பழமொழி விளக்கம்
என்னும்
தண்டலையார் சதகம்
காப்பு - 1
- - விநாயகர்
சீர்கொண்ட
கற்பகத்தின் வாதாவி
நாயகனை, தில்லை
வாழும்
கார்கொண்ட
கரிமுகனை, விகடசக்ர
கணபதியைக் கருத்துள்
வைப்பாம்;
பேர்கொண்ட
ஞானநாயகி பாகன்
தண்டலைஎம் பெருமான்
மீதில்
ஏர்கொண்ட
நவகண்டம் இசைந்த,பழ
மொழிவிளக்கம் இயம்பத்
தானே.
இதன்
பொருள் ---
பேர் கொண்ட ஞானநாயகி பாகன் --- புகழ்
பெற்றவராகிய ஞானநாயகி அம்மையைத் தமது திருமேனியின் இடப்பக்கத்தில் கொண்டவராகிய
தண்டலை எம்பெருமான் மீதில் --- புகழ்பெற்ற திருத்தண்டலை நீள்நெறி என்னும் திருத்தலத்தில்
எழுந்தருளிய எம் இறைவரான சிவபெருமான் மேல்,
ஏர் கொண்ட
நவகண்டம் இசைந்த --- அழகிய ஒன்பது கண்டங்களிலும்
வழங்கி வருகின்ற
பழமொழி விளக்கம் இயம்ப --- பழமொழிகளுக்கு விளக்கம் சொல்ல,
சீர் கொண்ட கற்பகத்தின் --- சிறப்பினை உடைய
கற்பகத்தினைப் போன்ற,
வாதாவி நாயகனை --- வாதாவி விநாயகரை,
தில்லை வாழும் கார்கொண்ட கரிமுகனை --- தில்லை
என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட யானைமுகக்
கடவுளை,
விகட சக்ர கணபதியை --- விகட சக்கர கணபதி
என்னும் திருப்பெயர் கொண்டவரை,
கருத்துள் வைப்பாம் --- நினைவில் வைத்துப் போற்றுகின்றேன்.
தண்டலை என்பது "தண்டலை
நீள்நெறி" என்னும் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலத்தைக் குறிக்கும். "தண்டலை"
என்பது திருத்தலத்தின் திருப்பெயர். "நீள்நெறி" என்பது திருக்கோயிலின் திருப்பெயர்.
இறைவன் திருப்பெயர் நீள்நெறி நாதர்ழ அம்மையார் திருப்பெயர் ஞானாம்பிகை. ‘தண்டலை
நீணெறி' இப்போது "தண்டலைச்சேரி"
எனப்படுகிறது. சோழ நாட்டில் உள்ள காவிரித்
தென்கரைத் திருத்தலங்களில் வன்று. திருத்துறைப்பூண்டிப் புகைவண்டி நிலையத்துக்கு
வடக்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. அரிவாள்தாய நாயனார்
இறைவனை வழிபட்டு முத்தி பெற்றது. அவர் திருப்பதியான கணமங்கலம் பக்கத்தில் உள்ளது. மக்கள்
அதை, "கணமங்கலத்திடல்" என்றும் "கண்ணந்தங்குடி" என்றும் வழங்குகின்றனர். தீர்த்தம் ஓமக தீர்த்தம். கோயிலின் பக்கத்தில் சாலையின்
கீழ்ப்பால் உள்ளது. ஞானசித்தி விநாயகர் கோயில் எதிரில் நீராடல் சிறப்பு உடையது.
திருப்புகலூர் என்னும் திருத்தலத்தில் வாதவி விநாயகர். காஞ்சிபுரத்தில்
விகடசக்கர கணபதி. நவகண்டம், உலகின் ஒன்பது பிரிவுகள். கீழ்விதேகம், மேல்விதேகம், வடவிதேகம்,
தென்விதேகம், வடவிரேபதம், தென்விரேபதம், வடபரதம், தென்பரதம், மத்திய கண்டம் என்பன ஆகும்.
நூறு செய்யுட்களால் உலகியலைத் தெரிவிக்கும்
சிறுநூல் இது. திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய நீணெறிநாதரைத்
தலைவராகக் கொண்டு, உலகியலாக வழங்கும் பழமொழிகளுக்கு விளக்கம் தரும் முறையில் எழுந்த
நூல் இது. பழமொழி விளக்கம் என்னும்
தண்டலையார் சதகம் என்று வழங்கப்படும் நூல் இது ஆகும்.
நூலாசிரியர் படிக்காசுப் புலவர். தொண்டை மண்டலத்தில்
பொன்களத்தூர் என்னும் ஊரிலே, செங்குந்த மரபில் தோன்றியவர். இளமையிலேயே நன்முறையில்
கல்வி கற்றுப் பல தமிழ்நூல்களில் புலமை பெற்று விளங்கினார். இவர் அருட்கவி ஆதலால் இவரின்
வாக்குத் தெய்வ வாக்காக மதிக்கப்பெற்றது.
பல தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்துவிட்டுத்
தில்லை என்னும் பெயர்பெற்ற சிதம்பரத்திற்கு வந்தார். அங்குப் பொற்சபையில் நடமாடும்
நடராசப் பெருமானாகிய கூத்தப்பிரானை மனமுருகித் துதிக்கும்போது சபாநாயகர், பஞ்சாட்சரப்படி என வழங்கப்பெறும் ஐந்தெழுத்துப்படியில்
பொற்காசுவைத்து அருளினார். இறைவன் அளித்த பொற்காசுகளை, பஞ்சாக்கரப் படி என்னும் ஐந்தெழுத்துப் படியினில்
வைத்துப் பெற்றதனால், அன்று முதல் அவர் 'படிக்காசுப் புலவர்' என் உலகோரால் அழைக்கப்பெற்றார்.
இராமநாதபுரம்
சென்று, இரகுநாத சேதுபதி மன்னர்
அவர்களைக் கண்டு, அவரைப் பாடிப் பரிசில்
பெற்றுச் சிறிது காலம் அங்கிருந்தார்.
பின் வள்ளல் சீதக்காதி அவர்களைக் காயல் பட்டினத்தி்ல்
சென்று கண்டு அவரைப் பாடிச் சிறப்புக்கள் பல பெற்றார். வள்ளல் சீதக்காதி முகம்மதிய
சமயத்தவராயினும் பிறமதங்களையும் மதித்துப் போற்றிய பெருந்தகை. அவரோடு பெருநட்புக் கொண்டு
இருந்தார். சீதக்காதி இறந்த போது அவர் மேல் நெஞ்சை நெகிழ்விக்கும் பாடல்களைப் பாடினார்.
பின்னர் திருச்செந்தூர் சென்று அங்கு முருகப்பெருமானை
வணங்கிப் பின்னர் வடதிசைநோக்கித் தம் பயணத்தைத் தொடங்கித் "தண்டலை" எனும் திருத்தலத்தினை வந்தடைந்தார். அத்
திருத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெயரையும் சேர்த்து, "தி்ருத்தண்டலை நீணெறி' எனவும் வழங்கப்பெறும். அங்கிருந்த அன்பர்களின்
வேண்டுகோளின்படி இந்தத் 'தண்டலையார் சதகம்' எனும் அற்புத இலக்கியத்தைப் படைத்தருளினார்.
பின்னர் இந்தநூல் அங்கிருந்த சந்நிதியில் அரங்கேற்றப் பெற்றது.
அங்கே சில காலம் அன்பர் ஆதரவில் இருந்த படிக்காசுப்புலவர்
பின்னர்த் தருமபுரம் சென்று அங்குள்ள தருமபுர ஆதீனத்து ஞானாசிரியரால் ஆட்கொள்ளப்பெற்று
ஞானதீக்கையும், சந்நியாசமும் அருளப்பெற்றார். அன்று முதல் அவர் 'படிக்காசுத் தம்பிரான்' ஆனார். பின்னர்ப் புள்ளிருக்குவேளூர் என்று
பெயர்பெற்ற வைத்தீசுவரன் கோயில் சென்று, திருக்கோயில்
பணிகளில்
தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வாழும் நாளில் அவர் 'வேளூர்க்கலம்பகம்' எனும் கலம்பக நூலைப் படைத்து, அக்கோயிலிலேயே அதனை அரங்கேற்றித் தமிழ் உலகுக்கு
வளம் சேர்த்தார்.
இறுதிக் காலத்தில் தமக்கு முன்னர்ப் படிக்காசு
அளித்து உதவிய தில்லைப்பெருமானின் திருவடியையே தினந்தோறும் தரிசிக்க வேண்டுமென்ற அவாவினால், அவர் மீண்டும் தில்லையை அடைந்து அங்கே ஒரு
திருமடம் அமைத்துத் தினந்தோறும் நடராசப் பெருமானைத் தரிசித்து வரும்போது, அப்பெருமானும் நம் புலவருக்கு நாளும் பொற்காசு
மீண்டும் படியில் வைத்து அருளி வந்தார். இவ்விதம் இறைவனிடம் 'பொருளும், அருளும்' பெற்று நல்வாழ்வு வாழ்ந்த படிக்காசுப் புலவர், நல்லாசிரியப் பணியும் செய்து வந்தார். பின்னர்க்
'கோயில்' எனும் சிறப்பினைப் பெற்ற சிதம்பரத்திலேயே
இறுதிநாள் வரை வாழ்ந்திருந்து, இறுதியில் கூத்தப்பெருமானின் திருவடி நிழலை அடைந்தார்.
No comments:
Post a Comment