காலைக் கரையிழையால் கட்டி, தன் கைஆர்த்து,
மாலை தலைக்குஅணிந்து, மைஎழுதி, மேல்ஓர்
பருக்கோடி மூடிப் பலர்அழா முன்னம்,
திருக்கோடி காஅடைநீ சென்று.
இதன் பொருள் ---
காலைக் கரை இழையால் கட்டி - காலினைத் துணியின் கரையைக் கிழித்த இழையினாலே கட்டி; தம் கை ஆர்த்து - தமது கையினையும் அவ்வாறே கட்டி; மாலை தலைக்கு அணிந்து – தலைக்கு மாலையை அணிவித்து, மை எழுதி – கண்களுக்கு மையினைத் தீட்டி, மேல் ஓர் பருக்கோடி மூடி – உடலின் மேல் பெரிய புத்தாடையால் மூடி, பலர் அழா முன்னம் – பலரும் கூடி அழும் காலம் வருவதற்கு முன்பாகவே, நீ சென்று திருக்கோடிகா அடை - நீ சென்று திருக்கோடிகா என்னும் திருத்தலத்தினை அடைவாயாக.
உயிர் பிரிந்தபின், சில நாழிகை அளவு உடல் விரைத்துக் கைகால்கள் ஒழுங்காகப் பாடையிலும் சிதையிலும் அமைக்க வாரா என்பதால், பிணத்தின் காற்பெருவிரல்களையும் கைப்பெருவிரல்களையும் துணியின் வலுவான பகுதியான கரையினைக் கிழித்து அதனால் உடனே கட்டுதல் வழக்கு. தலைக்கு மாலை சூட்டுதலும், மை எழுதுதலும் பிணத்திற்குச் செய்யும் அலங்காரம். “மையினால் கண் எழுதி மாலை சூட்டி” என்பது அப்பர் தேவாரம். கோடி – புதுத்துணி. பருக்கோடி – பருத்த துணி. பலர் அழா முன்னம் – “கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை” என்பது கந்தர் அனுபூதி. “உற்றர்கள் சுற்றி அழ, பெற்றார்கள் மெத்த அழ” என்பது திருப்புகழ்.
“கயல் விழித்தேன் எனைச் செயல் அழித்தாய் என,
கணவ கெட்டேன் எனப் ...... பெறுமாது,
கருது புத்ரா என, புதல்வர் அப்பா எனக்
கதறிட, பாடையில் ...... தலைமீதே
பயில் குலத்தார் அழ, பழைய நட்பார் அழ,
பறைகள் கொட்டா வர, ...... சமனாரும்
பரிய கைப் பாசம் விட்டு எறியும் அப்போது, எனைப்
பரிகரித்து ஆவியைத் ...... தரவேணும்.” -- திருப்புகழ்.
திருக்கோடிகா என்பது சோழநாட்டில், காவிரியின் வடகரையில் உள்ள திருத்தலம். மக்கள் வழக்கில் கோடிகாவல் என்று வழங்குகிறது. மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து கதிராமங்கலம் வந்தும் இத்திருத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திலிருந்தும் வரலாம். திருஞானசம்பந்தரும், அப்பரும் பாடிய திருத்தலம்.
No comments:
Post a Comment