பழமொழி விளக்கம்
என்னும்
தண்டலையார் சதகம்
காப்பு - 2 --- விநாயகர் துதி
வேதநெறி
விளம்பியசொல், ஆகமநூல்
விளம்பியசொல், மிகுபு ராணம்
ஏதுவினில்
காட்டியசொல், இலக்கணச்சொல்,
இசைந்தபொருள் எல்லாம் நாடி,
ஆதிமுதல்
உலகுதனில் விளங்கு, பழ
மொழிவிளக்கம் அறிந்து பாட,
சோதிபெறும்
மதவேழ முகத்து ஒருவன்
அகத்து எனக்குத் துணைசெய் வானே.
இதன் பொருள் ---
வேதநெறி விளம்பிய சொல் --- பொது நூலாகிய வேதம் இயம்பிய
வழியே சொற்களையும்,
ஆகம நூல் விளம்பிய சொல் --- சிறப்பு நூல்கள் ஆகம நூல்களில்
கூறிப்பட்டுள்ள சொற்களையும்,
மிகு புராணம் ஏதுவினில் காட்டிய சொல் ---
மிகுதியான புராணங்கள் காரணத்துடன் விளக்கியுள்ள சொற்களையும்,
இசைந்த பொருள் எல்லாம் நாடி --- இவற்றில் பொருந்திய
பொருள்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து,
உலகுதனில் --- இந்த உலகத்திலே
ஆதிமுதல் விளங்கு பழமொழி விளக்கம் அறிந்து
பாட --- தொன்று தொட்டு வழங்கப்பட்டு வரும் பழமொழிகளுக்கு விளக்கத்தை, வேதம்,
ஆகமம், புராணம் ஆகியவற்றின் வாயிலாக அறிந்து பாடுவதற்கு,
சோதிபெறும் மதவேழ முகத்து ஒருவன் அகத்து எனக்குத்
துணை செய்வான் ---- ஒளி பொருந்தியவரும், மதயானையின்
முகத்தை
உடையவரும் ஆகிய ஒப்பற்ற முதல்வன் என் உள்ளத்தில் இருந்து துணை செய்வான்.
விளக்கம்
---
"வேதநெறி
தழைத்து ஓங்க, மிகு சைவத் துறை விளங்க,
பூதபரம்
பரைபொலிய, புனிதவாய் மலர்ந்து அழுத,
சீதவள
வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர்
தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்"
என்னும்
பெரியபுராணப் பாடலால், வேதநெறியும், சைவத் துறையும் விளங்கவேண்டும். இதனாலேயே
இறைவன் தனது திருவாக்கால் வேதங்களையும் ஆகமங்களையும் அருளினான்.
வேதநெறி என்பது வேதவிதிப்படி நிகழும் வைதிக ஒழுக்கத்தைக்
குறிக்கும். சைவத்துறை என்பது சிவாகம விதிப்படி நிகழும் சரியை முதலிய சிவதருமங்களைக்
குறிக்கும். வேதம்
சிவாகமங்கள் இரண்டும் சிவன் திருவாக்குக்கள். வேதம் உலகர்க்கும். சிவாகமங்கள் சத்திநிபாதர்க்கும்
அருளப்பட்டன.
வேதம்
வாழ்வியல் நூல். ஆகமங்கள் வழிபாட்டு நூல்.
வேதமொடு
ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்;
ஓதும்
பொதுவும் சிறப்பும் என்று உள்ளன;
நாதன்
உரை அவை நாடில் இரண்டந்தம்
பேதம்
அது என்னில் பெரியோர்க்கு அபேதமே. --- திருமூலர்
வேதம் ஆகமம் இரண்டுமே இறைவனால் அருளப்பட்டவை.
வேதம்பொது
நூல் ஆகும். ஆகமம் சிறப்பு நூல் ஆகும். இரண்டும்
பேதப்படுவன போல் தோன்றும். உண்மை உணர்ந்த பெரியோர்க்கு பேதம் தோன்றாது. பொது என்பது
உண்மையை முற்ற உணர்த்தாது. ஓரளவாக உணர்த்துவது.
சிறப்பு என்பது உண்மையை முற்ற
உணர்த்துவது.
உலகர் உண்மையை ஓரளவே உணர்வார். சத்திநிபாதரே
முற்ற உணர்வார். மேலும் உண்மையை முதற்கண் ஓரளவாக உணர்ந்தே பின்பே, முற்ற உணர
இயலும். அது பற்றியே உலகர்க்காவும்,
சத்திநிபாதர்க்காகவும்
முறையே வேதமும், ஆகமமும் சிவனால்
செய்யப்பட்டன.
எனவே இவ்வுண்மையை உணராதவர், `வேதாந்தம் வேறு, சித்தாந்தம் வேறு` என்பர். இவ்வுண்மையை உணர்ந்தவர் ஓர்
உண்மைதானே பொது, சிறப்பு என்னும்
வகையில் `வேதாந்தம்` எனவும், `சித்தாந்தம்` எனவும் நிற்கின்றது என்பர்.
வேதநூல்
சைவநூல் என்று இரண்டே நூல்கள்,
வேறு உரைக்கும் நூல் இவற்றின் விரிந்த
நூல்கள்,
ஆதி
நூல் அநாதி அமலன் தருநூல் இரண்டும்,
ஆரணநூல் பொது, சைவம் அரும்சிறப்பு
நூலாம்,
நீதியினால்
உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
நிகழ்த்தியது, நீள்மறையின் ஒழிபொருள் வேதாந்தத்
தீது
இல்பொருள் கொண்டு உரைக்கும் நூல்சைவம்; பிறநூல்
திகழ்பூர்வம், சிவாகமங்கள் சித்தாந்தம் ஆகும்.
--- சிவஞானசித்தியார்.
உலகத்தில் உயர்ந்த நூல்கள் எனக்
கூறப்படுவன வேதங்களும் சிவாகமங்களுமாகிய இரண்டே. இவற்றின் வேறாக எழுந்த நூல்கள்
எல்லாம் இவற்றின் கருத்துக்களை விரித்து உரைக்கும் நூல்களே ஆகும். வினையின் நீங்கி
விளங்கிய அறிவினை உடையவனும் இயல்பாகவே பாசங்களில் நீங்கியவனுமாகிய சிவபெருமானால்
அருளப்பட்டவை வேதம், ஆகமம் என்னும் இவை இரண்டும் ஆகும். இவ்விரு நூல்களும் முதல்
நூல்களே. இவை முறையே உலகத்தவர்க்கும், சத்திநிபாதம் எய்தியவர்க்கும் என இறைவனால்
அருளப்பட்டன. இவற்றுள் மறைகள் பொது என்றும் சிவாகமங்கள் சிறப்பு என்றும்
கூறப்படும். விரிந்த வேதத்துள் கூறப்பட்டவற்றைத் தவிர எஞ்சி நின்ற பொருள்களையும்.
வேத முடிபாகிய உபநிடதங்களின் சாரமாகிய குற்றமற்ற பொருள்களையும் தனித்து எடுத்துக்
கொண்டு இனிதே விளக்குவது சிவாகமம். எனவே, பிற நூல்கள் எல்லாம் பூர்வ பக்கம் எனவும்
சிவாகமங்கள் சித்தாந்தம் என்றும் கொள்ளப்படும்.
No comments:
Post a Comment