“அத்தி மலரும், அருங்காக்கை வெண்ணிறமும்,
கத்துபுனல் மீன்பதம் கண்டாலும், - பித்தரே!
கானார் தெரியல் கடவுளரும் காண்பரோ?
மானார் விழியார் மனம்.” -- நீதிவெண்பா.
காம மயக்கம் கொண்ட பித்தர்களே! காண்பதற்கு அரிய அத்திமலர் என்பது இல்லை. வெண்ணிறம் பொருந்திய காக்கை இல்லை. ஒலிக்கின்ற கடலில் உள்ள மீன்களுக்குக் கால்கள் இல்லை. இவற்றை ஒருகால் பார்க்க முடிந்தாலும், பெண்களின் உள்ளத்தை நம்மால் அறிய முடியாது. நம்மால் மட்டுமோ எனில், மணம் பொருந்திய மாலைகளை அணிந்த தேவர்களும் மானின் பார்வை போலும் மருண்ட விழிகளை உடைய அப் பெண்களின் உள்ளத்தைக் காண்பார்களோ? அவர்களாலும் காண இயலாது.
(அத்தி - பூவாத மரம். கத்து - ஒலி. புனல் - நீர். பதம் - பாதம், அடி. கான் - மணம். தெரியல் - மாலை.)
பின்வரும் பாடலையும் இங்கு வைத்து எண்ணுக...
"வாரியா ழத்தையும், புனலெறியும் அலைகளையும்,
மானிடர்கள் சனனத்தையும்,
மன்னவர்கள் நினைவையும், புருடர்யோ கங்களையும்,
வானின்உயர் நீளத்தையும்,
பாரில்எழு மணலையும், பலபிரா ணிகளையும்,
படியாண்ட மன்ன வரையும்
பருப்பதத் தின்நிறையும், ஈசுரச் செயலையும்,
பனிமாரி பொழி துளியையும்,
சீரிய தமிழ்ப்புலவர் வாக்கிலெழு கவியையும்,
சித்தர்தம துள்ளத்தையும்,
தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வள வெனும்படி
தெரிந்தள விடக்கூடுமோ?
வாரிச மடந்தைகுடி கொண்டநெடு மாலுக்கு
மருகனென வந்தமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!" -- குமரேச சதகம்.
இதன் பொருள் ---
வாரிச மடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த முருகா - தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் வாழும் மார்பனான திருமாலுக்கு மருகன் என்ற முறையிலே வந்த முருகப் பெருமானே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
வாரி ஆழத்தையும் புனல் எறியும் அலைகளையும் - கடலின் ஆழத்தையும் அது வீசும் அலைகளையும், மானிடர்கள் சனனத்தையும் - மக்களின் பிறப்பையும், ("எழுகடல் மணலை அளவிடின் அதிகம், எனது இடர்ப் பிறவி அவதாரம்" என்பது அருணகிரிநாதர் திருப்புகழ். கடற்கரை மணலை அளவிட முடியாது. ஒருக்கால் அளிவிட்டுக் கூளக் கூடுமானால், அந்த எண்ணிக்கையை விடவும் அதிகம்ர மானிடப் பிறவியின் எண்ணிக்கை) மன்னவர்கள் நினைவையும் - அரசர்கள் எண்ணத்தையும், புருஷர் யோகங்களையும் - ஆடவர்களுக்கு வரும் சிறப்பையும், வானின் உயர் நீளத்தையும் - வானத்தின் உயரத்தையும் நீளத்தையும், பாரில் எழு மணலையும் - உலகில் தோன்றும் மணலையும், பல பிராணிகளையும் - பலவகையான உயிர்களையும், படி ஆண்ட மன்னவரையும் - உலகினை ஆண்ட அரசர்களையும், பருப்பதத்தின் நிறையும் - மலையின் நிறையையும், ஈசுரச் செயலையும் - இறைவன் அருள் விளங்கும் நிலையையும், பனிமாரி பொழி துளியையும் - பனித் துளிகளையும், மழைத் துளிகளையும், சீரிய தமிழ்ப் புலவர் வாக்கில் எழு கவியையும் - சிறந்த தமிழ்ப் புலவருடைய நாவிலிருநது விளையும் பாடல்களின் சிறப்பையும்; சித்தர் தமது உள்ளத்தையும் - சித்தருடைய நினைவின் உறுதியையும், தெரிவையர்கள் சிந்தையையும் - பெண்களின் உள்ளத்தையும், இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிடக் கூடுமோ - இவ்வளவு என்று கூறும் முறையிலே ஆராய்ந்து அறுதியிட்டுக் கூற முடியுமோ? (முடியாது).
No comments:
Post a Comment