிக்கும். சிவபிரான் கங்கையைத் தமது திருச்சடையில் தாங்கியவர்.
சிவபரம்பொருள் கங்கையைத் திருச்சடையில் தாங்கிய வரலாறு
திருக்கயிலாய மலையில் திருநந்தனவனத்தில் சிவபெருமான் ஒரு சமயம் வீற்றிருந்து அருளினார். உமாதேவியார் திருவிளையாட்டாக மெல்லப் பின்புறமாக ஓசை உண்டாகாமல் வந்து, எம்பெருமான் திருக்கண் மலர்களைக் கரமலர்களால் மூடினர். அதனால் உலகமெல்லாம் இருண்டன. சந்திர சூரியர் முதலிய எல்லா ஒளியும் எம்பெருமான் திருக் கண்களினின்றே வெளிப்படும். ஆதலினால்,
எல்லா ஒளியும் மாய்ந்து இருண்டன. அம்பிகை கண் புதைத்த அந்த ஒரு கணம், அமரர் முதலியோர்க்குப் பல யுகங்கள் ஆயின. அக் காலம் எம்பெருமான் உலகங்கட்கு அருள் புரியக் கருதி நெற்றிக் கண்ணைத் திறந்து உலகங்கட்கு ஒளியை அருளினார். அவ் ஒளியால் உயிர்கள் யாவும் உவகை உற்றன. கண்ணுதற்பெருமான் செயலைக் கண்ட உமாதேவியார் அஞ்சி, கண்களை மூடிய கரங்களை எடுத்தார். அப்போது, அம்பிகையின் விரல்களில் வியர்வை உண்டாக, பத்து விரல்களினின்றும் பத்து கங்கைகள் கடல் போலத் தோன்றின.
சங்கரன் விழிகள் மூடும் தனாதுகை திறக்கும் எல்லை
அங்குலி அவை ஈர்ஐந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற
மங்கையைத் தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து
கங்கையோர் பத்தாய் ஆண்டுக் கடல்களில் செறந்த அன்றே. --- கந்தபுராணம்.
ஆயிரம் கோடி முகங்களுடன் தோன்றிய கங்கை எங்கும் தண்ணீர் மயமாகப் பரவியது கண்ட அமரர்கள் அஞ்சி, திருக்கயிலை மலையை அடுத்து, ஆலமுண்ட நீலகண்டப் பெருமானை நெடிது வணங்கி, "ஐயனே! எம்மை ஆட்கொள்வாய். முன்னொரு வந்த விடம்போலப் பரவி எம்மையும் உலகங்களையும் அழிக்கும் கங்கையைத் தடுத்து ஆட்கொள்ளும்" என்று வேண்டினார்கள். உடனே, இறைவன் உலகமெல்லாம் பரவியுள்ள நீரை அழைத்து, தனது சடாமகுடத்தில் ஒரு உரோமத்தில் அமைத்தனர். அது கண்ட அமரர் முதலானோர் வணங்கி, "ஐயனே! இக் கங்கை ஞானாம்பிகையின் கர மலரில் தோன்றி தேவரீர் சடையில் தங்கினமையால் புனிதம் ஆயிற்று.
எங்கள் நாட்டிலும் இக் கங்கை இருந்து புனிதமாக்குமாறு திருவருள் புரியும்" என்று வேண்டினார்கள். சிவபெருமான் அவர்கள் வேண்டுகோளின்படி, தமது சடைமுடியில் உள்ள கங்கையைச் சிறிது எடுத்து இந்திரன், பிரமதேவர், திருமால் ஆகிய மூவருடைய கைகளில் தந்தருளினார். அதனை அவர்கள் தத்தம் ஊர்களில் விடுக்க, மூன்று உலகங்களிலும் கங்கை பெருகியது.
பின்னர், மாதவத்தின் மிக்க பகீரதன் வேண்ட சத்திய உலகில் உள்ள கங்கை வானில் இருந்து வர, சிவபெருமான் மீண்டும் உலகம் உய்ய அதனைச் சடையில் தாங்கி சிறிது உலகிற்கு உபகாரமாக விடுத்தனர். அது கடல் வழியே சகரர் எலும்பில் தோய்ந்து, அவர்கட்கு நற்கதி நல்கியது. ஏனைய நதிகளும் அவ்வவ் உலகில் பரவி ஆங்காங்கு புண்ணிய மயமாகி விளங்கின.
மதி சூடி ---
சிவபிரான் திருச்சடையில் மதி சூடிய வரலாறு
மலர்மிசை வாழும் பிரமதேவனது மானத புத்திரருள் ஒருவனாகிய தக்கன் தான்பெற்ற அசுவினி முதல் ரேவதி ஈறாயுள்ள இருபத்தியேழு பெண்களையும், அநுசூயாதேவியின் அருந்தவப் புதல்வனாகிய சந்திரன் அழகில் சிறந்தோனாக இருத்தல் கருதி அவனுக்குத் திருமணம் புணர்த்தி, அவனை நோக்கி, “நீ இப்பெண்கள் யாவரிடத்தும் பாரபட்சமின்றி சமநோக்காக அன்பு பூண்டு ஒழுகுவாயாக” என்று கூறிப் புதல்வியாரைச் சந்திரனோடு அனுப்பினன். சந்திரன் சிறிது நாள் அவ்வாறே தனது மனைவியருடன் வாழ்ந்தான். பின்னர் கார்த்திகை உரோகணி என்ற மாதர் இவரும் பேரழகு உடையராய் இருத்தலால், அவ்விரு மனைவியரிடத்திலே கழிபேருவகையுடன் கலந்து, ஏனையோரைக் கண்ணெடுத்தும் பாராதவன் ஆயினான். மற்றைய மாதர்கள் மனம் வருந்தி, தமது தந்தையாகிய தக்கனிடம் வந்து தம் குறைகளைக் கூறி வருந்தி நின்றனர். அது கண்ட தக்கன் மிகவும் வெகுண்டு, சந்திரனை விளித்து “உனது அழகின் செருக்கால் என் கட்டளையை மீறி நடந்ததனால் இன்று முதல் தினம் ஒருகலையாகத் தேய்ந்து ஒளி குன்றிப் எல்லோராலும் நீ இகழப்படுவாய்” என்று சபித்தனன்.
அவ்வாறே சந்திரன் நாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து பதினைந்து நாட்கள் கழிந்தபின் ஒருகலையோடு மனம் வருந்தி, இந்திரனிடம் சென்று தனக்கு உற்ற இன்னல்களைக் கூறி “இடர் களைந்து என்னைக் காத்தருள்வாய்” என்று வேண்டினன். இந்திரன், “நீ பிரமதேவர்பால் இதனைக் கூறு, அவர் தன் மகனாகிய தக்கனிடம் சொல்லி சாபவிமோசனம் செய்தல் கூடும்” என, அவ்வண்ணமே சந்திரன் பிரமதேவனைச் சரண்புகுந்தான். “சந்திரா! தக்கன் என்னைத் தந்தையாக மதித்து, எனது சொல்லைக் கேளான். நீ திருக்கயிலையை அடைந்து கருணாமூர்த்தியாகியக் கண்ணுதற்கடவுளைச் சரண்புகுந்தால், அப்பரம்பொருள் உனது அல்லலை அகற்றுவார்” என்று பிரமதேவன் சொன்னார். சந்திரன் திருக்கயிலைமலை சென்று, நந்தியெம்பெருமானிடம் விடைபெற்று மகா சந்நிதியை அடைந்து, அருட்பெருங்கடலாகியச் சிவபெருமானை முறைப்படி வணங்கி, தனக்கு நேர்ந்த சாபத்தை விண்ணப்பித்து, “பரம தயாளுவே! இவ்விடரை நீக்கி இன்பம் அருள்வீர்” என்ற குறையிரந்து நின்றான். மலைமகள் மணாளன் மனமிரங்கி, “அஞ்சேல்” என அருள் உரை கூறி அவ்வொரு கலையினைத் தமது திருமுடியில் தரித்து, “உனது கலைகளில் ஒன்று நமது திருமுடியில் இருத்தலால் நாளுக்கொரு கலையாக வளர்ந்தும், குறைந்தும் இருக்கக் கடவாய், எப்போதும் ஒரு கலை உன்னை விட்டு நீங்காது” என்று கருணைப் பாலித்தனர்.
“எந்தை அவ்வழி மதியினை நோக்கி, நீ யாதும்
சிந்தை செய்திடேல், எம்முடிச் சேர்த்திய சிறப்பால்
அந்தம் இல்லை இக் கலை இவண் இருந்திடும், அதனால்
வந்து தோன்றும் நின் கலையெலாம் நாள்தொறும் மரபால். “ --- கந்தபுராணம்.
சித்தம் உற்றுத் தெளிய மெத்த மெத்தத் திகழு(ம்) சித்த முத்திச் சிவமும் அருள்வோனே ---
சிவபிரானுக்கு உண்மைப் பொருளை உபதேசித்த வரலாறு
திருமால், பிரமன், இந்திரன், சிவபெருமான் முதலியோருக்கு முருகப் பெருமான் அறம், பொருள் இன்பம் முத்திறத்து உறுதிப் பொருள்கை விளக்கும் மனு நூலை ஓதிய பெருமையை உடையவர் முருகப் பெருமான். சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.
திருக்கயிலை மலையின்கண் குமாரக்கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த பிரமதேவனை முருகப் பெருமான் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.
பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து, “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்கும் முகத்தால், எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு,
புன்முறுவல் பூத்த முகத்தினராய் ஆறுமுகவள்ளலை நோக்கி, “அமரர் வணங்கும் குமரநாயகா! அறியாமை காரணமாகவாவது, உரிமைக் குறித்தாவது நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்ய்யமாட்டார். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும்,
அறியாமலும் பெரும்பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால், பிரமனும் அறிவின்மையால் உன்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் உனக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.
எந்தை கந்தவேள் புன்முறுவல் பூத்து, “தந்தையே! ஓம் என்னும் ஓர் எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் எப்படி உலகங்களைச் சிருட்டி செய்யலாம். அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழிலை எவ்வாறு தேவரீர் கொடுக்கலாம்?” என்றனர்.
சிவபெருமான் “மைந்தா! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்று வேண்டினர். குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் சொல்வேன்” என்றனர்.
அது கேட்டு “செல்வக் குமரா! உண்மையே உரைத்தனை. ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எப்போதும் நீங்காது விருப்பமுடன் அமரும் தணிகைமலையை நாம் அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு விடையினைஉ ஊர்ந்து, தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பாலது என்று உலகவர் தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.
கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு மாணவ பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.
“எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.” --- தணிகைப் புராணம்.
“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே” --- (கொடியனைய) திருப்புகழ்.
மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா.... --- (விறல்மாரன்) திருப்புகழ்.
சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா... --- திருப்புகழ்.
பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின்முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.
“அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.” --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.
தேவதேவன் ஆகிய சிவபெருமான், மாணவ பாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையில் சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
“தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.” --- தணிகைப் புராணம்.
மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
என்னும் திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு நோக்கத்தால் காரியப்படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையில் இருந்து, முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்தவித்தை
ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்தமாயையில் இருந்து தோன்றுவன. இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
திருக்கோவையாரிலும்,
“தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.”
என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
“வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. “ --- திருமந்திரம்.
“கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்.... “ --- குமரகுருபரர்.
“பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.” --- அபிராமி அந்தாதி.
“தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை, மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி,ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.” --- அபிராமி அந்தாதி.
“சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.” --- சிவஞான சித்தியார்.
கொக்கு உறுப்புக் கொடு ---
கொக்கு – மாமரம். மாமரத்தின் அங்கங்களோடு சூரபதுமன் கடலில் நின்றான்.
இது குறித்த வரலாறு
மாயையின் மகனாகிய சூரபதுமன் சிவமூர்த்தியின்பால் பற்பல வரம் பெற்று உள்ளம் தருக்கி, அறநெறிப் பிறழ்ந்து அமரர்க்குத் துன்பம் விளைத்தான். குமாரக்கடவுள் தேவர்களை சிறைமீட்கும் பொருட்டு, போர் புரிந்து அசுரர் அனைவரையும் அழித்தார். முடிவில் சூரபதுமன் போர்க்கோலம் கொண்டு ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் உள்ள சேனைகளைத் திரட்டிக்கொண்டு வந்தான். அப்பெருஞ் சேனையைக் கண்ட பூதவெள்ளங்களும் சேனாதிபதிகளும் வீரபாகு ஒழிந்த ஏனைய வீரர்களும் உள்ளம் நடுங்கினர். தேவர்கள் அளக்க ஒண்ணாத் துன்பத்தை அடைந்தனர். முருகப் பெருமானார் அப்பெருஞ் சேனைகளையெல்லாம் அழித்தனர். முருகவேளும் சூரபதுமனும் நெடுநேரம் போர் புரிந்தனர். சூரபதுமனுடையப் பற்பல ஆயுதங்களும் மாயத் திறங்களும் ஒழிந்தன. முடிவில் “இக்குமரனைக் கொணர்ந்து போரை விளைவித்த தேவர்களை முதலில் கொன்று சிறிது சினந் தணிந்தபின் இக்குமரனோடு போர்புரிவேன்” என்று நினைத்து ஒரு மாயமந்திரத்தைச் செபித்து, உலகமுழுவதும் பெரிய இருள் சூழுமாறு செய்து, அவ்விருளில் வாளையேந்தித் தேவர்களைக் கொல்லுதற் பொருட்டு விண்ணில் பாய்ந்தனன். அதனைக் குறிப்பாலுணர்ந்த அரிபிரமாதி தேவர்கள்....
“தேவர்கள் தேவே ஓலம் சிறந்தசிற் பரனே ஓலம்
மேவலர்க்கு இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க்கு எளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்”
என்று முறையிட்டனர். அம்முறையைக் கேட்டு மூவிருமுகங் கொண்டுள்ள முழுமுதற்கடவுள், சேயின் அழுகை கேட்ட தாயைப்போல் தண்ணருள் சுரந்து, தமது திருக்கரத்தில் வைகும் செங்கதிர் வேலாயுதத்தை நோக்கி, “நீ விரைந்து சென்று சூரபதுமனுடைய மாயைகளையும் ஆற்றலையும் அழித்து அவனது உடலைப் பிளந்து வருவாய்” என்று ஆணை தந்தனர். உடனே வேற்படையானது ஆயிரங்கோடி சூரியர்கள் ஒருங்கு கூடினாற் போலத் திகழ்ந்து அக்கினி மழையைப் பொழிந்து கொண்டு சூரன் கொண்ட இருளுருவத்தை இமைப்பொழுதில் அழித்தது.
“அரியும் அயனோடு அபயம் எனவே
அயிலை இருள்மேல் விடுவோனே” --- (இருவர்) திருப்புகழ்.
சூரபதுமன் “முடிவில்லாத வரத்தையுடைய என்னை இவ்வேற்படை என்ன செய்யும்? இதன் திறத்தை தான் அழிப்பேன்” என்று அண்ட முகடுகள் நடுங்கச் சிரித்து, மிகுந்த சீற்றங்கொண்டு “சமுத்திரம், பூதலம், பிரமாதி தேவர்களது உலகங்கள், உயிர்கள் முதலிய அனைத்தையும் இப்பொழுதே அழிப்பேன்” என்று விரைந்து சென்றுகடல் நடுவில், நெருப்புப் போலும் தளிர்களும், புகைபோன்ற இலைகளும், மேகக்கூட்டங்கள் போன்ற கிளைகளும், மரகதக் கற்கள் போன்ற பிஞ்சுகளும், மாணிக்கத்தை ஒத்த பழங்களும் கொண்டு பிரமாண்டச் சுவர்வரையிலும் வேரோடி, இலக்க யோசனைத் தூரமளவும் விசாலித்த தலைகீழான மாமர வடிவங்கொண்டு, சகல லோகங்களையும் நடுநடுங்க மோதினான்.
“வன்னியின் அலங்கல் கான்று, வான்தழை புகையின் அல்கிப்
பொன்னென இணர்கள் ஈன்று, மரகதம் புரையக் காய்த்து,
செந்நிற மணிகள் என்னத் தீப்பழம் கொண்டு, கார்போல்
துன்னுபல் கவடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான்.”
அட்ட நாகங்களும் திக்கு யானைகளும் சந்திர சூரியரும் எல்லா உயிர்களும் அஞ்சி ஓலமிட்டன. அந்த மாமரம் சிறிது அசைந்தபொழுது எல்லா உலகங்களும் அசைந்தன. குலகிரிகள் பொடிபட்டன. உலகத்தைத் தாங்கும் கூர்மமும் ஆதிசேடனும் புரண்டனர். நட்சத்திரங்கள் உதிர்ந்தன, அண்டங்களெல்லாம் தகர்ந்தன. நாரணன் உலகும் நான்முகனுலகும் அழிந்தன. தேவர்களெல்லாம் வெருவித் திருக்கயிலையை நாடி ஓடினர். அறுமுகப் பெருமான் விடுத்த அயிற்படை, ஆயிரங்கோடி அண்டத்து அக்கினியும் ஒன்று சேர்ந்தாற்போல் பெருநெருப்பு வடிவு தாங்கிச் சென்று,
“தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்து
ஆயிரகோடி அண்டத்து அங்கியும் ஒன்றிற்று என்ன
மீயுயர்ந்து ஒழுகி ஆன்றோர் வெருவரும் தோற்றங் கொண்டு
நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்தது அன்றே.”
மூதண்ட முகடுவரை வளர்ந்தோங்கி கிளைகளை அசைத்து உலகங்களை எல்லாம் அசைத்து அழிக்கின்ற மாமரத்தை வேற்படையானது இரு கூறாகப் பிளந்தது.
“விடம்பிடித்த அமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி
இடம்பிடித் திட்ட தீயில் தோய்த்துமுன் இயற்றி யன்ன
உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏகி
மடம் பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே.”
மை நிற்கும் வட்டத்து அசுரரை ---
மை – கருமை. மை நிற்கும் வட்டம் – கருமைலநிறம் பொருந்திய வட்ட வடிவான கடல்.
மக்கள் ஒக்கல் தெரிவை ---
மக்கள் – ஈன்றெடுத்த பிள்ளைகள்.
ஒக்கல் – சுற்றத்தார்.
தெரிவை – இருபத்தைந்து முதல் முப்பது வயதிற்கு உட்பட்ட பெண். இங்கே மனைவியைகு குறிக்கும்.
ரத்னம் முத்தில் பணியும் ---
பணி – அணிகலன். இரத்தினம் முத்து ஆகியவற்றால் செய்யப்பெற்ற அணிகலன்கள்.
மட்டும் அற்றுப் பெருகும் அடியாரும் ---
மட்டு – அளவு, எல்லை, குறைவு.
அளவின்றி, எல்லை இல்லாது, குறைவு இன்றிப் பெருகி உள்ள அடியவர்கள்.
துக்கித்து, எரிகள் தத்த வைக்கப் புகுது ---
மேலே சொன்ன அனைவரும், உடலில் இருந்து உயிர் நீங்கிப் பிணமான பின்னர் துக்கத்தோடு சுடுகாட்டிற்குக் கொண்டு வந்து கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பில் இடுவர்.
பொய்க்கு மெய்க்குச் செயலும் உருகாதே ---
இப்படி நிலையில்லாத உடலை ஓம்பிச் சுகித்து இருப்பதற்குப் பொன்னையும் பொருளையும் தேடி அலைதல் கூடாது என்பதை அடிகளார் உணர்த்துகிறார்.
புஷ்பம் இட்டுக் கருணை நல் பதத்தைப் பரவு புத்தி மெத்தத் தருவது ஒரு நாளே ---
நிலையான இன்பத்தில் உயிர்களை ஆழ்த்துவதற்காக, நிலையில்லாத இந்த உடம்பையும் படைத்து அளித்து, அதில் கருவிகளையும் கரணங்களையும் பொருந்த வைத்து அளித்த இறைவனது பெருங்கருணைத் திறத்தை எண்ணி, “வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி” என்று மதித்து, வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை, சூழ்த்த மாமலர் தூவித் துதித்திடல் வேண்டும். “புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு, நீர் உண்டு. அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்” என்று அருளினார் அப்பர் பெருமான்.
உயிருக்கு உள்ள ஆறுவகையான குற்றங்கள் ஆகிய,காமம், குபோதம், உலோபம், மகம், மதம், மாச்சரியம் என்பவைகளை அறுத்தவர்களை குற்றமற்ற மனத்தை உடைய அடியவர்கள் அவர்கள் இறைவன் நறுமணம் மிக்க மலர்களைக் கொண்டு வழிபடுகின்றார்கள்.
குற்றமற்ற அடியவர்கள் உள்ளத்தை இறைவன் தனக்குக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி இருக்கின்றான். அவனை அகமலரில் வைத்துப் போற்றும் அடியார்கள் ஞானபூசையைப் புரிந்துகொண்டு இருப்பார்கள்.
“மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.”
என்பது அப்பர் தேவாரம்.
இறைவனைப் பூமாலை கொண்டு வழிபடுதல் கிரியை நெறி ஆகும். பாமலைகளைச் சூட்டி, அன்போடு உருகி வழிபடுதல் ஞானநெறி ஆகும். பூக்களால் செய்யும் அருச்சனையானது, பாக்களால் செய்யும் சிறந்த அருச்சனைக்குப் பின்பே நிறைவு பெறும். விதவிதமான பூக்களால் ஆன மாலைகளை இறைவனுக்கு அணிவித்து, விதவிதமான பூக்களால் இறைவனை அருச்சனை செய்தபின், மந்திரங்களால் அமைந்த "மந்திர புஷ்பம்" இறைவனுக்குச் சாத்தப்பட்ட பின்னரும், அருளாளர்கள் பாடிய அருளிய சிறந்த பாமாலைகளால், இறைவனை வழிபட்ட பிறகே அருச்சனையானது நிறைவு பெறுவதைக் காணலாம்.
“நாவழுத்தும் சொல்மலரோ? நாள்உதிக்கும் பொன்மலரோ?
தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே"
என்கிறார் தாயுமானார்.
இறைவனுக்கு நாவால் போற்றிப் பாடுகின்ற சொல்மலர் விருப்பமானதா? அல்லது நாள்தோறும் மலரும் மலர்கள் விருப்பமானதா? என்று தாயுமான அடிகளார் கேட்டதற்கு, விடை பெரியபுராணத்தில் வருகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும். ஆதலால், மண்மேல் நம்மைச் சொல்தமிழ் பாடுக" என்று அருளிச் செய்தார் இறைவர். "சுவாமி, நான் என்ன சொல்லி, எப்படி உம்மைப் பாடுவது?" என்று நாயனார் கேட்க, "முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை. ஆதலாலே, என் பெயர் ‘பித்தன்’ என்றே பாடுவாய்" என்றார் இறைவர். அன்பினால் செய்யப்படுபவை தான்,
திருமுழுக்காட்டுதல் என்னும் அபிடேகம், திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல் முதலான வழிபாடுகள். அந்த அன்பு வழிபாடுகளிலும், மேலான வழிபாடாவது இறைவனைப் போற்றி உரைக்கும் புகழுரைகளே ஆகும். எனவே, சொல் தமிழால் பாடுக என்று அருளினார் இறைவர். ஏன் தமிழால் பாடுக என்றார்? சுந்தரரின் தாய்மொழி தமிழ். எனவே, அவர் அறிந்த மொழியால் பாடுவது,அவரது உள்ளன்பை வெளிப்படுத்தும் சாதனமாக இருக்கும். எனவே,
இறைவனை அவரவருக்குத் தெரிந்த மொழியினால் ஆன சொற்களைக் கொண்டு வழிபடலாம் என்பது தெளிவாகும். "வேற்று மொழியால் என்னைப் பாடாதே?" என்று இறைவர் அறிவிக்கவே இல்லை. அப்படி அறிவித்தால் அவர் இறைவர் இல்லை. நான் சொல்லுகின்ற மொழியில் தான் இறைவனை வழிபடவேண்டும் என்று யாரும் வற்புறுத்துவது அழகல்ல.
இவ்வாறு பூவைக் கொண்டும், நாவைக் கொண்டும் இறைவன் திருவடியை வழிபட்டு உய்தி பெறாதவர்கள், உடம்புக்கு வேண்டிய இரையைத் தேடி அலைந்து, வாழ்நாள் முடிவில், காக்கைக்கு இரையாகி அழிந்து ஒழிவர் என்கின்றார் அப்பர் பெருமான்.
பூக்கைக் கொண்டுஅரன் பொன்அடி போற்றிலார்,
நாக்கைக் கொண்டுஅரன் நாமம் நவில்கிலார்,
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து,
காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே. --- அப்பர்.
நாவினால் இறைவனுடைய நாமங்களை நவில்பவர் எல்லா நலன்களையும் பெறுவர். அல்லாதவர் அவமே அழிவர் என்பது இத் தேவாரப் பாடலால் தெளிவாகும்.
நாவுக்கு முதலிடம் தந்து, "கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ" என்று மணிவாசகர் கூறுமாறும் காண்க.
"பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும்,
அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரொடு,
பரிமளம் மிஞ்ச, கடப்ப மாலையும் ...... அணிவோனே!"
என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
இதன் பொருள் ---
பலப்பல விதமான பசும் பொன்னால் செய்த பதக்கங்களையும், மாலைகளையும், அடிமையேன் சொல்லுகின்ற திருப்புகழாகிய தமிழ்ப் பன்னீரையும், வாசனை மிகுதியாக வீசும் அந்தக் கடப்ப மலர் மாலையையும் அணிகின்றவரே!
இறைவன் திருவடியை அடியவர்களும் வானவர்களும் எப்போதும் அன்றலர்ந்த மலர் தூவி வழிபட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த மலர்களில் தேன் நிறைந்து மணம் பொருந்தி இருக்கும். நாளடைவில் அவை வாடி விடும். மணம் இன்றிப் போய் வாடிவிடுகின்ற மலர்கள் அவை.
வாடா நறுமலர் என்பது ஞானமலர்களைக் குறிக்கும். ஞானமலர்கள் பாமாலைகளே ஆகும். அந்த மலர்களில் எப்போதும் மணம் மாறாது இருக்கும். ஆனந்தத் தேன் சொரியும்.
இறைவனை அன்று அலர்ந்த மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும். அன்று அலர்ந்த மலர்கள், "நாள் மலர்கள்" எனப்படும். அன்று அலர்ந்த எட்டுவிதமான மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடவேண்டும் என்பது பின்வரும் அப்பர் தேவாரப் பாடலால் விளங்கும்.
“எட்டு நாள்மலர் கொண்டுஅவன் சேவடி
மட்டு அலர் இடுவார் வினை மாயுமால்,
கட்டித் தேன்கலந்து அன்ன கெடிலவீ
ரட்ட னார்அடி சேரும் அவருக்கே.”
இதன் பொருள் ---
கரும்புக் கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனாருடைய திருவடியைச் சேர்பவராய், எட்டுவகைப்பட்ட நாள் மலர்களாகிய தேன் அவிழும் மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும் .
நாள் மலர் என்றது அன்று அலர்ந்த மலர்களை. எட்டு நாள் மலர் என்றது அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண் வகைப் புதிய மலர்கள். அவையாவன: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை ஆகிய பூக்கள். இவை புறப்பூசைக்கு அமைந்தவை.
பூசையால் "பவன்" முதலிய எட்டு நாமங்கள் சொல்லி வழிபடும் மரபு உண்டு. ஆகமங்களில் விதித்தவாறு அட்ட புட்பம் சாத்தி வழிபடுதலையே குறிப்பது இத் தேவாரம்.
பூக்களைக் கொண்டு வழிபடுவது "புறப்பூசை". அகத்தில் விளங்கும் நற்பண்புகளைக் கொண்டு வழிபடுவது, "அகப்பூசை".
அகப் பூசைக்குரிய அட்டபுட்பங்கள் கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் "நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்" என்பார் அப்பர் பெருமான்.
அருணகிரிநாதப் பெருமான் அறுமுகப் பரமனுடைய அடிமலருக்கு ஒரு மாலை தொடுத்துப் புனையக் கருதுகின்றார். "பூமாலை" வாடும் தன்மை உடையது. ஆதலின் வாடாத தன்மையும் மென்மையும் உடைய "மந்திர மலர்மாலை" சூட்டத் துணிந்தார்.
மலர்மாலைக்கு இடையே குஞ்சம் ஒன்று தொங்க வேண்டும். அதுதான் மாலையை அழகு படுத்தும். அது பெரிய ஒரு பூங்கொத்தாக அமைந்திருக்கும். அடிகளார் தொடுக்கும் மந்திர மலர்மாலைக்கு இடையே "மனம்" என்ற தாமரைப் பூவை குஞ்சமாகக் கட்டித் தொங்க விடுகின்றனர்.
மனமே பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகும். தண்ணீரே மனிதனை வாழ்விக்கின்றது. தண்ணீரே மனிதனைக் கொல்கின்றது. மனதை ஆண்டவனுடைய திருவடியில் சேர்த்து விடுவதே துன்ப நீக்கத்திற்குச் சிறந்த சாதனமாகும். அதுவே எளிய வழியுமாகும்.
காற்றும் காற்றாடியும் போல் சதா இடையறாது ஓடி ஓடி உழல்வதே மனத்தின் இயல்பு. அதனால் எண்ணில்லாத இடர்கள் விளைகின்றன. மனதை இறைவன் திருவடியில் சேர்த்துவிட்டால் இன்பம் மட்டுமே விளையும்.
மந்திரமலர்களை "அன்பு" என்ற நூலினால் அழகுறத் தொடுக்க வேண்டும். அன்பு, ஒன்றுடன் ஒன்றை இணைத்து வைக்கும் இயல்பு உடையது. இறைவனுடன் ஆன்மாவை ஒன்றுபடுத்துவதும் அன்பே ஆகும். சகாதேவன் கண்ணபிரானை அன்பு என்ற கயிற்றினால் உள்ளமாகிய மண்டபத்தில் உறுதியாகிய தூணில் கட்டினான்.
அத்தகு சிறந்த திருமாலையைக் கட்டுவதற்குரிய இடம் எது. அதற்குரிய சிறந்த இடம் "நாவே" ஆகும். வேறு எந்த உயிர்களுக்கும் அமையாத சிறப்பு மனிதனுடைய நாவுக்கு அமைந்துள்ளது. நன்கு பேசும் தகைமையுடன் கூடிய நாவை இறைவர் நமக்குத் தந்துள்ளார். அந்த நாவிலே பரமனுடைய திருநாமங்களை அன்புடன் நவில வேண்டும். "கற்றுக் கொள்வன வாய்உள நாஉள" என்பார் அப்பரடிகள். "நாமேல் நடவீர் நடவீர் இனியே" என்று அநுபூதியில் அருணகிரிநாதரும் கூறுகின்றார்.
இம் மந்திரப் பூமாலையில் ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய நறுமணம் கமழ்கின்றது. மற்ற மணம் சில நேரமே கமழும். ஞானமணம் எப்போதும் இடையறாது கமழும். மணம் கண்களுக்குத் தோன்றாது. மென்மையாக வீசும் இயல்பு உடையது. ஞானம் அத்தகையது. ஞானம் மிகவும் நுண்மையானது. "கூர்த்த மெய்ஞ்ஞானம்" என்பது மணிவாசகம். ஞானவாசனை எவ்வுலகினும் பரிமளிக்கத் தக்கது.
ஞானமணம் கமழும் இம் மந்திர மலர்மாலையில் துளிக்கும் அருள் தேனைப் பருக, "புத்தி" என்ற வண்டு வந்து மொய்த்து, இனிய நாதத்துடன் ஒலிக்கின்றது. மலரிலே உள்ள மதுவைப் பிரித்து எடுத்து அருந்தும் ஆற்றலும் அறிவும் வண்டுகளுக்கே உண்டு. வண்டினாலேயே இனிய தேன் கிடைக்கின்றது. புத்திக்கு வண்டு உவமை ஆனது. புத்தியே எல்லா நூல்களிலிருந்தும் உயர்ந்த தத்துவங்களாகிய தேனைப் பிடித்து உணரும். "புத்திமான் பலவான் ஆவான்" என்ற பழமொழியும் கருதத் தக்கது. புத்திமான் எங்கும் எச் சபையிலும் நடுநாயகமாக வீற்றிருப்பான். புத்திகாரகன் புத பகவான். ஏழு நாள்களின் தலைவர்களாகிய ஏழு கிரகங்களின் நடுவில் புதன் அமைந்திருப்பதை எண்ணிப் பார்க்கவும்.
இறைவனும் அடியவர் புத்தியில் உறைகின்றான் என்று அருணகிரியார் முதல் பாடலிலேயே "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்று கூறியருளினார். இங்கே புத்தி என்று கூறியது அந்தக் கரணங்களுள் ஒன்றான புத்தி அல்ல. நல்லறிவைக் குறித்தது.
உடம்புக்குள் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்கள் ஆறுக்குள் அகரம் முதலாக க்ஷகரம் இறுதியாக ஐம்பத்தொரு அக்ஷரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த அக்ஷரங்களுக்கு "மாத்ருகா மந்திரம்" என்றும், "மாலாமந்திரம்" என்றும் கூறுவர். இம் மாத்கருகா மந்திரமே எல்லா மந்திரங்களினும் உயர்ந்தது. அம் மந்திரத்தின் பெருமை அளவிடற்கரியது.
இந்த மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றின் பரிணாமமே "கந்தர் அநுபூதி". ஐம்பத்தொரு பாடல்களாக அது அமைந்திருப்பதை ஆழ்ந்து சிந்தித்தல் நலம். "செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே" என்று காப்புச் செய்யுளில் அடிகள் கூறுகின்றனர்.
“ஆசைகூர் பத்தனேன் மனோ பத்மம்
ஆன பூ வைத்து, ...... நடுவே அன்பு
ஆன நூல் இட்டு, நாவிலே சித்ரம்
ஆகவே கட்டி, ...... ஒரு ஞான
வாசம் வீசி, ப்ரகாசியா நிற்ப,
மாசு இல் ஓர் புத்தி ...... அளிபாட,
மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர-
வாள பாதத்தில் ...... அணிவேனோ?”
என்பது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.
"வீண்பொழுது போக்காமலே,
நேயமுடனே தெளிந்து, அன்பொடு உன் பாதத்தில்
நினைவு வைத்து,இரு போதினும்
நீர்கொண்டு,மலர்கொண்டு,பரிவுகொண்டு அர்ச்சிக்க
நிமலனே! அருள் புரிகுவாய்".
என்கின்றது அறப்பளீசுர சதகம்.
நம்பியாரூரைத் தமிழால் தன்னைப் பலவகையிலும் பாடுமாறு பணித்தார் சிவபரம்பொருள் என்பதைப் பெரியபுராணத்தின் வாயிலாக அறியலாம்.
"மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச்
சொல் தமிழ் பாடுக" என்றார் தூமறை பாடும் வாயார்.
இப் பாடலில், இறைவனுக்கு "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்" என்று அருளி உள்ளதைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்
"முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன்" முருகப் பெருமான் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
மூடர்களாகிய உலோபிகளை, “தந்தையே! தாயே! தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அருச்சுனனே!" என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனம் இரங்கி, அரைக் காசும் உதவமாட்டார்கள். செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடவேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளை; நீலி மகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்” என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.
“அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,
ஆபத்து அகற்றி அன்பாய்
ஆதரிக்கும் கருணை வள்ளல்நீ, மாரன்நீ,
ஆண்மைஉள விசயன்நீ, என்று
எத்தனை விதம் சொல்லி உலோபரைத் தண்தமிழ்
இயற்றினும் இரக்கம் செ(ய்)யார்,
இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்
இறைஞ்சி எனை ஏத்த வேண்டாம்,
பித்தனொடு நீலியும் பெறுதகப்பன் சாமி!
பெருவயிற்றான் தம்பி, அப்
பேய்ச்சிமுலை உண்ட கள்வன் மருகன், வேடுவப்
பெண்மணவன், என்றுஏசினும்,
சித்தம் மகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்
சிறுபறை முழக்கி அருளே!
செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,
சிறுபறை முழக்கி அருளே!" --- கம்பை முருகன் பிள்ளைத் தமிழ்
பெறுதற்கு அரிய பிறவியாகிய இந்த மனிதப் பிறவியைப் பெற்றதன் பயன் இறைவனை, கையினால் பூக்களைக் கொண்டும், நாவினால் பாக்களைக் கொண்டும் வழிபடுவது ஒன்றே பேரின்ப வீட்டிற்குச் செல்லும் வழியாகும். இந்தப் பேரின்ப வீடுகூட வேண்டாம். இறைவனைத் தமிழ்ப் பாமாலைகளால் பாடி வழிபடுகின்ற பிறவியே வேண்டும் என்னும் பொருளில், உலகினில் பிறவாமையை வேண்டுவார் அவ்வாறே வேண்டிக் கொள்ளட்டும். ஆனால் நான் பிறவியையே வேண்டுவேன். எப்படிப்பட்ட பிறவி? இனிமை நிறைந்த தமிழ்ச் சொற்களால் ஆன மலர்களை உனக்குச் சூட்டி மகிழ்கின்ற பிறவியே அடியேனுக்கு வேண்டும் என்றார் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள்.
அண்ணாமலையார் மீது பாடப்பட்ட அருமையான, "சோணசைல மாலை" என்னும் நூலில் வரும் பாடலைக் காண்போமாக..
“விரைவிடை இவரும் நினை, பிறவாமை
வேண்டுநர் வேண்டுக, மதுரம்
பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும்
பிறவியே வேண்டுவன் தமியேன்;
இருசுடர்களும் மேல் கீழ்வரை பொருந்த
இடையுறல் மணிக்குடக் காவைத்
தரையிடை இருத்தி நிற்றல் நேர் சோண
சைலனே! கைலைநா யகனே!”
இதன் பொருள் ----
சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலை, கீழ்மலை ஆகியவற்றில் விளங்க, இடையில் மலைவடிவமாக நிற்பதாவது, இருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத் தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே! விரைந்து செல்லும் இடபவாகனராகிய தேவரீரிடத்தில் பிறவாமை வேண்டுவோர் வேண்டிக் கொள்ளட்டும். இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.
பூமாலை சூட்டுதல் கிரியை நெறி.
பாமாலை சூட்டுதல் ஞானநெறி.
கிரியை என்பது தயிரைப் போன்றது. தயிர் வெண்ணெய் ஆகவேண்டும். அது யோக நிலை. வெண்ணெயும் நெய்யாக வேண்டும். அது ஞானநிலை. கிரியை என்பது யோகத்தில் சென்று, ஞானத்தில் நிலைபெறவேண்டும். ஞானத்தில் நிலைபெற வேண்டும் என்றால், அடியார் திருக்கூட்டத்தோடு கூடி இருக்கவேண்டும். அந்த நிலையை அருள்வது, அன்பு வழிபாடே ஆகும் என்பதால்,
“உருகியும்,ஆடிப் பாடியும்,இருகழல் நாடிச் சூடியும்,
உணர்வினோடு ஊடிக் கூடியும்,...... வழிபாடு உற்று,
உலகின் ஒர் ஆசைப் பாடு அற,நிலைபெறு ஞானத்தால் இனி,
உனது அடியாரைச் சேர்வதும் ...... ஒருநாளே?”
என்று வேண்டினார் அருணகிரிநாதப் பெருமான்.
இறைவனுடைய திருவடிகள் நான் எனது என்ற அகப்பற்று புறப்பற்று அற்ற இடமே ஆகும். திருவடிகளை நாடுதல் சூடுதல் என்றால்,
இருவகையான பற்றுக்களையும் விடுவதே ஆகும். பற்று அறுதலே பரமனடி சார்தலாகும்.
“யான் எனது என்று அற்ற இடமே திருவடியா”--- கந்தர் கலிவெண்பா.
ஞானம் ஒன்றே என்றும் நிலைபெற்று நிற்கும். ஏனைய எல்லாம் நிலைபேறு இல்லாதவை. எனவே, "நிலைபெறு ஞானம்" என்றார் அடிகளார்.
நெய்யானது உணவின் வழி உடம்பில் கலந்து ஆற்றலைத் தரும். வேள்வியில் இடப்படும் நெய்யானது, இறை ஆற்றலைத் தரும்.நிலையான சானத்தைப் பெற்ற பின் அடியாரொடு கூடி இருத்தலே சிறந்த பேறு ஆகும்.
இறைவனை நினைந்து உருகி, திருவருள் மயமாக நிற்பவர்கள் அடியார்கள். அவர்கள் தமது உரை, அறிவு, உயிர், உணர்வு என்ற நான்கையும் இறைவனுடைய திருவடியில் புனைவார்கள். இந்த நான்கில், உரையைப் புனைபவர் சரியையாளர். அறிவைப் புனைபவர் கிரியையாளர். உயிரைப் புனைபவர் யோகிகள். உணர்வைப் புனைபவர் ஞானிகள். எனவே,சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிகளில் நின்று தொண்டு புரிவார்கள்.
“உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும்
உன்பாத கஞ்ச ...... மலர்மீதே
உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு
ஒன்றாக என்று ...... பெறுவேனோ”
என்றார் அருணகிரிநாதர்.
சொல்லுகின்ற சொல்லையும்,அறிவையும்,உயிரையும், உணர்வையும் இறைவனது பாத தாமரை மலர் மீது உறுதியுடன் இட்டு அர்ச்சிக்க நினைக்கும் அடியார்களுடன் ஒன்றுபடும் பேற்றினைப் பெறுதல் வேண்டும். ஒன்றுபட்டு நினைத்தல் கூட்டு வழிபாடு. தனியாக வழிபடுவதை விட, கூட்டாக வழிபடுவது சிறப்பு.
எனவே, இறைவனது பெருமையையும், தமது சிறுமையையும் உணர்ந்து, அன்போடு இறைவனது திருவடிகளை, சிறந்த சொல்மலர்களால் அடியார்களுடன் கூடி இருந்து வழிபடுவதே சிறந்த அர்ச்சனை ஆகும். அவ்வாறு இறைவன் திருவடிக்கு அருச்சனை புரிந்து வழிபட்டு உய்கின்ற புத்தியைத் தனக்கு அருளும் நாள் வன்று உண்டாகுமா? என்று முருகப் பெருமானிடம் முறையிட்டுக் கொள்கிறார் அருணை வள்ளலார். நாமும் முறையிட்டுக் கொள்வோம்.
கருத்துரை
முருகா! தேவரீரது திருவடி மலர்களை வழிபட்டு உய்யும் புத்தியை அடியேனுக்கு அருள்வாயாக.
No comments:
Post a Comment