056. கொடுங்கோன்மை - 01. கொலை மேற்கொண்டாரின்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


அரசாட்சி முறையானது நீதிமுறை தவறி நடத்தல் கொடுகோன்மை எனப்படும். செங்கோன்மைக்கு நேர் மாறாக இருப்பது கொடுங்கோன்மை ஆகும். செங்கோன்மையில் மக்கள் நலமுற்று இருப்பர். கொடுங்கோன்மையில் மக்கள் நலம் குன்றி வாடுவர்.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "பொருளை விரும்பிக் குடிமக்களை அலைத்தல் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாதவற்றை செய்யும் அரசனானவன், கொலைத் தொழிலை மேற்கொண்டு வாழ்பவனை விடக் கொடியவன்" என்கின்றார் நாயனார்.

கொலைத் தொழிலாளர் செய்வது ஒரு நாளைத் துன்பம். கொடுங்கோலனோ இடைவிடாது, பொருள் வேண்டும் காலத்தில் எல்லாம் துன்பம் செய்பவன் என்பதால், "கொலை மேற்கொண்டாரின் கொடிது" என்றார் நாயனார்.


இதற்குத் திருக்குறள்...

"கொலை மேற்கொண்டாரின் கொடிதே, அலைமேற்கொண்டு

அல்லவை செய்து ஒழுகும் வேந்து."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கொலை மேற்கொண்டாரின் கொடிது --- பகைமை பற்றிக் கொல்லுதல்தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன், 

அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து --- பொருள் வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறைஅல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன்.

(அவர் செய்வது ஒருபொழுதைத் துன்பம், இவன் செய்வது எப்பொழுதும் துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால்மயக்கு உறழ்ச்சி .'வேந்து' என்பது உயர்திணைப் பொருட்கண் வந்த அஃறிணைச் சொல். 'அலை கொலையினும் கொடிது' என்பதாயிற்று.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதே அறியலாம்...


“அடைய அடைந்தாரை அல்லவை செய்து

கொடைவேந்தன் கோல்கொடியன் ஆகிக் குடிகள்மேல்

கூட்டு இறப்பக் கொண்டு தலையளிப்பின், அஃதன்றோ

சூட்டறுத்து வாயில் இடல்.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


அடைய அடைந்தாரை - தன்னை நெருங்க அடைந்த குடிகளை, அல்லவை செய்து - துன்புறுத்தி, கொடை வேந்தன் - கொடையினை உடைய அரசன், கோல் கொடியனாகி - கொடுங்கோலை உடையவனாகி, குடிகள்மேல் கூட்டு இறப்பக் கொண்டு - குடிகளிடத்தில் தாம் கொள்ளும் இறைப்பொருளை மிகுதியாகக் கொண்டு, தலையளிப்பின் - பின்னர் அவருக்கு வேண்டிய நன்மைகளைச் செய்தலான் அன்பு செய்யின், அஃது - அச்செயல், சூட்டு அறுத்து வாயில் இடல் - மயிலினது உச்சிக் கொண்டையை அறுத்து அதற்கு உணவாக அதன் வாயில் இடுதலை ஒக்கும்.


அரசன் வரிப்பொருளைத் துன்புறுத்தி மிகுதியாகக் கொண்டு பின்னர் எத்துணை செய்யினும் குடிகள் மகிழ்ச்சியடையார்.



“இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான்,

நின்று குறைஇரப்ப நேர்படான், - சென்றுஒருவன்

ஆவன கூறின் எயிறுஅலைப்பான், ஆறுஅலைக்கும்

வேடுஅலன், வேந்தும் அலன்.”   --- நீதிநெறி விளக்கம்.


இதன் பொருள் ---


இன்று கொளற்பால நாளை கொளப்பொறான் - இன்று கொள்ளத் தக்க பொருள்களை நாளைக்கு வாங்கிக் கொள்ள ஒருநாள் பொறுக்கமாட்டான்; நின்று குறை இரப்ப நேர் படான் - சற்று நேரம் எதிரே நின்று  குடிகள் தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டிக்கொள்ள அகப்படமாட்டான்; ஒருவன் சென்று ஆவன கூறின் எயிறு அலைப்பான் - ஒருவன் எதிரே போய்த் தனக்கு வேண்டியவற்றைக் கூறினால் பல்லைக் கடித்து அச்சுறுத்துவான்; ஆறு அலைக்கும் வேடு அலன் வேந்தும் அலன் - இப்படிப்பட்டவன் வேடனும் அல்லன் அரசனும் அல்லன்.


ஒருநாள் பொறுக்குமாறு குடிமக்கள் தமக்கு உள்ள குறைகளைச் சொல்லிக் கொள்ளலாம் என்றாலும் அதற்கும் நேர்படான். ஏதோ நல்ல காலமாக நேர்பட்டானாயினும் அவர்கள் தமக்கு ஆவன கூறும்பொழுது, அதனை ஏற்றுக்கொள்ளாமல் எயிறு அலைப்பான். இவன் எதற்கும் பயனில்லை. எயிறலைத்தல் ஆறலைத்தல் என்பன பண்டுதொட்டே பற்கடித்தல் வழிப்பறித்தல் என்னும் பொருள் மேலாகவே வருவது. 



“கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்

கடும்புலி வாழும் காடு நன்றே.” --- நறுந்தொகை.


இதன் பொருள் ---


கொடுங்கோல் மன்னர் - நீதியில்லாத அரசர். வாழும் நாட்டில் - வாழுகின்ற நாட்டைப் பார்க்கிலும், கடும் புலி வாழும் - கொடிய புலி வாழுகின்ற, காடு நன்று - காடு நல்லது. 


கொடுங்கோலரசர் நாட்டிலே குடிகளுக்கு அச்சமும் கவலையும் அளவின்றி இருக்கம்


No comments:

056. கொடுங்கோன்மை - 02. வேலொடு நின்றான்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "தண்டித்தல் தொழிலோடு நி...