053. சுற்றம் தழால் - 06. பெருங்கொடையான்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "ஒருவன் பெருங்கொடையாளனாகவும், கோபத்தை விரும்பாதவனாகவும் ஆக இருப்பானானால், அவனைப் போல சுற்றத்தால் சூழ இருப்பவர் இந்த உலகில் பிறர் இல்லை" என்கின்றார் நாயனார்.

சுற்றத்தார் ஒருவரும் வறுமை அடையாதபடி கொடுக்கின்ற கொடையாளியாக இருக்கவேண்டும். அளவிறந்து கோபித்துக் கொள்ளுதல் கூடாது.


இதற்குத் திருக்குறள்...

“பெரும் கொடையான், பேணான் வெகுளி, அவனின்

மருங்கு உடையார் மாநிலத்தில் இல்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

பெருங்கொடையான் வெகுளி பேணான் --- ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின், 

அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் --- அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை.

(மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல். விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று' என்று அளவிறந்து செய்யாமை.)


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்....

பரிவுடன்மற் றிவைகூறும் பவனகுமாரனை

மலர்க்கைபணித்து நோக்கிக்,

குருகுலத்தோர் போரேறே குற்றமது 

பார்க்குங்காற் சுற்றமில்லை,

யொருகுலத்திற் பிறந்தார்களுடன்வாழும்

வாழ்வினைப் போலுறுதியுண்டோ,

விருவருக்கும் வசையன்றோ விருநிலங்காரணமாக

வெதிர்ப்பதென்றான். --- வில்லிபாரதம்.


இதன் பொருள் ---

பரிவுடன் - வருத்தத்துடனே, இவை கூறும் - இவ்வார்த்தைகளைச் சொல்லுகிற, பவன குமாரனை - வாயுபுத்திரனான வீமனை, (தருமன்), மலர்க் கை பணித்து – தாமரை மலர் போன்ற தனது கையால் அமர்த்தி அடக்கி,  நோக்கி - (அவனைப்) பார்த்து, குரு குலத்தோர் போர் ஏறே - குரு என்னும் அரசனது குலத்தில் பிறந்த அரசர்களுள் போரில் சிறந்த ஆண்சிங்கம் போன்றவனே! குற்றமது பார்க்கும்கால் சுற்றம் இல்லை - குற்றத்தையே ஆராய்ந்தால் (எவர்க்கும்) உறவினராவார் இல்லை. ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ - ஒரு குடும்பத்திலே பிறந்தவர்கள் தமக்குள் மாறுபாடின்றி ஒத்து வாழும் இல்வாழ்க்கையைப் போல நன்மை தருவது (வேறு) உண்டோ? (இல்லையன்றோ]; இரு நிலம் காரணம் ஆக எதிர்ப்பது - பெரிய இராச்சியம் காரணமாக எதிர்த்துப்போர் செய்வது, இருவருக்கும் வசை அன்றோ - இருதிறத்தார்க்கும் பழிப்பாகாதோ?' என்றான் - என்று சொன்னான்.

     சினங்கொண்ட வீமனை மேன்மைப்படுத்தி அவனைத் தன் கருத்துக்கு உட்படுத்துமாறு தருமன், 'குருகுலத்தோர் போரேறே' என்று விளித்தான். பவநன் என்ற வடசொல்லுக்கு - சஞ்சரிப்பவன் என்பது காரணப்பொருள். குருகுலத்தோர் ஏறு - விலங்குகளுட் சிறப்புடையதாகிற சிங்கம்போலக் குருகுலத்தாருள் சிறந்தவன். கௌரவர் எனப்படுகிற துரியோதனாதியராகிய யானைகளை ஒழிப்பதற்குச் சிங்கம் போன்றவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

     "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை" என்பது ஒளவையார் அமுதமொழி. உலகத்திற் குற்றமில்லாதவர் ஒருவரும் இல்லையாதலால், ஒவ்வொருவரிடத்தும் குற்றத்தையே நோக்கினால் சுற்றம் என்பதே இல்லையாகும்; ஆதலால், உறவினரிடத்து உள்ள பிழைகளை எல்லாம் பொறுப்பது கடமை என்பது காட்டப்பட்டது.         


No comments:

053. சுற்றம் தழால் - 06. பெருங்கொடையான்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 53 -- சுற்றம் தழால் இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "ஒருவன் பெருங்கொடையாளனா...