அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தமரம் குரங்களும்
(திருவருணை)
திருவருணை முருகா!
இயமன் வரும்போது வந்து
காத்து அருள்
தனன
தனந்தனந் தான தத்த தந்த
தனன தனந்தனந் தான தத்த தந்த
தனன தனந்தனந் தான தத்த தந்த ...... தனதனத்
தனதான
தமர
குரங்களுங் காரி ருட்பி ழம்பு
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து
தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு......
முளகதக்
கடமாமேல்
தனிவரு
மந்தகன் பாசம் விட்டெ றிந்து
அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து
தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க......
மரணபக்
குவமாநாள்
கமல
முகங்களுங் கோம ளத்தி லங்கு
நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு
கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க......
தமுமடற்
சுடர்வேலுங்
கடிதுல
கெங்கணுந் தாடி யிட்டு வந்த
மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை
கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து......
வரமெனக்
கருள்கூர்வாய்
இமகிரி
வந்தபொன் பாவை பச்சை வஞ்சி
அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை
யிளமுலை யின்செழும் பால்கு டுத்தி லங்கு......
மியல்நிமிர்த்
திடுவோனே
இறைவ
ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க
முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற
ரணமுக
துங்கவெஞ் சூரு டற்பி ளந்த......
அயிலுடைக்
கதிர்வேலா
அமண
ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு
கழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்ற
அபிநவ துங்ககங் காந திக்கு மைந்த......
அடியவர்க்
கெளியோனே
அமரர்
வணங்குகந் தாகு றத்தி கொங்கை
தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ
லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த......
அறுமுகப்
பெருமாளே.
பதம் பிரித்தல்
தமர
குரங்களும், கார் இருள் பிழம்பும்
மெழுகிய அங்கமும், பார்வையில் கொளுந்து
தழல் உமிழ் கண்களும், காளம் ஒத்த கொம்பும்......
உள, கதக் கட மாமேல்
தனிவரும்
அந்தகன் பாசம் விட்டு எறிந்து,
அடவரும் என்று சிந்தை ஆகுலத்து இருந்து,
தமர் அழ, மைந்தரும் சோகம் உற்று இரங்க,......
மரண
பக்குவம் ஆ நாள்
கமல
முகங்களும், கோமளத்து இலங்கு
நகையும், நெடுங்கணும், காதினில் துலங்கு
கனக குதம்பையும், தோடும் வஜ்ர அங்க......
தமும், அடல் சுடர்வேலும்,
கடிது
உலகு எங்கணும் தாடி இட்டு வந்த
மயிலும், இலங்கு அலங்கார பொன்
சதங்கை,
கழல்ஒலி, தண்டையம் காலும் ஒக்க வந்து, ......
வரம்
எனக்கு அருள்கூர்வாய்.
இமகிரி
வந்த பொன், பாவைர பச்சை வஞ்சி,
அகில தலம் பெறும் பூவை, சத்தி, அம்பை,
இளமுலையின் செழும் பால் குடித்து, இலங்கும்......
இயல்
நிமிர்த்திடுவோனே!
இறைவர்
இறைஞ்ச நின்று, ஆகம ப்ரசங்கம்
உரை செய்திடும் ப்ரசண்டா! விசித்து நின்ற
ரணமுக
துங்க வெம் சூர் உடல் பிளந்த......
அயில்
உடைக் கதிர்வேலா!
அமணர்
அடங்கலும் கூடலில் திரண்டு,
கழுவில் உதைந்து உதைந்து ஏற விட்டு நின்ற,
அபிநவ! துங்க! கங்கா நதிக்கு மைந்த!......
அடியவர்க்கு
எளியோனே!
அமரர்
வணங்கு கந்தா! குறத்தி கொங்கை
தனில் முழுகும் கடம்பா! மிகுத்த செஞ்சொல்
அருணை நெடும்தடம் கோபுரத்து அமர்ந்த ......
அறுமுகப்
பெருமாளே.
பதவுரை
இமகிரி வந்த பொன் பாவை --- இமயமலை
அரசனுக்குத் திருமகளாக வந்து அவதரித்தவரும், பொன் போல ஒளிசெய்யும் பதுமையை ஒத்தவரும்,
பச்சை வஞ்சி --- பச்சை நிறமுடையவரும், கொடி போன்றவரும்,
அகில தலம் பெறும் பூவை --- எல்லா
உலகங்களையும் ஈன்ற அன்னையும்,
சத்தி --- ஆற்றல் உடையவரும்,
அம்பை -- அம்பிகையும் ஆகிய
உமாதேவியாருடைய
இளமுலையின் செழும் பால் குடித்து --- இளமையான
திருமுலையினின்றும் பொழிந்த சிவஞானப் பாலைப் பருகி
இலங்கும் இயல் நிமிர்த்திடுவோனே ---
உலகமெல்லாம் விளங்கும் நல் இயல்பினை வளர்ப்பவரே!
இறைவர் இறைஞ்ச நின்று --- சிவபெருமான் சீட
பாவனையுடன் நின்று வணங்க,
ஆகம ப்ரசங்கம் உரை செய்திடும் ப்ரசண்டா
--- சிவாகமங்களின் நுட்பங்களின் தத்துவார்த்தங்களை உபதேசித்து அருளிய சமர்த்தரே!
விசித்து நின்ற ரணமுக
துங்க வெஞ்சூர் உடல் பிளந்த --- போர்க்கோலத்தைக் காட்டி போர்
முகத்தில் சிறந்த வீரமுடன் நின்ற கொடிய சூரபன்மனுடைய உடம்பை இரு பிளவாகப் பிளந்த,
அயில் உடைக் கதிர்வேலா --- கூர்மை
பொருந்திய, ஒளியுடன் கூடிய
வேலாயுதரே!
அமணர் அடங்கலும்
கூடலில் திரண்டு --- சமணர்கள் அனைவரும் மதுரையம்பதியில் ஒன்று கூடி,
கழுவில் உதைந்து உதைந்து --- கழுவில்
கால்களை உதைத்துக் கொண்டு
ஏற விட்டு நின்ற --– ஏறுமாறு தேவாரத்
திருமுறை ஏட்டை வைகை ஆற்றில் இட்டு உறுதியுடன் திருஞானசம்பந்தரை அதிட்டித்து நின்ற
அபிநவ --- புத்தம் புதியவரே!
துங்க --- பரிசுத்தமானவரே!
கங்கா நதிக்கு மைந்த --– கங்காதேவிக்குப்
புதல்வராக வந்தவரே!
அடியவர்க்கு எளியோனே
---
அடியார்க்கு எளிமையானவரே!
அமரர் வணங்கு கந்தா --- தேவர்கள்
வணங்குகின்ற கந்தப் பெருமானே!
குறத்தி கொங்கை
தனில் முழுகும் கடம்பா --- வள்ளியம்மையருடைய திருத்தனங்களில்
மூழ்குகின்ற, கடப்ப மாலையைத்
தரித்தவரே!
மிகுத்த செஞ்சொல் --- மிகுந்த இனிய
சொற்களை உடைய தமிழ் மொழி வழங்குகின்ற
அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த
அறுமுகப் பெருமாளே --- திருவண்ணாமலையில் நீண்டு விசாலமான திருக்கோபுர வாசலில்
எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!
தமர குரங்களும் --- ஒலியுடன் கூடி
குளம்புகளையும்,
கார் இருட்பிழம்பு மெழுகிய அங்கமும் ---
கரிய இருளைப் பிழிந்து அவ் இருட்குழம்பை மெழுகியது போன்ற மிகவும் கருமையான
உடம்பையும்,
பார்வையில் கொளுந்து தழல் உமிழ் கண்களும்
--- பார்வையினாலேயே கொளுத்துகின்ற நெருப்பினைப் பொழிகின்ற கண்களையும்,
காளம் ஒத்த கொம்பும் உள கதக் கடமா மேல்
--- ஆலகாலவிடம் போன்ற கொம்புகளை உடையதும், வேகமாகச் செல்வதும் ஆகிய எருமைக் கிடாவின் மீது
தனி வரும் அந்தகன்
பாசம் விட்டு எறிந்து --- தனித்து வருகின்ற கூற்றுவன், பாசக் கயிற்றை வீசி எறிந்து,
அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து --- என்னைக் கொல்ல வருகின்றான் என்று எண்ணி, மனம் துன்புற்று மிகவும் வருந்தி,
தமர் அழ மைந்தரும் சோகம் உற்று இரங்க --- சுற்றத்தார்கள் அழவும், புதல்வரும் (மனைவி முதலியோரும்)
துக்கத்தை அடைந்து வருந்தவும்,
மரண பக்குவம் ஆ நாள் --- மரணம் அடைகின்ற
நாளில்,
கமல முகங்களும் --- தாமரை மலர் போன்ற ஆறு திருமுகங்களும்,
கோமளத்து இலங்கு நகையும் --- விளங்குகின்ற இளம் சிரிப்பும்,
நெடுங்கணும் --- நீண்ட பன்னிரு திருக்கண்களும்,
காதினில் துலங்கு கனக குதம்பையும் தோடும் --- திருச்செவிகளில் ஒளிர்கின்ற பொன்னால்
ஆகிய தொங்கட்டமும், குழையும்,
வஜ்ர அங்கதமும் --- வைரத்தால் ஆகிய தோளணியும்,
அடல் சுடர்வேலும் --- வலிமையும்
ஒளியும் கூர்மையும் உடைய வேலாயுதமும்,
கடிது உலகு எங்கணும்
தாடி இட்டு வந்த மயிலும் --- விரைவாக உலகமெல்லாம் சுற்றி வந்த
மயில்வாகனமும்,
இலங்கு அலங்கார பொன் சதங்கை --- ஒளிசெய்வதும்
அணியுடன் கூடியதும், பொன் சதங்கையுடன்
கூடியதும்,
கழல் ஒலி --- வீரக் கழலை உடையதும்,
தண்டையம் காலும் ஒக்க வந்து --- தண்டை அணிந்ததும் ஆகி திருவடியும்
பொருந்த வந்து அருளி
வரம் எனக்கு அருள் கூர்வாய் ---- அடியேனுக்கு
வரம் தந்து அருள் புரிவீர்.
பொழிப்புரை
இமயமலை அரசனுக்குத் திருமகளாக வந்து
அவதரித்தவரும், பொன் போல ஒளிசெய்யும்
பதுமையை ஒத்தவரும், பச்சை நிறமுடையவரும், கொடி போன்றவரும், எல்லா உலகங்களையும் ஈன்ற அன்னையும், ஆற்றல் உடையவரும், அம்பிகையும் ஆகிய உமாதேவியாருடைய
இளமையான திருமுலையினின்றும் பொழிந்த சிவஞானப் பாலைப் பருகி உலகமெல்லாம் விளங்கும்
நல் இயல்பினை வளர்ப்பவரே!
சிவபெருமான் சீடபாவனையுடன் நின்று வணங்க, சிவாகமங்களின் நுட்பங்களின்
தத்துவார்த்தங்களை உபதேசித்து அருளிய சமர்த்தரே!
போர்க்கோலத்தைக் காட்டி போர் முகத்தில்
சிறந்த வீரமுடன் நின்ற கொடிய சூரபன்மனுடைய உடம்பை இரு பிளவாகப் பிளந்த, கூர்மை பொருந்திய, ஒளியுடன் கூடிய வேலாயுதரே!
சமணர்கள் அனைவரும் மதுரையம்பதியில்
ஒன்று கூடி, கழுவில் கால்களை
உதைத்துக் கொண்டு ஏறுமாறு தேவாரத் திருமுறை ஏட்டை வைகை ஆற்றில் இட்டு உறுதியுடன்
திருஞானசம்பந்தரை அதிட்டித்து நின்ற புத்தம் புதியவரே!
பரிசுத்தமானவரே!
கங்காதேவிக்குப் புதல்வராக வந்தவரே!
அடியார்க்கு எளிமையானவரே!
தேவர்கள் வணங்குகின்ற கந்தப் பெருமானே!
வள்ளியம்மையருடைய திருத்தனங்களில்
மூழ்குகின்ற, கடப்ப மாலையைத்
தரித்தவரே!
மிகுந்த இனிய சொற்களை உடைய தமிழ் மொழி
வழங்குகின்ற திருவண்ணாமலையில் நீண்டு விசாலமான திருக்கோபுர வாசலில் எழுந்தருளி
உள்ள பெருமையின் மிக்கவரே!
ஒலியுடன் கூடி குளம்புகளையும், கரிய இருளைப் பிழிந்து அவ் இருட்குழம்பை
மெழுகியது போன்ற மிகவும் கருமையான உடம்பையும், பார்வையினாலேயே கொளுத்துகின்ற
நெருப்பினைப் பொழிகின்ற கண்களையும்,
ஆலகாலவிடம்
போன்ற கொம்புகளை உடையதும், வேகமாகச் செல்வதும்
ஆகிய எருமைக் கிடாவின் மீது தனித்து
வருகின்ற கூற்றுவன், பாசக் கயிற்றை வீசி
எறிந்து, என்னைக் கொல்ல
வருகின்றான் என்று எண்ணி, மனம் துன்புற்று
மிகவும் வருந்தி, சுற்றத்தார்கள்
அழவும், புதல்வரும் (மனைவி
முதலியோரும்) துக்கத்தை அடைந்து வருந்தவும், மரணமடைகின்ற நாளில், தாமரை மலர் போன்ற ஆறு திருமுகங்களும், விளங்குகின்ற இளம் சிரிப்பும், நீண்ட பன்னிரு திருக்கண்களும், திருச்செவிகளில் ஒளி்ர்கின்ற பொன்னால்
ஆகிய தொங்கட்டமும், குழையும், வைரத்தால் ஆகிய தோளணியும், வலிமையும் ஒளியும் கூர்மையும் உடைய
வேலாயுதமும், விரைவாக உலகமெல்லாம்
சுற்றி வந்த மயில்வாகனமும், ஒளிசெய்வதும்
அணியுடன் கூடியதும், பொன் சதங்கையுடன்
கூடியதும், வீரக் கழலை உடையதும், தண்டை அணிந்ததும் ஆகி திருவடியும்
பொருந்த வந்து அருளி அடியேனுக்கு வரம் தந்து அருள் புரிவீர்.
விரிவுரை
தமர
குரங்களும் ….. ….. கடாமேல் ---
தமரம்
- ஒலி. குரம் - விலங்குகளின் குளம்பு. இயமனுடைய வாகனமாகிய எருமைக் கடாவை மிகப்
பயங்கரமாகவும், மனக்கண் முன் வந்து
தோன்றுவது போலும், இந்த அடியில்
சுவாமிகள் கூறியருளுகின்றனர். எருமைக்கடா கால்களை எடுத்து வைக்கும்தொறும் பெரும்
சத்தம் எழுகின்றது. கார் இருட்பிழம்பு
மெழுகிய அங்கம் என்றமையால், ஆயிரக் கணக்கான
அமாவாசை இருட்டைப் பிழிந்து, அவ் இருட்குழம்பைப்
பூசியது போன்ற மிகவும் கருமையான எருமை என்றனர்.
பார்வையில்
கொளுந்து தழல் உமிழ் கண்கள் என்றமையால், அந்த
எருமையின் கண்ணின் கொடுமையும், அதில் பொழியும் அனல்
பொறிகளின் மிகுதியையும் தெரிவித்தனர்.
விஷம் போன்ற கொம்பு என்றனர்.
இத்தகைய பயங்கரமான எருமை மீது கூற்றுவன் வருவன் என்று எண்ணும்போதே இதயம்
நடுங்குகின்றது.
தனி
வரும் அந்தகன் ------- மரணபக்குவம் ஆ நாள் ---
மேற்கூறிய
கொடிய கடிய எருமைக் கடாவின்மீது ஏறிக் கொண்டு தண்டு, பாசம், சூலம் ஆகிய ஆயுதங்களை ஏந்திக்கொண்டு
கூற்றுவன் கனல் பொறி பறக்கும் கண்களுடன் வரும்போது, உற்றாரும் பெற்றாரும் அருகில் இருந்து
செய்வது இன்னது என்று அறியாது திகைத்து வருந்தி ஒ என்று அலறி அழுவார்கள். இயமனை
எதிர்ப்பாரும் உயிரைப் போக ஒட்டாமல் தடுப்பாரும் ஒருவரும் இல்லை. அங்ஙனம் அழுது
புலம்பி கைவிட்டு மெய் விடும் காலம் ஒன்று உளதன்றோ அக் காலத்தில், முருகா நீ வந்து காத்தருள் வேணும் என
வேண்டுகின்றனர்.
கமல
முகங்களும் …....... வரம் எனக்கு அருள் கூர்வாய் ---
"கார்மா மிசைக் காலன்
வரும்பொழுதில், கலபத் தேர் மா மிசை, முருகா, நீ வந்து என்னை ஆட்கொள்ள வேண்டும். அவ்வாறு
வரும்போது, தேவரீருடைய காட்சி
என் கண்களையும் கருத்தையும் குளிர்விக்கும். ஆதலினால், தாமரை மலர் போன்ற ஆறு திருமுகங்களும், கண்டாரை எல்லாம் மயக்கித் தன்வசம்
ஆக்கும் இளநகையும், கருணை ஊற்றெடுத்து
ஓடும் பன்னிரு திருக்கண்களும், செவிகளில் விளங்கி
அழகு செய்யும் குழைகளும், குழைகளின் கீழ்
சிறிதே தொங்கி அசையும் குதம்பைகளும், வச்சிரத்தினால்
ஆகிய தோள் அணிகளும், ஒலிசெய்யும்
ஞானவேலாயுதமும், உலகெலாம் ஒரு
நொடியில் வலம் செய்த மயில் வாகனமும், தண்டை
சதங்கைகள் இனி மறை ஒலிகள் செய்யும் திருவடிகளும் ஆகிய இத்தகைய மங்கல வடிவுடன்
வந்து, எளியேனாகிய
அடியேனுக்கு கால பயம் தீர்த்து,
வரம்
தந்து, அருள் புரிவீர்"
என்று ஒவ்வொருவரும் முருகவேளை முழு மனதுடன் வேண்டிக் கொள்ளுதல் வேண்டும். தாவடி
என்பது இடைக்குறைந்து தாடி என வந்தது.
இறைவர்
இறைஞ்ச நின்று …...... பிரசண்டா ---
இறைவர்
- எப்பொழுதும் தங்கி இருப்பவர். குருநாதன் இன்றி மெய்ஞ்ஞானத்தைப் பெறமுடியாது. ஒவ்வொருவரும்
சற்குருவை அடுத்து உய்யும் நெறியை உபதேச மூலமாகக் கேட்டு நலம் பெறவேண்டும் என்ற
கருத்தை உலகு உணர்ந்து உய்ய, எல்லாம் வல்ல
இறைவராகிய எந்தை சிவபெருமான் தனக்குத் தானே மகனாகி சீடபாவத்தைக் காட்டும் பொருட்டு, சீடனாக நின்று உபதேசம் பெற்றுக்
கொண்டனர்.
முருகவேள்
சிவாகமங்களின் நுண்பொருள் ஆகிய சைவசித்தாந்த சாரமாகிய பிரணவ உபதேசத்தை செய்து
அருளினர்.
இமகிரி
வந்த பொன் பாவை ---
தக்கன்
தவத்திற்கு இரங்கிய அருட்பராசத்தி வலம்புரி சங்காக தாமரை மலரில் இருந்து அவன்
எடுத்தவுடன் குழவியாகி அவனுடைய மகள் என வளர்ந்து தாட்சாயணி என்ற நாமத்தை
அடைந்தனர். பின்னர் சிவமூர்த்தியை மணந்தனர். தக்கன் சிவபெருமானிடம் மாறுகொண்டு
சிவநிந்தை புரிந்ததனால், அவன் மகள் என்ற
நாமமும், அவன் வளர்த்த
உடம்பையும் ஒழித்து, மலையரசன் தவமும்
ஈடேறும் பொருட்டு, இமவானுக்கு மகளாகத்
தாமரையிலிருந்து தோன்றி, அவனால்
வளர்க்கப்பட்டு, மழுவுடை அமலனை மணந்து, உலகெலாம் உய்ய அருள் புரிந்தனர். அகிலாண்ட
கோடிகளையும் சங்கல்ப மாத்திரத்தினாலேயே பெற்று என்றும் கன்னியாக நின்று, உண்ணாமுலை எனவும் உலகம் போற்ற
விளங்குவர். அத்தகைய ஞானத்தாயின்
திருஞானப் பாலைப் பருகி உலகெலாம் ஞானவொளி வீச முருகவேள் அருள் புரிகின்றனர்.
அதன்
காரணம் ---
சூரபன்மன்
ஆணவமலம்.
ஆணவமலம்
யான் எனது என்னும் இருகூறு உடையது.
யான்
- அகங்காரம். எனது - மமகாரம்.
அகப்பற்று
புறப்பற்று என்பனவாம்.
இந்த
இரண்டும் கெட்டால் அன்றி ஆவி ஈடேற மாட்டாது.
எனது
யானும் வேறாக, எவரும் யாதும்
யான்ஆகும்
இதயபாவன
அதீதம் அருள்வாயே. ---
(அமலவாயு)
திருப்புகழ்.
அமணர்
அடங்கலும்
---
முருகப்
பெருமானுடைய சாரூபம் பெற்ற அபர சுப்ரமண்யரில் ஒருவர் முருகவேளின் திருவருள் தாங்கி, திருஞானசம்பந்தராக அவதரித்து, பரசமயங்களின் இருளை நீக்கி சைவ ஒளியைப்
பரப்பினர்.
வைரவர், வீரபத்திரர், முதலியவர் செயல்களை பரசிவத்தின்
செயலாகத் தேவாரத் திருமுறைகளில் கூறியருளியதுபோல், முருகவேளின் திருவருள் தாங்கிய
திருஞானசம்பந்த சுவாமிகளுடைய செயலை முருகன் செயலாகக் கூறுகின்றனர்.
கோபுரத்து
அமர்ந்த பெருமாளே ---
திருவண்ணாமலையில்
முதல் கோபுரம் மிகப் பெரியது. பிரபுடதேவ
மன்னன் புதுக்கியது. அடுத்துள்ள கோபுரம் வல்லாளன் புதுக்கியது. அக் கோபுரத்தின்
மீது ஏறி அருணகிரியார் விழ, இறைவன்
குருமூர்த்தமாக வந்து உபதேசித்து அருளினர்.
அந்த மூர்த்தி, அக் கோபுரத்தின்
வடபுறத்தில் எழுந்தருளி உள்ளார்.
அடல்அருணைத்
திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வடஅருகில்
சென்று கண்டுகொண்டேன்....
என்றார்
கந்தர் அலங்காரத்தில்.
கருத்துரை
உமாசுதரே!
சிவருருநாதரே! சூரசம்மாரரே! அடியவர்க்கு எளியவரே! குறமகள் கொழுநரே! அருணை அண்ணலே!
கூற்றுவன் வருங்கால் மயில் மிசை வந்து என்னை ஆட்கொள்வீர்.
No comments:
Post a Comment