“தஞ்சாக மூவுலகும் ஆண்டு, தலையளித்திட்டு,
எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங்
கரந்துஉண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துஉண் டுஇருக்கப் பெறின்.”
இதன் பொருள் ---
நஞ்சம் கரந்து உண்ட கண்டர் தம் ஒற்றியூர் பற்றி – திருப்பாற்கடலிலே வந்து எழுந்த ஆலாகால விடமானது மறைந்து இருக்கும்படி, திருவமுது செய்த திருக்கழுத்தினை உடைய சிவபரம்ப்பொருள் எழுந்தருளி உள்ள திருவொற்றியூரினைப் பற்றுக்கோடாகக் கொண்டு, இரந்து உண்டு இருக்கப் பெறின் – அங்கே பிச்சை ஏற்று உண்டு வாழ்ந்து இருக்கும் பெரும்பேற்றினை அடியேன் பெற்றால், தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்டு – அடியேனிடத்து ஒப்படைக்கப் பெற்ற அடைக்கலப் பொருளாக ஏற்று மூன்று உலகங்களையும் குடிகளை நன்கு காப்பாற்றி ஆட்சி புரியும் செல்வத்தை, எஞ்சாமை பெறினும் யான் வேண்டேன் – குறைவு இன்றிப் பெற்றாலும் அதனை யான் விரும்பமாட்டேன்.
`ஓடு ஏந்தி இரந்து உண்டல்` என்பது துறவு வாழ்க்கையைக் குறிக்கும்.
“படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பார் எலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து, மும்மைக் கடியிலங்கு
தோடு ஏந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டு
ஓடுஏந்தி உண்பது உறும்.”\
என்று மேலே நாயனார் பாடி அருளியதைக் கருத்தில் கொள்க.
மெய்யடியார்கள் இறைவன் திருவடி இன்பம் ஒன்றையே விரும்பி இருப்பார்கள். மண்ணுலக இன்பமும் விண்ணுலக இன்பமும் அவர்க்கு ஒரு பொருட்டு அல்ல. “மலர்க் கொன்றைத் தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள் அலவே” என்பது திருஞானசம்பந்தப் பெருமானார் அருள்வாக்கு. “கூடும் அன்பினில் கும்பிடலே ஆன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” என்று மெய்யடியவர்கள் குறித்துத். தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடி அருளி இருப்பது அறிக.
“அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்
வண்டு சேர் மயிலாடுதுறை அரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.”
என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு.
“யான் ஏதும் பிறப்பு அஞ்சேன், இறப்பதனுக்கு என் கடவேன்,
வானேயும் பெறில் வேண்டேன், மண்ணாள்வான் மதித்தும் இரேன்,
தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம்
மானே! உன் அருள் பெறும் நாள் என்று என்று இருப்பனே”
என்பர் மணிவாசகப் பெருமான்.
“பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய், கமலச் செங்கண்
அச்சுதா!. அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்,
இச்சுவை தவிர, யான்போய் இந்திர லோகம் ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகர் உளானே”
என்பது தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் அருள் வாக்கு.
தொண்டை நன்னாட்டுத் திருத்தலங்களில் ஒன்றான “திரு ஒற்றியூர்” சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் உள்ளது. சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்கு செல்கின்றன. புறநகர் இரயில் நிலையமும் உள்ளது. மெட்ரோ இரயில் நிலயமும் உள்ளது. இறைவர் திருநாமம் - ஆதிபுரீசுவரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத் தியாகர். இறைவியார் திருநாமம் - திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை. தல மரம், மகிழ மரம்.
தேவார மூவர் முதலிகள் ஆகிய திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடி வழிபட்டுத் திருப்பதிங்கள் அருள்ப் பெற்ற திருத்தலம்.
வருடத்தில்மூன் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இலிங்கம் கவசத்தால் மூடியே இருக்கும். ஆண்டுதோறும், கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு வழிபடலாம்.
சுந்தரமூர்த்தி நாயனார் – சங்கிலியார் திருமணம் நடைபெற்ற சிறப்புக்கு உரிய திருத்தலம். ஞாயிறு என்னும் ஊரிலே, ஞாயிறுகிழார் என்னும் வேளாளர் ஒருவர் இருந்தார். திருக்கயிலையிலே நம்பியாரூரரைக் கண்ணுற்ற மாதர் இருவருள் அனிந்திதையார் என்பவர் ஞாயிறுகிழாருக்குத் திருமகளாகப் பிறந்தார். அவருக்குச் சங்கிலியார் என்னும் திருநாமம் சூட்டப்பட்டது. சங்கிலியார் சிவனிடத்து அன்பு உடையவராக வளர்ந்தார். திருமணப் பேச்சு வந்தபோது, "நான் ஒரு சிவனடியாருக்கு உரியவள், இவர்கள் என்ன செய்வார்களோ" என்று மனம் கலங்கி மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்ததும், மணம் பேச முயன்ற தந்தையைப் பார்த்து, "நீங்கள் பேசிய வார்த்தை எனக்கு உடன்பாடில்லை. நான் சிவனடியார் ஒருவருக்கு உரியவள். இனி, நான் திருவொற்றியூரை அடைந்து திருவருள் வழி நடப்பேன்" என்றார். பெற்றோருக்கு நடுக்கமும் அச்சமும் உண்டாயின. சங்கிலியார் சொன்னதை வெளியிடாமல் அவர்கள் வாழ்ந்து வந்தனர். ஞாயிறுகிழாரின் மரபில் தோன்றிய ஒருவன் சங்கிலியாரை மணம்பேச ஞாயிறு கிழார்பால் சில முதியோரை அனுப்பினான். அவனுக்குச் சங்கிலியார் நிலை தெரியாது. அம் முதியவர்கள் ஞாயிறு கிழாரிடம் வந்து தாங்கள் வந்த கருத்தைத் தெரிவித்தார்கள். ஒருவாறு இனியமொழி பேசி வந்தவர்களை அனுப்பி வைத்தார் ஞாயிறுகிழார். அவர்களை அனுப்பினவன் ஏதோ ஒரு தீங்கு செய்து மாண்டவனைப் போல் மாண்டான். அச் செய்தி ஞாயிறு கிழாருக்கு எட்டியது. இனிச் சங்கிலியார் கருத்தின் வழி நடப்பதே சரி என்று பெற்றோர் எண்ணினர். திருவொற்றியூரில் கன்னிமாடம் ஒன்றைச் சமைத்து, அதில் சங்கிலியாரை இருத்தினர். சங்கிலியார் கன்னிமாடத்தில் இருந்துகொண்டு ஆண்டவனை வழிபட்டு வந்தார். அவருக்குப் பழைய திருக்கயிலாயத் திருத்தொண்டின் உணர்ச்சி முகிழ்க்கலாயிற்று. பூமண்டபத்தில் திரை சூழ்ந்த ஓரிடத்தில் இருந்து பூமாலை கட்டித் திருக்கோயிலுக்கு அனுப்பி வந்தார்.
திருக்காளத்தியை வழிபட்ட நம்பியாரூர் பெருமான் திருவொற்றியூர் வந்தார். வழக்கம்போல் ஒரு நாள் திருக்கோயிலுக்குச் சென்றார். இறைவனைத் தொழுதவர், அடியார்கள் செய்யும் திருத்தொண்டுகளையும் தனித்தனியே கண்டு வணங்கி, பூமண்டபத்தினுள் சென்றபோது, சங்கிலியார் திரையை நீக்கி, ஆண்டவனுக்கு அணிவிக்கும் பொருட்டு, பூமாலையைத் தோழிகளிடம் தந்து மின்போல் மறைந்தார். “மின்போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண்ணுற்றார்” என்பது பெரியபுராணம். அங்கிருந்த சிலரைப் பார்த்து, "பூமண்டபத்திலே இருந்த நங்கை என் மனதைக் கவர்ந்தாள். அவள் யார்" என்று வினவினார். அவர்கள், "சங்கிலியார் அவர் பேர். சிவபெருமானுக்குத் தொண்டு செய்பவர்" என்றார்கள். அது கேட்ட நம்பியாரூரர், "இப் பிறவி இருவர் பொருட்டு அளிக்கப்பட்டது. அவருள் ஒருத்தி பரவை. மற்றொருத்தி இவள்தான்" என மருண்டார். திருக்கோயிலுக்குச் சென்றார். "திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும்" என்று இறைவரை வேண்டினார். வெளியே வந்து திருக்கோயிலின் ஒருபுறத்திலே இருந்து சிவபெருமானை நினைந்து நினைந்து உருகலானார். மாலைக் காலம் வந்தது.
சிவபெருமான் தம் தோழர்பால் வந்து, "சங்கிலியை உனக்குத் தருகின்றோம். கவலையை ஒழி" என்றார். நம்பியாரூரர், "பெருமானே, அன்று என்னைத் தடுத்து ஆட்கொண்டு அருளீனீர். இன்று என் விருப்பத்திற்கு இணங்கி வந்து அருள் செய்தீர்" என்று வியந்து, வணங்கி, மகிழ்ந்தார்.
சங்கிலியார் கனவிலே சிவபெருமான் தோன்றினார். "நம்பியாரூரன் என்பவன் மேருமலையின் மேம்பட்ட தவத்தான். நம் மாட்டுப் பேரன்பு உடையவன். நம்மால் தடுத்து ஆட்கொள்ளப் பெற்றவன். அவன் உன்னை விரும்பி, என்னை வேண்டினான். அவனை மணம் செய்து கொள்வாய்" என்றார். சங்கிலியார், "பெருமான் ஆணைப்படி இசைகின்றேன். ஆனால், திருமுன்னே முறையிட்டுக் கொள்ள வேண்டுவது ஒன்று உண்டு. திருவாரூரில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர் அவர். இதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். சிவபெருமான், "உன்னைப் பிரிந்து போகாதவாறு ஒரு சபதம் செய்து கொடுப்பான்" என்றார்.
சிவபெருமான் மீண்டும் நம்பியாரூரர் பால் எழுந்தருளி, "சங்கிலியிடம் உன் கருத்தைத் தெரிவித்தோம். ஒரு குறை உண்டு. அக் குறையைத் தீர்த்தல் வேண்டும்" என்றார். "அவள் முன்னிலையில் உன்னைப் பிரிந்து போகேன் என்று ஒரு சபதம் இன்று இரவே செய்து கொடு" என்றார். நம்பியாரூரர், "எதைச் செய்தல் வேண்டுமோ, அதைச் செய்வேன். உமது அருள் வேண்டும்" என்றார்.
இச் சபதம் பிற பதிகளை வணங்குதற்கு இடையூறாக இருக்குமே என்று எண்ணிய நம்பியாரூரர், சிவபெருமான வணங்கி, "பெருமானே, சபதம் செய்து கொடுக்கச் சங்கிலியோடு திருச் சந்நிதிக்கு வருவேன். அப்போது, அடிகள் திருமகிழ்க்கீழ் எழ்ந்தருளல் வேண்டும்" என்று வேண்டினார். அதற்கிசைந்த இறைவர், சங்கிலியாரிடம் சென்று, "ஆரூரன் சபதம் செய்து கொடுக்க இசைந்தான். உன்னுடன் கோயிலுக்கு வருவான். அப்பொழுது மகிழமரத்தின் அடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்பாயாக" என்றார்.
சங்கிலியார் திருவருளை நினைந்து துயிலாதவரானார். தோழிமார்களை எழுப்பி நிகழ்ந்ததை அவர்களுக்குக் கூறினார். அவர்களும் மகிழ்வெய்தி அம்மையாரைத் தொழுதார்கள். திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுத்துத் தோழிமார்களுடன் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். தம்பிரான் தோழர் முன்னே எழுந்து, சங்கிலியார் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். சங்கிலியாரைக் கண்டு அவர் அருகே சென்று சிவபெருமான் அருளிச் செய்ததைச் சொன்னார். சங்கிலியார் நாணத்தால் ஏதும் பேசாமல் திருக்கோயிலுக்குச் சென்றார். நம்பியாரூரரும் தொடர்ந்தார். சந்நிதியை அடைந்தனர்.
நம்பியாரூரர் சங்கிலியைப் பார்த்து, "நான் உன்னைப் பிரியேன் என்று சபதம் செய்து கொடுத்தல் வேண்டும்" என்றார். சங்கிலியார் வாயிலாக எல்லாவற்றையும் அறிந்திருந்த தோழிமார்கள், "அடிகள், இதற்காக இறைவன் திருமுன்னர் சபதம் செய்தல் ஆகாது" என்றனர். "சபதம் எங்கே செய்து தருவது" என்றார். "மகிழின் கீழ் அமையும்" என்றனர். நம்பியாரூரர் மருண்டார். வேறு வழியில்லை. "அப்படியே செய்கிறேன்" என்றார். மூவாத திருமகிழை முக்காலும் வலம் வந்து, "நான் சங்கிலியைப் பிரியேன்" என்று சபதம் செய்து கொடுத்தார். அதைக் கண்ட சங்கிலியார் மனம் வருந்தினார். "சிவபெருமான் ஆணையால் பாவியேன் இக் காட்சியைக் காண நேர்ந்தது" என்று நைந்து ஒரு பக்கத்திலே மறைந்து வருந்தினார். நம்பியாரூரர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுச் சென்றார். சங்கிலியார் தமது திருத்தொண்டினைச் செய்து கன்னிமாடத்தில் இருந்தார். அன்று இரவு சிவபெருமான் திருவொற்றியூரில் உள்ள தொண்டர்கள் கனவில் தோன்றி, நம்பியாரூரருக்குச் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொடுக்கும்படி கட்டளை இட்டார். தொண்டர்கள் அச் சிவப்பணியை அடுத்த நாளே நிறைவேற்றினார்கள். தம்பிரான் தோழர் சங்கிலியாரோடு திருவொற்றியூரிலே இன்பம் நுகர்ந்து வந்தார்.
வசந்த காலம் வந்தது. தென்றல் காற்றானது நம்பியாரூரருக்குத் திருவாரூர் வசந்த விழாவினை நினைவூட்டியது. "எத்தனை நாள் பிரிந்து இருக்கேன், என் ஆரூர் இறைவனையே" என்று மனமுருகப் பாடினார். நாளுக்கு நாள் திருவாரூர் வேட்கை முடுகி எழ, ஒருநாள் திருக்கோயிலுக்குப் போய்த் தொழுது, திருவொற்றியூரை விட்டு நீங்கினதும், அவருடைய இரு விழிகளும் மறைந்தன. நம்பியாரூரர் மூர்ச்சித்தார், திகைத்தார், பெருமூச்சு விட்டார். சபதம் தவறியமையால் இது நேர்ந்தது என்று எண்ணி, பெருமானையே பாடி இத் துன்பத்தைப் போக்கிக் கொள்வேன் என்று உறுதி கொண்டு, "அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன்" என்னும் திருப்பதிகத்தை அருளினார். சிலர் வழிகாட்டத் திருமுல்லைவாயிலுக்கு எழுந்தருளினார்
நம்பியாரூரர் சங்கிலியார் திருமணம் நிகழ்ந்த மகிழமரம் வடக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. இந்த சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின் போது "மகிழடி சேவை" விழாவாக நடைபெறுகிறது.
கலிய நாயனாரின் அவதாரத் தலம்.
அவதாரத் தலம் : திருவொற்றியூர்.
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : திருவொற்றியூர்.
குருபூசை நாள் : ஆடி - கேட்டை.
தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலிய நாயனார். செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெருமையை புலப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் திருவருளால் இவரது செல்வம் அனைத்தும் இவரைப் பிணித்த இருவினைப் போல் குறைய, வறுமை நிலை உண்டாயிற்று. அந்நிலையில் தமது மரபில் உள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்தார். பின்னர் எண்ணெய் தருவார் கொடாமையால், கூலிக்குச் செக்காடி, அக்கூலி கொண்டு விளக்கு எரித்தார். வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால், வீடு முதலிய பொருட்களை விற்று, விளக்கெரித்தார். முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகர் எங்கும் விலைகூறி வாங்குவார் இல்லாமையால் மனம் தளர்ந்தார். திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்து “திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்துவிடுவேன்” எனத்துணிந்து எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்தார். அப்பொழுது ஒற்றியூர்ப் பெருமானது அருட்கரம், நாயனாரது அரியும் கையைத் தடுத்து நிறுத்தியது. அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றியருள, உடம்பின் ஊறு (காயம்) நீங்கித் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் அவரைப் பொற்புடைய சிவபுரியில் பொலித்திருக்க அருள் புரிந்தார்.
முற்றத் துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்றத் தலம். பட்டினத்தடிகளின் சமாதிக் கோயில் கடற்கரையில் உள்ளது. பட்டினத்து அடிகளார் அருளிய பினவரும் பாடல்களைச் சிந்தித்தால் திருவொற்றியூரின் சிறப்பு நன்கு விளங்கும்.
"சுடப்படுவார் அறியார், புரமூன்றையும் சுட்டபிரான்
திடப்படு மாமதில் தென்ஒற்றியூரன் தெருப் பரப்பில்
நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்கு உருண்டு
கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே."
மனமே! முப்புரங்களையும் எரித்த சிவபெருமான், உறுதி வாய்ந்த பெரிய மதில் சூழ்ந்த அழகு மிக்க திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவன். அந்தத் திருவொற்றியூரின் தெருக்களில் நடக்கின்றவர்களுடைய திருவடிகள் நமது தலைமீது பொருந்தும்படி நன்றாய் உருண்டு கிடப்பதுதான், பிரமனது ஏட்டைக் கிழிக்கின்ற வழியாகும். இந்த உண்மையை, இறந்தபிறகு தன்னைச் சுடுகின்ற சுற்றத்தோடு பொருந்தி உலக மயலிலே உழலும் அஞ்ஞானிகள் அறியமாட்டார்கள்.
"ஒடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு
இடுமருந்தை யான்அறிந்து கொண்டேன் - கடுஅருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியில் பொடி."
புண்கள் உண்டாகி, சீழானது ஒழுகுகின்ற, ஒன்பது துளைகளை உடைய உடலாகிய இந்தப் புண்ணுக்கு இடவேண்டிய மருந்தினை நான் கண்டுகொண்டேன். அது என்னவென்றால், பால்கடலில் வந்த ஆலகால விடத்தை உண்ட, தேவர்களுக்கு எல்லாம் தலைவனான, சிவபெருமான் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தின் வீதிகளில் நடப்பவர்களுடைய பாத தூளியே ஆகும்.
"வாவி எல்லாம் தீர்த்தம், மணல் எல்லாம் சிவலிங்கம்,
காவனங்கள் எல்லாம் கணநாதர் - பூவுலகில்
ஈது சிவலோகம் என்றுஎன்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றி யூர்."
இது பூலோக சிவலோகம் என்று உண்மைத் தவம் உடையார் சொல்லுகின்ற திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தில் உள்ள குளங்கள் எல்லாம் தீர்த்தங்கள். மணல் அனைத்தும் சிவலிங்கம். சோலைகளும், நந்தனவனங்களும் சிவகணநாதர்கள்.
வடலூர் வள்ளற்பெருமானின் வாழ்வோடு இயைந்த பதி. எழுத்தறியும் பெருமான் மீது பல திருவருட்பாக்களையும், வடிவுடை அம்மை மீது, “வடிவுடைமாணிக்க மாலை” என்னும் அற்புத நூலையும் பாடி உள்ளார் வள்ளற்பெருமான். வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தேர்ந்து உலகர் போற்றும் திருவொற்றிப் பூங்கோயிற்குள் பெரியோர் சாற்றும் புகழ் வேத சரமே" என்று போற்றி உள்ளார்.
No comments:
Post a Comment