“கல்லார்க்கு இனனாய் ஒழுகலும், காழ்கொண்ட
இல்லாளைக் கோலாற் புடைத்தலும், - இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், இம் மூன்றும்
அறியாமையால் வருங் கேடு.” – திரிகடுகம்
அறிவுநூல்களைக் கற்று அறியாதவர்க்கு உறவினனாகி நடத்தலும், மன உறுதிகொண்ட மனைவியைக் கோலினால் அடித்தலும், தம் வீட்டுள் சிற்றறிவினரை உடன் கொண்டு புகுதலும், ஆகிய இம் மூன்று செயல்களும், ஒருவனது அறியாமையினாலே விளைகின்ற கேடுகளாம்.
மூடரோடு சேர்ந்திருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், புல்லிய அறிவீனரை வீட்டுள் அழைத்துச் செல்லுதலும் கேட்டைத் தருவன என்பது கருத்து.
அட்டைப் பகட்டுடன் வணிக நோக்கில் மக்களைக் கவரும் விதமாக வருகின்ற நூல்கள் பல உள்ளன. அவற்றால் உண்மை அறிவு விங்குவது இல்லை. எனவே, அறிவுநூல்களைப் பயிலுதல் வேண்டும்.
அறிவு, வாழ்க்கைக்கு இன்றியமையாதது. எது அறிவு என்று இனம் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. பலரிடத்தில் அறியாமையே அறிவுபோலக் காட்சியளிக்கிறது. தம்மிடமுள்ள அறியாமையையே அறிவு என நம்பி நிலைதடுமாறி நிற்பவர்கள் அகந்தை கொண்டவர்களாக நடமாடுகிறார்கள்.
பன்றிகளைக் கட்டு அவிழ்த்து விட்டால் சந்தனக் குழம்பை அவை நாடமாட்டா. மலக்குவியலை நோக்கியே ஓடும். அதுபோல் அறியாமையையே அறிவென நம்பித் திரிபவர்கள் எதிலும் அறிவை நாடமாட்டார்கள், ஆபாசங்களையே தேடுவர். அதையே விரித்து விரித்து உரைப்பர். ஆனால், தமது அறியாமையை மறைக்க "அறிவு, அறிவு” என்று சொல்லிக் கொள்வர். இது அறிவு என்ற பெயரில் உலா வரும் ஒருவகை அறியாமை. வேறுசிலர், சில செய்திகளை அறிந்துகொண்டு அவற்றைக் கிளிப்பிள்ளை போலச் சொல்வர். சொல்லும் செய்திக்கும் அவர்களுக்கும் உணர்வு அடிப்படையில் யாதொரு விதமான தொடர்பும் இராது. இதுவும் ஒருவகை அறியாமையே. வேறு சிலர், புத்தகங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பர். இவர்கள் ஒருவகையான அஜீரணவாதிகள். இவர்களுக்கு அறிவினுடைய வாசனையே இருப்பதில்லை. அறிவு என்பது நுட்பமானது, திட்பமானது. ஒருவர் அறிவுடையவர் அல்லது அறிவில்லாதவர் என்பதை அவருடைய பேச்சுக்களைக் கொண்டும் அறிய முடியாது. அவர் எழுதும் நூல்களைக் கொண்டும் அறிய முடியாது. அவருடைய வாழ்க்கையே அறிவையும் அறியாமையையும் காட்டும். பிறர்க்குத் துன்பம் செய்யாதவர்கள் அறிவுடையோர்கள். இதனைத் திருவள்ளவு நாநனார், “அறிவினால் ஆகுவது உண்டோ, பிறிதன் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை” என்று காடினார். “அறிவு அற்றம், காக்கும் கருவி” என்றும் காட்டினார். உயிர்களைத் துன்பத்தொடக்கில் இருந்து பாதுகாப்பதே அறிவு. இத்தகைய அறிவைப் பெறுதற்குரிய வாயில்களில் முதன்மையானது, அறிவு நூல்களைப் பயிலுவதை விடவும், அறிவு நூல்களைக் கற்று வல்லாருடைய தொடர்பு ஆகும். எனவே, “கல்லார்க்கு இனன் ஆய் ஒழுகுதல்” தவிர்க்கப்பட வேண்டியது என்று சொல்லப்பட்டது. உண்மை அறிவு விளங்கினாலே, இல்லாளைப் புடைத்தல் கூடாது என்பதும், சிற்றறிவினரைத் தமது இல்லத்தில் புகவிடுதல் கூடாது என்பதும் விளங்கும்.
No comments:
Post a Comment