கழுகுமலை - 0419. முலையை மறைத்து





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முலையை மறைத்து (கழுகுமலை)

முருகா!
பொதுமகளிர் உறவு நீங்க அருள்


தனதன தத்தத் தனத்த தானன
     தனதன தத்தத் தனத்த தானன
          தனதன தத்தத் தனத்த தானன ...... தனதான

முலையை மறைத்துத் திறப்ப ராடையை
     நெகிழ வுடுத்துப் படுப்பர் வாயிதழ்
          முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமல ......ரணைமீதே

அலைகுலை யக்கொட் டணைப்ப ராடவர்
     மனவலி யைத்தட் டழிப்பர் மால்பெரி
          தவர்பொரு ளைக்கைப் பறிப்பர் வேசைக .....ளுறவாமோ

தலைமுடி பத்துத் தெறித்து ராவண
     னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு
          தநுவைவ ளைத்துத் தொடுத்த வாளியன் ...மருகோனே

கலைமதி யப்புத் தரித்த வேணிய
     ருதவிய வெற்றித் திருக்கை வேலவ
          கழுகும லைக்குட் சிறக்க மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


முலையை மறைத்துத் திறப்பர், டையை
     நெகிழ உடுத்துப் படுப்பர், வாய்இதழ்
          முறைமுறை முத்திக் கொடுப்பர், பூமலர் ...... அணைமீதே

அலை குலையக் கொட்டு அணைப்பர், ஆடவர்
     மன வலியைத் தட்டு அழிப்பர், மால் பெரிது
          அவர் பொருளைக் கைப் பறிப்பர், வேசைகள் .....உறவு ஆமோ?

தலைமுடி பத்துத் தெறித்து, ராவணன்
     உடல் தொளை பட்டுத் துடிக்கவே, ஒரு
          தநுவை வளைத்துத் தொடுத்த வாளியன் .....மருகோனே!

கலை மதி அப்புத் தரித்த வேணியர்
     உதவிய, வெற்றித் திருக்கை வேலவ,
          கழுகுமலைக்குள் சிறக்க மேவிய ...... பெருமாளே.


பதவுரை

         தலைமுடி பத்துத் தெறித்து --- பத்துத் தலைமுடிகளும் தெறிப்புண்டு,

     ராவணன் உடல் தொளைபட்டு, துடிக்கவே --- இராவணனனுடைய உடலானது தொளைபட்டுத் துடிக்குமாறு

     ஒரு தநுவை வளைத்துத் தொடுத்த வாளியன் மருகோனே
--- ஒப்பற்ற வில்லை வளைத்து அம்பை செலுத்திய சீராமனுடைய திருமருகரே!

         கலைமதி அப்பு தரித்த வேணியர் உதவிய --- ஒரு கலையுடைய சந்திரனையும்,  கங்கையையும் தரித்துக் கொண்ட சடை முடியராம் சிவபெருமான் பெற்றருளிய,

     வெற்றி திருக்கை வேலவ --- வெற்றிவேலைத் திருக்கரத்தில் தாங்கியவரே!

         கழுகுமலைக்கு உள் சிறக்க மேவிய பெருமாளே --- கழுகுமலையில் சிறப்புடனே வீற்றிருக்கும் பெருமையிற் சிறந்தவரே!

         முலையை மறைத்து திறப்பர் --- முலையை மூடிமறைத்துத் திறப்பார்கள்.

     ஆடையை நெகிழ உடுத்து படுப்பர் --- ஆடையைத் தளர்ச்சியாக உடுத்திப் படுப்பார்கள்,

     வாய் இதழ் முத்தி முறை முறை கொடுப்பர் --- வாயிதழ் ஊறலையும் முத்தத்தையும் மாறி மாறித் தருவார்கள்,

     பூமலர் அணை மீதே --- மலர்ப் படுக்கையின் மேல்,

     அலை குலைய கொட்டு அணைப்பர்  --- நிலைகுலையக் கொண்டு அணைப்பார்கள்,

     ஆடவர் மன வலியை தட்டு அழிப்பர் --- ஆண்களின் மன உறுதியைக் கலங்க வைப்பார்கள்,

     மால் பெரிது அவர் பொருளை கைபறிப்பர்  --- மோக மயக்கத்தை மிகவுஞ் செய்து, அவர்களுடைய பொருளைக் கவர்ந்து கொள்வார்களாகிய,

     வேசைகள் உறவு ஆமோ ---- வேசையர்களின் உறவு ஆகுமோ? (ஆகாது).


பொழிப்புரை


     பத்துத் தலைகளும் தெறித்து விழ, இராவணனுடைய உடல் தொளைபட்டுத் துடிக்க, ஒரு வில்லை வளைத்துக் கணைவிடுத்த ஸ்ரீராமரது திருமருகரே!

     பிறைமதியையும் கங்கையையும் தரித்த சடைமுடியுடைய சிவபெருமான் பெற்ற வெற்றி வேலாயுதக் கடவுளே!

     கழுகுமலையில் சிறப்புடன் வீற்றிருக்கும் பெருமித முடையவரே!

     தனத்தை மூடித் திறப்பார்கள்; உடையைத் தளர்த்தி உடுத்துப் படுப்பார்கள்; அதரபானமும் முத்தமும் மாறி மாறி தருவார்கள்; அழகிய மலர்ப்படுக்கையில் நிலைகுலையக் கொண்டு தழுவுவார்கள்; ஆண்களின் மன உறுதியைக் கலங்க வைப்பார்கள்; இவ்வாறு மோக மயலைப் பெரிதாகத் தந்து பொருளைப் பறிக்கும் பொது மாதர்களின் உறவு ஆகுமோ?(ஆகாது).

    
விரிவுரை

அலை குலையக் கொட்டணைப்பர் ---

அலைகுலைய - நிலைகுலைய.

நிலைவலம் வல்லன் அல்லன் நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்
தலைவலம் கருதிப் புக்குத் தாக்கினான் தன்னை அன்று
அலைகுலை ஆக்கு வித்தார் அவளிவ ணல்லூ ராரே.--- அப்பர்.

"கொண்டு" என்ற சொல் சந்தத்தை நோக்கிக் "கொட்டு" என வந்தது.

தலைமுடி பத்துத் தெறித்து ---

இராவணனுடைய பத்துத் தலைகளையும் ஸ்ரீராமர் ஒரு கணையால் அறுத்துத் தள்ளினார். பொண்ணாசையால் அவன் குலமுழுதும் அழியத் தானும் அழிந்தான்.

கலைமதி ---

சந்திரன் தனது கடைசி மனைவியிடம் அதிக அன்புடன் இருந்து ஏனைய மனைவியர்களைப் புறக்கணித்தான். அதனால் ‘நாளுக்கு ஒரு கலையாகத் தேய்ந்து அழிக‘ எனத் தக்கன் சாபமிட்டான்.

ஒவ்வொரு கலையாகத் தேயப் பெற்ற சந்திரன் எங்கு சென்றும் உய்வு பெற்றானில்லை. கயிலை சென்று உமாபதியைச் சரண் அடைந்தான். அந்த ஒரு கலையைச் சிரத்தில் சூடி, ‘இந்த ஒரு கலை யழியாது‘ என்று கூறி அரனார் அருள்புரிந்தார்.

கருத்துரை

கழுகுமலைக் கந்தவேளே! கணிகையர் உறவு ஆகாது அது தீர அருள் செய்வீர்.



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...