“பொற்பு அறிவு இல்லாத பல புத்திரரைப் பெறலின்,ஓர்
நற்புதல்வனைப் பெறுதல் நன்றாமே, - பொற்கொடியே!
பன்றிபல குட்டி பயந்ததினால் ஏதுபயன்?
ஒன்றமையாதோ? கரிக்கு ஒன்று ஓது.” -- நீதிவெண்பா
பொன்னால் ஆன கொடியைப் போன்றவளே! பன்றி பல குட்டிகளைப் போட்டதனால் என்ன பயன்? யானை ஒரே குட்டியைப் போட்டாலும் அது போதாதோ? நீ சொல். அதனால், நல்ல அறிவில்லாத பல பிள்ளைகளைப் பெறுதலைக் காட்டிலும், நல்ல அறிவுள்ள புதல்வன் ஒருவனைப் பெறுதல் நலமாகும்.
(பொற்பு அறிவு - அழகிய அறிவு. பயத்தல் - ஈனுதல். கரி - யானை.)
"தண்டலையார் சதகம்" என்னும் நூலில் இதே கருத்து அமைந்த பாடல் ஒன்று....
"நன்றிதரும் பிள்ளை ஒன்று பெற்றாலும்
குலமுழுதும் நன்மை உண்டாம்;
அன்றி, அறிவில்லாத பிள்ளை ஒரு
நூறுபெற்றும் ஆவது உண்டோ?
மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா
ரே! சொன்னேன்! வருடந் தோறும்
பன்றிபல ஈன்றும் என்ன? குஞ்சரம் ஒன்று
ஈன்றதனால் பயன் உண்டாமே."
இதன் பொருள் ---
மன்றில் நடம் புரிவாரே - திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்து இயற்றுகின்ற பெருமானே!, தண்டலையாரே - திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியவரே! பன்றி வருடந்தோறும் பல ஈன்றும் என்ன - பன்றியானது ஆண்டுதோறும் பல குட்டிகளை ஈன்றாலும் பயன் என்ன?, குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பயன் உண்டாம் - யானை ஒரு கன்றை ஈன்றாலும் மிக்க பயன் உண்டாகும். (அதுபோல), நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும் குலம் முழுதும் நன்மை உண்டாம் - நலம் தரும் ஒரு பிள்ளையைப் பெற்றாலும் அவன் பிறந்த குலம் முழுமைக்கும் நன்மை உண்டாகும். அன்றி - அல்லாமல், அறிவு இல்லாத பிள்ளை ஒரு நூறு பெற்றும் ஆவது உண்டோ - நல்லறிவு இல்லாத நூறு பிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது நன்மை உண்டோ? (இல்லை).
"நன்றி தரும் பிள்ளை ஒன்று, அறிவு இல்லாத பிள்ளை நூறு" இந்த வாசகம் சிந்தனைக்கு உரியது.
திருதராஷ்டிரனுக்கு நூறு பிள்ளைகள்தான் இருந்தார்கள். அவர்களில் விகர்ணன் தவிர, மற்றவர் யாருக்கும் நல்லறிவு இல்லை. நல்லறிவு உள்ளவரோடும் அவர்கள் பழகவும் இல்லை. நல்லறிவு சொன்னவர்களை அவர்கள் பழிக்கத்தான் செய்தார்கள். முடிவில், அந்தக் குலமே அழிந்து போனது.
இரணியனுக்கு ஒரு நல்ல பிள்ளை ஒன்று வாய்த்தது. இராக்கதர் குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், பிரகலாதரை, "பிரகலாத ஆழ்வார்" என்று வழங்குவதும், வணங்குவதும் காண்கின்றோம். பிரகலாத ஆழ்வாரால், அரக்கனான இரணியனும் நற்கதியைப் பெற்றான். சொல்லப் போனால், திருமால் எடுத்த அவதாரங்களிலேயே, நரசிம்ம அவதாரம்தான் ஒரு சில நாழிகைகளிலேயே முடிவு பெற்றது. நல்லபிள்ளைக்கு நரசிம்மம் துணை நின்றது.
மிருகண்டு முனிவர் பிள்ளைப் பேறு வேண்டி, சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார். பெருமான் அவரது தவத்திற்கு இரங்கி, அவர் முன் தோன்றி, பின்வருமாறு கேட்கின்றார்...
1. தீய குணங்களே நிறைந்து, கொஞ்சமும் மெய்யறிவு இல்லாமல், ஊமையும், செவிடும், முடமும், குருடும் ஆகிய தன்மைகளோடு, நோயில் உழல்பவனாக, நூறு ஆண்டுகள் வாழுகின்ற பிள்ள வேண்டுமா?
"தீங்கு உறு குணமே மிக்கு,
சிறிது மெய் உணர்வு இலாமல்,
மூங்கையும் வெதிரும் ஆகி,
முடமும் ஆய், விழியும் இன்றி,
ஓங்கிய ஆண்டு நூறும்
உறுபிணி உழப்போன் ஆகி,
ஈங்கு ஒரு புதல்வன் தன்னை
ஈதுமோ மாதவத்தோய்". --- கந்தபுராணம்.
(மூங்கை --- ஊமை. வெதிர் --- செவிடு)
2. அழகான உடம்போடு, சிறிதும் உறுப்புக் குறைவு இல்லாமல், நோய் நொடிகளில் வாடாமல், எனக்கும் பத்தி உடையவன் ஆகி, சாத்திரங்கள் பலவற்றையும் பயின்று, பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழக் கூடிய பிள்ளை வேண்டுமா?
"கோலமெய் வனப்பு மிக்கு,
குறைவு இலா வடிவம் எய்தி,
ஏல் உறு பிணிகள் இன்றி,
எமக்கும் அன்பு உடையோன் ஆகி,
காலம் எண் இரண்டே பெற்று,
கலைபல பயின்று வல்ல
பாலனைத் தருதுமோ? நின்
எண்ணம் என் பகர்தி" என்றான். --- கந்தபுராணம்.
சிவபெருமான் இவ்வாறு இரண்டு OPTION-களை மிருகண்டு முனிவர்முன் வைத்தார். மிருகண்டு முனிவர், இறைவர் கூறியதை ஆராய்ந்து, பார்த்தார். தீய குணங்களோடு, ஊமையும், செவிடும், முடமுமாக, அறிவில்லாமல், நூறு ஆண்டுகள் வாழுகின்ற பிள்ளையைப் பெறுவதால் பலனில்லை என்பதை உணர்ந்து, "ஆயுள் குறைந்து இருந்தாலும், அறிவு உடையவன் ஆகவும், உடம்பில் ஒரு குறைவும் இல்லாதவனாகவும், பெருமானே! உன்னிடத்தில் அன்பு பூண்ட புதல்வனை எனக்கு அருள் புரியவும்" என்று OPTION-2-ஐயே வேண்டினார்.
"மாண்தகு தவத்தின் மேலாம்
மறை முனி அவற்றை ஓரா,
"ஆண்டு அவை குறுகினாலும்
அறிவுளன் ஆகி, யாக்கைக்கு
ஈண்டு ஒரு தவறும் இன்றி,
எம்பிரான் நின்பால் அன்பு
பூண்டது ஓர் புதல்வன் தானே
வேண்டினன், புரிக" என்றான். --- கந்த புராணம்.
அவ்வரத்தின் படி அவதரித்தவர்தான் மார்க்கண்டேயர். சற்புத்திரனாக விளங்கினபடியால், சிவன் அருளால், "என்றும் பதினாறு" என்று சிரஞ்சீவியாக விளங்கினார்.
எனவே, வாழ்வில் ஒருவருக்கு அவசியமான பேறுகளில் (பாக்கியங்களில்) ஒன்று, "சற்புத்திர பாக்கியம்" எனப்படும் "நன்மக்கள் பேறு" ஆகும். அறிவார்ந்த, நற்குணமுள்ள மக்கள் பேற்றினை ஒருவன் பெற்றிருந்தால், அவனுக்கு இனிவரும் பிறவிகளில் எல்லாம் தீயவை வந்து சேரமாட்டா என்று திருவள்ளுவ நாயனார் அருளியதைக் கருத்தில் கொள்க. "ஆஸ்திக்குப் பிள்ளை" என்ற எண்ணம் வேண்டாம்.
No comments:
Post a Comment