திருவண்ணாமலை - 0563. செயசெய அருண அத்திரி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

செயசெய அருண (திருவருணை)

திருவருணை முருகா!
திருவைந்தெழுத்து மந்திரத்தை ஓதி,
பேரின்பக் கடலில் அடியேன் திளைக்க அருள்.


தனதன தனனாத் தனதன தனனத்
     தனதன தனனாத் தனதன தனனத்
          தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான


செயசெய அருணாத் திரிசிவ யநமச்
     செயசெய அருணாத் திரிமசி வயநச்
          செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா

செயசெய அருணாத் திரியந மசிவச்
     செயசெய அருணாத் திரிவய நமசிச்
          செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி

செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
     தரகர சரணாத் திரியென உருகிச்
          செயசெய குருபாக் கியமென மருவிச் ......சுடர்தாளைச்

சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
     சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
          திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ

செயசெய சரணாத் திரியென முநிவர்க்
     கணமிது வினைகாத் திடுமென மருவச்
          செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ..சுடும்வேலா

திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
     கடிதலை தெரியாப் படிநிண அருணச்
          சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ......புகல்வோனே

செயசெய சரணாத் திரியெனு மடியெற்
     கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
          றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா

திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
     குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
          சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


செயசெய அருண அத்திரி சிவயநம,
     செயசெய அருண அத்திரி மசிவயந,
          செயசெய அருண அத்திரி நமசிவய, ...... திருமூலா

செயசெய அருண அத்திரி யநமசிவ,
     செயசெய அருண அத்திரி வயநமசி,
          செயசெய அருண அத்திரி சிவயநம அஸ்த்து ......எனமாறி

செயசெய அருண அத்திரி தனில் விழி வைத்து,
     அரகர சரண அத்திரி என உருகி,
          செயசெய குரு பாக்கியம் என மருவி,......சுடர்தாளைச்

சிவசிவ சரண அத்திரி செயசெய என,
     சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக,
          திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக்.... குடியேனோ?

செயசெய சரண அத்திரி என முநிவர்க்
     கணம் இது வினை காத்திடும் என மருவ,
          செடமுடி மலை போற்று அவுணர்கள் அவியச் ......சுடும்வேலா!

திருமுடி அடி பார்த்திடும் என இருவர்க்கு,
     அடிதலை தெரியாப் படி நிண, அருணச்
          சிவசுடர், சிகி நாட்டவன் இரு செவியில் ......புகல்வோனே!

செயசெய சரண அத்திரி எனும் அடியெற்கு,
     இருவினை பொடி ஆக்கிய சுடர் வெளியில்
          திருநடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் ...... குருநாதா!

திகழ் கிளிமொழி பால் சுவை இதழ் அமுதக்
     குறமகள் முலைமேல், புதுமணம் மருவிச்
          சிவகிரி அருண அத்திரி தலம் மகிழ் பொன் ......  பெருமாளே.


பதவுரை


      செயசெய அருண அத்திரி என --- செய செய திருவடி மலையே என்று கூறும்

     முநிவர்க் கணம் இது வினை காத்திடும் என மருவ --- இத் துதிச்சொல் வினையினின்று நம்மைக் காத்திடும் என்று முனிவர் கூட்டங்கள் சரணமடைந்து பொருந்த,

     செடம் முடி மலை போற்று அவுணர்கள் அவியச் சுடும் வேலா ---- தங்களுடைய உடலையும் முடியையும் கிரவுஞ்சம் என்னும் மலையும் காப்பாற்ற நின்ற அசுரர்கள் மசிந்து விழச் சுட்டெரித்த வேலாயுதரே!

      திருமுடி அடி பார்த்திடும் என --- திருமுடியையும் திருவடியையும் கண்டு பிடியுங்கள் என்று கூறி,

     இருவர்க்கு அடி தலை தெரியாப்படி நிண --- திருமால் பிரமன் என்ற இருவர்க்கும் அடியும் முடியும் தெரியாவண்ணம் நின்ற,

     அருணச் சிவசுடர் --- சிவந்த நிறமுடைய சிவஜோதியாகிய,

     சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே --- நெருப்புக் கண்ணுடைய சிவபெருமானது இரண்டு செவிகளிலும் உபதேசம் செய்தவரே!

      செயசெய சரண அத்திரி எனும் --- செய செய திருவடி மலையே எனத் துதி செய்கின்ற

     அடியெற்கு இருவினை பொடி ஆக்கிய --- அடியேனுக்கு இருவினைகளையும் பொடி படுத்தும்

     சுடர் வெளியில் திருநடம் இது பார்த்திடும் --- ஒளி வெளியில் நமது திருநடனம் இதோ பார்ப்பாயாக

     என மகிழ்பொன் குருநாதா --- என்று கூறி மகிழும் அழகிய குருநாதரே!

      திகழ் கிளி மொழி --- விளங்கும் கிளி மொழி போலவும்,

     பால் சுவை --- பாலின் சுவை போலவும் அமைந்து

     இதழ் அமுதக் குறமகள் முலை மேல் புதுமணம் மருவி --- வாயிதழ் அமுதம் போல் அமைந்த வள்ளி பிராட்டியின் தனத்தின் மீதுள்ள புது மணத்தை அநுபவித்து,

     சிவகிரி அருண அத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே --- சிவ மலையாம் அருணாசலத் தலத்தில் மகிழ்கின்ற அழகிய பெருமையில் சிறந்தவரே!

      செயசெய அருண அத்திரி சிவயநம --- ஜெய ஜெய அருணாசலா, "சிவயநம”,

     செயசெய அருண அத்திரி மசிவயந --- ஜெய ஜெய அருணாசலா, "மசிவயந”,

     செயசெய அருண அத்திரி நமசிவய --- ஜெய ஜெய அருணாசலா "நமசிவய”, 

     திருமூலா --- அழகிய மூலப் பொருளே

      செயசெய அருண அத்திரி யநமசிவ --- ஜெய ஜெய அருணாசலா "யநமசிவ”,

     செயசெய அருண அத்திரி வயநமசி --- ஜெய ஜெய அருணாசலா "வயநமசி",

     செயசெய அருண அத்திரி சிவயநம அஸ்து என மாறி --- ஜெய ஜெய அருணாசலா "சிவயநம அஸ்து" என்று மாறி மாறிச் செபித்து,

      செயசெய அருண அத்திரி தனில் விழி வைத்து --- ஜெய ஜெய என்று கூறி அருண அசலத்தில் மனக்கண்ணை வைத்து,

     அரகர சரண அத்திரி என உருகி --- அரகர திருவடி மலையே என்று தியானித்து உள்ளம் உருகி,

      செயசெய குரு பாக்கியம் என மருவி --- ஜெய ஜெய இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று கருதி உள்ளம் இதில் பொருந்தி,

      சுடர் தாளை --- ஒளி வீசும் திருவடியை,

     சிவசிவ சரண அத்திரி செயசெய என --- சிவசிவ திருவடி மலையே ஜெய ஜெய எனப் புகழ்ந்து,

     சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக --- தி ருவடியின் மீது தொழுது போற்றிய இன்பம் பெருக,

     திருவடி சிவவாக்கிய கடல் அமுதைக் குடியேனோ --- அந்தத் திருவடியின் சிவ மந்திரத்தால் பெறுகின்ற கடலமுதம் போன்ற இனிய அமுதை அடியேன் பருகி மகிழேனோ?


பொழிப்புரை


         "செய செய திருவடி மலையே" என்று கூறும் இத் துதிச்சொல் வினையினின்று நம்மைக் காத்திடும் என்று முனிவர் கூட்டங்கள் சரணமடைந்து பொருந்த, தங்களுடைய உடலையும் முடியையும் கிரவுஞ்சம் என்னும் மலையும் காப்பாற்ற நின்ற அசுரர்கள் மடிந்து விழச் சுட்டெரித்த வேலாயுதரே!

         "திருமுடியையும் திருவடியையும் கண்டு பிடியுங்கள்" என்று கூறி, திருமால் பிரமன் என்ற இருவர்க்கும் அடியும் முடியும் தெரியாவண்ணம் நின்ற, சிவந்த நிறமுடைய சிவஜோதியாகிய,  நெருப்புக் கண்ணுடைய சிவபெருமானது இரண்டு செவிகளிலும் உபதேசம் செய்தவரே!

         "செய செய திருவடி மலையே "எனத் துதி செய்கின்ற அடியேனுக்கு இருவினைகளையும் பொடி படுத்தும் ஒரு வெளியில் "நமது திருநடனம் இதோ பார்ப்பாயாக" என்று கூறி மகிழும் அழகிய குருநாதரே!

         விளங்கும் கிளி மொழி போலவும், பாலின் சுவை போலவும் அமைந்து வாயிதழ் அமுதம் போல் அமைந்த வள்ளி பிராட்டியின் தனத்தின் மீதுள்ள புது மணத்தை அநுபவித்து, சிவ மலையாம் அருணாசலத் தலத்தில் மகிழ்கின்ற அழகிய பெருமையில் சிறந்தவரே!

         ஜெய ஜெய அருணாசலா, "சிவயநம”,

         ஜெய ஜெய அருணாசலா, "மசிவயந”,

         ஜெய ஜெய அருணாசலா "நமசிவய”,   

        அழகிய மூலப் பொருளே!

         ஜெய ஜெய அருணாசலா "யநமசிவ”,

         ஜெய ஜெய அருணாசலா "சிவயநம அஸ்து" என்று மாறி மாறிச் செபித்து,

         ஜெய ஜெய என்று கூறி அருணாசலத்தில் மனக்கண்ணை வைத்து, அரகர திருவடி மலையே என்று தியானித்து உள்ளம் உருகி, ஜெய ஜெய இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று கருதி உள்ளம் இதில் பொருந்தி, ஒளி வீசும் திருவடியை, சிவசிவ திருவடி மலையே ஜெய ஜெய எனப் புகழ்ந்து, திருவடியின் மீது தொழுது போற்றிய இன்பம் பெருக, அந்தத் திருவடியின் சிவ மந்திரத்தால் பெறுகின்ற கடலமுதம் போன்ற இனிய அமுதை அடியேன் பருகி மகிழேனோ?


விரிவுரை


இத் திருப்புகழ் மிகவும் அருமையானது. பாராயணம் செய்தற்கு உரியது.  இதனை நாள்தோறும் பாராயணம் புரிவோர் வினைகள் விலகப் பெறுவர். திருவருளை எளிதில் அடைவார்கள்.

இதில் பஞ்சாக்கரமும், நினைக்க முத்தி அளிக்கும் அருணாத்திரி என்ற திருநாமமும் பலமுறை வருகின்றன.

"சிவயநம" என்ற பஞ்சாட்சரம் எழுத்துக்கள் மாறி மாறி வருகின்றது. இப்படி உச்சரிப்பதனால் அதிக பயன் உண்டு என்று திருமூலர் கூறுகின்றார். அடியில் வரும் திருமந்திரப் பாடல்களால் அறிக.

நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

சிகார வகார யகாரம் உடனே
நகார மகார நடுவுற நாடி
ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்து நின்றானே.

வளி - சீவனாகிய ''
மகார முதல்வன் - நாதத்துக்குத் தலைவனான சிவன்.

பஞ்சாட்சரம் நகாரத்தை முதலா வைத்துக் கூறுவது வேதமுறை.
சிகாரத்தை முதலாக வைத்துக் கூறுவது ஆகமமுறை.

சிகாரம் முதலாகிக் கடைசி வரையில் மாறும் முறையை இங்குக் கூறியவாறே, திருமூலரும் திருமந்திரத்தில் கூறியுள்ளார்.

ஆயும் சிவாய நமமசி வாயந
வாயு நமசிவா யயநம சிவாயந
வாயுமே வாய நமசியெனும் மந்திரம்
மாயும் சிகாரம் தொட்டுஅந்தத்து அடைவிலே.

செயசெய அருணாத்திரி சிவயநம ---

அருணம் - சிவப்பு.  அத்திரி - மலை.  அருணாத்திரி - சிவந்த மலை. அருணாசலம் "சிவயநம", "மசிவயந", "நமசிவய", "யநமசிவ", "வயநமசி" என்று ஐந்து வகையாக மாறி வருகின்றது.

செயசெய அருணாத்திரி தனில் விழி வைத்து ---

ஜெய ஜெய என்று கூறி அருணாசலத்தில் உள்ளக்கண்ணை வைக்க வேண்டும்.

உணர்வு விழி கொடு நியதி தமதுஊடு நாடுவதும்      --- சீர்பாத வகுப்பு.

உள்ளக் கண் நோக்க அருள்வாயே ---  (ககனமும்) திருப்புகழ்.


அரகர சரணாத்திரி என உருகி ---

சரணம் - திருவடி.  அத் திருவடி மலைபோல் உதவுகின்றது.  அதனால், சரணாத்திரி என வந்தது.

திருவடி மலையாய் விளங்கும் சிவத்தைக் குறிக்கும்.

செங்காட்டங் குடிமேய திருவடிதன்
திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே.  --- திருஞானசம்பந்தர்.

திருவடியே சிவம் ஆவது தேரில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே.       ---  திருமந்திரம்.

தொண்டர்கண்டு அண்டிமொண்டு உண்டு
     இருக்கும் சுத்த ஞானம் எனும்
தண்டை அம் புண்டரிகம் தருவாய்
     சண்ட தண்ட வெஞ்சூர்
மண்டலம் கொண்டு, பண்டு அண்டர் அண்டம்
     கொண்டு மண்டிமிண்டக்
கண்டு உருண்டு அண்டர் விண்டு ஓடாமல்
     வேல்தொட்ட காவலனே.            --- கந்தர் அலங்காரம்.

இதனால் சரண அத்திரி திருவடிமலை - சிவமலை எனப் பொருள்படும்.

செல்வத்துக்கு நாயகனான திருமாலும், கல்விக்கு நாயகனான பிரமாவும், அண்ண முடியாதபடி நின்ற சிவமலை திருவண்ணாமலை.மிக உயர்ந்த ஞானமலை திருவண்ணாமலை.

அரகர, திருவடி மலையே என்று கூறி உள்ளம் உருக வேண்டும்.

ஜெயஜெய குருபாக்கியம் என மருவி ---

ஜெயஜெய இந்த மந்திரம் எங்கள் குருநாதர் தந்த பாக்கியம் என்று கருதி உள்ளம் பொருந்த வேண்டும்.

சுடர் தாளை சிவசிவ சரண அத்திரி செயசெயென ---

சுடர்தாள் - ஒளி வீசும் திருவடி.

நூறுகோடி இளம் சூரியர்களின் ஒளிபோல் விளங்குவது முருகவேளின் திருவடி...

உததிஇடை கடவும்மர கதஅருண குலதுரக
    உபலளித கனகரத  ......  சதகோடி சூரியர்கள்      
உதயம்என அதிகவித கலபகக மயிலின்மிசை
    யுகமுடிவின் இருள்அகல  ......  ஒருசோதி வீசுவதும்,
…..             …..             …..             …..             மணநாறு சீறடியே.
                                                                                 --- சீர்பாத வகுப்பு.

இறைவனுடைய திருவடியின் ஒளி ஆணவ இருளை அகற்றும்.

சிவசிவ சரணாத்திரியே ஜெய ஜெய என்று கூறித் துதி செய்ய வேண்டும்.

சரண்மிசை தொழுது ஏத்திய சுவைபெருக ---

முருகனைக் காயத்தால் தொழுது வாக்கினால் துதிக்க வேண்டும்.

இந்தக் கருத்தைச் சேக்கிழார் பெருமான், "வாழ்த்தி வணங்குவாம்" என்றார்.

முருகனுடைய திருநாமங்கள் தேனினும் இனிக்கும் சுவை உடையன. அந்த நாமங்களைக் கூறுவதனால் அமுதூறிப் பசியாறும்.

குகனெ குருபர னேஎன நெஞ்சில்
புகழ அருள்கொடு நாவினில் இன்பக்
குமுளி சிவஅமுது ஊறுக உந்திப் பசியாறி    ---  திருப்புகழ்.

இத்தகு சிவவாக்கியத் தேனமுதமாகிய கடலைப் பருகவேண்டும் என்கின்றார்.

செயசெய அருணாத்திரி என முநிவர்க் கணம் இது வினை காத்திடும் என மருவச் செடம் முடி மலை போற்று அவுணர்கள் அவியச் சுடும் வேலா ---

முனிவருடைய குழாங்கள் முருகப் பெருமானைத் தஞ்சம் புகுந்து, உன் பாதமே எமக்குப் புகலிடம் என்று வேண்டினார்கள்.

கிருவுஞ்ச மலையும், எழுமலைகளும் அசுரர்கட்கு உறைவிடமாகவும் பாதுகாவலாகவும் இருந்தன.

செடம் - உடம்பு.  முடி - தலை.

முருகவேள் மலைகளும் அசுரர்களும் வெந்து நீறாக வேலாயுதத்தை ஏவி அருளினார்.
  
திருமுடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடி தலை தெரியாப்படி நிண ---

நான் பரம் நான் பரம் என்று மாலும் அயனும் தமக்குள் வாதிட்டு மோதி நின்றபோது, சிவபெருமான் அவர்கட்கு இடையே அக்கினி தாணுவாக நின்று, இதன் அடிமுடியைக் காண்பவர் பெரியவர் என்று கூறியருளினார்.  திருமால் பன்றி வடிவாகி அடியையும், பிரமன் அன்னப் பறவை வடிவாகி முடியையும் பலகாலம் தேடித் தேடி அடிமுடி காணமுடியாது திகைத்து நின்றனர்.

நிண – நின்ற.

சிகி நாட்டவன் ---

சிகி - நெருப்பு. நாட்டம் - கண்.

சிவபெருமான் அக்கனி விழியை உடையவர். அக்கினிக் கண் என்பது ஞானக்கண்ணாகும்.

செயசெய சரண அத்திரி எனும் அடியெற்கு இருவினை பொடியாக்கிய, சுடர் வெளியில் திருநடம் இது பார்த்திடும் என மகிழ்பொன் குருநாதா ---

இந்த அடி அருணகிரிநாதருக்கு முருகன் திருநடன தரிசனம் தந்து அருளிய வரலாற்றைக் குறிப்பது.

ஜெய ஜெய முருகா! உன் பாதமே அடைக்கலமான மலை என்று ஏத்திய அருணகிரிநாதருக்கு முருகவேள் தமது திருநடனத்தை, சிவஞானவொளி வீசும் வெளியில் காட்டியருளினார்.  அந்த நடன தரிசனம் இருவினைகளைத் துகள் செய்யும் திறம் உடையது.

திகழ் கிளிமொழி ---

வள்ளியம்மையார் பேசும் பேச்சு கிளிமொழி போன்ற இனிமை உடையது.

இதேபோல் அப்பர் பெருமானும் உமாதேவியாரைக் கூறுகின்றார்..

"தேன்நோக்கும் கினிமழலை உமைகேள்வன்"...........

அன்றியும் பால் சுவை போன்றது என்கின்றார்.

"தேன் என்று பாகு என்று உவமிக்கஒணா மொழித் தெய்வ வள்ளி" என்பது கந்தர் அலங்காரம்.

சிவகிரி அருணாத்திரி ---

திருவண்ணாமலை சிவமே ஆகும்.  ஆதலால், சிவகிரி என்றார்.

அருணம் - சிவப்பு. அத்திரி - மலை. அருணாத்திரி, அருணாசலம்.


கருத்துரை


அருணை மேவும் அண்ணலே, உன்னை வழுத்தி நாம அமுதத்தைப் பருக அருள் செய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...