ஞாலம்உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்
எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்
காலம்அறிந் தருமையுடன் பெருமையறிந்
துதவிசெய்து கனமே செய்வார்;
மாலறியாத் தண்டலைநீள் நெறியாரே!
அவரிடத்தே வருவார் யாரும்!
ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பாற்
சீட்டெவரே அனுப்பு வாரே?
இதன் பொருள் ---
மால் அறியாத் தண்டலைநீள் நெறியாரே - திருமாலும் அறியாத, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பால் எவரே சீட்டு அனுப்புவார் - ஆலமரம் பழுத்தால் பறவைகள் வரவேண்டும் என்று சீட்டு எழதி அனுப்புவோர் யார்? (யாரும் இல்லை. அதுபோலவே), ஞாலம் உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால் - உலகில் வாழும் நல்லோர்களுக்குச் செல்வம் கிடைத்தால், நாவலோர்க்கும் எல்லவர்க்கும் - புலவர்களுக்கும் இரவலர் முதலிய யாவருக்கும், காலம் அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து - காலமும் அருமையும் பெருமையும் உணர்ந்து, உதவி செய்து கனமே செய்வார் - பொருள் கொடுத்துப் பெருமைப் படுத்துவார்கள்; அவரிடத்தே யாரும் வருவார் - அவரிடம் எல்லோரும் வருவார்கள்.
ஔவையார் அருளிய நல்வழி என்னும் நூலில் உள்ள ஒரு பாடலை இங்கு வைத்து எண்ணுக.
“மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.”
இதன் பொருள் ---
மரம் பழுத்தால் - மரம் பழுத்திருந்தால். வா என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார் - (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர், அங்கு யாவரும் இல்லை - அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமல் கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார் - உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.
செல்வம் படைத்தவர்கள், அது இல்லாதவர்களைத் தேடி உதவுவார்கள். பலராலும் விரும்பப்படும் வள்ளல்கள், ஊரின் நடுவிலே சுற்றிலும் திண்ணை அல்லது மேடையோடு கூடிய காய்த்த பனைமரத்தை ஒப்பர். காய்த்த பனையானது பெண்பனை என்று சொல்லப்படும். தமக்கு செல்வம் நிறைந்துள்ளஒபோதும் ஒருவருக்கும் கொடுத்து உண்ணாத மக்கள், சுடுகாட்டில் உள்ள காய்க்காத பனைமரம் போல்வர். காய்க்காத பனையை ஆண்பனை என்பர்.
"நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார்,
குடிகொழித்தக் கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை." -- நாலடியார்.
இதன் பொருள் ---
ஊருக்குள்ளே ஓர் உயர்ந்த இடத்தில், எல்லோரும் வந்து பயன் பெறுமாறு காய்த்துக் குலுங்கும் பயனுடைய பனைமரம் போன்றவர்கள், பலரும் தம்மை விரும்பி வந்து பயன் பெறும்படி, பிறர்க்கு உதவி புரிந்து வாழுகின்ற பெரியவர்கள். அப்படி இல்லாது, மிகப் பெரிய செல்வச் செழிப்பில் இருந்தும், பிறருக்கு உதவி வாழாதவர்கள், ஒருவருக்கும் பயன்படாது ஊருக்கு வெளியே சுடுகாட்டில் இருக்கும் வெற்றுப் பனைமரம் போன்றவர்கள்.
பிறருக்கு உதவ வேண்டும் என்னும் உள்ளம் படைத்த செல்வந்தர்கள், ஊரின் நடுவிலே பழுத்துள்ள மரத்தைப் போன்றவர்கள் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.
"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன் உடையான்கண் படின்." --- திருக்குறள்.
இதன் பொருள் ---
இரக்கம், தயவு முதலிய நற்குணங்கள் பொருந்திய ஒருவனிடம் செல்வம் திரண்டு இருந்தால், அது பழங்கள் தருகின்ற பயனுள்ள மரம் ஒன்று ஊரின் உள்ளே பழுத்தால் போன்றது.
இதையே பின்வரும் பாடல்கள் வழிமொழிகின்றன.
"அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்
நிழல்மரம்போல் நேர் ஒப்பத் தாங்கிப் - பழுமரம்போல்
பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்." --- நாலடியார்.
இதன் பதவுரை ---
அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம் நிழல்மரம் போல் - வெயிலின் அழல் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் ஒப்ப உதவும் நிழல் மரத்தைப்போல், நேர் ஒப்பத் தாங்கி - வறுமையின் துன்பம் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் சமம் பொருந்தக் காத்து, பழுமரம் போல் பல்லார் பயன் துயப்ப - பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள் உதவுதல்போல் பலரும் பயன் நுகரப் பொருள் உதவி, தான் வருந்தி வாழ்வதே நல் ஆண்மகற்குக் கடன் - தான் மேன்மேலும் பொருள் ஈட்டும் முயற்சியால் உழைப்பு உடையனாய் வாழ்வதே உயர்ந்த தாளாண்மை மிக்க மகனுக்குக் கடமை ஆகும்.
‘ஊருணி நிறையவும், உதவும் மாடு உயர்
பார் கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும்,
கார் மழை பொழியவும், கழனி பாய் நதி
வார் புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்.? --- கம்பராமாயணம், மந்திரப் படலம்.
இதன் பதவுரை ---
ஊருணி நிறையவும் - ஊராரால் உண்ணுதற்கு உரிய நீர்நிலை நீரால் நிறையவும்; உதவும் மாடு உயர் - பலர்க்கும் உதவத்தக்க இடத்தில் வளர்ந்துள்ள; பார்கெழு பயன்மரம் - உலகத்தார் விழையும் பயன்படும் மரம்; பழுத்தற்று ஆகவும் - பழுத்ததாகவும்; கார்மழை பொழியவும் - மேகங்கள் காலத்தில் மழையைப் பெய்யவும்; கழனிபாய் நதி - வயல்களில் பாய்கிற ஆறு; வார்புனல் பெருகவும் - மிக்க நீர் பெருகவும்; மறுக்கின்றார்கள் யார் - வேண்டாம் என்று தடுப்பவர்கள் யார் உளர்? (எவரும் இலர்.).’
இந்த எடுத்துக்காடுகளால், இராமன் பிறர்க்கு நன்மை செய்யும் ஒப்புரவாளன் என்பது தெரிவிக்கப்பட்டது.“ ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம், பேரறி வாளன் திரு” என்னும் திருக்குறளில் வரும் உவமையினை, "ஊருணி நிறையவும்" என்றும், “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம், நயன் உடையான்கண் படின்” என்றும், "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம், பெருந்தகையான்கண் படின்" என்றும் வரும் திருக்குறட் பாக்களில் வரும் மரங்கள் இரண்டினையும் சுட்டும் வகையில் “பார் கெழு பயன்மரம்” என்றும் கம்பர் சுருங்கச் சொல்லி உள்ளார்.
No comments:
Post a Comment