பொதிகை மலை - 0416. வெடித்த வார்குழல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வெடித்த வார்குழல் (பொதியமலை)

முருகா!
மாதர் உறவை நீக்கி, அடியார் உறவை ஆக்கி,
வேல் மயில் பொறித்து, ஆட்கொண்டு அருள்.


தனத்த தானன தனத்த தானன
     தனத்த தானன தனத்த தானன
          தனத்த தானன தனத்த தானன ...... தந்ததான


வெடித்த வார்குழல் விரித்து மேல்விழி
     விழித்து மேகலை பதித்து வார்தொடு
          மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம ......ருங்கினாடை

மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை
     துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி
          மிரட்டி யாரையு மழைத்து மால்கொடு ......தந்தவாய்நீர்

குடித்து நாயென முடக்கு மேல்பிணி
     யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர்
          குலத்தர் யாவரு நகைக்க வேயுடல் ......மங்குவேனைக்

குறித்து நீயரு கழைத்து மாதவர்
     கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
          கொடுத்து வேதமு மொருத்த னாமென ......சிந்தைகூராய்.

உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென
     திகுத்த தீதிகு திகுர்த்த தாவென
          உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி ...... ரங்குபோரில்

உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி
     துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை
          யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ ...... ரும்பராரை

அடைத்த மாசிறை விடுத்து வானுல
     களிக்கு மாயிர திருக்க ணானர
          சளித்து நாளுமெ னுளத்தி லேமகி ...... ழுங்குமாரா

அளித்த தாதையு மிகுத்த மாமனும்
     அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ்
          அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


வெடித்த வார்குழல் விரித்து, மேல்விழி
     விழித்து, மேகலை பதித்து, வார்தொடு
          மிகுத்த மாமுலை அசைத்து, நூலின் ...... மருங்கின்ஆடை

மினுக்கி, ஓலைகள் பிலுக்கியே, வளை
     துலக்கியே, இள நகைத்து, கீழ்விழி
          மிரட்டி, யாரையும் அழைத்து, மால்கொடு ......தந்த வாய் நீர்

குடித்து, நாய் என, முடக்கு மேல்பிணி
     அடுத்து, உபாதிகள் படுத்த, தாய் தமர்
          குலத்தர் யாவரும் நகைக்கவே, உடல் ......மங்குவேனைக்

குறித்து, நீ அருகு அழைத்து, மாதவர்
     கணத்தின் மேவு என அளித்து, வேல்மயில்
          கொடுத்து, வேதமும் ஒருத்தன் ஆம் என ......சிந்தைகூராய்.

உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ என
     திகுத்த தீதிகு திகுர்த்த தா என
          உடுக்கை பேரிகை தவில் குழாமும் ......இரங்குபோரில்

உலுத்த நீசர்கள் பதைப்ப, மாகரி
     துடிப்ப, நீள்கடல் எரித்து, சூர்மலை
          உடைத்து, நீதிகள் பரப்பியே, அவர் ...... உம்பராரை

அடைத்த மா சிறை விடுத்து, வான்உலகு
     அளிக்கும் ஆயிர திருக்கணான், ரசு
          அளித்து, நாளும் என் உளத்திலே மகி ......ழும் குமாரா!

அளித்த தாதையும், மிகுத்த மாமனும்,
     அனைத்து உளோர்களும் மதிக்கவே, மகிழ்
          அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய ...... தம்பிரானே.



பதவுரை


     உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ என --- உடுட்டு டூடுடு டுடுட்டொடோ எனவும்,

     திகுத்த தீதிகு திகுர்த்த என --- திகுத்த தீதிகு திகுர்த்த எனவும்,

     உடுக்கை, பேரிகை தவில் குழாமும் --- உடுக்கை பேரிகை தவில் இவைகளின் கூட்டம்,

     இரங்கு போரில் --- ஒலிக்கின்ற போர்க்களத்தில்,

     உலுத்த நீசர்கள் பதைப்ப --- உலோபிகளாகிய அசுரர்கள் பதை பதைக்கவும்,

     மா கரி துடிப்ப --- பெரிய யானைகள் துடிக்கவும்,

     நீள் கடல் எரித்து --- நீண்ட கடலை எரித்து,

     சூ ர் மலை உடைத்து --- சூரனையும், கிரவுஞ்சமலையையும் பிளந்து,

     நீதிகள் பரப்பு --- நீதி நெறிகளை எங்கும் பரவச் செய்து,

     அவர் உம்பாராரை --- அந்த அசுரர்கள் தேவர்களை,

     அடைத்த மா சிறை விடுத்து --- அடைத்து வைத்த பெரிய சிறையினின்றும், விடுவித்து,

     அவான் உலகு அளிக்கும் --- ஆயிரங்கண்ணனாகிய இந்திரனுக்கு தேவலோக ஆட்சியைத் தந்தருளி,

     நாளும் என் உளத்திலே மகிழும் குமாரா --- நாள்தோறும் அடியேனுடைய உள்ளத்தில் இருந்து மகிழும் குமாரக் கடவுளே!

     அளித்த தாதையும் --- ஈன்ற தந்தையாகிய சிவமூர்த்தியும்,

     மிகுந்த மாமனும் --- அன்புமிகுந்த மாமனாகிய திருமாலும்,

     அனைத்து உளோர்களும் மதிக்கவே மகிழ --- மற்ற எல்லோரும் மதிக்கும்படி மகிழ்ச்சியுடன்,

     அகத்திய மாமுனி பொறுப்பில் மேவிய --- அகத்திய மகாமுனிவருடைய, மலையாகிய பொதியமலையில் வீற்றிருக்கும்,

     தம்பிரானே! --- தனிப்பெருந்தலைவரே!

     வெடித்த வார் குழல் விரித்து - நறுமணங் கமழும் நீண்ட கூந்தலை விரித்தும்,

     வேல் விழி விழித்தும் --- வேல்போன்ற கண்களை அப்படியும் இப்படியுமாக விழித்தும்,

     மேகலை பதித்து --- இடையணியை அணிந்தும்,

     வார்தொடு மிகுந்த மாமுலை அசைந்து --- இரவிக்கை அணிந்த மிகப் பெரிய முலைகளை அசைத்தும்,

     நூலின் மருங்கின் ஆடை மினுக்கி --- நூல்போன்ற மெல்லிய இடையில் ஆடையை மினுக்கியும்,

     ஓலைகள் பிலுக்கி --- காதில் உள்ள தங்க ஓலையை விளக்கியும்,

     வளை துலக்கியே --- வளையலை ஒளி பெறச் செய்தும்,

     இள நகைத்து --- இளநகை செய்தும்,

     கீழ் விழி மிரட்டி --- கீழ்க்கண்ணால் மிரட்டியும்,

     யாரையும் அழைத்து --- யாரையும் வாரும் என அழைத்து,

     மால் கொடு தந்த வாய் நீர் நாய் என குடித்து --- ஆசை கொண்டு கொடுத்த வாயிதழ் ஊறலை நாய்போல் குடித்து,

     முடக்கும் ஏழ் பிணி அடுத்து --- முடக்கத்தைதரும் நோய்கள் பல சேர்ந்து,

     உபாதிகள் படுத்த --- வேதனகைள் உண்டாக்க,

     தாய் தமர் குலத்தார் யாவரும் நகைக்க --- தாயார் சுற்றத்தார் குலத்தினர் முதலிய அனைவரும் அடியேனைக் கண்டு சிரிக்க,

     உடல் மங்குவேனை --- உடல் வாடுகின்ற சிறியேனை,

     குறித்து --- தேவரீர் கவனித்து,

     நீ அருகு அழைத்து --- நீர் உமது அருகில் அழைத்து,

     மாதவர் கணத்தில் மேவு என --- சிறந்த தவமுனிவர்களின் கூட்டத்தில் சேர்வாயாக என்று,

     அளித்து --- எனக்கும் அருள் புரிந்து,

     வேல் மயில் கொடுத்து --- வேல் மயில் இவற்றின் அடையாளங்களை என் தோளில் பொறித்து,

     வேதமும் ஒருத்தனாம் என --- வேதமும் என்னை இவன் ஓர் ஒப்பற்றவன் என்று உரைக்கும்படி,

     சிந்தை கூராய் --- திருவுள்ளத்தில் கருணை கூர்ந்து அருளுவீராக.

பொழிப்புரை


     உடுட்டு டூடுடு டுடுட்டொடோ எனவும், திருத்த தீதிகு திகுர்த்த தா எனவும் உடுக்கை பேரிகை தவில் முதலிய வாத்தியக் கூட்டங்கள் ஒலிக்கும் போர்களத்தில், உலோபிகளான அசுரர் பதைபதைக்கவும், பெரிய யானைகள் துடிதுடிக்கவும், நீண்ட கடலை எரித்து, சூரனையும், கிரவுஞ்சத்தையும் பிளந்து, எங்கும் நீதி நெறிகளைப் பரவச்செய்து, அந்த அசுரர்கள் தேவர்களை அடைத்து வைத்த பெரிய சிறையினின்றும் விடுவித்து, விண்ணுலக ஆட்சியை இந்திரனுக்கு வழங்கி நாள்தோறும் அடியேன் உள்ளத்திலேயே மகிழ்ந்து இருக்கும் குமாரக் கடவுளே!

     பெற்ற தந்தையாம் சிவமூர்த்தியும், அன்பு மிகுந்த மாமனாம் நாராயணமூர்த்தியும் ஏனையோர்களும் மதித்துப் போற்ற, மகிழ்ச்சியுடன் அகத்திய மகாமுனிவருடைய, மலையாகிய பொதியமலையில் வீற்றிருக்கும் தம்பிரானே!  

     தனிப்பெரும் தலைவரே!

     நறுமணங் கமழும் நீண்ட கூந்தலை விரித்தும், வேல் போன்ற கண்களை இப்படியும் அப்படியுமாக விழித்தும், இடை அணியை அணிந்தும், கச்சு அணிந்த மிகப்பெரிய முலைகளை அசைத்தும், நூல்போன்ற மெல்லிய இடையில் ஆடையை அழகு படுத்தியும், காதோலையை விளக்கியும், வளையல்களை ஒளிபெறச் செய்தும், இளநகை செய்தும், கீழ்க் கண்ணால் மிரட்டியும், யாரையும் வாரும் என அழைத்து, அப்பொது மாதர் கொடுத்த வாயிதழ் ஊறலை நாய் போல் குடித்து, முடக்குவாதம் முதுலிய நோய்களின் வேதனைகளும் உண்டாக, தாயும் சுற்றத்தாரும், குலத்தவரும் சிரிக்க உடல் வாடுகின்ற என்னை, கவனித்து, உமது அருகில் அழைத்து, மாதவர்களின் கூட்டத்தில் சேர்வாயாக என்று எனக்கு அருள் புரிந்து, வேல் மயில் அடையாளங்களை என்மீது பொறித்து, வேதமும் என்னை இவன் ஒப்பற்றவன் என்று கூறும்படி உமது திருவுள்ளத்தில் கருணை கூர்ந்து அருளுவீராக.

விரிவுரை


வெடித்த வார்குழல் விரித்து ---

வெடித்த-நறுமணங்கமழ்கின்ற பொதுமாதர் நடுவீதியில் நின்று கூந்தலை விரித்துக் கோதி அதன் வாசனை வீச, மோகவலை வீசுவார்கள்.

அங்கை மென்குழலு ஆய்வார் போலே
   சந்தி நின்றுஅய லோடே போவார்
      அன்பு கொண்டிடநீரோ போரீர்     --- திருப்புகழ்.

மாதவர் கணத்தின் மேவு என ---

அடியார் குழாத்தில் சேர்க என அருள்புரிய வேண்டுகின்றார். அடியாருறவு நம்மைப் பரகதியில் சேர்க்கும். பசு மந்தையில் சேர்ந்த கண்ணில்லாத பசு ஊர் சேரும். அதுபோல் ஞானி விழியில்லாத மனிதனும் அடியவர் உடன் கூடில் முத்தியுலகு புகுவான்.

வேல் மயில் கொடுத்து ---

அருணகிரியார் இத்திருப்புகழில் தமது உடம்பின் மீது வேலின் அடையாளத்தையும் மயிலின் அடையாளத்தையும் பொறித்தருளுமாறு முருகவேளை வேண்டுகின்றார்.

அப்பர் பெருமான் திருத்தூங்கானை மாடத்தில் இடபக்குறி, சூலக்குறி பெற்றார்.

பொன்னார் திருவடிக்கு ஒன்றுஉண்டு விண்ணப்பம், போற்றி செய்யும்
என்ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், இருங் கூற்றுஅகல
மின்ஆரும் மூவிலைச் சூலம் என்மேல் பொறி, மேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே    --- அப்பர்.

கடவுந் திகிரி கடவாது ஒழியக் கயிலை உற்றான்
படவும் திருவிரல் ஒன்றுவைத் தாய்பனி மால்வரைபோல்
இடவம் பொறித்து என்னை ஏன்று கொள்ளாய் இருஞ்சோலை திங்கள்
தடவும் கடந்தையுள் தூங்கானை மாடத்துஎம் தத்துவனே.        --- அப்பர்.


இதேபோல் அருணகிரியார் எட்டிக்குடித் திருப்புகழில் வேண்டுகின்றார்.

தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்”         --- (மைக்குழல்) திருப்புகழ்.

இந்த விண்ணப்பத்தின் படி முருகப் பெருமான் திருத்துருத்தி என்னும் தலத்தில் வேல் மயிற் பொறி பதித்து அருள் புரிந்தனர்.

அடைக்கலப் பொருளாம் என நாயெனை
   அழைத்து, முத்தி அது ஆம் அநுபூதி என்
   அருள் திருப்புகழ் ஓதுக, வேல் மயில் அருள்வோனே”    --- (மலைக்கனத்) திருப்புகழ்.

வேதமும் ஒருத்தனா மென சிந்தை கூர்வாய் ---

வேதம் இவன் ஒப்பற்ற ஒருவன் என்று அடியேனைக் கூறுமாறு முருகா! நீ திருவுள்ளத்தில் கருணை கூர்ந்தருள்” என்று வேண்டுகின்றார்.

உனைப் புகழும் எனைப் புவியில்
   ஒருத்தனாம் வகை திரு அருளாலே”       --- (கருப்புவில்) திருப்புகழ்.

இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
   ஒருநீ ஆகித் தோன்ற விழுமிய
   பெறலரும்பரிசில் நல்கும்”    --- திருமுருகாற்றுப்படை


கருத்துரை


பொதிய மலையில் மேவும் குமாரக் கடவுளே! வேல் மயில் பொறித்து அடியேனை ஆட்கொண்டருள்வீர்.





No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...