அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மைக்கணிக்கன்
(பொதியமலை)
முருகா!
மாதர் உறவால் மானபங்கப்
படாமல் அருள்
தத்த
தத்த தான தான தத்த தத்த தான தான
தத்த தத்த தான தான ...... தனதான
மைக்க
ணிக்கன் வாளி போல வுட்க ளத்தை மாறி நாடி
மட்டு முற்ற கோதை போத ...... முடிசூடி
மத்த
கத்தி னீடு கோடு வைத்த தொத்தின் மார்பி னூடு
வட்ட மிட்ட வாரு லாவு ...... முலைமீதே
இக்கு
வைக்கு மாடை வீழ வெட்கி யக்க மான பேரை
யெத்தி முத்த மாடும் வாயி ...... னிசைபேசி
எட்டு
துட்ட மாதர் பாய லிச்சை யுற்றெ னாக மாவி
யெய்த்து நித்த மான வீன ...... முறலாமோ
துர்க்கை
பக்க சூல காளி செக்கை புக்க தாள வோசை
தொக்க திக்க தோத தீத ...... வெனவோதச்
சுற்றி
வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதி
சொற்கு நிற்கு மாறு தார ...... மொழிவோனே
திக்கு
மிக்க வானி னூடு புக்க விக்க மூடு சூரர்
திக்க முட்டி யாடு தீர ...... வடிவேலா
செச்சை
பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதி னோடு
செப்பு வெற்பில் சேய தான ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மைக்கண்
இக்கன் வாளி போல, உள் களத்தை மாறி நாடி,
மட்டு முற்ற கோதை போத ...... முடி சூடி,
மத்தகத்தின்
நீடு கோடு வைத்தது ஒத்தின் மார்பின் ஊடு,
வட்டம் இட்ட, வார் உலாவு ...... முலைமீதே,
இக்கு
வைக்கும் ஆடை வீழ, வெட்கி, அக்கமான பேரை
எத்தி முத்தம் ஆடும், வாயின் ...... இசைபேசி,
எட்டு
துட்ட மாதர், பாயல் இச்சை உற்று, என் ஆகம் ஆவி
எய்த்து, நித்தம் மான ஈனம் ...... உறல் ஆமோ?
துர்க்கை
பக்க சூல காளி, செக்கை புக்க தாள ஓசை
தொக்க திக்க தோத தீத ...... என ஓத,
சுற்றி
வெற்றியோடு தாள்கள் சுத்த நிர்த்தம் ஆடும் ஆதி
சொற்கு நிற்குமாறு உதாரம் ...... மொழிவோனே!
திக்கு
மிக்க வானின் ஊடு புக்க, விக்கம் மூடு சூரர்
திக்க முட்டி ஆடு தீர! ...... வடிவேலா!
செச்சை
பிச்சி மாலை மார்ப! விச்சை கொச்சை மாதினோடு
செப்பு வெற்பில் சேயது ஆன ...... பெருமாளே.
பதவுரை
துர்க்கை --- துர்க்கையும்,
பக்க சூல காளி --- பகுப்புற்று முக்கிளையாகப்
பிரிந்த சூலத்தை ஏந்தியவளுமாகிய காளியின்,
செக்கை புக்க --- சிவந்த கையில் உள்ள,
தாள ஓசை --- தாளத்தின் ஓசையானது,
தொக்க திக்க தோத தீத என ஓத
--- தொக்க திக்க தோத் தீத என்று ஒலிக்க,
சுற்றி வெற்றியோடு --- சுழன்று ஜெயத்துடனே,
தாள்கள் --- திருவடி,
சுத்த நிர்த்தம் ஆடும் --- ஆதி சொக்கம்
நடத்தை ஆடுகின்ற முதல்வராம் சிவபெருமானுடைய,
சொற்கு --- உபதேசிப்பாய் என்ற சொல்லுக்கு,
நிற்குமாறு தாரம் மொழிவோனே --- இணங்கும் மறு
மொழியை உரைத்தவரே!
திக்கு --- திசைகளில்
மிக்க வானின் ஊடு புக்க --- பெரிய
வானினிடத்துஞ் சென்ற,
விக்கம் மூடு சூரர் --- கர்வத்தால் மூடப்பட்ட
சூரர்கள்,
திக்க முட்டி ஆடு தீர --- சிதற அவர்களைத் தாக்கிப் போர்புரிந்த
தைரியம் உள்ளவரே!
வடிவேலா --- கூரிய வேலாயுதரே!
செக்கை --- வெட்சிமலர்,
பிச்சி மாலை மார்ப --- பிச்சிப் பூ மாலை
அணிந்த திருமார்பினரே!
விச்சை --- அறிவுள்ளரும்,
கொச்சை மாதினோடு --- கொச்சை மொழி பேசுபவருமாகிய
வள்ளி பிராட்டியினுடன்,
செப்பு வெற்பில் --- பொதிய மலையில்,
சேயது ஆன --- குழந்தை முருகனாக விளங்கும்,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
மை கண் --- மை பூசிய கண்,
இக்கன் வாளி போல --- கரும்பு வில்லையுடைய மன்மதனுடைய
பாணங்கள் போல் வேலை செய்ய,
உள் களத்தை மாறி நாடி --- உள்ளேயிருக்கின்ற
கள்ளக் குணத்தை வேறாக மூடிவைத்து விருப்பம் காட்டி,
மட்டு முற்ற கோதை போத முடி சூடி --- வாசனையுள்ள
மாலையை நன்றாகத் தலைமுடியில் அணிந்து,
மத்தகத்தில் --- யானையின் மத்தகத்தில்,
நீடு கோடு --- நீண்டிருக்கும் கொம்புகளை,
வைத்தது ஒத்து --- வைத்ததை ஒத்து,
இன் மார்பினுடு --- இனிய மார்பிலே,
வட்டம் இட்டவார் உலாவு --- வட்டவடிவமாய்
கச்சு அணிந்த,
முலை மீதே --- தனங்களின் மீது,
இக்கு வைக்கும் ஆடை வீழ --- தடையாயுள்ள ஆடை விழ,
வெட்கி --- வெட்கப்பட்டு,
இயக்கம் ஆன பேரை எத்தி --- குறிப்பின் வழி
நடக்கும் ஆண்களை வஞ்சித்து,
முத்தம் ஆடும் வாயின் --- முத்தமிடுகின்ற
வாயால்,
இசை பேசி --- இசைதலைப் பேசி,
எட்டு --- ஆடவர்பால் அணுகுகின்ற
துட்ட மாதர் --- துஷ்ட மாதர்களின்,
பாயல் இச்சை உற்று --- படுக்கையில்
ஆசைப்பட்டு,
என் ஆகம் ஆவி எய்த்து --- அடியேனுடைய உடலும்
உயிரும் இளைத்துப் போய்,
நித்தம் --- தினந்தோறும்,
மான ஈனம் உறலாமோ --- மானபங்கம் அடையலாமோ?
பொழிப்புரை
துர்க்கையும் முக்கிளையாகவுள்ள சூலத்தை ஏந்தியவளும்
ஆகிய காளியின் செங்கையில் ஏந்திய தாளத்தின் ஒலி, தொக்க திக்க தோததீத என்று ஒலிக்க, சுழன்று வெற்றியுடன் தாள்கள் சுத்த
நடனம் புரிகின்ற முதல்வராகிய சிவபெருமானுடைய சொல்லுக்கு இணங்கி உபதேசித்தவரே!
திசைகளிலும், பெரிய வானிலும் சென்ற கருவம் படைத்த
சூரர்கள் பல வழியாகச் சிதற, அவர்களைத்
தாக்கிப்போர் புரிந்த தீரரே! கூரிய வேலாயுதரே!
வெட்சி-பிச்சி என்ற பூமாலைகளை அணிந்த
திருமார்பினரே!
அறிவுள்ளவரும் கொச்சைமொழி பேசுபவருமாகிய
வள்ளியம்மையாருடன் பொதிய மலையில் குழந்தை முருகனாக விளங்கும் பெருமிதம் உடையவரே!
மை பூசிய கண், மன்மதனுடைய கணைபோல் வேலை செய்ய, உள்ளே இருக்கின்ற, கள்ளக் குணங்கள் தோன்றாத வண்ணம்
மூடி வைத்து, விருப்பம் காட்டி, வாசனை பொருந்திய மலர் மாலையைச்
செவ்வையாகத் தலைமுடியில் சூடி, யானையின் மத்தகத்தில்
நீண்டிருக்கும் கொம்புகள் வைத்தன ஒத்து, இனிய
மார்பிலே வட்டவடிவாய் கச்சு அணிந்து அமைந்துள்ள முலைகளின் மீது, தடையாயுள்ள ஆடை விழ, வெட்கப்பட்டு, இணங்கி நடக்கும் ஆடவரை வங்சித்து, முத்தமிடுகின்ற வாயால் இசைதலைப் பேசி, அணுகுகின்ற துஷ்ட மாதர்களின்
படுக்கையில் ஆசை வைத்து, என் உடலும் உயிரும்
களைத்துப் போய் தினந்தோறும் மானபங்கத்தை அடியேன் அடையலாமோ?
விரிவுரை
மைக்கண்
இக்கன் வாளி போல ---
மை
கண் இக்கன் வாளி. இக்கு-கரும்பு. கரும்பு வில்லையுடைய மன்மதன் இக்கன்.
விலைமாதர்களின் மைபூசிய கண்கள் மன்மதனுடைய மலர்களைப் போல் கொடுமை செய்ய வல்லவை.
உள்
களத்தை மாறி நாடி ---
கள்ளத்தை
என்ற சொல் களத்தையென வந்தது. மனத்துக்குள் உள்ள திருட்டுத்தனத்தை வெளிக்குக்
காட்டாமல் மறைத்து வைத்து, விரும்புவது போல்
நடிப்பர்.
மட்டுமுற்ற
கோதை போத முடிசூடி ---
மட்டு-தேன், வாசனை, கோதை-பூமாலை. போத-செவ்வையாக
இக்கு
வைக்கும் ஆடை ---
இக்கு-தடை.
தடையாயுள்ள ஆடை.
இசை
பேசி ---
இசைதலைப்
பேசி உறவாடுவர்.
பக்க
சூல ---
பக்கம்-பகுப்புற்ற-மூன்று
பிரிவாகவுள்ள சூலம்.
செக்கை
---
செங்கை
எனும் கூத்து. நூற்றெட்டுக் கரணம் உடையது.
மாறுதாரம்
---
மாறுதாரம்-மறுவுத்தரம்.
விக்கு
மூடு ---
விக்கம்-வீக்கம்-கர்வம்.
காக்கும்
கடல் இலங்கைக் கோமான் தன்னைக்
கதிர்
முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி
வீக்கம்
தவிர்த்த விரலார் போலும்
வெண்காடு
மேவிய விகிர்தனாரே. ---
அப்பர்.
திக்கமுட்டி
---
திக்க-பல
வழியாகச் சிதறுமாறு
செப்பு
வெற்பு ---
செப்பு
வெற்பு-பொதியமலை.
“செம்புடற் பொதிந்த
தெய்வப் பொதியமும்”
“தென்கால் விடுக்கும் செம்பிற்
பொருப்பு” --- கல்லாடம்..
கருத்துரை
பொதிகமலை
மேவு வடிவேலா! மாதராசையால் மானக்குறைவு அடையாமல் காத்தருள்வீர்.
No comments:
Post a Comment