திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 53 -- சுற்றம் தழால்
இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "தன்னிடத்தில் இருந்து காரணம் இல்லாமல் பிரிந்து போய், பின்பு ஒரு காரணம் பற்றித் திரும்பி வந்த சுற்றத்தவனை, விரும்பிய உதவியைச் செய்து, பொறுத்துப் பார்த்து, ஆராய்ந்து தழுவிக் கொள்ளவேண்டும்" என்கின்றார் நாயனார்.
யாதொரு காரணமும் கருதாது, எவனாயினும் ஒரு சுற்றத்தவன், தன்னைப் பிரிந்து போய், பின்னர் தனக்கு ஏதேனும் ஒரு நன்மை கருதித் தன்னிடத்து வருவானாயின், அவனுக்கு ஆவன செய்தால் ஒழிய தன்னிடத்து இருக்கமாட்டான். எனவே, அவனுக்கு அவன செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், மீண்டும் தன்னை விட்டுப் பிரிந்து போய், ஆகாதவர்களோடு கூடி, தனக்குத் தீங்கு செய்ய முயல்வான். எனவே, ஆவன செய்வதுடன், எக்காரணத்தால் தன்னை வந்து இப்போது கூடினான் என்பதை ஆராயவும் வேண்டும் அவ்வாறு ஆராயுங்கால், இவனைப் போலப் பிரிந்து சென்ற சுற்றத்தாரோடு கூடி, தனக்குத் தீமை செய்யச் சென்று, அத் தீமையை செய்வதற்கு இல்லாதபோது தன்னிடம் வந்தானோ? அல்லது ஒரு காரணமும் இல்லாது போய், மீண்டும் தனக்கு நன்மை செய்ய வந்தானோ என்றும் ஆராய்வதுடன், பகை செய்யச் சென்றவனையும் தழுவிக் கொள்ளுதல் வேண்டும். நன்மை செய்தவனையும் அவனது நன்மைக்காகத் தழுவிக் கொள்ளவேண்டும்.
இதற்குத் திருக்குறள்...
“உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை, வேந்தன்
இழைத்து இருந்து எண்ணிக் கொளல்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை --- காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்து போய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை,
வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் --- அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.
(வாளா உழைப்பிரிந்து என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து போய்ப் பகையோடு கூடும் ஆகலின், இழைத்திருந்து என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், எண்ணிக் கொளல் என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப் போய் அதனை ஒழிய வருவானும், பின் நன்மை செய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“அன்றுதமர் உள்ளம் அறிந்துஅடைந்த வீடணற்குச்
சென்றுஉறுதி சொன்னான், சிவசிவா! --- ஒன்றும்
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்துஇருந்து எண்ணிக் கொளல்.”
இதன் பொருள் ---
முன்னர் தமது சுற்றத்தாராகிய இராவணன் முதலானோரின் தீய உள்ளக் கிடக்கையை அறிந்து, அவரிடத்து இருந்து நீங்கி, தன்னைச் சரணாக அடைந்த விபீடண ஆழ்வாரை நன்றாக ஆராய்ந்து, நன்மையானதை இராமபிரான் சொல்லி, அடைக்கலம் தந்து காத்தார்.
தமர் - சுற்றத்தார். தமருள்ளம் - இராவணன் முதலியோர் உள்ளம். வீடணன் - விபீடணன். உறுதி - அடைக்கலம். சொன்னவன் - இராமன்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை அறியலாம்...
“பலநாளும் பக்கத்தார் ஆயினும். நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; பலநாளும்
நீத்தார் எனக் கைவிடல் உண்டோ? தந்நெஞ்சத்
தியாத்தாரோடு யாத்த தொடர்பு.” --- நாலடியார்
இதன் பொருள் ---
பலநாளும் பக்கத்தாராயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார் - பலநாளும் அருகிலிருந்து பழகினாராயினும் மனத்திற் சில நாளாயினும் நட்புப் பொருந்தாதவரோடு தெரிந்தோர் சேரமாட்டார்; பல நாளும் நீத்தார் எனக் கைவிடல் உண்டோ தம் நெஞ்சத்து யாத்தரோடு யாத்ததொடர்பு - தமது நெஞ்சத்தில் நட்புப் பொருந்தியவரோடு பிணிப்புண்ட தொடர்பு அவர் பலநாட்கள் அருகில்லாமல் நீங்கினாரென்று கைவிடப் படுதலுண்டோ?
நெஞ்சுப் பிணிப்பு உடையாரோடு நட்புச் செய்தல் வேண்டும்.
“நீக்கம் அறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்,
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும்; - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்.” --- நன்னெறி.
இதன் பொருள் ---
மலரணிந்த கூந்தலை உடையவளே,!நெல்லினின்றும் உமியானது சிறிதளவு நீங்கி, முன்போலவே ஒட்டிக் கொண்டாலும், முளைத்தற்கு ஏற்ற வலிமை இல்லாது போய்விடும். அதுபோல, பிரிதல் இல்லாத நண்பர் இருவர், மன வேறுபாட்டால் பிரிந்து, முன்போலவே கூடினாலும், ஆராய்ந்து பார்த்தால் அவர் பெருமா அற்பம் உடையதாகவே விளங்கும்.
திண்மை - வலிவு. நொய்து - சிறுமை, இங்கு அற்பமாம். புல்லினும் - தழுவினாலும்.
“தன்னை மதித்துத் தமர் என்று கொண்டக்கால்,
என்ன படினும் அவர்செய்வ செய்வதே,
இன்னொலி வெற்ப! இடர் என்னை? துன்னூசி
போம்வழி போகும் இழை.” --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
இன் ஒலி வெற்ப - இனிய ஓசையை உடைய மலைநாடனே!, தன்னை மதித்து தமர் என்று கொண்டக்கால் - ஒருவன் தன்னை மதித்துச் சுற்றத்தாராகக் கருதி ஒழுகியவிடத்து, என்ன படினும் - எல்லாத் துன்பமும் வந்து பொருந்தியதாயினும், அவர் செய்வ செய்வதே - சுற்றத்தார் செய்யும் உறுதியாயினவற்றைத் தாமும் செய்வதே, துன் ஊசி போம்வழி போகும் இழை - தைக்கின்ற ஊசி போகின்ற வழியே செல்லும் நூலிழையை ஒக்கும்; இடர் என்னை - வரும் குற்றம் யாது உள்ளது?
No comments:
Post a Comment