056. கொடுங்கோன்மை - 04ழ கூழும் குடியும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "மேல் விளைவை அறியாமல், முறை தவறி நடக்கும் அரசு, முன்னர் ஈட்டிய பொருளையும், அப் பொருள் வருவாய்க்குக் காரணமான குடிமக்களையும் ஒருசேர இழந்து விடும்" என்கின்றார் நாயனார்.

இதற்குத் திருக்குறள்...

“கூழும் குடியும் ஒருங்கு இழக்கும், கோல்கோடி

சூழாது செய்யும் அரசு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு --- மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன், 

கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் --- அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும்.

('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....


கோல்நிலை திரிந்திடில் கோள்நிலை திரியும்;

கோள்நிலை திரிந்திடில் மாரிவறங் கூரும்;

மாரிவறங் கூரில் மன்னுயிர் இல்லை;

மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்

தன்னுயிர் என்னும் தகுதி இன்று ஆகும்; ---  மணிமேகலை.


இதன் பொருள் ---


கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் - அரசனது கோல் கோடுவதாயின் கோள்களின் நிலை வேறுபடும், கோள்நிலை திரிந்திடின் மாரி வறம்கூரும் - அங்ஙனம் கோள்கள் நிலை தவறினால் மழை பொய்யாமல் கழியும் காலம் மிகும், மாரி வறங் கூரின் மன்னுயிர் இல்லை - மழை வளங் குறைந்தால் நிலைபெற்ற உயிர்கள் இல்லையாம், மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன்உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் - நிலைபெற்ற உயிர்கள் அனைத்தும் மண்ணுலகத்தை ஆள்கின்ற மன்னவனது உயிர்என்று கூறப்படும் தகைமை இலதாம்.



கொடியமன் னவர்க்குக் குடிகளே ஒன்னார்;

கோட்டையே அமர்க்களம்; அவர்தம்

அடிகள்தோய் நிலம் எங்கணும் படு குழியாம்;

அயின்றிடும் அன்னமும் விடமாம்;

நெடிய ஆசனமே காசன மேடை;

நிமிர் உழையோர் நமன் தூதர்;

கடிமனை மயானக் காடு, எனில் கொடுங்கோற்

காரணர் உய்யுமாறு உளதோ. ---  நீதிநூல்.


இதன் பொருள் ---


  முறை தவறிய மன்னர்களுக்குக் குடிகளே பகைவர்; போர்முனையே கோட்டை; அவர்கள் நடக்கும் இடங்களெல்லாம் படுகுழி; உண்ணும் ஊண் நஞ்சு; இருக்கை கொலை மேடை; பணியாளர் கூற்றுவன் தூதுவர்; அரண்மனை சுடுகாடு. இந்நிலையிலுள்ள மன்னர்கள் ஒருகாலும் ஈடேறார்கள்.


No comments:

056. கொடுங்கோன்மை - 04ழ கூழும் குடியும்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "மேல் விளைவை அறியாமல், ...