வள்ளியூர் - 0420. அல்லில் நேரும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அல்லில் நேரும்  (வள்ளியூர்)

முருகா! மாயையில் உழலாமல் ஆண்டு அருள்

தய்ய தானன ...... தனதான


அல்லில் நேருமி ...... னதுதானும்

அல்ல தாகிய ...... உடல்மாயை

கல்லி னேரஅ ...... வழிதோறுங்

கையு நானுமு ...... லையலாமோ

சொல்லி நேர்படு ...... முதுசூரர்

தொய்ய வூர்கெட ...... விடும்வேலா

வல்லி மாரிரு ...... புறமாக

வள்ளி யூருறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அல்லில் நேருமின் ...... அதுதானும்

அல்லது ஆகிய ...... உடல்மாயை

கல்லில் நேர அ ...... வழிதோறும்

கையும் நானும் ...... உலையல் ஆமோ?

சொல்லி நேர்படு ...... முதுசூரர்

தொய்ய, ஊர்கெட, ...... விடும்வேலா!

வல்லி மார் இரு ...... புறமாக

வள்ளி யூர் உறை ...... பெருமாளே.


பதவுரை

சொல்லி நேர் படு --- தமது வீரத் திறனைச் சொல்லிக் கொண்டு எதிர்த்த,

முது சூரர் --- பழைய சூரர்கள்,

தொய்ய --- அயர்ச்சி யடையவும்,

ஊர் கெட --- அவர்களின் ஊர் பாழ்படவும்,

விடும் வேலா --- விடுத்த வேலாயுதரே!

வல்லிமார் இருபுறம் ஆக --- கொடியனைய இருதேவிகளும் இருபுறத்தில் விளங்க,

வள்ளியூர் உறை ---- வள்ளியூரில் வாழும்,

பெருமாளே ---- பெருமையிற் சிறந்தவரே!

அல்லில் நேரும் --- இரவில் காணப்படும்,

மின் அது தானும் --- மின்னல் அது தானும்,

அல்லது ஆகிய உடல் மாயை --- அன்று என்று கூறத்தக்க உடல் ஒரு மாயை;

கல்லின் நேர அ வழிதோறும் --- கல் நிறைந்த அந்த வாழ்க்கை வழியிலே,

கையும் நானும் உலையலாமோ --- என் ஒழுக்க நிலையும் அடியேனும் நிலைகுலையல் ஆமோ?


பொழிப்புரை


தங்கள் வீரத்திறத்தைச் சொல்லிக் கொண்டு எதிர்த்து வந்த பழைய சூரர்கள் சோர்வு அடையவும், அவர்களின் ஊர் பாழ்படவும் செலுத்திய வேலாயுதரே!

வனவல்லி கஜவல்லி என்ற இரு தேவிமார்களும் இரு பக்கத்தில் விளங்க, வள்ளியூரில் வாழும் பெருமிதமுடையவரே!

இரவில் தோன்றும் மின்னலைக் காட்டிலும் நிலையில்லாததான இந்த உடம்பு ஒருமாயை; கல் நிறைந்த வழிக்கு ஒப்பான இந்த வாழ்க்கை வழியிலே, என் ஒழுக்க நிலையும் அடியேனும் நிலைகுலைந்து அழியலாமோ?


விரிவுரை


அல்லில் நேரும் மின் அது தானும் அல்லது ஆகிய உடல் ---

இரவிலே தோன்றுகின்ற மின்னலாவது சிலவிநாடிகள் நிற்கும்.      
அத்துணை நேரங்கூட இந்த உடம்பு நிற்காது. யாக்கை ஒரு கணத்தில் தோன்றி மறைவது.

கல்லின் நேர அ வழிதோறும் ---

கல்லும் முள்ளும் நிறைந்த வழிபோல் மாயையின் வழி கடினமானது. ஆதலால் அவ்வழி சென்று அலைதல் கூடாது.

கையும் நானும் உலையலாமோ? ---

கை-ஒழுக்கம்.

சொல்லி நேர்படு முதுசூரர் ---

சூரபன்மனும் அவனுடைய சேனாவீரர்களும் தத்தம் பராக்கிரமங்களை வீர வசனத்தால் முழக்கிக் கொண்டு போருக்கு வந்தனர்.

வல்லிமார் இரு புறம் ---

வனவல்லி-வள்ளி. கஜவல்லி-தெய்வயானை. வள்ளி வலப்பக்கம். தெய்வயானை இடப்பக்கம்.

ஆராத காதல் வேடர் மடமகள்
   ஜீமூதம் ஊர் வலாரி மடமகள்
   ஆதாரபூதம் ஆக வலம் இடம்       உறைவாழ்வும்”     --- (சீரான) திருப்புகழ்.

வள்ளியூர் ---

வள்ளியூர் திருநெல்வேலிக்குத் தெற்கே நாகர் கோயில் போகும் வழியில் 28-ஆவது மைலில் உள்ள திருத்தலம். பேருந்து வசதி உண்டு. மலையடிவாரத்தில் கோயில் உள்ளது.

கருத்துரை

வள்ளியூர் வடிவேலா! மாயை வழியில் சென்று அலையாமல் ஆண்டருள்வீர்.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...