அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
செஞ்சொல் பண்
(திருவருணை)
திருவருணை முருகா!
மாதர் மயலில் விழுந்த
மந்த புத்தி உடைய அடியேன்
உனது திருவடியைச்
சேர அருள்
தந்தத்
தந்தத் தனதன தானன
தந்தத் தந்தத் தனதன தானன
தந்தத் தந்தத் தனதன தானன ...... தனதான
செஞ்சொற்
பண்பெற் றிடுகுட மாமுலை
கும்பத் தந்திக் குவடென வாலிய
தெந்தப் பந்தித் தரளம தாமென ......
விடராவி
சிந்திக்
கந்தித் திடுகளை யாமுன
தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ
திண்டுப் புந்தித் திடுகனி தானுமு
...... னிதழாமோ
மஞ்சொக்
குங்கொத் தளகமெ னாமிடை
கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள
வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென ..முறையேய
வந்தித்
திந்தப் படிமட வாரொடு
கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு
மந்தப் புந்திக் கசடனெ நாளுன ......
தடிசேர்வேன்
நஞ்சைக்
கண்டத் திடுபவ ராரொடு
திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர்
நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை
...... யுகிராலே
நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர
நந்திக் கம்பத் தெழுநர கேசரி
நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென ......
மிகநாடி
வெஞ்சச்
சிம்புட் சொருபம தானவர்
பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி
விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர்
...... புனமீதே
வெண்டித்
தங்கித் திரிகிழ வாவதி
துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி
வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
செஞ்சொல்
பண் பெற்றிடு குட மாமுலை,
கும்பத் தந்திக் குவடு என, வாலிய
தெந்தப் பந்தித் தரளம் அதுஆம்என, ...... விடர்ஆவி
சிந்தி, "கந்தித்திடும் களை ஆம், உனது
அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவது,
திண் துப்பும் தித்திடு கனி தானும்
...... உன் இதழ் ஆமோ"?
"மஞ்சு
ஒக்கும் கொத்து அளகம்" எனா, "மிடை
கஞ்சத்து இன்பு உற்றிடு திருவே", "இள
வஞ்சிக் கொம்பு ஒப்பு எனும் மயிலே" என
...... முறை
ஏய
வந்தித்து, இந்தப் படி, மடவாரொடு
கொஞ்சிக் கெஞ்சி, தினம் அவர் தாள்தொழும்,
மந்தப் புந்திக் கசடன், எந் நாள் உனது ....அடி சேர்வேன்?
நஞ்சைக்
கண்டத்து இடுபவர், ஆரொடு
திங்கள் பிஞ்சு, அக்கு, அரவு அணி வேணியர்,
நம்பர், செம்பொன் பெயர் அசுர ஈசனை ...... உகிராலே
நந்தக் கொந்தி, சொரிகுடல் சோர்வர,
நந்திக் கம்பத்து எழு நர கேசரி,
நஞ்சக் குண்டைக்கு ஒரு வழி ஏதுஎன
...... மிகநாடி,
வெஞ்சச்
சிம்புள் சொருபம் அது ஆனவர்,
பங்கில் பெண், கற்புடைய பெண் நாயகி,
விந்தைச் செங்கைப் பொலிசுத! வேடுவர்
...... புனமீதே
வெண்டித்
தங்கித் திரி கிழவா! அதி
துங்கத் துங்கக்கிரி அருணாபுரி
வெங்கண் சிங்கத்து அடி மயில்ஏறிய
...... பெருமாளே.
பதவுரை
நஞ்சைக் கண்டத்து
இடுபவர் --- ஆலகால விடத்தைக்
கழுத்தில் தரித்து இருப்பவரும்,
ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி
வேணியர் --- ஆத்தி மாலையுடன் இளம்
பிறையையும், எலும்பையும், பாம்பையும் தரித்துள்ள சடைமுடி
உடையவரும்,
நம்பர் --- விரும்பப்படுகின்றவரும்,
செம்பொன் பெயர் அசுர ஈசனை --- இரணியன்
என்ற பேருள்ள அசுர வேந்தனை
உகிராலே நந்தக் கொந்தி --- நகத்தாலே
அழியும்படிக் குத்திக் கிழித்து
சொரிகுடல் சோர்வர --- சொரிந்து விழும் குடல் தளர்ச்சியுற
நந்திக் கம்பத்து எழு நரகேசரி --- தூணிலே
தோன்றி எழுந்த நரசிங்கமூர்த்தியானவர்
நஞ்சக் குண்டைக்கு ஒருவழி ஏது என மிகநாடி
--- நைந்து அடங்கிக் குறுகுவதற்கு வழி யாது என்று மிகவும் ஆராய்ந்து,
வெஞ்சச் சிம்புள் சொருபம் அது ஆனவர் --- கடுமை கொண்டவராய், சரபப் பறவையின் வடிவு கொண்டவரும் ஆகிய
சிவபெருமானுடைய
பங்கில் பெண் --- பக்கத்தில் இருக்கும் பெண்மணியும்,
கற்புடைய பெண் நாயகி --- கற்பு நிறைந்த பெண்களின் நாயகியுமாகிய
பார்வதி தேவியின்
விந்தைச் செங்கைப் பொலி சுத ---
அழகிய சிவந்த கரமலரில் விளங்கும் குழந்தையே!
வேடுவர் புனம் மீதே
வெண்டித் தங்கித் திரி கிழவா --- வேடுவர்களின் தினைப்புனத்தில்
களைப்புற்றுத் தங்கி, திரிந்த கிழவரே!
அதி துங்கத் துங்கக்
கிரி அருணாபுரி --- மிகவும் உயர்ந்ததும் தூய்மையானதுமான மலையுள்ள அருணை
மாநகரில்
வெங்கண் சிங்கத்து அடி மயில் ஏறிய
பெருமாளே --- விரும்பத்தக்க கண்ணை உடைய சிம்மாசனம் போன்ற மயில் மீதி ஏறிய
பெருமையில் சிறந்தவரே!
செஞ்சொல் பண்
பெற்றிடு குட மாமுலை --- செம்மையான சொற்களால் புகழத் தக்க குடம்
போன்ற பருத்த முலையானது,
கும்பத் தந்திக் குவடு என --- கும்பம், யானை, மலை என விளங்கியும்,
வாலிய தெந்தப் பந்தித் தரளம் அது ஆம் என
--- வெண்மை நிறம் கொண்ட பல் வரிசை முத்துப்போல் விளங்கியும்,
விடர் ஆவி சிந்தி --- துன்பத்தில் என் உயிரைத் தள்ளி,
கந்தித்திடு களையாம் --- வாசனை வீசி, அழகு வாய்ந்தனவாம்
உனது அங்கத்து அம்பொற்பு எது என ஓதுவது
--- உனது அங்கங்களின் அழகிய பொலிவுக்கு எதை யான் உவமையாகக் கூறுவது,
திண் துப்பும் --- வலிமை உள்ள பவளமும்,
தித்திடு கனி தானும் உன் இதழ் ஆமோ ---
இனிய கனியும் உனது வாயிதழுக்கு நிறத்திலும் சுவையிலும் நிகராகுமோ?
மஞ்சு ஒக்கும் கொத்து
அளகம் எனா --- மேகத்தை நிகர்க்கும்
திரண்ட கூந்தல் என்றெல்லாம் கூறி,
மிடை கஞ்சத்து இன்புற்றிடு திருவே --- நெருங்கிய தாமரையில் வீற்றிருக்கும்
மகாலட்சுமியே,
இள வஞ்சிக் கொம்பு ஒப்பு எனும் மயிலே
என
--- இளமை உடைய கொடிக்கும்
கொம்புக்கும் ஒப்பான மயில் போன்றவளே என்றெல்லாம்
முறை ஏய வந்தித்து --- முறைமையாக
வந்தனை வார்த்தைகளைப் பேசி,
இந்தப் படி மடவாரொடு கொஞ்சிக் கெஞ்சி
--- இவ்வண்ணமாக மாதர்களுடன் கொஞ்சிப் பேசியும், கெஞ்சிப் பேசியும்,
தினம் அவர் தாள் தொழும் மந்தப் புந்திக்
கசடன் --- நாள்தோறும்
அவர்களுடைய பாதத்தைத் தொழுகின்ற மங்கிய அறிவு உடைய குற்றமுடையவன் ஆகிய அடியேன்,
எந் நாள் உனது அடி சேர்வேன் --- எந்த
நாள் உனது திருவடியைச் சேருவேன்?
பொழிப்புரை
ஆலகால விடத்தைக் கழுத்தில் தரித்து இருப்பவரும், ஆத்தி மாலையுடன் இளம் பிறையையும், எலும்பையும், பாம்பையும் தரித்துள்ள சடைமுடி
உடையவரும், விரும்பப்படுகின்றவரும், இரணியன் என்ற பேருள்ள அசுர வேந்தனை
நகத்தாலே அழியும்படிக் குத்திக் கிழித்து சொரிந்து விழும் குடல் தளர்ச்சியுற
தூணிலே தோன்றி எழுந்த நரசிங்கமூர்த்தியானவர் நைந்து அடங்கிக் குறுகுவதற்கு வழி
யாது என்று மிகவும் ஆராய்ந்து, கடுமை கொண்டவராய், சரபப் பறவையின் வடிவு கொண்டவரும் ஆகிய
சிவபெருமானுடைய பக்கத்தில் இருக்கும் பெண்மணியும், கற்பு நிறைந்த பெண்களின் நாயகியுமாகிய
பார்வதி தேவியின் அழகிய சிவந்த கரமலரில் விளங்கும் குழந்தையே!
வேடுவர்களின் தினைப்புனத்தில் களைப்புற்றுத்
தங்கி, திரிந்த கிழவரே!
மிகவும் உயர்ந்ததும் தூய்மையானதுமான
மலையுள்ள அருணை மாநகரில் விரும்பத்தக்க கண்ணை உடைய சிம்மாசனம் போன்ற மயில் மீதி
ஏறிய பெருமையில் சிறந்தவரே!
செம்மையான சொற்களால் புகழத் தக்க குடம்
போன்ற பருத்த கொங்கையானது, கும்பம், யானை, மலை என விளங்கியும், வெண்மை நிறம் கொண்ட பல் வரிசை
முத்துப்போல் விளங்கியும், துன்பத்தில் என்
உயிரைத் தள்ளி, வாசனை வீசி, அழகு வாய்ந்தனவாம் உனது அங்கங்களின்
அழகிய பொலிவுக்கு எதை யான் உவமையாகக் கூறுவது, வலிமை உள்ள பவளமும், இனிய கனியும் உனது வாயிதழுக்கு
நிறத்திலும் சுவையிலும் நிகராகுமோ?
மேகத்தை
நிகர்க்கும் திரண்ட கூந்தல் என்றெல்லாம் கூறி, நெருங்கிய தாமரையில் வீற்றிருக்கும்
மகாலட்சுமியே, இளமை உடைய கொடிக்கும்
கொம்புக்கும் ஒப்பான மயில் போன்றவளே என்றெல்லாம் முறைமையாக வந்தனை வார்த்தைகளைப்
பேசி, இவ்வண்ணணாக
மாதர்களுடன் கொஞ்சிப் பேசியும்,
கெஞ்சிப்
பேசியும், நாள்தோறும்
அவர்களுடைய பாதத்தைத் தொழுகின்ற மங்கிய அறிவு உடைய குற்றமுடையவன் ஆகிய அடியேன், என் நாள் உனது திருவடியைச் சேருவேன்?
விரிவுரை
இந்தத்
திருப்புகழில் முதல் நான்கு அடிகள் மகளிருடைய அங்கங்களைப் புகழும் செஞ்சொற்கள்
அமைந்தவை.
திண்
துப்பும் தித்திடு கனிதானும் உன் இதழ் ஆமோ ---
பெண்களின்
இதழ் பவளம் போன்றது. திண் துப்பு - நன்றாக
விளைந்த பவளம் போன்றது. கனிபோல்
தித்திக்கும் இயல்புடையது.
திருமாலுடைய
இதழைப் பார்த்து ஆண்டாள், திருப்பவளச்
செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ என்கின்றார்.
கசடன்
எந் நாள் உனது அடிசேர்வேன் ---
கசடன்
- அறிவில்லாதவன். பெண்களின் அழிகின்ற
அழகைச் சிறந்ததென்று நினைந்து உருகி அன்புடன் சிறப்பித்துப் புகழ்ந்து கெடுகின்ற
நாயேன் முருகா உண் பதமலரை என்று சேர்வேன் என்று அடிகளார் ஏங்கி உரைக்கின்றார்.
நஞ்சைக்
கண்டத்து இடுபவர் ---
தேவர்கள்
சாவா மூவா நலம்பெற அமுதம் கடைய முயன்றார்கள்.
இந்தச் சாவா மூவா நலத்தைச் சிவமூர்த்தியை வேண்டினால் ஒரு கணத்தில் பெறலாம்.
எளிதான
இந்த நெறியை உணராத இந்திராதி இமையவர்கள், சந்திரனைத்
தூணாகவும், திருமால் தாங்கும்
ஆமையாகவும், வாசுகி தாம்பாகவும்
கொண்டு பலகாலம் பாற்கடலைக் கடைந்தார்கள்.
விநாயக வழிபாடு செய்யாமையால், ஆலகால
விஷம் தோன்றியது. அந்த அதிபயங்கரமான விஷம்
உலகங்களை எல்லாம் வெதும்ப வைத்து வேதனையைத் தந்தது.
மாலயனாதி
வானவர்கள் நடுங்கித் திருக்கயிலாய மலை சென்று சிவபெருமானை அடைக்கலம்
புகுந்தார்கள். கருணையங்கடலாகிய
சிவபெருமான் அவர்களுக்கு அபயம் தந்து, ஆலால
விஷத்தை உண்டு கண்டத்தில் தரித்தருளினார்.
அதனால், "திருநீலகண்டர்"
என்று பேர் பெற்றார்.
மால்எங்கே? வேதன்உயர் வாழ்வுஎங்கே? இந்திரன்செங்
கோல்எங்கே? வானோர் குடிஎங்கே? – கோலம்செய்
அண்டம்எங்கே? அவ்வவ்வரும் பொருள்எங்கே? நினது
கண்டம்
அங்கே நீலம்உறாக் கால். --- திருவருட்பா.
தன்னை
மதியாது தேவர்கள் பாற்கடலைக் கடைந்து, அதனால்
துன்புற்று, ஆலகால விடத்தைக்
கண்டு அஞ்சி அடைக்கலம் புகுந்தபோது,
அவர்கட்கு
சிவபெருமான் அபயம் தந்து ஆட்கொண்டு அருளினார்.
அது அவருடைய அளவிடற்கு அரிய திருவருளைக் குறிக்கின்றது.
ஆரொடு ---
ஆர்
- ஆத்தி. ஆத்திமலர் சிவபெருமானுக்கு உகந்த
மலர். அதனால் "ஆத்திசூடி" என்று
அவருக்கு ஒரு பெயர் உண்டு.
ஆத்திசூடி
அமர்ந்த தேவனை
ஏத்திஏத்தித் தொழுவோம் யாமே. --- ஔவையார்.
திங்கள்
பிஞ்சு ---
தட்சனுடைய
சாபத்தால் தேய்ந்து ஓய்ந்த சந்திரன் எங்கு சென்றும் புகலிடம் பெறாது, திருக்கயிலை வந்து சிவபிரானிடம் சரணாகதி
அடைந்தான். அந்த பிறைக் கொழுந்தைத் தமது
சென்னியில் சூடி சிவபெருமான் சந்திரனை ஆட்கொண்டு அருளினார். இது சிவமூர்த்தியின் எல்லையில்லாத கருணையைத்
தெரிவிக்கின்றது.
அக்கு
அரவு அணி வேணியர் ---
அக்கு
- எலும்பு. அல்லது உருத்திராட்சம் என்றும் பொருள்படும்.
உருத்திராட்ச
மாலை அணிந்தவர் சிவபெருமான். தாருகாவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து
சிவபெருமானைக் கொல்லுமாறு கொடிய பாம்புகளை ஏவினார்கள். அரனார் அவைகளை அணிகலமாக அணிந்துகொண்டு
அருளினார்.
வீம்புடைய
வன்முனிவர் வேள்விசெய்து விட்டகொடும்
பாம்புஅனைத்தும்
தோள்மேல் பரித்தனையே. --- திருவருட்பா.
செம்பொற்
பெயர் அசுர ஈசனை நந்திக் கம்பத்து எழு நரகேசரி ---
செம்பொன்
பெயர் அசுரேசன் - இரணியன். கடவுள் இல்லை என்று ஐந்து கோடியே எழுபதினாயிரத்து
அறுபத்தொரு வருடங்கள் பிரசாரம் புரிந்தான்.
உலகங்களை எல்லாம் நடுங்கி ஒடுங்க வைத்தான். திருமால் தூணிலே இருந்து நரசிங்கமாக வந்தார்.
சிங்கம்
ஆற்றல் படைத்தது. மனிதன் அறிவு படைத்தவன்.
ஆற்றலும் அறிவும் ஒன்றுபட்டுக் கூட்டணியாக நரசிங்கமாக வந்து இரணியனைக்
கொன்று அவனுடைய உதிரத்தைக் குடித்தார்.
நந்தி
- தோன்றி. நரகேசரி - நரசிங்கம்.
இரணியன்
உதிரத்தைப் பருகியதால் நரசிங்கம் உலகங்களை எல்லாம் நடுங்க வைத்தார்.
நஞ்சக்
குண்டைக்கு ஒரு வழி எதென மிகநாடி ---
நஞ்சி
- நைந்து பேக. குண்டை - குறுமை.
நரசிங்கத்தின்
வலிமை நைந்து குறுக என்ன வழி என்று சிவபெருமான் ஆராய்ந்தார். நரசிம்மத்தின் வெறிச்
செயலைக் கண்டு தேவர்கள் வாடி ஓடி,
சிவபெருமான
நாடி முறையிட்டார்கள். சிவபெருமான்
வீரபத்திரரைப் பார்த்து, நரசிங்கத்தை அடக்குதி
என்று பணித்தருளினார். வீரபத்திரர் சரபப்
பட்சி உருவுடன் சென்று நரசிங்கத்தைக் கொத்திக் கீறி அடக்கினார். அதன் தோலையும் முகத்தையும் கொணர்ந்து பிதாவிடம்
தந்தார். சிவபெருமான் சிங்கத் தோலை உடுத்து, "நரசிங்காம்பரன்"
என்று பேர் பெற்றார்.
வெஞ்சச்
சிம்புள் சொருபம் அது ஆனவர் ---
வீரபத்திரர்
சரபப் பட்சியாகச் சென்று நரசிங்கத்தை அடக்கியதைச் சிவபெருமான் மீது ஏற்றி இங்கே
அருணகிரியார் கூறுகின்றார்.
வெஞ்ச
– வெச்சு என்ற சொல், சந்தத்தை நோக்கி
வெஞ்ச என வந்தது.
வெச்செனல்
- கடுமையைக் குறிக்கும் சொல்.
புனமீதே
வெண்டித் தங்கித் திரிகிழவா ---
வள்ளியம்மைக்கு
அருள்புரிய வேண்டி முருகப் பெருமான் கிழ வடிவம் கொண்டு திரிந்தருளினார்.
வெண்டி
- களைப்புற்று.
கிழ
வடிவாகித் திரிந்து களைப்புற்றார். இது
முருகனுடைய கருனைத் திறத்தைக் குறிக்கின்றது.
அதிதுங்கத்
துங்கக்கிரி அருணாபுரி ---
துங்கம்
- உயர்வு. துங்கம் - பரிசுத்தம். மிகவும் உயர்ந்ததும், தூய்மையானதும் ஆன திருவண்ணாமலை
அடிவாரத்தில் உள்ள நகரம் அருணாபுரி.
வெங்கண்
சிங்கத்து அடி மயில் ஏறிய ---
சிங்காதனம்
போன்ற மயிலில் முருகன் ஏறி உலாவுகின்றான்.
கருத்துரை
அருணை
மேவும் அரசே, மாதர் மயல் சேராது, உன் அடி சேர அருள் செய்.
No comments:
Post a Comment