அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முகிலாமெனும்
(திருச்செந்தூர்)
மாதர் மயல் எனும் சேற்றில்
உழலாமல் காத்து அருள
தனனாதன
தனனந் தாத்த
தனனாதன தனனந் தாத்த
தனனாதன தனனந் தாத்த ...... தனதான
முகிலாமெனு
மளகங் காட்டி
மதிபோலுயர் நுதலுங் காட்டி
முகிழாகிய நகையுங் காட்டி ......
அமுதூறு
மொழியாகிய
மதுரங் காட்டி
விழியாகிய கணையுங் காட்டி
முகமாகிய கமலங் காட்டி ...... மலைபோலே
வகையாமிள
முலையுங் காட்டி
யிடையாகிய கொடியுங் காட்டி
வளமானகை வளையுங் காட்டி ...... யிதமான
மணிசேர்கடி
தடமுங் காட்டி
மிகவேதொழி லதிகங் காட்டு
மடமாதர்கள் மயலின் சேற்றி ......
லுழல்வேனோ
நகையால்மத
னுருவந் தீத்த
சிவனாரருள் சுதனென் றார்க்கு
நலநேயரு ளமர்செந் தூர்க்கு ......
ளுறைவோனே
நவமாமணி
வடமும் பூத்த
தனமாதெனு மிபமின் சேர்க்கை
நழுவாவகை பிரியங் காட்டு ......
முருகோனே
அகமேவிய
நிருதன் போர்க்கு
வரவேசமர் புரியுந் தோற்ற
மறியாமலு மபயங் காட்டி ...... முறைகூறி
அயிராவத
முதுகின் தோற்றி
யடையாமென இனிதன் பேத்து
மமரேசனை முழுதுங் காத்த ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
முகில்
ஆம் எனும் அளகம் காட்டி,
மதி போல் உயர் நுதலும் காட்டி,
முகிழ் ஆகிய நகையும் காட்டி, ...... அமுதுஊறு
மொழிஆகிய
மதுரம் காட்டி,
விழி ஆகிய கணையும் காட்டி,
முகம் ஆகிய கமலம் காட்டி, ...... மலைபோலே
வகையாம்
இள முலையும் காட்டி,
இடை ஆகிய கொடியும் காட்டி,
வளமான கை வளையும் காட்டி, ...... இதமான
மணிசேர்
கடிதடமும் காட்டி,
மிகவே தொழில் அதிகம் காட்டு
மடமாதர்கள் மயலின் சேற்றில் ......உழல்வேனோ?
நகையால்
மதன் உருவம் தீத்த
சிவனார் அருள் சுதன் என்றார்க்கு
நலனே அருள் அமர் செந்தூர்க்குள் ......உறைவோனே!
நவ
மாமணி வடமும் பூத்த
தன மாது எனும் இபமின் சேர்க்கை,
நழுவா வகை பிரியம் காட்டும் ......
முருகோனே!
அகம்
மேவிய நிருதன் போர்க்கு
வரவே, சமர் புரியும் தோற்றம்
அறியாமலும் அபயங் காட்டி, ...... முறைகூறி,
அயிராவத
முதுகின் தோற்றி,
அடையாம் என இனிது அன்பு ஏத்தும்
அமரேசனை முழுதும் காத்த ......
பெருமாளே.
பதவுரை
நகையால் மதன் உருவம் தீத்த --- புன்சிரிப்பால்
மன்மதனுடைய உடம்பை எரித்து அழித்த,
சிவனார் அருள் சுதன் என்று ---
சிவபெருமானுடைய திருக்குமாரர் என்று விளங்கி,
ஆர்க்கும் நலனே அருள் --- யாவர்க்கும்
நன்மையே அருள் செய்து,
அமர் செந்தூர்க்குள் உறைவோனே ---
விரும்புகின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியிருப்பவரே!
நவ மாமணி வடமும் பூத்த --- சிறந்த
ஒன்பது மணிகளாலாகிய மாலை விளங்கும்,
தன மாது எனும் இப மின் --- தனங்களையுடைய
பெண்மணியாகிய தெய்வயானையின்,
சேர்க்கை நழுவா வகைபிரியம் காட்டு முருகோனே ---
கூட்டுறவை அகலவிடா வண்ணம் அன்பு செய்யும் முருகக் கடவுளே!
அகம் மேவிய நிருதன் --- அகங்காரங்கொண்ட
சூரபன்மன்,
போர்க்கு வர --- போருக்கு வந்தவுடன்,
சமர் புரியும் தோற்றம் அறியாமலும் ---
அவனுடன் போர் புரியும் தன்மை அறியாதபடி,
அபயம் காட்டி முறைகூறி --- அபயங்காட்டி ஆளவேண்டும்
என்று முறையிட்டு,
அயிராவத முதுகின் தோற்றி --- வெள்ளை யானை
மீது வந்து,
அடையாம் என இனிது அன்பு ஏத்தும் ---
அடைக்கலம் என்று கூறி இனிமையுடனும் அன்புடனும் துதி செய்து,
அமரேசனை முழுதும் காத்த பெருமாளே ---
தேவேந்திரனை முழுமையும் காத்தருளிய பெருமையிற் சிறந்தவரே!
முகிலாமெனும் அளகம் காட்டி --- பிறைச்
சந்திரனைப் போன்ற நெற்றியைக் காட்டி,
முகிழாகிய நகையும் காட்டி --- முல்லை அரும்பு
போன்ற பற்களைக் காட்டி,
அமுது ஊறும் மொழி ஆகிய மதுரம் காட்டி ---
அமுது ஊறுகின்ற சொல்லாகிய இனிமையைக் காட்டி,
விழி ஆகிய கணையும் காட்டி --- கண்ணாகிய
அம்பைக் காட்டி,
முகம் ஆகிய கமலம் காட்டி --- முகமாகிய
தாமரையைக் காட்டி,
மலைபோலே வகையாம் இளமுலையும் காட்டி ---
மலைப்போன்று உயர்ந்து ஒழுங்காயுள்ள இளமுலையைக் காட்டி,
இடை ஆகிய கொடியும் காட்டி --- இடையாகிய
கொடியைக் காட்டி,
வளம் ஆன கை வளையும் காட்டி --- வளப்பம்
மிகுந்த கை வளையல்களைக் காட்டி,
இதம் ஆன மணிசேர் கடிதடமும் காட்டி ---
இன்பந்தருவதான அழகிய நாபியின் கீழ்ப்பகுதியைக் காட்டி,
மிகவே தொழில் அதிகம் காட்டும் ---
மிகுதியாகத் தங்கள் சாகசத் தொழிலை அதிகம் காட்டுகின்ற,
மட மாதர்கள் மயலின் சேற்றில் உழல்வேனோ ---
விலைமாதர்களின் மயக்கமாகிய சேற்றிலே அடியேன் அலையலாமோ?
பொழிப்புரை
புன்சிரிப்பால் மன்மதனுடைய உடம்பை
எரித்த சிவபெருமானுடைய திருக்குமாரராகத் திகழ்ந்து, அனைவர்க்கும் நலத்தையே நல்கி, திருச்செந்தூரில் விரும்பி உறைகின்றவரே!
ஒன்பது மணிகளாலாகிய இரத்தின மாலையுடன்
கூடிய தனங்களை உடைய தெய்வயானை அம்மையின் சேர்க்கையை அகலவிடாது அன்பைக்
காட்டியருளும் முருகவேளே!
அகங்கார மிகுந்த சூரபன்மன் போருக்கு
வந்தவுடன் அவனுடன் போர் புரியும் திறம் அறியாது அபயம் தரவேண்டும் என்று முறையிட்டு, ஐராவத யானைமீது வந்து அடைக்கலம் என்று
இனிமையாகவும் அன்பாகவும் துதித்த இந்திரனை முழுவதும் காத்தருளிய பெருமிதம்
உடையவரே!
மேகம் போன்ற கூந்தலைக் காட்டி, பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியைக்
காட்டி, முல்லை அரும்பு போன்ற
பற்களைக் காட்டி, அமுதம் ஊறுகின்ற
மொழியாகிய இனிமையைக் காட்டி, கண்ணாகிய கணையும்
காட்டி, முகமாகிய தாமரையைக்
காட்டி, மலைப் போன்ற
ஒழுங்குடைய இளந் தனத்தைக் காட்டி,
இடையாகிய
கொடியைக் காட்டி, வளப்பமான கைவளையலைக்
காட்டி, இனிமை மிகுந்த அழகிய
கடி தடத்தைக் காட்டி, மிகுந்த தமது சாகசத்
தொழிலை அதிகமாகக் காட்டுகின்ற விலைமாதர்களுடைய மயக்கமாகிய சேற்றில் அடியேன்
அலையலாமோ?
விரிவுரை
நகையால்
மதன் உருவம் தீத்த சிவனார் ---
சிவபெருமானுடைய
மோனநிலையைக் கலைக்கும் பொருட்டு மன்மதன் மலர்க்கணை தூவினான். கண்ணுதற் கடவுள்
சிறிது புன்னகைப் புரிந்து தமது நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். உடனே
மன்மதன் சாம்பலாகி விட்டான். ஆசையை விளைவிக்கின்றவன் மன்மதன்; ஆசைக்கு அவனே மூலப்பொருள்; ஆசையாகிய மரத்தின் ஆணிவேர் அவன். அந்த
ஆசையின் மூலப் பொருளைப் பெருமான் ஞானாக்கினியால் அழித்துவிட்டான். எனவே ஞானத்
தீயால் ஆசையை யழிக்க வேண்டும் என்பது விளங்குகின்றது.
ஆர்க்கும்
நலனே யருள்
---
முருகவேள்
யாவர்க்கும் அருள்புரிகின்ற கருணாமூர்த்தி.
“யார் வேண்டினாலும்
கேட்ட பொருளீயும்
த்யாகாங்க சீலம் போற்றி” ---
(நாகாங்க) திருப்புகழ்.
வைதாரையும்
வாழவைக்கும் வரதன்.
மொய்தார்
அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன், வெய்ய வாரணம்போல்
கைதான்
இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க
எய்தான்
மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே. ---
கந்தர்அலங்காரம்.
அமரேசனை
முழுதுங் காத்த பெருமாளே ---
இந்திரன்
சூரபன்மனால் நாடிழந்து, வீடிழந்து, அரசிழந்து, ஆண்மை யிழந்து,மகனை யிழந்து பெருந் துன்பமுற்றான்.
முருகக் கடவுள், அவன் பொருட்டு,சூராதி அவுணரை அழித்து, அவனுக்குப் பொன்னுலக வாழ்வைத் தந்து
எல்லா நலன்களையும் அருளியுதவினார். ஆகவே, முழுவதும்
காத்தருளினார் என்று அடிகள் கூறினார்.
மயலின்
சேற்றில் உழல்வேனோ? ---
மாதர்
மயக்கில், அழகிய சேற்றுக்கு
நிகரானது. சேற்றில் விழுந்தவன்,
நாற்றத்தாலும்
வழுக்குதலாலும் துன்புறுவான். இந்தச் சேற்றைவிட்டு விலக அருணகிரியாருக்கு ஆண்டவன்
அருள் புரிந்தான். “பிரபஞ்ச மென்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா” என்கிறார்
சுவாமிகள் கந்தரலங்காரத்தில். மையலாகிய சேற்றைக் கடக்க முருகன் திருவடி ஊன்று
கோலாகும். அத் திருவடித் துணையால் மாதர் மயலை யகற்றி முத்திக்கரை சேரலாம்.
கருத்துரை
திருச்செந்தூரில் மேவு குமாரக் கடவுளே!
இந்திரனை யாண்ட இறைவரே! மாதர் மயலில் விழாவண்ணம் காத்தருள்வீர்.
No comments:
Post a Comment