பூம்பறை - 0414. மாந்தளிர்கள்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மாந்தளிர்கள் போல (பூம்பறை)

முருகா!
பொதுமாதர் உறவு அற அருள்

தாந்ததன தான தாந்ததன தான
     தாந்ததன தான ...... தனதான


மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
     வாந்தவிய மாக ...... முறைபேசி

வாஞ்சை பெரு மோக சாந்திதர நாடி
     வாழ்ந்தமனை தேடி ...... உறவாடி

ஏந்து முலை மீது சாந்து பல பூசி
     ஏங்குமிடை வாட ...... விளையாடி

ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
     ஏய்ந்தவிலைமாதர் ...... உறவாமோ

பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
     தாஞ்செகண சேசெ ...... எனவோசை

பாங்குபெறு தாள மேங்கநட மாடு
     பாண்டவர்ச காயன் ...... மருகோனே

பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
     பூங்கதலி கோடி ...... திகழ்சோலை

பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
     பூம்பறையின் மேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர்,
     வாந்தவியம் ஆக ...... முறைபேசி,

வாஞ்சை பெரு மோக சாந்தி தர நாடி,
     வாழ்ந்த மனை தேடி, ...... உறவாடி,

ஏந்து முலை மீது, சாந்து பல பூசி,
     ஏங்கும் இடை வாட ...... விளையாடி,

ஈங்கிசைகள் மேவ, லாஞ்சனை இலாமல்
     ஏய்ந்த விலைமாதர் ...... உறவு ஆமோ?

பாந்தள் முடி மீது தாந்ததிமி தோதி
     தாஞ்செகண சேசெ ...... என, சை

பாங்குபெ று தாளம் ஏங்க நடம் ஆடு
     பாண்டவர் சகாயன் ...... மருகோனே!

பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு
     பூங் கதலி கோடி ...... திகழ் சோலை

பூந்தடம் உலாவு கோம்பைகள் குலாவு
     பூம்பறையின் மேவு ...... பெருமாளே.

பதவுரை

பாந்தள் முடிமீது --- பாம்பின் முடியின் மீது 

தாந்தமிதி தோதி தாஞ்செகண சேசெ என ஓசை --- தாந்ததிமி தோதி தாஞ்செகணசேசெ என்ற ஓசையை,

பாங்கு பெறு தாளம் ஏங்க --- அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க,

நடம் ஆடும் --- நடனம் செய்கின்றவரும்,

பாண்டவர் சகாயன் --- பாண்டவர்களின் சகாயனுமாகிய கண்ணபிரானுடைய,

மருகோனே  ---- திருமருகரே!

பூம் தளிர்கள் வீறு --- அழகிய தளிர்கள் விளங்குகின்ற,

வேங்கைகள் --- வேங்கை மரங்களும்,

பலாசு --- புன முருக்கு மரங்களும்,

பூம் கதலி கோடி திகழ் சோலை --- அழகிய வாழை மரங்களும் கோடிக்கணக்காக விளங்கும் சோலையும்,

பூம் தடம் --- அழகிய குளங்களும்,

உலாவு கோம்பைகள் குலாவும் --- உலாவித் திரிகின்ற கோம்பை நாய்களும் திகழும்,

பூம்பறையில் மேவு --- பூம்பறையைின் வீற்றிருக்கும்,

பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

மரம் தளிர்கள் போல --- மாந்தளிர் போல அழகிய நிறமுள்ள,

வேய்ந்த உடல் மாதர் --- தோலால் மூடப்பட்ட பொது மாதர்கள்,

வாந்தவியமாக முறை பேசி --- பாந்தவ்யம் ஆக பந்துக்கள் முறையில் அத்தான்! மாமா! என்று அழைத்து,

வாஞ்சை பெரும் மோக சாந்தி தர நாடி --- விருப்பத்துடன் பெரிய மோக சாந்தியை தரவேண்டி,

வாழ்ந்த மனை தேடி --- அப்பொது மாதர்கள் வாழ்ந்த வீடுகளைத் தேடிச் சென்று,

உறவு ஆடி --- அவர்களுடன் உறவு செய்து,

ஏந்து முலை மீது --- உயர்ந்திருக்கும் முலைகளின் மீது,

சாந்து பல பூசி --- சந்தனம் முதலிய நறுமணங்கள் பல பூசி,

ஏங்கும் இடை வாட --- இளைத்துள்ள இடை வருந்துமாறு,

விளையாடி --- அவர்களுடன் விளையாடி,

ஈங்கிசைகள் மேவ --- இம்சைகள் உண்டாக,

லாஞ்சனை இலாமல் --- லஜ்ஜை இல்லாமல்,

ஏய்ந்த விலை மாதர் --- பொருந்திய பொதுமாதர்களின்,

உறவு ஆமோ --- உறவு ஆகுமோ (ஆகாது).


பொழிப்புரை


பாம்பின் முடியின் மீது தாந்த திமி தோதி தாஞ்செகணசேசெ என்னும் ஒலியை அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க நடனம் செய்தவரும், பாண்டவர் துணைவருமாகிய கண்ணபிரானுடைய திருமருகரே!

அழகிய தளிர்கள் விளங்கும் வேங்கை மரங்களும்,
புனமுருக்கு மரங்களும், அழகிய வாழை மரங்களும், கோடிக் கணக்காகத் திகழும் சோலைகளும், அழகிய குளங்களும், உலவித் திரியும் கோம்பை நாய்களும் திகழும் பூம்பறையில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

மாந்தளிர்கள் போன்ற அழகிய தோலால் மூடப்பட்ட உடம்புடைய பொது மாதர்கள், பந்துக்கள் முறையில் அத்தான்! மாமா! என்று அழைத்து, விருப்பம் பெருக மோக சாந்தியைத் தர, அவர்களை நாடி, அவர்களின் வீடுகளைத் தேடிச் சென்று உறவாடி, உயர்ந்த தனங்களின் மீது சந்தனம் முதலிய நறுமணங்கள் பூசி, இளைத்த இடை வருந்த அவர்களுடன் விளையாடி, இம்சையும் வெட்கமும் இல்லாமல் பொருந்திய அவ்விலை மாதர்களின் உறவு ஆகுமோ?  (ஆகாது).

  
விரிவுரை


மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர் ---

பெண்களின் உடல் மாந்தளிர் போல் பளபளப்பாகவும், சிவப்பாகவும், அழகாகவும், மென்மையாகவும் இருக்கும்.

வாந்தவியமாக முறைபேசி ---

பாந்தவ்யம் என்ற சொல் வாந்தவ்யிம் என வந்தது. பாந்தவ்யம். உறவுமுறை பந்துக்கள் போல் “அத்தான்! வாருங்கள்!” “மாமா வருங்கள்” என்று கூறி அவர்கள் அழைத்து உபசரிப்பார்கள்.

அத்தான் எனக்கு ஆசைக் கூட்டித் தயங்க
   வைத்தாய் எனப்பேசி மூக்கைச் சொறிந்து
   அக்கால் ஒருக்காலம் ஏக்கற்று இருந்திர் இலை ஆசை”  --- (அச்சா) திருப்புகழ்.

ஈங்கிசை மேவ ---

ஈங்கிசை-இம்சை.

ஈங்கிசை யுற்றவ லக்குண மட்டைகள்”  --- (கூந்தல்) திருப்புகழ்.

லாஞ்சைன இலாமல் ---

லாஞ்சனை-லஜ்ஜை-வெட்கம். செய்யத்தகாத காரியத்தில் ஈடுபடுவதில் மனிதனுக்கு நாணம் இருக்க வேண்டும்.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்                    --- திருக்குறள்.

பாந்தள் முடிமீது............நடமாடு ---

கண்ணபிரான் காளிங்கன் என்ற அரவத்தையடக்கி, அதனால் மக்களுக்குக் கொடுமையுண்டாகாதவண்ணம் ஒடுக்கி அதன் மகுடத்தின் மீது பாதமலர் வைத்து நடனம் ஆடியருளினார்.

மனம் என்ற பாம்பு ஐம்புலன்களின் வழியே நஞ்சைக் கக்குகின்றது. எனவே ஐம்புலன்களாகிய படங்களை விரித்து
ஆடுகின்ற, மனப்பாம்பை நாமும் அடக்கி ஒடுக்கி ஆளவேணும் என்பது இதன் உட்குறிப்பு.

கோம்பைகள் குலாவு ---

காவல் நாய்களாக உலாவுகின்ற ஜாதி நாய்கள் கோம்பை நாய்கள்.

பூம்பறை ---

கொடைக்கானலுக்கு மேற்கே 8 கல் தொலைவில் உள்ள தலம்.


கருத்துரை


பூம்பறை மேவு முருகா! பொதுமகளிர் உறவு ஆகாது.
No comments:

Post a Comment

வயலூர் --- 0910. இகல்கடின முகபட

      அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   இகல்கடின முகபட (வயலூர்)   முருகா! விலைமாதர் பற்றை விடுத்து , தேவரீர...