6. நன் மாணாக்கர் இயல்
வைதாலும்,
ஓர்கொடுமை செய்தாலுமோ, சீறி
மாறாது இகழ்ந்தாலுமோ,
மனதுசற் றாகிலும் கோணாது, நாணாது,
மாதாபி தாஎனக்குப்
பொய்யாமல்
நீ என்று கனிவொடும் பணிவிடை
புரிந்து, பொருள் உடல்ஆவியும்
புனித! உன்தனது எனத் தத்தம்செய்து, இரவுபகல்
போற்றி, மல ரடியில் வீழ்ந்து,
மெய்யாக
வேபரவி உபதேசம் அதுபெற
விரும்புவோர் சற்சீ டராம்,
வினைவேர் அறும்படி அவர்க்கருள்செய் திடுவதே
மிக்கதே சிகரதுகடன்
ஐயா!
புரம்பொடி படச்செய்த செம்மலே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ----
ஐயா --- ஐயனே!
புரம்பொடிபடச் செய்த செம்மலே --- முப்புரங்களையும்
நெற்றிக் கண்ணால் சிரித்து எரித்த பெரியொனே!
அண்ணல் எமது அருமை மதவேள் --- தலைவனாகிய எமது
அருமை மதவேள்,
அனுதினமும் மனதில் நினைதரு --- நாள்தோறும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர
கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
வைதாலும் --- திட்டினாலும்,
ஓர் கொடுமை செய்தாலும் --- ஏதேனும் கொடுமை
செய்தாலும்,
மாறாது சீறி இகழ்ந்தாலும் --- மாறாமல்
சினந்து இழிவுபடுத்தினாலும்,
மனது சற்றாகிலும் கோணாது நாணாது --- சிறிதும்
மனம் கோணாமலும் வெட்கப்படாமலும்,
பொய்யாமல் எனக்கு மாதா பிதா நீ என்று ---
உண்மையாகவே எனக்கு தாயும் தந்தையும் நீங்களே என்று கூறி,
கனிவொடும் பணிவிடை புரிந்து --- ஆசிரியருக்கு
ஆற்றவேண்டிய பணிவிடைகளை உள்ளம் உவந்து செய்து,
புனித --- புனிதமானவரே!
பொருள் உடல் ஆவியும் உன்றனது என தத்தம்
செய்து --- என்னுடைய பொருளும் உடலும் உயிரும் உம்முடையவையே என்று கூறிக் கொடுத்து,
இரவு பகல் போற்றி --- இரவும் பகலும் விடாமல்
வணங்கி,
மலரடியில் மெய்யாகவே வீழ்ந்து பரவி --- ஆசாரியருடைய
மலர்போன்ற திருவடிகளில் உண்மையாகவே
வீழ்ந்து வணங்கி, அவரைப் புகழ்ந்து கூறி,
உபதேசம் அது பெற விரும்புவோர் சற் சீடர்ஆம் -
அவரிடம் இருந்து நல்லுபதேசத்தைப் பெற விரும்புபவரே நல்ல மாணாக்கர் ஆவார்,
அவர்க்கு வினைவேர் அறும்படி அருள் செய்திடுவதே
மிக்க தேசிகரது கடன் --- அப்படிப்பட்ட மாணாக்கர்களுக்கு அவர்களின் வினையின் வேர் அற்றுப்
போகுமாறு அருள் செய்வதே சிறந்த ஆசிரியரது கடமையாகும்.
குறிப்பு --- தாய் எப்படி சதா காலமும் தனது மகனின் வினைவாக
இருந்து, அவனுடைய நல்வாழ்வையே கருதி இருப்பாளோ, அப்படியே, ஆசாரியரும், தனது
மாணாக்கரின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, நேரில் இல்லாத காலத்தும், தனது
உணர்வின் வழியே மாணவருக்கு நல்லுணர்வு புகட்டுவது செய்வார். எனவே,
ஞான
நெறிக்கு ஏற்ற குரு, நண்ணரிய சித்தி முத்தி
தானம்
தருமம் தழைத்த குரு --- மானமொடு
தாய்
எனவும் வந்து என்னைத் தந்த குரு, என்சிந்தை
கோயில்
என வாழும் குரு.
என்று
போற்றினார் தாயுமானார்.
"மாதா பிதா குரு தெய்வம்" என்று
சொல்லப்படுவது யாவரும் அறிந்ததே. மாதா ஒன்று, பிதா இரண்டு, குரு மூன்று, தெய்வம்
நான்கு என வரிசைப்படுத்தக் கூடாது.
தெய்வம் என்பது அனுபவப் பொருள். "தனு
கரண ஆதிகள் தாம் கடந்து அறியும் ஓரு அனுபவமாகிய அருட்பெருஞ்சோதி" என்று
வள்ளல் பெருமான் பாடிக் காட்டினார். ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாத
பரம்பொருள் அது. அது கருணையே வடிவமானது. கருணை என்றது பண்பு. அது பண்டத்தின் மூலமாகத் தான் வெளிப்படும். நம் போன்ற மானுடர்களுக்கு அருள் புரிய நம்மைப் போன்றே மானுடச் சட்டை தாங்கி அது
வரும். தாயாக வரும். தந்தையாக வரும். குருவாக வரும். தாயாக வந்து அன்பைப் பொழிவான்.
தந்தையாக வந்து அறிவை விளக்குவான். குருவாக
வந்து நல்லுணர்வைத் தந்து ஈடேற்றுவான். எனவே, மாதா, பிதா, குரு இம் மூன்றுமாக வருவதே
தெய்வம். "மாதா பிதா குரு தெய்வம்".
"தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்"
என்றார் வள்ளல் பெருமான். "அப்பன்நீ, அம்மை நீ, ஐயனும் நீ" என்றார் அப்பர்
பெருமான். குருவே சிவம் என்றார் திருமூலர்.
No comments:
Post a Comment