056. கொடுங்கோன்மை - 06. மன்னர்க்கு மன்னுதல்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "அரசனுக்குப் புகழ் நிலைக்கக் காரணம் அவனது நல்லாட்சி. அது இல்லையானால் அவனுக்குப் புகழ் பொருந்துவது இல்லை" என்கின்றார் நாயனார்.

ஒளி --- புகழ்.

ஒருவன் அறத்திற்கு ஏதுவாகிய காரியங்களைச் செய்தால், அவற்றால் புகழ் நிலைக்கும். அதற்கு எதிராக பழியை உண்டாக்கக் கூடிய பாவச் செயல்களைச் செய்வானாயின், புகழ் நிலைபெறாது. வெற்றி, கொடை முதலியவைகளும் செங்கோலனாக இல்லாதபோது நிலைத்து இருக்கா.


இதற்குத் திருக்குறள்...

“மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை, அஃது இன்றேல்

மன்னா ஆம் மன்னர்க்கு ஒளி.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை --- அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம், 

அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் --- அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப்புகழ்கள் தாம் உளவாகா.

(விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் 'இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக'  (நான்மணி 17 ) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால் ஒளி மன்னாவாம் : ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று. வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின், பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மை இல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“வேர்த்துஇடுக்கண் செய்து விளிந்தான் கருநாடன்

மூர்த்திபால் மேனாள், முருகேசா! --- கூர்த்துஉணரில்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை, அஃதுஇன்றேல்

மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.”


இதன் பொருள் ---


முருகேசா - முருகப் பெருமானே, கருநாடன் - கருநாட நாட்டு அரசன், மேனாள் - முன்னாளில், மூர்த்திபால் - மூர்த்தி நாயனாரிடத்திலே, வேர்த்து இடுக்கண் செய்து - சினந்து துன்பத்தைச் செய்து, விளிந்தான் - மாண்டொழிந்தான். கூர்த்து உணரில் - ஆராய்ந்து பார்த்தால், மன்னர்க்கு மன்னுதல் - அரசர்க்குப் புகழ்கள் நிலைபெறுதல், செங்கோன்மை - செங்கோன்மையினாலேயாம், அஃது இன்றேல் - செங்கோல்முறை இல்லாவிடில், மன்னர்க்கு ஒளி - அரசர்க்குப் புகழானது, மன்னாவாம் - நிலைபெறமாட்டாவாம்.

கருநாட நாட்டு அரசன் மூர்த்தி நாயனார்க்கு முன்னாளில் இடையூறுகள் செய்து அழிந்தொழிந்தான். அரசருக்குப் புகழ் நிலைபெறுதல் செங்கோன்மையினாலேயாம். செங்கோன்மை இல்லாது ஒழியின் அரசர்கட்குப் புகழ் நிலைபெறமாட்டாது என்பதாம்.

மும்மையால் உலகாண்ட மூர்த்தி  நாயனார் வரலாறு


பாண்டி நாட்டிலே, மதுரைப்பதியிலே, வணிகர் குலத்திலே மூர்த்தி நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபத்தியில் சிறந்தவர். அன்பையே திருவுருவாக் கொண்டவர்.

நாயனார் சொக்கலிங்கப் பெருமானுக்குத் சந்தனக் காப்பு அணிவதைத் தமக்கு உரிய திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். வரும் நாளில், வடுகக் கருநாடக மன்னன் ஒருவன் தென்னாடு போந்து, பாண்டியனை வென்று, மதுரைக்கு அதிபதியானான். அவன், சமண சமயத்தைத் தழுவித் திருநீறு அணியும் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைத்து வந்தான்.  அவன், தீங்குக்கு இடையே மூர்த்தி நாயனாரின் திருத்தொண்டும் நடந்து வந்தது.

கருநாடக மன்னன், மூர்த்தியாருக்குப் பல இடையூறுகள் புரியத் தொடங்கினான். மூர்த்தியார் தம் திருத்தொண்டில் வழுவினாரில்லை. அது கண்ட மன்னன், நாயனார் சந்தனக் கட்டைகளைப் பெறாதவாறு தடைகளை எல்லாம் செய்தான்.  நாயனார் மனம் வருந்தலாயிற்று. வருத்த மேலீட்டால், "இக் கொடுங்கோலன் என்று மாய்வான்? இந் நாடு திருநீற்று நெறியினைத் தாங்கும் வேந்தனை என்றே பெறும்?" என்று எண்ணி எண்ணிச் சந்தனக் கட்டையைத் தேடிப் பகல் முழுவதும் திரிந்தார். சந்தனக் கட்டை எங்கும் கிடைக்கவில்லை.  திருக்கோயிலுக்குச் சென்று, "இன்று சந்தனக் கட்டைக்கு முட்டு நேர்ந்தால் என்ன? அதைத் தேய்க்கும் என் கைக்கு எவ்வித முட்டும் நேரவில்லை" என்று கருதி, ஒரு சந்தனக்கல் மீது தமது முழங்கையை வைத்துத் தேய்த்தார். இரத்தம் பெருகிப் பாய்ந்தது. எலும்பு வெளிப்பட்டது.  எலும்புத் துளைகள் திறந்தன. மூளை ஒழுகிற்று. அதைக் கண்டு பொறாத ஆண்டவன் அருளால், "ஐயனே! மெய்யன்பின் முனிவால் இதைச் செய்யாதே.  இராச்சியம் எல்லாம் நீயே கைக்கொண்டு கொடுங்கோலனால் விளைந்த தீமைகளை ஒழித்து, உன் திருப்பணியைச் செய்து, நமது சிவலோகத்தை அடைவாயாக" என்று ஒரு வானொலி எழுந்தது. நாயனார் நடுக்குற்றுக் கையைத் தேய்த்தலை நிறுத்தினார். அவரது கை ஊறு நீங்கிப் பழையபடி ஆயிற்று.

மூர்த்தியார் "இறைவன் திருவருள் சுரப்பின், இவ் வையத்தை நான் தாங்குவேன்" என்று நினைந்து, திருக்கோயில் புறத்தில் நின்றார். அன்று இரவே அக் கொடிய மன்னன் இறந்துபட்டான். அடுத்த நாள் காலை அவனுக்குத் தகனக் கிரியைகள் செய்யப்பட்டன. அவனுக்குப் புதல்வர்கள் முதலிய அரசுரிமைத் தாயத்தார் எவரும் இல்லாமையால், எவரை அரசராக்குவது என்று அமைச்சர்கள் ஆலோசித்து, முடிவாக, ஒரு யானையைக் கண்கட்டி விடுதல் வேண்டுமென்றும், அது எவரை எடுத்துக் கொண்டு வருகிறதோ, அவர் அரசராதல் வேண்டுமென்றும் தீர்மானித்தார்கள். அவர்கள் தீர்மானித்தவாறே, ஒரு யானையை முறைப்படி அருச்சித்து, ஓர் ஏந்தலை எடுத்து வருமாறு பணித்துத், துகிலால் அதன் கண்ணைக்கட்டி விட்டார்கள். யானை தெருக்களிலே திரிந்து, மூர்த்தி நாயனார் முன்னே போய்த் தாழ்ந்து, அவரை எடுத்துப் பிடரியில் வைத்தது.  அமைச்சர்கள் மூர்த்தி நாயனாரை அரசராகக் கொண்டு அவர் திருவடியில் விழுந்து வணங்கி, அவரை மண்டபத்திற்கு அழைத்துச் சென்று சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்தார்கள்.

முடிசூட்டற்குரிய கிரியைகள் தொடங்கப்பட்டன. அப்போது, நாயனார், மந்திரிகளை நோக்கி, "சமணம் அழிந்து, சைவம் ஓங்கினால் நான் அரசாட்சியை ஏற்றல் கூடும்" என்றார்.  அதற்கு எல்லாரும் இசைந்தனர். பின்னும் நாயனார், "எனக்குத் திருநீறு அபிடேகப் பொருளாகவும், கண்டிகை கலனாகவும், சடைமுடி முடியாகவும் இருத்தல் வேண்டும்" என்று கூறினார். அதற்கும் அமைச்சர் முதலானோர் உடன்பட்டனர். அம் முறையில் முடி சூட்டு விழா நன்கு நடைபெற்றது. நாயனார் திருக்கோயிலுக்குப் போய்ச் சொக்கநாதரைத் தொழுது யானை மீது ஏறி அரண்மனை சேர்ந்தார்.

மூர்த்தி நாயனார், பிரமசரியத்தில் உறுதிகொண்டு, திருநீறு, கண்டிகை, சடைமுடி ஆகிய மூன்றையும் அணிந்து, சைவம் ஓங்கப் பன்னெடு நாள் ஆட்சி புரிந்து, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.


No comments:

056. கொடுங்கோன்மை - 06. மன்னர்க்கு மன்னுதல்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "அரசனுக்குப் புகழ் நிலைக்க...