கழுகுமலை - 0417. குதலை மொழியினர்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குதலை மொழியினார் (கழுகுமலை)

முருகா!
பாவிகளிடம் போய் என் வறுமை நிலையைக் கூற வைக்காதே.


தனன தனதனா தனத்த தானன
     தனன தனதனா தனத்த தானன
          தனன தனதனா தனத்த தானன ...... தனதான


குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி
     முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்
          கொடிது கொடிததால் வருத்த மாயுறு ...... துயராலே

மதலை மறுகிவா லிபத்தி லேவெகு
     பதகர் கொடியவா ளிடத்தி லேமிக
          வறுமை புகல்வதே யெனக்கு மோவினி ...... முடியாதே

முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல்
     மடிய அயிலையே விடுத்த வாகரு
          முகிலை யனையதா நிறத்த மால்திரு ...... மருகோனே

கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி
     யிசையை முரலமா வறத்தில் மீறிய
          கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குதலை மொழியினார், நிதிக் கொள்வார் அணி
     முலையை விலைசெய்வார், தமக்கு மாமயல்
          கொடிது கொடிது, தால் வருத்தமாய், உறு ..... துயராலே,

மதலை மறுகி, வாலிபத்திலே, வெகு
     பதகர் கொடியவாள் இடத்திலே, மிக
          வறுமை புகல்வதே எனக்கும் ஓ இனி ...... முடியாதே.

முதல வரிவிலோடு எதிர்த்த சூர்உடல்
     மடிய அயிலையே விடுத்தவா! கரு
          முகிலை அனையதா நிறத்த மால்திரு ...... மருகோனே!

கதலி கமுகு சூழ் வயற்குளே, அளி
     இசையை முரல, மா அறத்தில் மீறிய
          கழுகு மலை, மகா நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.

  
பதவுரை

      முதல - முதல்வரே!

      வரிவிலோடு எதிர்த்த --- வரிந்து கட்டப்பட்ட வில்லோடு எதிர்த்த

     சூர் உடல் மடிய அயிலை விடுத்தவா --- சூரபன்மனுடைய உடல் அழியுமாறு வேலாயுதத்தை விடுத்தவரே!

      கருமுகிலை அனையது ஆம் நிறத்த மால் திருமருகோனே
--- கருமேகத்தை ஒத்த நிறத்தையுடைய திருமாலின் திருமருகரே!

      கதலி கமுகு சூழ் வயல் --- வாழையும் பாக்கு மரங்களும் சூழ்ந்துள்ள வயல்களில்,

     அளி இசையை முரள ---- வண்டுகள் இசையை ஒலிக்க,

     மா அறத்தின் மீறிய ---- சிறந்த அறச் செயல்கள் மேம்பட்டு விளங்கும்,

     கழுகுமலை மகா நகர்க்கு உள்மேவிய --- கழுகுமலையில் சிறந்த நகரத்தில் விற்றிருக்கும்

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      குதலை மொழியினார் --- மழலைச் சொல் போல் பேசுபவர்,

     நிதி கொள்வார் --- பணத்தைப் பறிப்பவர்கள்,

     அணி முலையை விலை செய்வார் --- அழகிய தனத்தைத் தனத்துக்கு விற்பவர்கள் ஆகிய,

     தமக்கு மாமயல் --- பொதுமாதர் மீது உள்ள பெரிய மயக்கம்,

     கொடிது கொடிது அதால் --- பொல்லாதது பொல்லாதது, அம்மயக்கத்தால்,

     வருத்தமாய் உறு துயராலே ---- மன வருத்தமடைந்து வந்த துன்பத்தினால்

     மதலை மறுகி ---- மகனாகிய அடியேன் கலக்கம் உற்று,

     வாலிபத்திலே --- இளமையிலே,

     வெகு பதர்கள் கொடியவாள் இடத்திலே --- மிகப் பாவிகளாம் கொடியவர்களிடத்தில் சென்று,

     மிக வறுமை புகழ்வதே --- மிகவும் என் தரித்திர நிலையைக் கூறி நிற்பதே?

      ஓ எனக்கும் இனி முடியாதே --- ஓ சுவாமியே, அடியேனுக்கு இந்த நிலைமை ஒரு முடிவுக்கு வராதோ?


பொழிப்புரை

         முதல்வரே!

     வரிந்து கட்டப்பட்ட வில்லோடு எதிர்த்த சூரபன்மனுடைய உடல் அழியுமாறு வேலை விட்டவரே!

     கருமேகத்தை ஒத்த நிறம் படைத்த திருமாலின் திருமருகரே!

     வாழை கமுகுகள் சூழ்ந்துள்ள வயலின் வண்டுகள் ஒலி செய்ய அறச்செயல்கள் மிகுந்துள்ள கழுகுமலைக் திருநகரில் எழுந்தருளியுள்ள பெருமித முடையவரே!

     மழலைச் சொல்போல் பேசுபவர்; பணத்தைப் பறிப்பவர்கள்; அழகிய தனத்தைத் தனத்துக்கு விற்பவர்கள் ஆகிய பொது மகளிரின் மீதுள்ள பெரிய மயக்கம் பொடிது, கொடிது அம்மயக்கத்தால் வருத்தமுற்று, மகனாகிய அடியேன் கலக்கமடைந்து, இளமையிலே மிகப் பாவிகளாம் கொடியவர்களிடம் போய், என் வறுமை நிலையைக் கூறி நிற்பதோ? ஓ சுவாமியே, எனக்கு இந்த இழிவு நிலை ஒரு முடிவுக்கு வராதோ?

விரிவுரை

கொடியவாளிடத்திலே மிக வறுமை புகல்வதே எனக்குமோ இனி முடியாதே ---

தீயவர்களிடத்தில் சென்று என் வறுமையைக் கூறும் சிறுமை எனக்கு நீங்காதோ? நீங்குமாறு அருள் புரியும் என்று முருகரிடம் முறையிடுகின்றார். தீயவர்கள் ஈய மாட்டார்கள். ஈயார் தேட்டை தீயார் கொளவர்.  இல்லை என்பதை அறியாதவன் இறைவன் ஒருவனே என்பதால் வள்ளல் பெருமான் பின்வருமாறு பாடினார்..

இரக்கின்றோர்களுக்கு இல்லை என்னார் பால்
     இரத்தல் ஈதலாம் எனல் உணர்ந்திலையோ?
கரக்கின்றோர்களைக் கனவிலும் நினையேல்,
     கருதி வந்தவர் கடியவர் எனினும்
புரக்கின்றோர், மலர்ப் புரிசடை உடையார்,
     பூதநாயகர், பொன்மலைச் சிலையார்,
உரக் குன்று ஓர் திரு ஒற்றியூர்க்கு ஏகி
     உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே.

"இரத்தலும் ஈதலே போல் ஆம், கரத்தல் கனவினும் தேற்றாதார் மாட்டு" என்னும் திருவள்ளுவ நாயனார் கருத்தை வைத்து, வள்ளல் பெருமான் பாடிய இப்பாடலின்படி, கரவு உள்ளவரிடத்திலே சென்று இரவாமல் இருப்பதும், கேட்டால் இல்லை என்று சொல்லாதவரிடம் இரப்பதும் சிறந்தது.


அறத்தில் மீறிய கழுகுமலை ---

சிறந்த தலங்களில் அறங்கள் விளங்கும்.

மிகுகொடை வடிவினர் பயில் வலிவலம்”              --- திருஞானசம்பந்தர்.

தருமமிகு சென்னை”                 ---  திருவருட்பா.

கருத்துரை

கழுகுமலைக் கந்தவேளே! வறுமையாம் சிறுமை தீர அருள்செய்வீர்.











No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...