056. கொடுங்கோன்மை - 03. நாள்தொறும் நாடி

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "தினந்தோறும் தனது நாட்டு மக்களுக்கு உண்டாகும் தீமைகளை ஆராய்ந்து, அதற்குத் தக்க நல்லாட்சி புரியாத அரசன் தினந்தோறும் தன்னுடைய நாட்டை இழப்பான்" என்கின்றார் நாயனார்.

குடிமக்களுக்கு நாள்தோறும் உண்டாகும் தீமைகளைக் களைந்து, தீவினையாளரைத் தண்டித்து, குடிமக்களைக் காக்காவிட்டால், குடிமக்கள் நாள்தோறும் அரசனிடத்தில் வெறுப்பு அடைவர். அதனால் அவன் சிறிது சிறிதாக ஆட்சியை இழக்க நேரிடும்.


இதற்குத் திருக்குறள்...

“நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன்,

நாள்தொறும் நாடு கெடும்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் --- தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன், 

நாள்தொறும் நாடு கெடும் --- நாள்தோறும் நாடு இழக்கும்.

(அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“மாமன் என்றும் பாணன் என்றும் வந்தானைப் பொன்மதுரைச்

சேவகன்தான் என்றும் திரியாத சூரன் என்றும்

நாள்தொறும் நாடி  முறை செய்யா மன்னவன்

நாள்தொறும் நாடு கெடும்.”


சேவகன் - வீரன். சூரன் என்பதும் அது. மாமனாகவும் பாணனாகவும் வந்தவன் வீரசூர பராக்கிரமம் பொருந்திய சிவபிரான் என்று அறிந்து நாடி முறைசெய்யா மன்னவன் நாடு கெடும். அரசன் கொடுங்கோலன் ஆயின், கடவுள் தாமே வந்து முறை செய்வார். திருவிளையாடல் புராணத்தில் மாமனாக வந்து வழக்கு உரைத்த படலம், விறகு விற்ற படலம் ஆகியவற்றினைக் காண்க.


மாமனாக வந்து வழக்கு உரைத்த படலம்

மதுரையில் தனபதி என்றொரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி பெயர் சுசீலை. இத்தம்பதியினருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. தனபதியும் அவருடைய மனைவியும் சொக்கநாதரிடம் குழந்தைப்பேற்றினை வேண்டினர். ஒரு சமயத்தில் தனபதி தன்னுடைய சகோதரியின் மகனை தத்துப் பிள்ளையாகக் கொண்டார். சுசீலையும் அக்குழந்தையை அன்புடன் ஏற்றுக் கொண்டாள். தனபதியின் மனைவிக்கும், தங்கைக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும்.

அவ்வாறு ஒருநாள் சண்டை ஏற்பட்டபோது தனபதியின் தங்கை “உங்களுக்கு செருக்கு ஏன்?. என்னுடைய பிள்ளையால் தான் உங்களுக்கு இம்மை மறுமைப் பயன்கள் கிடைக்கப்போகிறது” என்று கூறினாள்.

இதனைக் கேட்டதும் தனபதி அடுத்த பிறவியிலாவது பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும் என்று எண்ணி காட்டிற்குச் சென்று தவம் மேற்கொள்ள எண்ணினார்.

ஆதலால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய தங்கை மகனுக்கு உரிமையாக்கிவிட்டு தன் மனைவியோடு தவத்திற்காக காட்டிற்குச் சென்றார்.

தனபதி காட்டிற்குச் சென்றதை அறிந்த தனபதியின் சொந்தங்கள் அனைவரும் தனபதியின் தங்கையிடமிருந்து சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர். இதனால் தனபதியின் தங்கை செய்வதறியாது திகைத்தாள். இறுதியில் சொக்கநாதப் பெருமானைச் சரணடைந்தாள். 

"எல்லோருக்கும் தாயும், தந்தையுமாய் இருப்பவரே! என்னுடைய தமையனார் குழந்தைப்பேறு வேண்டி தவத்திற்குச் செல்லும்போது தத்துப் பிள்ளையான எனது மகனுக்கு அவருடைய செல்வங்கள் அனைத்தையும் விட்டு சென்றார். இதனை அறிந்த எங்களது உறவினர்கள் பொய் வழக்கு பேசி சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர். ஐயனே! நானோ யாருமற்ற ஒருத்தி. எனக்கு இவன் ஒருவனே புதல்வன். இவனோ, நல்லது கெட்டது அறியாத சிறுவன். எங்களுக்கென்று யாரும் இல்லை. இறைவா, எங்களை இந்நிலையிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று மனமுருக வழிபட்டாள். பின் சோர்வு மிகுதியால் அங்கேயே கண்ணயர்ந்தாள்.

அப்போது சொக்கநாதர் அவளுடைய கனவில் தோன்றி “பெண்ணே, நீ நாளை உன்னுடைய சுற்றத்தாரை உன்னுடைய சொத்துக்களை கேட்டு வழக்காடு மன்றத்திற்கு அழைத்து வா. நாம் இப்பொய் வழக்கினைத் தீர்த்து உம்முடைய பங்கினை உமக்கு அளிப்போம்.” என்று கூறியிருளினார்.

இறைவன் திருவாக்கினைக் கேட்டதும் திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பது இதுதானோ என்று எண்ணி தன்னுடைய வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றாள்.

மறுநாள் தன்னுடைய உறவினர்களிடம் சென்று தன்னுடைய சொத்துக்களை திருப்பி அளிக்கும்படி கேட்டாள். அவர்கள் அவளையும், அவளுடைய மகனையும் திட்டி அடித்து விரட்டினர்.

உடனே அவள் அழுதபடியே வழக்காடு மன்றத்திற்குச் சென்று தன்னுடைய சொத்துக்களை உறவினர்களிடமிருந்து திருப்பித் தரும்படி கேட்டாள்.

வழக்காடு மன்றத்தினர் தனபதியின் உறவினர்களை அழைத்துவர உத்தரவு இட்டனர். வழக்காடு மன்றத்தில் தனபதியின் தங்கைக்கும், உறவினர்களும் வழக்கு நடைபெற்றது. அப்போது இறைவன் தனபதியின் உருவில் வழக்காடு மன்றத்திற்கு வந்தார். தனபதியைக் கண்டதும் அவருடைய உறவினர்கள் நடுங்கினர். இறைவனான தனபதி தன்னுடைய தங்கையையும், மருமகனையும் கட்டிக் கொண்டார். பின்னர் சபையோர்களிடம் “என் தங்கையின் வழக்கை ஆராய்ந்து தர்மத்தின் வழியில் நின்று முடிவினைத் தெரிவியுங்கள்” என்றார்.

பின் வழக்காடு மன்றத்தில் இருந்தவர்கள் இருதரப்பினரையும் நன்கு கேட்டறிந்து உறவினர்களின் கூற்று பொய் என்று கூறினர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் “வந்திருப்பது தனபதியே அல்ல” என்றனர். இதனைக் கேட்டதும் இறைவனான தனபதி அவருடைய சொத்துக்களின் விவரம், உறவினர்களின் விவரம், அவர்களின் குடிப்பெயர், உடன்பிறந்தோர், குணங்கள், செய்தொழில்கள் ஆகியவற்றை விளக்கமாக எடுத்து உரைத்தார்.

இதனைக் கேட்ட வழக்காடு மன்றத்தினர் “இவர் தனபதியே” என்றனர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் எல்லோரும் இனியும் இங்கிருந்தால் அரச தண்டனைக் கிடைக்கும் என்று கருதி ஒருவர் பின்னர் ஒருவராக வெளியேறினர்.

பின்னர் வழக்காடு மன்றத்தினர் “தனபதியின் சொத்துக்கள் முழுவதும் அவருடைய மருமகனுக்கு உரியது” என்று கூறி சாசனம் அளித்தனர். தனபதியான இறைவனார் அந்த சாசனத்தை தனபதியின் தங்கையிடம் கொடுத்தார். பின்னர் எல்லோரும் பார்த்திருக்கும்போது அங்கிருந்து மறைந்தருளினார். இதனைக் கண்ட அங்கிருந்தோர் மாமனாக வந்தது சொக்கநாதப் பெருமானே என்பதை உணர்ந்தனர்.

இதனை சுந்தரேச பாதசேகர பாண்டியனிடம் தெரிவித்தனர். இறைவனின் திருவிளையாடலை எண்ணி வியந்த சுந்தரேச பாதசேகர பாண்டியன் மதுரையை நல்வழியில் ஆட்சி செய்தான்.


விறகு விற்ற படலம்


வரகுண பாண்டியன் மதுரையைச் சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தபோது ஏமநாதன் என்னும் வடநாட்டு யாழிசைக் கலைஞன் ஒருவன் வரகுணனின் அரண்மனைக்கு வந்தான். அவன் தன்னுடைய யாழினைக் கொண்டு இசை பாடி அரசவையில் அனைவரின் மனதையும் மயக்கினான். பின்னர் வரகுணனிடம் பலநாடுகளில் யாழிசையில் தான் வெற்றி பெற்று பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றதாக ஆணவத்துடன் கூறினான்.

வரகுண பாண்டியனும் ஏநாதனின் இசையைப் பராட்டி அவனுக்கு பல பரிசுகளை வழங்கி தன்னுடைய விருந்தினராக சிலநாட்கள் பாண்டிய நாட்டில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டான். ஏமநாதனும், அவனைச் சார்ந்தவர்களும் தங்குவதற்கு அரச மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்தான். இதனைக் கண்டதும் ‘இந்த உலகில் தன்னை யாரும் இசை வாதில் வெல்ல ஆளில்லை’ என்ற ஆவண எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. இதனால் வரகுணனிடம் “உங்கள் நாட்டில் என்னுடன் யாழிசைத்து இசைபாட வல்லார்கள எவரும் உளரோ?” என்று கேட்டான்.

அதற்கு வரகுணன் “நீங்கள் இப்பொழுது உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். நான் உங்களுடன் போட்டியிடும் நபரைத் தேர்ந்தெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.” என்று கூறி அனுப்பினான். பின்னர் அவையோரிடம் கலந்தாலோசித்த வரகுணன், தன்னுடைய அவையில் இருந்த பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞரை ஏமநாதனிடம் யாழிசைத்து இசைபாடி போட்டியிட ஆணை இட்டான்.

மன்னனின் ஆணையைக் கேட்டதும் பாணபத்திரர் “சொக்கநாதரின் திருவருளோடு இசைப் போட்டியில் கலந்து கொள்கிறேன்” என்று கூறினார். ஏமநாதனின் சீடர்கள் மதுரைநகரத் தெருக்களில் யாழினை இசைத்து பாடி எல்லோரையும் தன்வசப்படுத்திக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட பாணபத்திரர் ஏமநாதனின் சீடர்களே இவ்வளவு அழகாகப் பாடுகிறார்களே, நான் எப்படிதான் இசைவாதுவில் ஏமநாதனை வெல்லப் போகிறேனோ என்று கலக்கத்துடன் நேரே சொக்கநாதரைச் சரணடைந்தார். "இறைவா! நீதான் இந்த இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று மனமுருக‌ வேண்டினார்.

சொக்கநாதரும் பாணபத்திரருக்கு உதவ எண்ணம் கொண்டார். வயதான விறகு விற்பவர் போல் வேடம் கொண்டு இடையில் அழுக்காடையும், தலையில் இருக்கும் பிறைச்சந்திரனை அரிவாளாக மாற்றி இடையில் செருகியும் இருந்தார். பழைய யாழினை இடக்கையில் கொண்டும், தலையில் விறகுகளைச் சுமந்தபடி மதுரை நகர வீதிக்குள் நுழைந்தார். விறகு விலை கேட்பவர்களிடம் அதிக விலை கூறி விறகினை விற்காது பொழுதினைப் போக்கினார்.

மாலை வேளையில் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் விறகுக் கட்டினை இறக்கி வைத்து விட்டுத் திண்ணையில் அமர்ந்து சொக்கநாதர் யாழினை மீட்டி பாடினார். பாட்டினைக் கேட்டதும் ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரிடம் வந்து “நீ யார்?” என்று கேட்டான். அதற்கு, விறகு வெட்டியாக வந்த சொக்கநாதர் “நான் யாழிசையில் வல்லவராகிய பாணபத்திரரின் அடிமை” என்றார். “பாணபத்திரரிடம் இசை பயிலும் மாணவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவனாக இருந்தபோது, வயது முதிர்ந்ததால் இசை கற்க தகுதியற்றவன் என்று என்னை பாணபத்திரர் புறந்தள்ளி விட்டார். அதனால் விறகு விற்று பிழைப்பு நடத்துகிறேன். பாணபத்திரரிடம் கற்ற இசையை மறக்காமல் இருக்கும்பொருட்டு நான் அவ்வப்போது பாடுவேன்" என்று கூறினார்.

ஏமநாதன் விறகுவெட்டியாக வந்த இறைவரிடம் “நீ முன்னர் பாடிய பாடலை இன்னொரு தரம் இசையோடு பாடு” என்று கூறினான். இறைவரும் யாழினை மீட்டி சாதாரிப் பண்ணினைப் பாடத் தொடங்கினார். அவருடைய பாட்டில் ஏமநாதன் உட்பட உலக உயிர்கள் அனைத்தும் மெய் மறந்து ஓவியம் போல் இருந்தனர். ஏமநாதன் தன்னை மறந்து இருக்கையில் விறகு வெட்டியாக வந்” இறைவனார் மறைந்தருளினார்.

பின்னர் உணர்வு வந்த ஏமநாதன் “இது நான் அறிந்த சாதாரிப் பண்ணே அல்ல. இது தேவகானம். பாணபத்திரனால் தள்ளப்பட்டவன் இவ்வாறு இசையுடன் பாடினால், பாணபத்திரனின் பாட்டின் திறன் எத்தகையதோ?” என்று கூறி கவலையில் ஆழ்ந்தான். "இனி நாம் பாணபத்திரனோடு இசைவாதுவில் வெற்றி பெற இயலாது. ஆதலால் இப்போதே இங்கிருந்து புறப்படவேண்டும்” என்று கூறி தனது கூட்டத்தினருடன் மதுரையை விட்டு வெளியேறினான்.

இறைவனார் பாணபத்திரனின் கனவில் தோன்றி “பாணபத்திரரே! இன்று யாம் ஏமநானிடம் உன்னுடைய அடிமை என்று கூறி இசைபாடி வென்றோம். அஞ்சற்க.” என்று கூறினார். இதனைக் கேட்ட பாணபத்திரர் விழித்தெழுந்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் விடிந்ததும் திருக்கோவிலுக்குச் சென்று சொக்கநாதரை வழிபட்டு “அடியேன் பொருட்டு தங்கள் திருமுடியில் விறகினைச் சுமந்தீர்களோ?” என்று கூறிவழிபாடு நடத்தினார்.

காலையில் அரசவை கூடியதும் வரகுணன் “ஏமநானை அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான். காவலர்கள் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர். ஏமநாதனைக் காணாது அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது “ஏமநாதன் நேற்றுவரை இங்கிருந்தான். நேற்றுமாலை ஒரு வயதான விறகு விற்பவன் தன்னை பாணபத்திரரின் அடிமை என்று கூறி இசைபாடினான். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏமநாதன் நள்ளிரவில் ஓடிவிட்டான்.” என்று கூறினான்.

அதனைக் கேட்ட அவர்கள் வரகுணனிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்டதும் பாணபத்திரர் தன்னுடைய மனக் கவலையை இறைவனாரிடம் தெரிவித்ததையும், இறைவனார் கனவில் கூறியதையும் விளக்கினார். இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்பதை அறிந்த வரகுணன் பாணபத்திரரை யானைமீது அமர்த்தி மரியாதை செலுத்தினான். பல பரிசுப் பொருட்களை வழங்கினான். பாணபத்திரர் தனக்கு அரசன் கொடுத்த வெகுமதிகளை தன்னுடைய சுற்றத்தாருக்கும் கொடுத்து இன்புற்று வாழ்ந்தார்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....

“நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி

நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்

நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்

நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.” --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

நீதிநூலைக் கற்ற அரசன், அந்நூலின் கருத்து முதற்கண் வைதிகநெறி மேலும், பின்னர்ச் சிவநெறி மேலும் ஆதலை அறிந்து, நாள்தோறும் தனது நாட்டில் அவை பற்றி நிகழ்வனவற்றை, நாள்தோறும் அயராது ஒற்று முதலியவற்றால் ஆராய்ந்து, வைதிக நெறியும், சிவநெறியும் செவ்வனே நடைபெறச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யானாயின், அவனது அரசாசட்சியும், செல்வமும் நாள்தோறும் பையப் பையக் குறைந்து, இறுதியில் முழுதும் கெட்டுவிடும். அவற்றிற்குக் காரணம், எங்கும் பாவச் செயல்களே மலிந்து இருத்தல் ஆகும்.


“ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

முறையில் அரசன் நாடு நல்கூர்ந்தன்று.”  --- முதுமொழிக் காஞ்சி.

இதன் பொருள் ---

ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம் – மனிதர் எல்லார்க்கும், முறை இல் - நீதி முறை இல்லாத, அரசன் நாடு - அரசனது நாடானது, நல்கூர்ந்தன்று - வறுமை உடையது ஆகும்.


"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு."

"முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்."

எனவரும் திருக்குறள் பாடல்களை நோக்குக.

No comments:

056. கொடுங்கோன்மை - 04ழ கூழும் குடியும்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "மேல் விளைவை அறியாமல், ...