மாண்டு வாய் அங்காவா முன்னம், மடநெஞ்சே!
வேண்டுவாய் ஆகி, விரைந்து,ஒல்லை, பாண்டவாய்த்
தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை.
இதன் பொருள் ---
மாண்டு வாய் அங்காவா முன்னம் - உயிர் பிரிந்து வாய்திறந்து போகாத முன்பு, மடநெஞ்சே – மடமை உடைய நெஞ்சமே! பாண்டவாய்த் தென் இடைவாய் மேய சிவனார் திருநாமம் – மட்பாண்டம் போன்று விரிந்த வாயினை உடைய காவிரியின் தென்கரையில், திரு இடைவாய் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருநாமத்தை, வேண்டுவாயாகி விரைந்து ஒல்லை – விருப்பம் உடையவன் ஆகி மிக விரைவாக; நின்னிடை வாய் வைத்து நினை - உனது மனத்துள்ளே பதிய வைத்து நினைவாயாக.
அங்காத்தல் - திறத்தல். வேண்டுவாயாகி - விரும்புதல் தன்மையை உடையை ஆகி. தென் இடைவாய் - தென்னாட்டில் உள்ள `இடைவாய்` என்னும் திருத்தலம். சோழ நாட்டில் அண்மையில், `விடைவாய்` என்னும் தலத்து திருஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றைக் கல்வெட்டிலிருந்து கண்டு சென்னைச் சைவ சித்தாந்த மகாசமாசம் வெளியிட்டது. `இடைவாய்` என்பது அத்தலத்தின் மறுபெயராகலாம். திருவிடை வாசல் என்று வழங்குவது, கொரடாச்சேரி நிலயத்திற்கு அருகில் உள்ளது. நின்னிடை - நின்னிடமாக. வாய் வைத்தல், வாசகமாகக் கணித்தல். நினைதல் - மானதமாகக் கணித்தல்.
No comments:
Post a Comment