பாடல் 5 - நல்லாசிரியர் இயல்.




5. நல்ல ஆசிரியர் இயல்

வேதாந்த சித்தாந்த வழி தெரிந்து, ஆசார
     விவரம், விஞ்ஞான பூர்ணம்,
  வித்யா விசேடம், சற்குணம், சத்ய சம்பன்னம்,
     வீரவை ராக்யம், முக்ய

சாதார ணப்பிரியம், யோக மார்க்க ஆதிக்யம்,
     சமாதி நிஷ்டானு பவராய்ச்,
  சட்சமய நிலைமையும், பரமந்த்ர பரதந்த்ர
     தருமமும், பரச மயமும்,

நீதியின் உணர்ந்து, தத்துவ மார்க்கராய்ப், பிரம
     நிலைகண்டு, பாசம் இலராய்,
  நித்தியானந்த சைதன்யராய், ஆசை அறு
     நெறியுளோர் சற்குரவர் ஆம்.

ஆதார மாய்உயிர்க் குயிராகி யெவையுமாம்
     அமல! எமதருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     ஆதாரமாய், உயிர்க்கு உயிராகி எவையும் ஆம்
அமல --- உலகு உயிர்க்கு ஆதாரமாய் நின்று, உயிர்களுக்கு எல்லாம் உயிராக நின்று, எவ்வகைப் பொருளும் ஆகி நிற்கும் தூய மலமற்ற பரம்பொருளே!

     எமது அருமை மதவேள் அனுதினமும் மனதில்
நினைதரு --- எம் அருமை வாய்ந்த மதவேள் நாள்தோறும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     வேதாந்த சித்தாந்த வழி தெரிந்து --- வேதாந்த சித்தாந்த நெறிகளை ஆராய்ந்து அறிந்து,

     ஆசார விவரம் --- அந்த நெறிகளின்படி இருக்கவேண்டிய ஒழுக்கத் தெளிவு,

     விஞ்ஞான பூர்ணம் --- அந்த நெறிகளைப் பயின்றதால் வந்த மேலான ஞான நிறைவு,

     வித்தியா விசேடம் --- கல்விச் சிறப்பு,

     சற்குணம் --- நற்பண்புகள்,

     சத்தியம் சம்பன்னம் --- உண்மையாகிய செல்வம்,

     வீர வைராக்கியம் --- உறுதியான வீரம்,

     முக்கியம் --- தலைமைப் பண்பு,

     சாதாரணப் பிரியம் --- எல்லோரிடமும் காட்ட வேண்டிய அருள் பண்பு,

     யோகமார்க்க ஆதிக்கியம் ---- யோக நெறியிலே மேன்மை,

     சமாதி நிஷ்ட அனுபவராய் --- இவைகளோடு, சமாதி கூடுதலில் பயிற்சி உடையவராய்,

     சட்சமய நிலைமையும் --- அறுவகைச் சமயங்களின் உண்மையும்,  

     பரமதந்திர --- மேலான மந்திரம் மேலான தந்திரம் என்பவற்றின் நிலையையும்,

     பரதந்திர தருமமும் --- பிற சமய நூல்களிலை சொல்லப்பட்டுள்ள அறங்களும்,

     பரசமயமும் --- பிற மதங்களையும்,

     நீதியின் உணர்ந்து ---- நெறிப்படி அறிந்து உணர்ந்து,

     தத்துவ மார்க்கராய் ---- உண்மை நெறியில் நிற்பவராகி,

     பிரம நிலைகண்டு ---  மேலான பொருளின் நிலையை அறிந்து,

     பாசம் இலராய் --- பற்றுக்களில் இருந்து விடுபட்டவராய்,

     நித்திய ஆனந்த சைதன்யராய் - உண்மை இன்ப அறிவு உருவினராய்,

     ஆசை அறு நெறியுளோர் - பற்றற்ற நெறியில் நிற்பவரே.

     சற்குரவர் ஆம் - நல்லாசிரியர் ஆவார்.

     குறிப்பு ---  இங்கு குறிப்பிடப்பட்டது உலக நூல் கற்பிக்கும் ஆசிரியரை அல்ல. உலக நூல் அறிவு மயக்கத்தை உண்டுபண்ணும். அறிவு நூல், அறிவைத் தெளிவித்து, பற்றற்ற நிலையைத் தந்து, உயிருக்கு ஆக்கம் என்று சொல்லப்படும் வீடுபேற்றை அளிக்கும். எனவே, ஞானாசிரியரைக் குறித்து நின்றது இது.

"விலங்கொடு மக்கள் அனையர், இலங்கு நூல்
கற்றாரோடு ஏனை யவர்"

என்னும் திருக்குறள் கருத்து இங்கு வைத்து எண்ணற்பாலது.

பின் வரும் நாலடியார் பாடல் கருத்தும் பொருந்தும்....

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)
உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல
கூஉந் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்
போஒந் துணை அறிவார் இல்.               

         ஆய்ந்து அறிந்து நல்ல அறிவு நூல்களைக் கற்காது, இவ்வுலம வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், இவ்வுலகில் கலகல என்று கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்குப் பயன்படுமே அல்லாது, அந்த தூல்கள் பிறவித் துயரில் தடுமாறும் துன்பத்தில் இருந்து விடுபடுவதற்குத் துணையாக மாட்டா.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், பின் வருமாறு பாடி உள்ளதை எண்ணுக...

"....... ஒள்ளியரால்
எள் உண்ட மாயா இயல்பு உறு புன் கல்வி எல்லாம்
கள் உண்ட பித்தனைப் போல் கற்றது உண்டு........."

"....... நீள நினை
நேசிக்கும் நல்ல நெறியாம் சிவாகம நூல்
வாசிக்க என்றால் என் வாய் நோகும்......"

"........ பாசம்உளோர்
கைக் குடையவே எழுதிக் கட்டி வைத்த, இவ்வுலகப்
பொய்க் கதையே யான் படிக்கும் புத்தகங்கள்...."

     உலக நூல்களைக் கள் உண்ட பித்தனைப் போல் வெறி உணர்வோடு தொடக்க முதல் இறுதி வரை படித்து முடித்து விடலாம். என்ன தெளிந்தோம் என்றால், ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.

     ஆனால், அறிவு நூல்களை அவ்வாறு ஓதுவது இயலாது. பலமுறை பயின்று ஓதி பின்னரே தெளிவு பிறக்கும். அருமை தெரியாதவருக்கு, அதைப் படிக்க நேரமும் கிடைக்காது. ஈடுபாடு இல்லாதபோது நேரம் இல்லை என்று தானே சொல்ல முடியும்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...