திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 53 -- சுற்றம் தழால்
அதாவது, வினை செய்பவர்களைப் பற்றிக் கூறிய பிறகு, தனது செயலில் தன்னோடு சூழ்ந்து துணை புரியும் சுற்றத்தார் தன்னை விட்டு நீங்காது இருக்குமாறு தழுவிக் கொள்ளுதலைக் கூறுகின்றார் நாயனார்.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "தொடர்புடைய செல்வம் நீங்கிவிட்ட நிலையிலும், பழைய உறவைப் போற்றுதல் சுற்றத்தாரிடமே உள்ளதொரு பண்பு ஆகும்" என்கின்றார் நாயனார்.
உலகத்தில் மக்கள் தம் சுற்றத்தவர் செல்வத்தோடு கூடி இருக்கின்ற காலத்தில் அவர்களைத் தழுவி அவர்களிடத்தில் உறவு கொண்டாடுவது இயல்பு. அவ்வாறு இல்லாமல், செல்வம் அற்ற காலத்திலும், முன்னர் அவர் தமக்குச் செய்த உதவிகளை எண்ணி, அவரோடு பற்று அறாமல் இருந்து, தழுவிக் கொள்ளுவார்களானால், அதுவே, சுற்றத்திற்கு அழகு. அதுவே சுற்றத்தைத் தழுவுதல் ஆகும்.
இதற்குத் திருக்குறள்....
பற்று அற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்,
சுற்றத்தார் கண்ணே உள.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன.
(சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின், ஏகாரம் தேற்றத்தின் கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
“அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால், மற்றவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே
மனைமரம் ஆய மருந்து. --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
ஒருவர்க்கு அல்லல் அடைந்தக்கால் - ஒருவர்க்குத் துன்பம் வந்து அமையுமானால், அவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார் - அவருக்கு நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படுபவர்கள், நல்ல வினை மரபின் அதனை நீக்கும் - நல்ல செயல் முறையால் அத் துன்பத்தை நீக்க முற்படுக, அது – அச்செயல் அல்லல் உற்றார்க்கு, மனைமரம் ஆய மருந்து - வீட்டில் உள்ள மரமாகிய மருந்தினை ஒக்கும்.
அல்லல் உற்ற காலத்து அவ்வல்லலை நீக்குபவரே சுற்றத்தார் எனப்படுவார். ஒருவன் அல்லலுற்ற காலத்து அவன் வருந்தாது அவ்வல்லலை நீக்கும் கிளைஞர்கள் மனையின்கண் உள்ள மருந்து மரத்திற்கு ஒப்பாவார்.
“முன் இன்னார் ஆயினும் மூடும் இடர்வந்தால்
பின் இன்னார் ஆகிப் பிரியார் ஒருகுடியார்,
பொன்னாச் செயினும் புகாஅர், புனல் ஊர!
துன்னினார் அல்லார் பிறர். “ --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
புனல் ஊர - நீர்நாடனே!, ஒரு குடியார் - ஒரு குடியில் பிறந்தவர்கள், முன் இன்னார் ஆயினும் - முன்னர் இனிமையுடையவர் அல்லவராய் இருப்பினும், மூடும் இடர் வந்தால் - மிக்க துன்பம் வந்து உற்ற இடத்து, பின் இன்னார் ஆகிப் பிரியார் - பின்னரும் இனிமை உடையவர் அல்லராகிப் பிரிந்து இரார், துன்னினார் அல்லார் பிறர் - ஒரு குடிப்பிறந்தவர் அல்லாது அயலார் ஆகிய பிறரை, பொன்னா(க)ச் செயினும் புகார் - பொன்போலப் போற்றிச் செயினும் தமக்கு இடர் வந்த ஞான்று அதனை நீக்கப்புகுதல் இலர்.
ஒரு குடியில் பிறந்தவர்கள் தம்முள் ஒருவர்க்குத் துன்பம் வந்து நேர்ந்த பொழுது, உள்ளத்தில் முன்பு கொண்டு இருந்த மாறுபாடு நீங்கி உதவி செய்வர் என்பது கருத்து.
“காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலர் ஆவர், - ஏலா
இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்பு உடையேம் என்பார் சிலர்.” --- நாலடியார்.
இதன் பொருள் ---
ஈர் குன்ற நாட - குளிர்ந்த மலைகளையுடைய நாடனே!, காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து ஆடு மீனின் பலர் ஆவர் - சாய்கால் உண்டாகி வளமாக வாழுகின்ற காலத்தில், மேலே வானத்தில் விளங்குகின்ற விண்மீன்களைப் போல நெருங்கிய உறவினர் பலர் ஆக இருப்பர். ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் - ஆனால் ஒவ்வாத வறுமையை ஒருவர் அடைவராயின், தொடர்பு உடையேம் என்பார் சிலர் - அக்காலத்தில் உறவு என்று சொல்லிக் கொண்டு வந்து உரிமை பாராட்டுவோர் மிகச் சிலரே.
சாய்கால் உள்ளபோது பலரும் சூழ்ந்து நின்று, வறுமை வந்தபோது அவர் பிரிந்துபோவது உலக இயற்கை.
“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவுஅல்லர்,-அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு. --- மூதுரை.
இதன் பொருள் ---
அற்ற குளத்தின் - நீர்வற்றிய குளத்தினின்றும், அறு - நீங்கிப் போகின்ற, நீர்ப் பறவைபோல் - நீர்வாழ் பறவைகள் போல, உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - வறுமை வந்தபொழுது நீங்குவோர் உறவினர் ஆகார். அக்குளத்தில் - அந்தக் குளத்திலுள்ள, கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல - கொட்டியும் அல்லியும் நெய்தலும் போல, ஒட்டி உறுவார் உறவு - நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே, உறவினராவர்.
வறுமை வந்தபொழுதும் சேர்ந்திருந்து துன்பத்தை அனுபவிப்போரே உறவினராவர்.
No comments:
Post a Comment