056. கொடுங்கோன்மை - 05. அல்லல் பட்டு ஆற்றாது

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


இந்த அதிகாரத்தில் ஒரும் ஐந்தாம் திருக்குறளில், "துன்பமுற்று, அத் துன்பத்தைத் தாங்க மாட்டாமல் தனது குடிமக்கள் அழுத கண்ணீரானது, அரசனுடைய செல்வத்தை அழிக்கும் படைக்கலம் ஆகும்" என்கின்றார் நாயனார்.

"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளினை ஒக்கும்" என்பது முதுமொழி. அல்லல் படுத்திய பாவத்தால் உண்டான வருத்தம், கண்ணீராய் வெளிப்பட்டது.  அது செல்வத்தைத் தேய்க்கும் படையாக மாறியது.


இதற்குத் திருக்குறள்....

"அல்லல்பட்டு, ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே,

செல்வத்தைத் தேய்க்கும் படை."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே --- அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே, 

செல்வத்தைத் தேய்க்கும் படை --- அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி.

(அழுத கண்ணீர்: அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“ஐவர்இல் லாள்அழுத அன்றேகண்டு ஏக்குற்றார்

துய்யகங்கை சேய்முதலோர், சோமேசா! --- மெய்யேயாம்

அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.”


இதன் பொருள்---


சோமேசா! அல்லல்பட்டு - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று, ஆற்றாது - அதனைப் பொறுக்கமாட்டாது,   அழுத கண்ணீர் அன்றே - அழுத கண்ணீரல்லவோ, செல்வத்தைத் தேய்க்கும் படை - அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி, மெய்யே ஆம் - அஃது உண்மையே,

ஐவர் இல்லாள் அழுத அன்றே - பஞ்சபாண்டவரது மனைவியாகிய திரௌபதி அரசவையில் தன்னைத் துரியோதனன் மானபங்கம் செய்த காலத்தில் மனம் நொந்து அழுதபோதே, கண்டு -அதனைப் பார்த்து, துய்ய கங்கை சேய் முதலோர் - தூய கங்கையின் மைந்தனான வீடுமன் முதலிய பெரியோர்கள், ஏக்குற்றார் - துரியோதனன் முதலியோருக்கு நேரும் அழிவைக் குறித்து மிகவும் ஏங்கினார்கள் ஆகலான் என்றவாறு.


“நெடுமா நகரில் சனம் அனைத்தும்

நேயம் பெறக் கண்டு, இவை கூற

வடுமா மரபிற்கு உறத்தேடும்

மன்பேர் அவையின் முன்புக்காள்,

கொடுமா மலர்க்கண் புனல் சோர,

குலைந்தே கிடந்த குழல் சோர,

தடுமாறு உள்ளம் தனிசோர,

தலைநாள் அளித்த தழல் போல்வாள்”


“நாணே முதலாம் நாற்குணனும்

நண்ணும் கற்பும் நயந்து அணிந்த

பூணே அனையாள் அழுது அரற்றி,

புன்பேர் அவையில் புகும் சோகம்

காணேம் என்று, நிலன்நோக்கி

கதிர்வேல் நிருபர் இருந்து இரங்க,

கோணே நேர்பாடாய் இருந்தான்

குருடு என்று உரைக்கும் கொடியோனே.”


“வாரும் கண்ணீர் வளர் கொங்கை

வரைமேல் அருவி எனவீழ,

தாரும் குழலும் மின்னுடனே

தலம்சேர் கொண்டல் எனவீழ,

கூரும் துயரினுடன் வீழ்ந்து,

கோகோ என்று கோச்சபையில்

சோரும் கொடியை மெய்நோக்கி,

துச்சாதனன் மெய் சுடச்சொன்னான்.”

--- வில்லிபாரதம், சூதுபோர்ச் சருக்கம்.

தருமபுத்திரன் சகுனியுடன் சூதாடி அரசு முதலிய செல்வம் யாவும் தோற்றபின், துரியோதனன் ஏவலால் துச்சாதனன் திரௌபதியைத் தலைமயிர் பற்றி இழுத்து வந்து சபையில் நிறுத்தித் துகிலுரிந்து மானபங்கம் செய்ய முயன்றபோது, அவள் கண்ணீர் ஆறாய்ப் பெருக அழுதமை கண்டு பீஷ்மர், துரோணர், முதலிய பெரியோர்கள் துரியோதனனுக்கு அஞ்சிச் செயலற்று இருந்தாரேனும், இக்கண்ணீர் அத் துரியோதனன் குலம் அழிதற்கு ஏதுவாகும் என்று ஏங்கினார்கள். "ஆறாகி இரு தடங்கண் அஞ்சன வெம்புனல் சோர, அளகம் சோர, வேறான துகில் தளைந்த கை சோர, மெய்சோர வேறுஓர் சொல்லும், கூறாது கோவிந்தா! கோவிந்தா! என்று அரற்றிக் குளிர்ந்து நாவின் ஊறாத அமுது ஊற உடல் புளகித்து உள்ளமெலாம் உருகினாளே" என்னும் பாரதக் கவியை நோக்குக.


அடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதி சூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“துன்று புவிக்கு இடும்பை சூழ்ந்து புரவேந்தர்

இன்றி எரிந்தார், இரங்கேசா! --- கன்றியே

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை”

இதன் பொருள் --- 

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! புரவேந்தர் - திரிபுராதிகள், புவிக்கு - பொருந்திய பூலோகத்திற்கு, இடும்பை சூழ்ந்து - துன்பம் செய்து, இன்றி எரிந்தார் - (அதனால்) இல்லாமல் வெந்து சாம்பார் ஆனார்கள், (ஆகையால், இது)  செல்வத்தை - அரசனுடைய செல்வமாகிய மரத்தை, தேய்க்கும் படை - குறைக்கும் வாளாவது, கன்றி - மனம் நொந்து, அல்லல் பட்டு - குடிகள் துன்பப்பட்டு, ஆற்றாது - (அதைப்) பொறுக்க மாட்டாமல், அழுத கண்ணீர் அன்றே - அழுது உகுத்த கண்ணீர் அல்லவோ (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளோடு ஒக்கும்.

விளக்கவுரை --- திரிபுராதிகள் முறையே செம்பொன், வெண்பொன், கரும்பொன்களால் ஆகிய மூன்று கோட்டைகளில் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் கோட்டைகள் பறக்கும் தன்மை உடையன. ஆகையால், அவர்கள் தமது வர பலத்தால், அங்கங்கும் பறந்து சென்று பட்டணங்களையும், கோட்டைகளையும் பாழாக்கி உயிர்களுக்குத் துன்பம் செய்து வந்தார்கள். தேவர்களும் அவர்கள் துன்பத்தைச் சகியாமல் முறையிட்டதனால், சிவபெருமான், பூமியே தேராகவும்,  சந்திர சூரியர்களே அதன் சக்கரங்களாகவும்,  மேருவே வில்லாகவும், ஆதிசேஷனே நாணாகவும், விஷ்ணுவே பாணமாகவும் கொண்டு வந்து, இடையில் தேர் அச்சு முறிந்ததனால், சிரித்து அம் மூன்று பட்டணங்களையும் எரித்ததனால், அவர்களின் முப்புரமும் சாம்பாரய்ப் போனது. அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர், திரிபுராதிகளின் வர பலத்தையும் செல்வத்தையும் தேய்த்த படையாயினமை காண்க.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“தாதை சிறையிருக்கத் தங்கைஅழக் கஞ்சன்உறும்

தீதைஎவர் சொல்வார், சிவசிவா! --- மேதினியில்

அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.”

தாதை - கம்சனின் தந்தை, உக்கிரசேனன். தேவகி - கம்சனின் தங்கை. கண்ணன் தந்தை - வசுதேவன். யாவரையும் சிறை வைத்துத் தங்கை பிள்ளைகளைக் கொன்றான்.

திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகிய கண்ணபிரானுடைய தாய் தேவகி. அவள் கம்சனுடைய தங்கை. எனவே, கண்ணனுடைய அம்மான் கம்சன். அப் பாதகன் அறநெறி விடுத்து, மறநெறி அடுத்து, தீமை பல புரிந்து வந்தான்.

கம்சன் தன்னைக் கொல்லும் பொருட்டு, எங்கேயோ ஒருவன் பிறந்து இருக்கின்றான் என்று, மாயை சொல்லக் கேட்டு அஞ்சினான். அக் குழந்தை எங்கு உளது என்று அறியானாய், உலகில் உள்ள குழந்தைகளை எல்லாம் கொல்லுமாறு பூதனை என்ற அரக்கியை அனுப்பினான். அவள் தேவமாது போல் வடிவு கொண்டு, கண்டார் மயங்கிக் காதல் கொள்ள நடந்து பால் கொடுப்பதுபோல் பாவனை செய்து குழந்தைகளைக் கொன்று குவித்துக்கொண்டு, கண்ணபிரான் வளர்கின்ற ஆயர்பாடிக்கு வந்தாள்.

“கண்டவர் மனம்புகு காவிபுரை கண்ணாள்

வண்டுபடு தாமரை மலர்க்கையின் விளங்கப்

புண்டரிக மாதுவரல் போலஅருள் மாரிக்

கொண்டல்விளை யாடல்புரி கோயிலின் அடைந்தாள்.”


“குண்டலம் இலங்கவொர் குறங்குஇனிது இருத்தி

வெண்தளவு அரும்புஅனைய மென்னகை விளைத்து,

மண்டுபுனல் வேலிதிகழ் மண்ணும்உயர் விண்ணும்

உண்டவனை வெய்யமுலை ஊட்டினள் அணைத்தே.”


யசோதையின் திருமாளிகையின் முன், இளங்கொண்டல் மேகம்போல் அழகின் கொழுந்தாக ஆடல் புரியும் கண்ணபிரானைக் கண்டாள். கல்லும் கரையும் அக் குழந்தையைக் கண்டு பூதனையின் மனம் கரையவில்லை. இரு கரங்களால் எடுத்தாள். மடியில் இருத்தி, நஞ்சுடன் கூடிய தனது முலையை மண்ணும் விண்ணும் உண்ட வாசுதேவனுக்கு உண்ணக் கொடுத்தாள். நீலமேகம் போன்ற பாலகிருஷ்ணர் அவளுடைய பால், உணர்வு, உயிர் எல்லாவற்றையும் ஒருங்கே உண்டனர். மலைபோலே கீழே வீழ்ந்து மாண்டனள். அம் மாயப் பேயாகிய பூதனை மாண்டும், அவள் மீது அஞ்சாது குழந்தையாகிய கோபாலமூர்த்தி விளையாடி அருளினார்.

கம்சன் கண்ணனை மதுராபுரிக்கு அழைத்து, அவரைக் கொல்லும் பொருட்டு, தனது பட்டத்து யானையாகிய குவலயா பீடம் என்ற யானைக்கு மதம் ஏற்றி வாயிலில் வைத்திருந்தான்.

கஜேந்திரம் என்ற யானையைக் காத்தருளிய கண்ணபிரான் அந்த யானையுடன் பொருது, அதன் தந்தத்தை ஒடித்து வெற்றி பெற்றனர்.

கண்ணபிரானைக் கொல்லும் பொருட்டு இரண்டு அரக்கர்களைக் கம்சன் ஏவினான். ஒரு அரக்கன் கண்ணன் மேய்க்கின்ற பசுவின் கன்றுகளுடன் தானும் ஒரு கன்றாக வடிவெடுத்து,சமயம் பார்த்து தன் கொம்பினால் குத்திக் கொல்லுதற்கு ஆயத்தமாக இருந்தான். மற்றொரு அரக்கன், கண்ணபிரான் கன்று மேய்த்து வெய்யிலுக்கு ஒதுங்கும் சோலையில் ஒரு விளாமரமாக நின்றான். அதன் நிழலில் வந்து ஒதுங்கியவுடன் வேருடன் சாய்ந்து கொல்லக் கருதி இருந்தான்.

இந்த இருவருடைய மாயச் சூழ்ச்சியையும் ஆயர்குலக் கொழுந்தாகிய அண்ணல் உணர்ந்தனர். ஆயர் சிறார்களுடன் கன்றுகளை மேய்த்து அவ் விளாமரத்தின் நிழலில் வெய்யிலுக்கு ஒதுங்கினார். அடே கோபாலர்களே! இந்த விளா மரத்தில் நிரம்பவும் பழங்கள் பழுத்து நிறைந்திருக்கின்றன. இங்கே இவைகளை அடித்து உதிர்க்கக் கல்லும் இல்லை என்று கூறி, கன்றின் உருவமாக மாறி வந்துள்ள அரக்கனை எடுத்து விளாமரத்தின் மீது சாடினார். விளாமரமாக நின்ற அரக்கனும், கன்றாக வந்த அரக்கனும் ஒருங்கே மாண்டு ஒழிந்தார்கள்.  இந்த அற்புதத்தைக் கண்ட ஆயச் சிறுவர்கள் தூய மாதவனை வாயார வாழ்த்தி வணங்கினார்கள்.

இந்தச் செய்தியை, சிவரகசியம் என்ற பெருநூல் படிக்கும்தொறும் தித்திக்கும் தமிழில் பேசுகின்றது. அப் பாடல் அடியில் வருகின்றது.


“கன்றெடுத்து விளவெறிந்து காலெடுத்த

மழைக்கு உடைந்த காலிகாக்கக்

குன்றெடுத்த மால்விடையின் கொடிஎடுத்து

வடிவெடுத்துக் கூறஒணாத

மன்றெடுத்த சேவடியின் மலரெடுத்துச்

சாத்தியன்பின் வழிபட்டோர்கள்

இன்றெடுத்த உடற்பிறவி இனிஎடா

வண்ணம் எண்ணம் எய்துவாரே.”


பின்வரும் திருவாசகப் பாடலிலும் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.


“என்றும் பிறந்துஇறந்து ஆழாமே ஆண்டுகொண்டான்

கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பரிய

குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவித்

துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ.”


கம்சன் கண்ணபிரானைக் கொல்லும் பொருட்டு, ஒரு இரக்கமில்லாத அரக்கனை ஏவினான். அவன் பசுவினை மேய்த்து வரும் கண்ணன் எதிரில் பெரிய பறவை வடிவாக வாயில் அனல் பொறிகள் பறக்க எதிர்ந்தான். கண்ணபிரான் அஞ்சாது சென்று அப் பறவையின் அலகுகளை இரு கரங்களாலும் பற்றிப் பிளந்து எறிந்தார்.

குபேரனுடைய புதல்வர்களாகிய நளகூபரன் மணிக்ரீவன் என்று இருவர்களும், அரம்பையர்களுடன் களிப்பு மிகுதியால் காதலுடன் ஆடை நீத்து, நீரில் விளையாடினார்கள். அவ்வழி வந்த நாரதமுனிவர், "இது அறிவுடையோர்க்கு அடாது. நீங்கள் மரங்கள் ஆகக் கடவீர்கள்" என்று சபித்தார். அவர்கள் அஞ்சி அஞ்சலி செய்து பொறுத்தருளுமாறு வேண்டினார்கள்.

"ஆயர்பாடியிலே நந்தகோபன் மாளிகையில் மருதமரங்களாகத் தோன்று வளர்ந்து, தேவயாண்டு நூறுவரை நிற்பீர்கள்.  பூபாரம் தீர்க்க கோபாலகிருஷ்ணராகத் திருமால் அவதரிப்பார்.  அவருடைய பாதகமலம் தீண்ட உமது சாபம் தீரும்" என்று வரம் தந்து நீங்கினார்.  அவர்கள் அவ்வாறே நந்தகோபன் வீட்டிலே மருதமரங்களாக முளைத்துக் கிளைத்து நின்றார்கள்.

கண்ணபிரானுக்கு யசோதை, பாலும் தயிரும் வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாது, ஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர் வெண்ணெயை வாரி வாரி உண்டும், அடுத்த மனைகளில் உள்ளதனைக் களவு செய்து உண்டும், உரியில் உள்ளதனை உரல்மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை சீற்றமுற்று, தாம்புக்கயிறு ஒன்றெடுத்து உரலிலே கட்டும் பொருட்டு, ஓடித் தேடிப் பிடித்து வாசுதேவர் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய அக் கயிற்றுக்கு அடங்காத மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினாள். வேறு பல கயிறுகளை எடுத்து, ஒன்றுடன் ஒன்றை முடிந்து சுற்றினாள்.  எத்துணைக் கயிறுகளை முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. அந்தோ இது என்ன அதிசயம் இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே என்று வருந்தினாள். தாயாருடைய வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும் மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை மாற்றவும் திருவுள்ளங்கொண்டு, இடையைச் சுருக்கினார். பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற அவரை யசோதை உரலுடன் கட்டிவிட்டுச் சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுது, மெல்லத் தவழ்ந்து, வாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே சென்றார்.

உரல் அச் சிறிய சந்தில் வரத் தடைபட்டதனால், தமது செம்பவளத் திருவடித் தாமரையால் அம்மருத மரங்களை உதைத்தருளினார். இடி இடித்ததுபோல் அம்மரங்கள் இரண்டும் வேருடன் வீழ்ந்தன. நளகூபரன், மணிக்ரீவன் என்ற குபேர புதல்வர்கள் தொல்லுருவமாகிய நல்லுருவம் பெற்று, தாமோதரனைப் போற்றி செய்து, தங்கள் பதவியை அடைந்தார்கள்.

யசோதை தன் குலக்கொழுந்தாகிய கோபாலகிருஷ்ணனை வாயில் முற்றத்தில் கண்வளரச் செய்து, அந்தப்புரத்தில் குடும்ப அலுவலில் ஈடுபட்டிருந்தாள். கமசனால் அனுப்பப்பட்ட ஒரு அரக்கன், அருகில் இருந்த ஒரு வண்டியில் மறைந்து, அச் சகடத்தைக் கண்ணபிரான் மீது உருட்டினான். கண்துயின்று கொண்டு இருந்த கமலக்கண்ணர், சட்டென்று கண் விழித்து, சகடத்தைச் சிறிது திருவடியால் உதைத்தருளினார்.  அரக்கன் அழிந்தனன்.

கண்ணபிரான் பலராமருடன் கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் இனிது வளர்கின்றபோது, கம்சன் அவர்களை அக்ரூரரை ஏவி அழைத்தான். கார்வண்ணமூர்த்தியும், சங்கவண்ண மூர்த்தியும் கம்சனைக் காணும் பொருட்டு, மதுரையம்பதியை அடைந்தார்கள். அரண்மனை வாயிலில் அவர்களைத் தடுத்துக் கொல்லும் பொருட்டு, மிகப் பெரிய மல்லர்களாகிய சாணூரன், முட்டிகன் என்ற இருவரை கம்சன் நியமித்து இருந்தான்.  மலைகள் இரண்டு எதிர்ப்பது போல் இருவர்களும் இருபாலகர்களை எதிர்த்தார்கள். சாணூரன் கண்ணபிரானுடனும், முட்டிகன் பலராமருடனும் பொருதார்கள். இவர்கள் இருவரையும் மல்யுத்தத்தில் கூறிய முறைப்படி வலசாரி இடசாரியாகத் திரிந்தும், சுழன்றும் போராடி, முடிவில் கண்ணபிரானும் பலராமரும் அம் மல்லர்களைக் கொன்றார்கள்.

கம்சன் அதிர்ந்து போனான். கிருஷ்ண-பலராமரை பாராட்ட மனமில்லாதது மட்டுமின்றி, "வீரர்களே! இந்த கிருஷ்ணனையும், பலராமனையும் மதுராபுரியை விட்டு விரட்டி அடியுங்கள். இவர்களது தந்தை நந்தகோபன், தாய் யசோதா, இவர்களுக்கு ஆதரவளித்த எனது தந்தை உக்ரசேனன் உட்பட அனைவரும் கொல்லப்பட வேண்டும்"  என ஆணையிட்டான்.

சற்றும் நியாயமின்றி நடந்து கொள்ளும் கம்சனின் மீது கோபம் கொண்ட கிருஷ்ணர், அதே வேகத்தில் அவன் வீற்றிருந்த சிம்மாசனம் நோக்கி ஓடினார். தலையில் இருந்த கிரீடத்தை தள்ளி விட்டவர், அவன் முடியை பற்றி மல்யுத்த மைதானத்திற்கு இழுத்து வந்தார்.

பின்னர் கம்சனை கீழே தள்ளி மார்பின் மீது ஏறி அமர்ந்து முகத்தில் ஒரு குத்து விட்டார். அந்த ஒரு அடியை தாங்க முடியாமல் அந்த அரக்கன் உயிரை விட்டான். கம்சனுக்கு கங்கர் என்பவர் உள்ளிட்ட எட்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் கிருஷ்ணரை பழி வாங்க விரைந்து புறப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரையும் பலராமர், ஒருவர் பின் ஒருவராக கொன்றார்.

தேவகியும், நந்தகோபரும் அல்லல்பட்டு, ஆற்றாது அழுத கண்ணீர், கம்சனை அடியோடு அழித்தது.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

"மாற்றார் படைஅன்றி வன் கொடுங்கோலவரை அல்லல்பட்டு

ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும்படை

கால் தாமரைப் புல்லை மாயோன் அளக்கும் இக்காசினியின்

மேல்தான் இவையன்றி என்சொல்வர் சீரற்ற வேந்தரையே".

இதன் பொருள் ---

பகைவரின் படைகள் மட்டுமல்லாது, கொடுங்கோல் புரிந்த அரசனால், துன்பப்பட்டு குடிமக்கள் அழுத கண்ணீரானது, செல்வத்தைத் தேய்க்கும் படைக்கலமாகும் என்பதைத் தவிர, திருப்புல்லாணியில் எழுந்தருளி உள்ள திருமாலால் தனது திருவடியால் அளக்கப்பட்ட இந்த உலகத்தில் கொடுங்கோல் அரசு புரிகின்ற அரசர்க்கு வேறு என்ன சொல்ல உள்ளது?

மாற்றார் படையன்றி - பகைவர்களுடைய படையே அல்லாமல்.  வன்கொடுங்கோல் - வலிய கொடிய கோல். காசினியின் மேல்தான் - உலகத்திலே. சீரற்ற வேந்தரை - முறைப்படி அரசு செலுத்தாத அரசர்களை.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...

“தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்

மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்

ஆற்றா(து) அவர் அழுத கண்ணீர் அவைஅவர்க்குக்

கூற்றமாய் வீழ்ந்து விடும்.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

தோற்றத்தால் பொல்லார் - குடிப்பிறப்பால் தீய செயல்களை உடையவர், துணையில்லார் - ஒரு துணையும் இல்லாதவர், நல்கூர்ந்தார் - வறுமையுடையார், மாற்றத்தால் செற்றார் - சொற்களால் பகைவரை ஒத்தார், என - என்று இங்ஙனம் நினைத்து, வலியார் ஆட்டியக்கால் - குடிப் பிறப்பு, துணை, செல்வம் முதலிய வலிமை உடையார் அவை இல்லாதாரை நலிந்த இடத்து, ஆற்றாது அவர் அழுத கண்ணீர் அவை - தாங்க இயலாது அவர்கள் தம் கண்களினின்றும் பரப்பிய கண்ணீராகிய அவையே, அவர்க்கு கூற்றமாய் வீழ்ந்துவிடும் - தம்மை நலிந்த அவர்க்குக் கூற்றாய் விழாநிற்கும்.


எளியார் அழுத கண்ணீர், அவர் தம்மை நலிந்தார்க்குக் கூற்றாய் முடியும்.


அருவினள் சேறலும் அற் புதத்து அவண்

வரு பொருள் யாவையும் மறைந்து போயின

வெரு அரு முறை புரி வேந்தை விட்டு அகல்

திருவொடு பெயர்வது ஓர் செல்வம் போலவே.

--- கந்தபுராணம், மாயை நீங்கு படலம்.

குடிமக்களை அச்சுறுத்தி ஆட்சி புரியும் அரசனை விட்டு. அவனிடத்து இருந்து செல்வம் அனைத்தும் நீங்கினது போன்று, காசிப முனிவரை விட்டு மாயை என்பாள் நீங்கியதும், அதிசயிக்கத்தக்க வகையில் அங்கே இருந்த செல்வங்கள் அனைத்தும் மறைந்து போயின. 


No comments:

056. கொடுங்கோன்மை - 06. மன்னர்க்கு மன்னுதல்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "அரசனுக்குப் புகழ் நிலைக்க...