"ஒத்த ஒழுக்கம், கொலைபொய் புலால்களவோடு
ஒத்த இவையல ஓர்நூல் இட்டு-ஒத்த
உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்
சிறுபஞ்ச மூலம் சிறந்து."
இதன் பதவுரை ---
ஒத்த உறு பஞ்ச மூலம் தீர் மாரி போல் - உலகில் பொருந்திய, மிகுதியாகிய சிறுவிலைக் காலம் எனப்படும் பஞ்சகாலத்திற்குக் காரணமாகிய மழையின்மையைப் போக்கி, உயிர்களுக்கு உண்டாகும் துன்பங்களைப் போக்குகின்ற மழையைப் போல, சிறு பஞ்சமூலம் - (உடம்புக்கு உண்டாகும் நோய்களை அகற்றும்) சிறுய ஐந்து வேர்களைப் (பஞ்சமூலங்களைப்) போன்று, ஒத்த ஒழுக்கம் – மனிதர்கள் மேற்கொண்டு ஒழுகவேண்டியது எல்லார்க்கும் பொதுவான நல்லொழுக்கம். (அது) கொலை – உயிரைக் கொல்லுதல், பொய் – இல்லாததும் நடவாததும் ஆகிய ஒன்றைக் கூறல், புலால் – புலால் உண்ணுதல், களவு ஓடு – களவு செய்தல் ஆகிய இவை இல்லாது இருத்தல் ஆகும். ஒத்த – உயிர்களுக்குப் பொருந்தி இருக்கவேண்டிய, இவை அல - இவற்றுக்கு எதிரிடையானவைகளைப் போக்கி (நன்மை பயக்கவல்ல) ஓர் நூல் இட்டுச் சிறந்து – ஒப்பற்ற இந்நூல் கருத்துக்களைச் சிறப்பாக, கூறீர் - (கல்வியறிவாளரே! நீங்கள் மக்கள் தீய குணங்களை நீக்கி நற்குணங்களைப் பெருக்குமாறு) சொல்லுவீர்களாக.
பஞ்சத்தைத் தீர்க்கும் மழையைப் போல, மக்கள் வினைகளைத் தீர்க்கும் இச் சிறுபஞ்ச மூலம் என்பது கருத்து.
இந்நூலில் ஒழுக்கம் கொலை செய்யாமை முதலிய ஐந்தைப் பற்றிய பொருள்களே வருவதால், இவ்வைந்தையும் சேர்த்துச் சிறுபஞ்சமூலம் கூறுங்கள் என்றார். கூறுங்கள் என்பதன் மூலம் நீங்கள் கற்று உணர்ந்து, அதன்வழி நடந்து பிறருக்கும் எடுத்துச் சொல்லி நல்வழிப்படுத்துங்கள் என்றார். “ஓதியும் உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப் பேதையில் பேதையர் இல்” என்று திருவள்ளுவ நாயனார் அருளி உள்ளதை இங்கு வைத்து எண்ணுதல் வேண்டும். பொய்யாமை, புலாலுணுண்ணாமை, கள் குடியாமை, களவு செய்யாமை முதலியன ஒழுக்கத்தில் அடங்கி நிற்கும் சிறந்த அறங்களாக இருப்பதால் அவை நான்கையும் தனித்தனி அறமாகக்கொண்டு மற்ற அறங்களை எல்லாம் கொல்லாமை என்ற ஒன்றினுள் அடக்கி, இவ்வைந்தையும் சிறுபஞ்சமூலம் எனக் கூறினார்.
மூலம் என்னும் சொல்லுக்கு, வேர், அடி, கிழங்கு என்றும் பொருள் உண்டு. மருத்துவ நூலில் கூறப்பட்ட கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர் பெருமல்லி வேர் ஆகிய பஞ்சமூலங்கள் மக்கள் உடலுக்கு உண்டாகும் பிணிகளைத் தீர்ப்பது போல, இந்நூல் தன்னில் அமைந்த ஒவ்வொரு செய்யுட்களிலும் அடங்கிய ஐந்தைந்து பொருள்களாலும் தன்னைப் படித்து உணர்கின்றவர் பிறவிப் பிணியைப் போக்கத்தக்க நல்லொழுக்க நெறிகளை விளக்கிக் காட்ட வல்லது என்பது அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment