056. கொடுங்கோன்மை - 10. ஆபயன் குன்றும்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், " நாட்டை ஆளும் அரசன் குடிமக்களைக் காக்கத் தவறினால், அறநெறி இல்லாத அந்த நாட்டில் பசுக்கள் பால் தருவது சுருங்கும். உயிர்களின் துயர் போக்கும் அறவோர் தமது நேர்மையை மறந்து விடுவர்" என்கின்றார் நாயனார்.

மழை பெய்தால் பசுக்கள் புல்லினை மேய்ந்து பால் கறக்கும். பால் இல்லையாயின் ஓதுதலும், வேட்டலும் இல்லையாய் விடும். அதற்குரிய அந்தணர் மந்திரம் கற்பம் என்பவைகளை ஓதாமையால், யாகம் நடக்காது. அது நடக்காது போகவே, மழை பொழிதலும் இல்லையாகும். 


"மழைஇன்றி மாநிலத்தார்க்கு இல்லை, மழையும்

தவமில்லார் இல்வழி இல்லை, தவமும்

அரசன் இலாவழி இல்லை, அரசனும்

இல்வாழ்வார் இல்வழி இல்".


என்னும் நான்மணிக்கடிகைப் பாடலும்,


"தானம் தவம் இரண்டும் தங்கா, வியன்உலகம்

வானம் வழங்காது எனின்"


"சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு"


என்னும் திருக்குறள் கருத்தையும் நோக்குக.


“வேள்வி நற்பயன் வீழ்புனல் ஆவது,

நாளும் அர்ச்சனை நல் உறுப்பு, ஆதலால்,

ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை

மூளும் மற்று இவை காக்கும் முறைமையால்.”


எனவரும் பெரியபுராணப் பாடல் கருத்தையும் நோக்குக.


மன்னனின் ஆட்சி, உயிரினங்கள் வாழ்வாங்கு வாழ்தற்கும், அவை இறைவழிபாடாற்றி இம்மை, மறுமை, அம்மை ஆகிய மும்மை நலங்களையும் அடைதற்கு ஏதுவாகவும் இருத்தல் வேண்டும். 


இதற்குத் திருக்குறள்...

“ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல் மறப்பர்,

காவலன் காவான் எனின்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

காவலன் காவான் எனின் --- காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், 

ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், 

அறு தொழிலோர் நூல் மறப்பர் --- அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.

(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இதனால், அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“ஆவையும் பாவையும் மற்று அறவோரையும்

தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்

காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்

மேவும் மறுமைக்கு மீளா நரகமே.”    --- திருமந்திரம்.

 இதன் பொருள் ---

பசுக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரையும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியவன் அரசன். அவன் அதனைச் செய்யாது ஒழிவானாயின், மறுமையில் மீளா நரகம் புகுவன்.



“காவலனை ஆக வழிபட்டார் மற்றவன்

ஏவல் வினைசெய்து இருந்தார்க்கு உதவுஅடுத்தல்

ஆ அணைய நின்று அதன் கன்று முலைஇருப்பத்

தாய் அணல் தான்சுவைத் தற்று.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

காவலனை ஆக - அரசனைத் தனக்குத் துணையாகக் கொண்டு, வழிபட்டார் - அவனைச் சார்ந்தொழுகினார், அவன் ஏவல் வினை செய்திருந்தார்க்கு - அவனால் ஏவப்பட்ட வேலையைச் செய்பவர்க்கு, உதவு அடுத்தல் - உதவிசெய்து அவரால் காரியம் பெறலாமென்று நினைத்தல், ஆ - பசுவினை, அணைய நின்ற - அணைந்து நின்ற, தன் கன்று - பசுவின் கன்று, முலையிருப்ப - தாயினது மடி இருக்கவும், தாய் அணல் சுவைத் தற்று - தாயினது அணலைச் சுவைத்தாற் போலும். (அணல் – கீழ்வாய், தாடி, அலைதாடி, கழுத்து)



என்னஉறு துயர்கண்டும் இடர்உறும் இவள் என்னீர்,

பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ?

மன்னுறு துயர்செய்த மறவினை அறியாதேற்கு

என்உறு வினைகாணா இதுவென உரையாரோ?

யாரும்இல் மருள்மாலை இடர்உறு தமியேன்முன்

தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ?

பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறு இழைப்ப

ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ?

கண்பொழி புனல்சோரும் கடுவினை உடையேன்முன்

புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ?

மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறு இழைப்ப

உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ?

பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?

கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்

பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?

சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?

ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்

சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?

வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?

---  சிலப்பதிகாரம், ஊர்சூழ் வரி.

இதன் பொருள் ---


என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர் - என்னுடைய மிக்க துயரத்தினைக் கண்டு வைத்தும் நம் காதலியாகிய இவள் இதற்கு இடர் உறுவாள் என எண்ணுகின்றிலீர், பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ - அது நிற்க, மணம் பொருந்திய சந்தன முதலிய பூசப்பட்ட நுமது பொன் போன்ற மேனி புழுதி படிந்து கிடக்கத்தக்கதொன்றோ, மன் உறு துயர் செய்த மறவினை அறியாதேற்கு - மிக்க துயரத்துக்குக் காரணமான அரசன் செய்த இக் கொலைத் தொழில் எத் தன்மையால் நிகழ்ந்ததென அறியவொண்ணாத எனக்கு, என் உறுவினை காண் ஆ இது என உரையாரோ - இக் கொலைத் தொழிற்குக் காரணம் யான் முற்பிறப்பிற் செய்த என் தீவினையே காண் என எனக்கு இந் நாட்டிற் சொல்லார்களோ?

யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் - எனக்குத் துணையாக ஒருவருமில்லாத மயக்கத்தினைச் செய்யும் இம் மாலைக் காலத்தே துயருறுகின்ற தனியேன் கண் முன்னரேயே, தார் மலி மணி மார்பம் தரை மூழ்கிக் கிடப்பதோ - நிறைந்த மலர்மாலைக்குள் முழுகும் உமது அழகிய மார்பு வெறு நிலத்தே படிந்து கிடக்கத் தக்க தொன்றோ, பார் மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறு இழைப்ப ஈர்வதோர் வினைகாண் ஆ இது வென உரையாரோ - உலகத்தார் மிக்க பழிச்சொல் கூறித் தூற்றும் வண்ணம் பாண்டியன் தவற்றினைச் செய்ய இந் நிகழ்ந்த நிகழ்ச்சி வெட்டுவிப்பதோர் நின் தீவினையின் பயன்காண் என ஒருவரும் சொல்லாரோ?

      கண்பொழி புனல் சோரும் கடுவினை உடையேன் முன் - கண்கள் பொழிகின்ற நீர் சோராநிற்கும் திவினை உடையேன் கண் முன்னரேயே, புண்பொழி குருதியிராய்ப் பொடி யாடிக் கிடப்பதோ - நீவிர் புண்ணினின்றும் ஒழுகுகின்ற செந்நீரை உடையீராய்ப் புழுதி படிந்து கிடத்தல் தகுவதொன்றோ? மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப உண்பதோர் வினைகாண் ஆ இது வென உரையாரோ - மக்கள் பலரும் தன் பழியினைக் கூறித் தூற்றும் வண்ணம் பாண்டியன் தவற்றினைச் செய்ய இது நிகழ்ந்தது நீ நுகர்வதோர் தீவினையின் பயன்காண் என ஒருவரும் கூறாரோ?

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - கோல் கோடிய மன்னனை உடைய இக் கூடல் நகரிடத்துக் கற்புடை மகளிரும் உள்ளார்களோ?  கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - தாம் உள்ளத்துக் கொண்ட கணவருடைய மிக்க குறையினைப் பொறுக்கின்ற கற்புடைய மகளிரும் உளர் கொல்லோ?

சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டு கொல் - இக் கூடல் நகரிடத்துப் பெரியோரும் உளரோ?  ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் - பிறர் ஈன்று போகட்ட குழவியைத் தாங்கி வளர்க்கின்ற பெரியோரும் உளரோ?

தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டு கொல் தெய்வமும் உண்டு கொல் - என் கணவனைக் கூரிய வாளால் வெட்டியதனால் கோல் கோடிய பாண்டியன் கூடல் நகரிடத்துத் தெய்வமும் உளதோ?



No comments:

056. கொடுங்கோன்மை - 10. ஆபயன் குன்றும்

 திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், " நாட்டை ஆளும் அரசன் கு...