கழுகுமலை - 0418. கோங்கமுகையும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கோங்க முகை (கழுகுமலை)

முருகா!
பிறவிக் கடலை நீந்தி, முத்திக் கரை சேர அருள்.


தாந்த தனன தனன தாந்த தனன தனன
     தாந்த தனன தனனந் ...... தனதான


கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப
     மேந்து குவடு குழையும் ...... படிகாதல்

கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய
     தேங்கு கலவி யமுதுண் ...... டியல்மாதர்

வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும்
     வாய்ந்த துயிலை மிகவுந் ...... தணியாத

வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை
     நீந்தி அமல அடிவந் ...... தடைவேனோ

ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர
     மோங்கு ததியின் முழுகும் ...... பொருசூரும்

ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில்
     ஊர்ந்து மயில துலவுந் ...... தனிவேலா

வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக
     வேங்கை வடிவு மருவுங் ...... குமரேசா

வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
     வேண்டு மளவி லுதவும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கோங்க முகையும் மெலிய, வீங்கு புளக களபம்
     ஏந்து குவடு குழையும் ...... படி, காதல்

கூர்ந்து, குழையை அமளி தோய்ந்து, குலவும் இனிய
     தேங்கு கலவி அமுதுஉண்டு,..... இயல்மாதர்

வாங்கு பகழி விழியை மோந்து, பகலும் இரவும்
     வாய்ந்த துயிலை மிகவும், ...... தணியாத

வாஞ்சை உடைய அடிமை, நீண்ட பிறவி அலையை
     நீந்தி, அமல அடிவந்து ...... அடைவேனோ?

ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர மகரம்
     ஓங்கு உததியின் முழுகும் ...... பொருசூரும்

ஓய்ந்து, பிரமன் வெருவ, வாய்ந்த குருகு மலையில்
     ஊர்ந்து, மயில் அதுஉலவும் ...... தனிவேலா!

வேங்கை அடவி மறவர் ஏங்க, வனிதை உருக,
     வேங்கை வடிவு மருவும் ...... குமரேசா!

வேண்டும் அடியர் புலவர், வேண்ட அரிய பொருளை,
     வேண்டும் அளவில் உதவும் ...... பெருமாளே.


பதவுரை

      ஓங்கல் அனைய பெரிய சோங்கு --- மலை போன்ற பெரிய கப்பல்களும்,

     தகர் --- ஆண் சுறா மீன்களும்,

     அ மகரம் ஓங்கு --- அந்த மகர மீன்களும் நிறைந்துள்ள,

     உததியின் முழுகும் பொரு சூரும் ஓய்ந்து --- கடலில் ஒளிந்து போர் புரிந்த சூரபன்மனும் தளர்ச்சியடைய

     பிரமன் வெருவ --- பிரமதேவன் அஞ்ச

     வாய்ந்த குருகு மலையில் --- நலங்கள் அமைந்த கழுகுமலையில்,

     மயில் அது ஊர்ந்து உலவும் தனிவேலா –-- மயிலில் ஏறி உலாவுகின்ற ஒப்பற்ற வேலாயுதரே!

         வேங்கை அடவி மறவர் ஏங்க --- புலிகள் வாழுகின்ற காட்டு வேடர்கள் திகைக்கவும்,

     வனிதை உருக --- வள்ளியம்மையின் திருவுள்ளம் உருகவும்,

     வேங்கை வடிவு மருவும் குமர ஈசா --- வேங்கை மரமாகி நின்ற குமாரக் கடவுளே!

         வேண்டும் அடியர் புலவர் வேண்ட --- வேண்டி நிற்கும் அடியார்களும் புலவர்களும் தேவரீரிடம் வந்து வேண்டுதல் செய்ய,

     அரிய பொருளை --- அருமையான பொருள்களை,

     வேண்டும் அளவில் உதவும் பெருமாளே  --- அவர்கட்கு வேண்டும் அளவில் வழங்குகின்ற பெருமையிற் சிறந்தவரே!

         கோங்க முகையும் மெலிய - கோங்க மரத்தின் மொட்டும் மெலியும் படியாக,

     வீங்கு புளக - பருத்து புளகாங்கிதமுற்று,

     களபம் ஏந்து - சந்தனக் கலவை தரித்த,

     குவடு குழையும்படி - மலையன்ன தனங்கள் குழையுமாறு,

     காதல் கூர்ந்து - காதல் மிகுந்து,

     குழைய அமளி தோய்ந்து --- தளிரும் மலரும் பரப்பிய அழகிய படுக்கையில் தோய்ந்து,

     குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு ---  குலாவுகின்ற இனியதும் நிறைந்ததுமான புணர்ச்சி இன்ப அமுதத்தை உண்டு,

     இயல் மாதர் வாங்கு பகழி விழியை மோந்து --- அழகிய மாதர்கள் செலுத்தும் பாணமாகிய கண்களை மோந்து,

     பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் --- பகலும், இரவும் ஏற்படுந் தூக்கம் அதிகரிக்கவும்,

     தணியாத வாஞ்சை உடைய அடிமை --- குறையாத விருப்பம் பூண்ட அடிமையாகிய சிறியேன்,

     நீண்ட பிறவி அலையை நீந்தி --- பெரிய இந்தப் பிறவிக் கடலை நீந்தி,

     அமல அடிவந்து அடைவேனோ ---  குற்றமற்ற உமது திருவடியைச் சேரப் பெறுவேனோ?

பொழிப்புரை

     மலைபோன்ற பெரிய கப்பல்களும், ஆண் சுறா மீன்களும், மகர மீன்களும், நிறைந்துள்ள கடலில் ஒளிந்த சூரபன்மன் ஓய்ந்து அடங்க, பிரமதேவன் அஞ்ச, நலங்கள் வாய்ந்த கழுகு மலையில் மயிலிந் ஊர்ந்து உலாவும் ஒப்பற்ற வேலாயுதரே!

     புலிகள் வாழும் காட்டில் உறையும் வேடர்கள் திகைக்கவும், வள்ளிபிராட்டி அன்பினால் உருகவும், வேங்கை மரமாகி நின்ற குமாரக் கடவுளே!

     வேண்டுகின்ற அடியவரும் புலவரும் வேண்டியவுடனே அவர்கட்கு வேண்டிய பொருள்களை வேண்டிய அளவில் வழங்கும் பெருமிதம் உடையவரே!

     கோங் மரத்தின் மொட்டும் மெலியுமாறு பருத்து, புளகாங்கிதத்தையும் சந்தனக் கலவையும் பூண்ட, மலை போன்ற தனங்கள் குழையும்படி காதல் மிகுந்து, தளிரும் மலரும் பரப்பிய அழகிய படுக்கையில் தோய்ந்து குலவுகின்ற, இனிமையானதும் நிறைந்ததுமான புணர்ச்சி இன்ப அமுதத்தை உண்டு, அழகிய மாதர்கள் செலுத்தும் பாணமாகிய கண்களை மோந்து, பகலும் இரவும் ஏற்படும் தூக்கம் அதிகரிக்கவும், குறையாத விருப்பம் பூண்ட அடியேன், பெரிய இந்தப் பிறவிக் கடலை நீந்திக் குற்றமில்லாத உமது திருவடியைச் சேரப் பெறுவேனோ?


விரிவுரை

கோங்க முகையும் ---

பெண்களின் தனங்கட்குக் கோங்கின் அரும்பு உவமை ஆகும்.

கோங்கு அரும்பு அன்ன முலையாய்”           --- நாலடியார்.

பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ ---

ஆன்மாக்கள் பிறவிப் பெருங்கடலில் அழுந்திப் பன்னெடுங்காலமாகப் பரதவிக்கின்றன. இக்கடலைத் தாண்டவைக்கும் புணை இறைவனுடைய திருவடித்துணை.

மனம் போன போக்கில் சென்றான் ஒருவன்; கண்ணை இழந்தான். கடலில் விழுந்தான். கரை தெரியவில்லை. கலங்குகிறான். நீருள் போகிறான். மேலே வருகிறான். திக்கு முக்காடித் திணறுகிறான். அபாயச் சூழ்நிலை. உடல் துடிக்கிறது. உள்ளம் பதைக்கிறது. அலறுகிறான். அழுகிறான். எதிர்பாராத ஒரு பருத்த மரம், அலைமேல் மிதந்து, எதிரே வருகிறது. காண்கிறான். நம்பிக்கை உதிக்கிறது. ஒரே தாவாகத் தாவி, அதைத் தழுவிக் கொள்கிறான். விட்டால் விபரீதம். இனி யாதாயினும் ஆக என்று அதையே இறுகப் பற்றியிருக்கின்றான்.

எதிர்பாராது எழுந்தது புயல். அலைவு அதிகரிக்கும் அது கண்டு அஞ்சினான். பயங்கரமாக வீசிய புயல் காற்று, அவனை ஒரே அடியாகக் கரையில் போய் வீழச் செய்தது. அந்த அதிர்ச்சியில், தன்னை மறந்தான். சிறிது பொறுத்து விழித்தான். என்ன வியப்பு! தான் கரையில் இருப்பதை அறிந்தான். மகிழ்ந்தது மனம். கட்டையை வாழ்த்தினான்; கரையில் ஒதுக்கிய காற்றையும் வாழ்த்தினான். ஆன்மாவின் வரலாறும், ஏறக்குறைய இதைப் போலவே இருக்கிறது.

இருண்ட அறிவால், ஒளிமயமான உணர்வை இழந்தது; அதன் பயனாக, ஆழங்காண முடியாத, முன்னும் பின்னும் தள்ளித் துன்புறுத்தும் வினை அலைகள் நிறைந்த, அநியாயப் பிறவிக்கடலில் வீழ்ந்தது ஆன்மா.

அகங்கார மமகாரங்கள், மாயை, காமக் குரோத லோப மோக மதமாற்சரியங்கள், பின்னி அறிவைப் பிணைத்தன. இவைகளால், கடுமையாக மோதியது கவலைப் புயல். வாழ்க்கையாம் வாழ்க்கை! கண்ணீர் வெள்ளத்தில் மிதந்ததுதான் கண்ட பலன். அமைதியை விரும்பி, எப்புறம் நோக்கினாலும் இடர்ப்பாடு; கற்றவர் உறவில் காய்ச்சல்; மற்றவர் உறவில் மனவேதனை. இனிய அமைதிக்கு இவ்வுலகில் இடமேயில்லை. அவதி பல அடைந்து, பொறுக்க முடியாத வேதனையில், கணபதி திருவடிகளைக் கருதுகிறது.

நினைக்க நினைக்க, நினைவில் நிஷ்காமியம் நிலைக்கிறது. அந்நிலையிலிருந்து,  கணபதியை வேண்டிப் பாடுகிறது. உணர்வு நெகிழ்ந்து உள்ளம் உருகிப் பாடும் பாக்களை, பாக்களில் உள்ள முறையீட்டை, கேட்டுக் கேட்டு இறைவன் திருவுளம் மகிழ்கிறது. அருளார்வ அறிகுறியாக அமலனாகிய கணபதியின் திருச்செவிகள் அசைகின்றன. அந்த அசைவிலிருந்து எழும் பெருங்காற்று, எங்கும் பரவி, பிறவிக்கடலில் தத்தளிக்கும் ஆன்மாவை, வாரிக் கரையில் சேர வீசி விடுகிறது. அந்நிலையில், முத்திக்கரை சேர்ந்தேன் என்று தன்னை மறந்து தனி இன்பம் காண்கிறது அந்த ஆன்மா. 

'மாற்றரிய தொல்பிறவி மறிகடலின் இடைப்பட்டுப்
போற்று உறு தன் குரைகழல்தாள் புணைபற்றிக் கிடந்தோரைச்
சாற்றரிய தனி முத்தித் தடங்கரையின் மிசைஉய்ப்பக்
காற்றுஎறியும் தழைசெவிய கடாக்களிற்றை வணங்குவாம்'   --- காசிகாண்டம்.

இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின்மேல் கேடு மற்று உண்டோ,
துறப்பு எனும் தெப்பமே துணை செயாவிடின்
பிறப்பு எனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ.    ---  கம்பராமாயணம்.

நீச்சுஅறியாது ஆங்குஓய் மலைப்பிறவி ஆர்கலிக்கு ஓர் வார்கலமாம் 
ஈங்கோய் மலைவாழ் இலஞ்சிமே.                      --- திருவருட்பா.

வேதன் நெடு மால்ஆதி விண்ணாடர்
         மண்ணாடர் விரத யோகர்
மாதவர் யாவருங் காண மணிமுறுவல்
         சிறிது அரும்பி, மாடக் கூடல்
நாதன் இரு திருக்கரம் தொட்டு, அம்மியின்மேல்
         வைத்த கயல் நாட்டச் செல்வி
பாதமலர் எழுபிறவிக் கடல் நீந்தும்
         புணை என்பர் பற்றி லாதோர்.     --- திருவிளையாடல்புராணம்.


யாதும் நிலையற்று அலையும் ஏழுபிறவிக்கடலை
ஏறவிடு நற்கருணை ஓடக்காரனும்”      --- திருவேளைக்காரன் வகுப்பு

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்                   --- திருக்குறள்.

தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வம்
     தடம் திரையால் எற்றுண்டு, பற்றுஒன்று இன்றி,
கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால்
     கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு,
`இனி, என்னே உய்யும் ஆறு?' என்று என்று எண்ணி,
     அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை,
முனைவனே! முதல், அந்தம், இல்லா மல்லல்
     கரை காட்டி, ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.   --- மணிவாசகம்.

புற்றுஆடு அரவம் அரைஆர்த்து உகந்தாய்
         புனிதா பொருவெள்விடை ஊர்தியினாய்
எற்றேஒரு கண்இலன் நின்னை அல்லால்
         நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மற்றேல் ஒரு பற்றுஇலன் எம்பெருமான்
         வண்டார்குழலாள் மங்கை பங்கினனே
அற்றார் பிறவிக் கடல் நீந்தி ஏறி
         அடியேன் உய்யப்போவதோர் சூழல் சொல்லே. --- சுந்தரர்.


அருள்பழுத்து அளிந்த கருணை வான்கனி,
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு அமிர்த வாரி, நெடுநிலை
மாடக் கோபுரத்து ஆடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாண,நின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி,
யான்ஒன்று உணர்த்துவன், எந்தை, மேனாள்
அகில லோகமும், அனந்த யோனியும்,
நிகிலமும் தோன்றநீ நினைந்த நாள் தொடங்கி,

எனைப்பல யோனியும், நினைப்பு அரும் பேதத்து
யாரும், யாவையும், எனக்குத் தனித்தனி
தாயர் ஆகியும், தந்தையர் ஆகியும்,
வந்து இலாதவர் இல்லை, யான், அவர்
தந்தையர் ஆகியும், தாயர் ஆகியும்,

வந்து இராததும் இல்லை, முந்து
பிறவா நிலனும் இல்லை, அவ்வயின்
இறவா நிலனும் இல்லை, பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை, யான் அவை
தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை, அனைத்தே

காலமும் சென்றது, யான் இதன் மேல்இனி
இளைக்குமாறு இலனே நாயேன்,
நந்தாச் சோதி, நின் அஞ்செழுத்து நவிலும்
தந்திரம் பயின்றதும் இலனே, தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே, ஆயினும்

இயன்றது ஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திரமாக, என்னையும்
இடர்ப் பிறப்பு இறப்பு என்னும் இரண்டின்
கடல்படா வகை காத்தல் நின்கடனே.
                                                      --- திருக்கழுமல மும்மணிக்கோவை.
  
அறிவில் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்,
இனையன பலசரக்கு ஏற்றி, வினைஎனும்
தொல்மீகாமன் உய்ப்ப, அந்நிலைக்
கருஎனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்து
புலன்எனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்புஎனும் பெருங்கடல் உறப் புகுந்து அலைக்கும்
துயர்த் திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து,
நிறைஎனும் கூம்பு முரிந்து, குறையா
உணர்வு எனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம், அலங்கல்
மதியுடன் அணிந்த பொதிஅவிழ் சடிலத்துப்
பையரவு அணிந்த தெய்வ நாயக.....

நின் அருள் எனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடும்கரை சேர்த்துமா செய்யே.
                                                           ---  கோயில் நான்மணி மாலை.

இப்பிறவி என்னும்ஓர் இருள்கடலில் மூழ்கி, நான்
                  என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு
         இருவினை எனும் திரையின் எற்றுஉண்டு, புற்புதம்
                  எனக் கொங்கை வரிசைகாட்டும்
துப்புஇதழ் மடந்தையர் மயல் சண்டமாருதச்
                  சுழல் வந்து வந்து அடிப்ப,
         சோராத ஆசையாம் கான்ஆறு வான்நதி
                  சுரந்தது என மேலும் ஆர்ப்ப,
கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்
                  கைவிட்டு மதிமயங்கி,
         கள்ள வங்கக் காலர் வருவர் என்று அஞ்சியே
                  கண்அருவி காட்டும் எளியேன்
செப்பரிய முத்தியாம் கரைசேரவும் கருணை
                  செய்வையோ, சத்து ஆகி என்
         சித்தமிசை குடிகொண்ட அறிவுஆன தெய்வமே
                  தோஜோமய ஆனந்தமே.            --- தாயுமானவர்.

இல்லை பிறவிக் கடல் ஏறல், இன் புறவில்  
முல்லை கமழும் முதுகுன்றில் ---  கொல்லை
விடையானை, வேதியனை, வெண்மதிசேர் செம்பொன்
சடையானைச் சாராதார் தாம்.                  --- 11-ஆம் திருமுறை

துவக்கு அற அறிந்து பிறக்கும் ஆரூரும்
         துயர்ந்திடாது அடைந்து காண் மன்றும்
உவப்புடன் நிலைத்து மரிக்கும் ஓர் பதியும்
         ஒக்குமோ நினைக்கும் நின் நகரை
பவக்கடல் கடந்து முத்தியம் கரையில்
         படர்பவர் திகைப்பு அற நோக்கித்
தவக்கலம் நடத்த உயர்ந்து எழும் சோண
         சைலனே கைலை நாயகனே.

தோற்றிடும் பிறவி  எனும் கடல் வீழ்ந்து
         துயர்ப்பிணி எனும் அலை அலைப்ப
கூற்று எனும் முதலை விழுங்குமுன் நினது
         குரைகழல் கரை புக விடுப்பாய்
ஏற்றிடும் விளக்கின் வேறுபட்டு அகத்தின்
         இருள் எலாம் தன்பெயர் ஒருகால்
சாற்றினும் ஒழிக்கும் விளக்கு எனும் சோண
         சைலனே கைலை நாயகனே.            --- சோணசைலமாலை.

ஓங்கல் அனைய பெரிய சோங்கு ---

சோங்கு-கப்பல். ஓங்கல்-மலை. மலைபோன்ற கப்பல்.

அலைபுனல் கங்கை தங்கிய சடையார்
         அடல்நெடு மதில்ஒரு மூன்று
கொலைஇடைச் செந்தீ வெந்துஅறக் கண்ட
         குழகனார் கோயில் அதுஎன்பர்
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு
         மற்றுமற்று இடைஇடை எங்கும்
கலைகளித்து ஏறிக் கானலில் வாழும்
         கழுமல நகர்எனல் ஆமே.            --- திருசானசம்பந்தர்.

வேங்கை அடவி ---

வேங்கைப் புலிகள் நிறைந்த காடு. அன்றி வேங்கை மரங்கள் நிறைந்த காடு எனினும் அமையும்.

வேண்டும் அடியர் புலவர் வேண்ட, அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் ---

வேண்டுகின்ற அடியார்களும் புலவர்களும் வேண்ட, அவர்கட்கு அரிய பொருட்களை வேண்டும் அளவில், வேண்டியவுடனே, வேண்டும் அளவுக்கு, வேண்டியவர்கள் திருப்தியடையுமாறு நிரம்ப வழங்கி எம்பிரான் இன்னருள் புரிகின்றான்.

வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் ---  அப்பர்.

கருத்துரை

கழுகாசலபதியே! பிறவிக் கடலை நீந்திக் கரைசேர அருள்செய்யும்.



No comments:

Post a Comment

பொது --- 1080. கலந்த மாதும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கலந்த மாதும் (பொது) தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங...