அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முந்துதமிழ் மாலை
(திருச்செந்தூர்)
மயில் மீது வந்து
ஆட்கொள்ள
தந்ததன
தான தானத் தான
தந்ததன தான தானத் தான
தந்ததன தான தானத் தான ...... தனதானா
முந்துதமிழ்
மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ......
யுழலாதே
முந்தைவினை
யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு ......
முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு ......
நடமாடுஞ்
செஞ்சிறிய
கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போது
...... வருவாயே
அந்தண்மறை
வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார ......
எழிலான
சிந்துரமின்
மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார ......
எதிரான
செஞ்சமரை
மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தினகர் வாழு மாண்மைக் கார ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
முந்துதமிழ்
மாலை கோடிக் கோடி,
சந்தமொடு நீடு பாடிப் பாடி,
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... உழலாதே,
முந்தை
வினையே வராமல் போக,
மங்கையர்கள் காதல் தூரத்து ஏக,
முந்து அடிமையேனை ஆளத்தானும், ...... முனைமீதே,
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத்தோடு ...... நடம்ஆடும்
செஞ்சிறிய
கால் விசாலத் தோகை
துங்க அநுகூல பார்வைத் தீர,
செம்பொன்மயில் மீதிலே எப்போது ......
வருவாயே?
அந்தண்மறை
வேள்வி காவல் கார!
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார!
அண்டர் உபகார சேவல் கார! ......
முடிமேலே
அஞ்சலி
செய்வோர்கள் நேயக் கார!
குன்று உருவ ஏவும் வேலைக் கார!
அந்தம் வெகுவான ரூபக் கார! ......
எழிலான
சிந்துரமின்
மேவு போகக் கார!
விந்தை குறமாது வேளைக் கார!
செஞ்சொல் அடியார்கள் வாரக் கார!
...... எதிரான
செஞ்சமரை
மாயும் மாயக் கார!
துங்க ரண சூர சூறைக் கார!
செந்திநகர் வாழும் ஆண்மைக் கார! ......
பெருமாளே!
பதவுரை
அந்தண் --- அழகிய குளிர்ந்த சிந்தையுடையவர்களால்,
மறை வேள்வி --- வேத விதிப்படிச் செய்யும் யாகங்களுக்கு,
காவல் கார --- இடையூறு நேராவண்ணம் காவல்புரியும்
காவல்காரரே!
செந்தமிழ் --- செவ்வையான தமிழ்மொழியாகிய,
சொல் பாவின் --- புகழ்ப் பாக்களாலாகிய பிரபந்தங்களை,
மாலைக்கார --- மாலையாகத் தரித்துக் கொள்பவரே!
அண்டர் உபகார --- தேவர்களுக்கு (சூரபன்மனால்
ஏற்பட்ட சிறையை நீக்கி) உபகரித்தவரே!
சேவல் கார --- சேவற்கொடியைத் திருக்கரத்தில் தாங்கியவரே!
முடிமேல் அஞ்சலி செய்வோர்கள் --- சென்னியின் மேல்
கரங்களைக் குவித்து வணங்குகின்ற அடியார்களுக்கு,
நேயக்கார --- சிநேகராக விளங்குபவரே!
குன்று உருவ ஏவும் --- கிரௌஞ்ச மலையை ஊடுருவிச்
சென்று பிளக்குமாறு செலுத்திய,
வேலைக்கார --- ஞானசக்தியாகிய வேலாயுதத்தை உடையவரே!
அந்தம் வெகுவான --- மிகுந்த அழகுடைய,
ரூபக்கார --- திருமேனியைக் கொண்டவரே!
எழில் ஆன --- அழகு மிகுந்த,
சிந்தூர மின் மேவு --- தேவயானையின் மகளாகிய தேவகுஞ்சரியம்மையார்
விரும்புகின்ற,
போகக்கார --- சிவபோகத்தை உடையவரே!
விந்தை குற மாது --- அற்புதம் அடையத்தக்க அரிய
குணங்களையுடைய குறமகளாகிய வள்ளிநாயகியாருடன்,
வேளைக்கார --- பொழுதைப் போக்குபவரே!
செஞ்சொல் --- செவ்வையான சொற்களையுடைய,
அடியார்கள் --- அடியவர்களிடத்து,
வாரக்கார --- அன்புடையவரே!
எதிர் ஆன --- போர்க்களத்தில் எதிர்த்து வந்த,
செஞ் சமரை --- உதிரப் பெருக்கத்தால் சிவந்த அசுரர்களின்
யுத்தத்தை,
மாயும் மாயக்கார --- இமைப் பொழுதில் மாயக்காரன்போல்
மாய்த்தவரே!
துங்க ரண சூர --- பரிசுத்தமான போர்வீரனாகிய சூரபன்மனை,
சூறைக்கார --- சண்டமாருதம் போல் அழித்தவரே!
செந்தில் நகர் வாழும் --- திருச்செந்தூர் என்னும்
திருத்தலத்தில் வசிக்கின்ற,
ஆண்மைக்கார --- ஆண்மை (திடம்)யை உடையவரே!
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
முந்து தமிழ் மாலை --- பழமையான தமிழ் மொழியால்,
கோடி கோடி --- கோடிக்கணக்கான கவிகளை,
சந்தமொடு --- சந்தத்தோடு,
நீடு பாடி பாடி --- நீளமாகப் பாடிப்பாடி,
முஞ்சர் --- இறந்து போகின்ற கீழ்மக்களுடைய,
மனை வாசல் தேடி தேடி --- வீட்டு வாசலைத் தேடித்தேடி,
உழலாது --- (ஏ-அசை) பொருள் விருப்பத்தால் உழன்று
அலையாவண்ணமும்,
முந்தை வினை --- (ஏ-பிரிநிலை) பிறவிகள் தோறும்
புரிந்து பக்குவத்திற்கு வராத சஞ்சித வினைகள்,
வராமல் போக --- அடியேனைத் தொடர்ந்து வந்து துன்புறுத்தாமல்
விலகிப் போகவும்,
மங்கையர்கள் காதல் --- பெண்கள் மீதுள்ள ஆசையானது,
தூரத்து ஏக --- அடியேனைவிட்டு மிகுந்த தூரத்தில்
ஓடிப்போகவும்,
முந்து அடிமையேனை --- வழிவழி அடிமைப்பட்ட பழமையான
தொண்டனாகிய அடியேனை,
ஆள (தான் உம் அசைகள் ) --- ஆட்கொள்வதற்காக,
முனை மீது (ஏ- அசை) --- போர்க்களத்தினிடம்,
திந்திதிமி தோதி........செஞ்செ ணகு சேகு தாளத்தோடு
--- என்ற தாள வரிசையுடன்,
நடமாடும் --- நடனம் செய்கின்றதும்,
செம் சிறிய கால் --- செவ்வையான சிறிய கால்களை
உடையதும்,
விசால தோகை --- விசாலமான தோகையை உடையதும்,
துங்க
அநுகூல பார்வை --- விக்கினமில்லாமையை உண்டு பண்ணுகின்ற பரிசுத்தமான அருட்பார்வையையுடையதும்,
தீர --- தைரியமுடையதும்,
செம்பொன் --- சிவந்த பொன்னைப் போல் ஒளி செய்வதுமாகிய,
மயில் மீதில் (ஏ-அசை) --- மயில் வாகனத்தின்மீது
ஊர்ந்து,
எப்போது வருவாய் (ஏ-அசை) --- எந்தச் சமயத்தில்
வந்தருள்வீர்?
பொழிப்புரை
அந்தணர்கள் வேதவிதிப்படி புரியும்
வேள்விகளுக்கு இன்னல் நேராவண்ணம் காவல் புரிபவரே!
செந்தமிழாலாகிய புகழ்ப் பாவினங்களை
மாலையாகத் தரித்துக் கொள்பவரே!
தேவர்களுக்கு அசுரரால் ஏற்பட்ட சிறைத்
துன்பத்தை நீக்கி உதவி செய்தவரே!
சேவற்கொடியைத் திருக்கரத்தில் ஏந்தியவரே!
சென்னி மேல் கரங்களைக் கூப்பி நின்று
அன்புடன் வந்தனம் செய்வோர்களது சிநேகிதரே!
(தாரகனுக்குத் துணைசெய்து மாயைக்கு இருப்பிடமாயிருந்த)
கிரௌஞ் சமலையை ஊடுருவிச் சென்று பிளந்து அழிக்குமாறு செலுத்திய வேற்படையை உடையவரே!
சிறந்த எழிலுடைய இன்ப வடிவினரே!
அழகு மிகுந்த தேவயானையம்மையார்
விரும்புகின்ற சிவபோகத்தை உடையவரே!
அதிசயம் உறத் தக்க அருள் குணங்களையுடைய
குறவர் குலக்கொழுந்தாகிய வள்ளி நாயகியாருடன் பொழுது போக்குபவரே!
செவ்வையான சொற்களையுடைய
அடியார்களிடத்தில் அன்புடையவரே!
எதிர்த்து வந்த உதிரத்தால் சிவந்த
அசுரர்களை ஒருகணப் பொழுதிற்குள் மாயக்காரன் போல் மாய்த்தவரே!
பரிசுத்தமான போர் சூரபன்மனை சுழல்
மாதரும் போல் அழித்தவரே!
திருச்செந்திலம்பதியில் வாழ்கின்ற ஆண்மையை
உடையவரே! பெருமையிற் சிறந்தவரே!
பழமையான தமிழ் மொழியால் கவிமாலைகளைச்
சந்தத்தோடு நீளமாகக் கோடிகோடியாக எந்நேரமும் பாடிக்கொண்டு, அழிந்து போகின்ற மனிதர்களின் வீட்டு
வாசல்தோறும் அவர்களைத் தேடிக்கொண்டு உழன்று, அவமே அலையா வண்ணமும், பிறவிகள் தோறும் புரிந்த பழைய
வினைகளாகிய சஞ்சிதவினை என்னை வந்து தொடராமல் விலகிப் போகவும், பெண்கள் மீதுள்ள ஆசைப் பெருக்கமானது
அடியேனை விட்டு நெடுந்தூரத்துக்கு ஓடிப்போகவும், வழிவழியாக அடிமைப்பட்ட பழைய தொண்டனாகிய
அடியேனை ஆட்கொள்ளுமாறு, போர்க்களத்தில்
திந்தி திமிதோதி தீதித்தீதி தந்ததன தான தானத் தான செஞ் செணகு சேகு என்ற தாள
வரிசைகளுடன் நடனமிடுவதும், செவ்வையான சிறிய
பாதமும் விசாலமான தோகையும், அநுகூலத்தைச்
செய்யும் தூய்மையான பார்வையும் தைரியமும் உடையதும், செம்பொன் போன்ற பிரகாசத்தையுடையதுமாகிய
மயில் வாகனத்தின் மீது எக்காலத்தில் வந்து திருவருள் புரிவீர்.
விரிவுரை
முந்து
தமிழ் ---
வடமொழிக்கும்
தென்மொழிக்கும் ஆசிரியர் சிவபெருமானே ஆவர். வடமொழியை பாணினிக்கும், தென்மொழியை அகத்தியர்க்கும் சிவபெருமான்
உபதேசித்தனர். சிவபெருமான் இந்த இரு
மொழிகளின் வடிவமாக விளங்குகின்றார்.
வானவன்
காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்
காண்
ஆனைந்தும் ஆடினான் காண்
ஐயன் காண் கையில் அனல் ஏந்தியாடும்
கானவன்
காண் கானவனுக்கு அருள் செய்தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும்
தேனவன்
காண் சென்று அடையாச் செல்வன் தான்காண்’
சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே. ---
அப்பர் தேவாரம்.
தென்றமிழும்
வடகலையும் தேசிகமும் பேசுவன
மன்றின் இடை
நடம்புரியும் வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய்
உணர்வோடும் உள்ளுருகிப் பாடுவார்,
பன்றியுடன்
புள்காணாப் பரமனையே பாடுவார். ---
பெரியபுராணம்.
செந்தமிழ்
மொழி பல்லாயிரம் ஆண்டுகளாக இளமையாகவே செழித்து ஓங்கி உள்ளது! முச்சங்கத்திலும்
நின்று நிலவியது. சிவபெருமான் மதுரையில் புலவர் குழாங்களில் தாமும் ஒருவராக
இருந்து ஆராய்ந்த தனிச் சிறப்புடையது. நேற்று தோன்றி இன்று மறையும் ஏனைய மொழிகள்
போல் அல்லாது எக்காலத்தும் எழில் குன்றாமல் இனிமை பயப்பது இத்தமிழ் மொழியே ஆகும்.
சிவபெருமானே இதற்கு ஆசிரியராதலால் தொன்மை உடையது. எல்லா மொழிகளுக்கும் முதன்மை உடையது
எனினும் அமையும்.
முஞ்சர்
மனை வாசல் தேடித் தேடி உழலாதே ---
இத்தகைய
அரிய தமிழைப் பயின்று அம்மொழிக்குத் தலைவனாகிய இறைவனைப் பாடி அதன் பயனைப் பெறாது
பொருள் விருப்பதால் இன்றிருந்து நாளை இறக்கும் மனிதர்கள் வீடு தோறும் சென்று
கொடாதவனைப் பாரி காரி என்றும், குணமில்லாத கீழ்மகனைத்
தருமபுத்திரனுக்கு நிகரானவன் என்றும், சிறிதும்
வலி அற்றவனை விஜயனென்றும், வறிதே புகழ்ந்து வாழ்
நாளையும் கல்வி அறிவையும் கமரில் கவிழ்த்த காமதேனுவின் பாலாக வீணாக்குகின்றனர்.
மிடுக்கிலாதானை
வீமனே விறல் விசயனே
வில்லுக்கு இவன் என்று,
கொடுக்கிலா
தானைப் பாரியே என்று
கூறினும்
கொடுப்பார் இலை,
பொடிக்கொள்
மேனி எம் புண்ணியன் எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்,
அடுக்குமேல்
அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே. --- சுந்திரமூர்த்தி சுவாமிகள்.
வஞ்சக
லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது பலபாவின்
வண்புகழ்
பாரிகாரி என்றிசை வாது கூறி
வந்தியர்போல வீணி லழியாதே”
---
திருப்புகழ்.
முந்தை
வினை ---
பிறவிகள்
தோறும் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் புரிந்த வினைகளானது மலைபோற் குவிந்து
அனுபவித்தற்குரிய பக்குவப்படாது குவிந்து உள்ளன. அவைகட்கு சஞ்சிதம் எனப் பெயர்.
அவற்றை இறைவன் திருவருளாலேயே ஒழித்தல் வேண்டும். அந்த வினைகள் அழிந்து போகும்
வண்ணம் குமாரநாயகனை விரும்பி அழைக்கின்றார். வேலாயுதத்தைடைய வீரன் அப்பெருமானே
யாவர். வினைகளை அழிக்கவல்லது வேற்படை ஒன்றே ஆகும். வினைகள் அழிய வேண்டுமாயின்
வேற்படையைத் தாங்கிய விமலனை வழிபட வேண்டும். வினைகளை அழிக்க வல்லது வேற்படை என்பதை
அடியில் வரும் வாக்குகள் வலியுறுத்துமாறு காண்க.
“நீசர்கள் தமோடு எனது தீவினைஎலாம் மடிய
நீடுதனி வேல்விடு மடங்கல் வேலா” --- (ஆறுமுகம்) திருப்புகழ்.
“வினை ஓட விடும் கதிர்வேல்” --- கந்தரநுபூதி.
மங்கையர்கள்
காதல் தூரத்தேக ---
பொன்னாசையும்
மண்ணாசையும் மனிதப் பிறவிக்கே உள்ளன. பெண்ணாசை ஒன்றே எல்லாப் பிறவிகளுக்கும்
உண்டு. எனவே, பிறவிகள் தோறும்
தொடர்ந்து வருவதாகிய பெண்ணாசையை இறைவன் திருவருளால் அன்றி ஒழிக்க முடியாது. இதுவேயும்
அன்றி அவ்வாசை மிகவும் வலியுடையதாதலால் சிறிது அருகிலிருந்தாலும் உயிரை வந்து
பற்றி மயக்கத்தைச் செய்யும். ஆதலால் இம்மாதராசை மிகமிகத் தூரத்திலே அகல வேண்டும்.
கள்ளானது
குடித்தால் அன்றி மயக்கத்தை உண்டு பண்ணாது. காமமோ கண்டாலும் நினைத்தாலும் மயக்கத்தை
உண்டு பண்ணும். ஆதலால் இப்பெண்ணாசையைப் போல் மயக்கத்தைத் தரும் வலியுடைய பொருள்
வேறொன்றும் இல்லை.
உள்ளக்
களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல்
காமத்திற்கு உண்டு. --- திருக்குறள்.
தீயைக்
காட்டிலும் காமத் தீ கொடியது: தீயில் விழுந்தாலும் உய்வு பெறலாம்; காமத் தீயில் விழுந்தார்க்கு உய்வு
இல்லை; தீயானது உடம்பை
மட்டும் சுடும். காமத்தீ உடம்பையும் உயிரையும் உள்ளத்தையும் சுடும். அன்றியும்
அணுக முடியாத வெப்பமுடைய அக்கினி வந்து சூழ்ந்துகொண்டால் நீருள் மூழ்கி
அத்தீயினாலுண்டாகும் துன்பத்தை நீக்கிக்கொள்ளலாம். காமத் தீயானது நீருள்
மூழ்கினாலும் சுடும். மலைமேல் ஏறி ஒளிந்து கொண்டாலும் சுடும்.
ஊருள்
எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள்
குளித்தும் உயல் ஆகும் - நீருள்
குளிப்பினும்
காமம் சுடுமே, குன்று ஏறி
ஒளிப்பினும்
காமஞ் சுடும். --- நாலடியார்.
தொடில்சுடின்
அல்லது காமநோய் போல
விடில்சுடல்
ஆற்றுமோ தீ, --- திருக்குறள்.
தீயானது
தொட்டால் தான் சுடும்; காமத் தீயானது
நினைத்தாலும் சுடும்; கேட்டாலும் சுடும்; இது வேண்டாமென்று தள்ளினாலும் ஒடிவந்து
சுடும்; இதுவேயும் அன்றி
நஞ்சு அதனை அருந்தினால் தான் கொல்லும். இக்காமமாகிய விஷம் பார்த்தாலும் நினைத்தாலும்
கொல்லும் தகையது. ஆதலால் காமமானது விஷத்தைக் காட்டிலும், கள்ளைக் காட்டிலும், தீயைக் காட்டிலும் ஏனைய கொல்லும்
பொருள்களைக் காட்டிலும் மிகவும் கொடியது.
உள்ளினும்
சுட்டிடும் உணரும் கேள்வியில்
கொள்ளினும்
சுட்டிடுமு, குறுகி மற்று அதைத்
தள்ளினும்
சுட்டிடும் தன்மை ஈதினால்
கள்ளினும்
கொடியது காமத் தீ அதே.
நெஞ்சினும்
நினைப்பரோ, நினைந்து உளார் தமை
எஞ்சிய
துயரிடை ஈண்டை உய்த்துமேல்,
விஞ்சிய
பவக்கடல் வீழ்த்தும், ஆதலால்
நஞ்சினும்
தீயது நலமில் காமமே.
--- கந்தபுராணம்
காமமே
குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம்,
காமமே
தரித்திரங்கள் அனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம்,
காமமே
பரகதிக்குச் செல்லாமல் வழி அடைக்கும் கபாடம்,
காமமே
அனைவரையும் பகையாக்கிக் கழுத்து அரியும் கத்திதானே.
--- விவேக
சிந்தாமணி.
முந்தடிமை
யேனை
---
அருணகிரிநாத
சுவாமிகள் வழிவழியாக முருகனிடத்தில் அடிமைத்திறம் பூண்டவர். இதனை அடியில் வரும்
திருப்புகழ் வாக்குகள் வலியுறுத்துமாறு காண்க.
“பழைய நினது
வழியடிமையும் விளங்கும் படிக்கினி துணர்த்தி
யருள்வாயே”
--- (அகரமுதலென) திருப்புகழ்.
“விராலி மலையில்
விளங்கிய கந்த என்றுனை
மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை
வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் பெருமாளே”
--- (கரதலமு) திருப்புகழ்.
“தஞ்ச மாகியெ வழிவழி
யருள்பெறும்
அன்பினா லுன தடிபுக ழடிமை” --- (பஞ்சபாதக) திருப்புகழ்.
திந்தி
திமிதோதி.......நடமாடும் ---
மயிலினது
நடனத்தின் சிறப்பை வர்ணிக்கின்றனர். குமாரக் கடவுள் ஊர்ந்துவரும் பசும்பொன் மயில், சக்ரவாளகிரி கிழிபடவும், கிரௌஞ்சசைலம் பிளக்கவும், மகாமேருகிரியும் அஷ்டகுலாசங்களும்
உலகங்களும் குலுங்கவும், ஆதிசேடனது ஆயிரம் பணா
மகுடங்களும் அதிரவும், சூரபன்மன் முதலிய
அவுணர்கள் திடுக்கிட்டு நடுநடுங்கவும், நடிக்கின்ற
திறத்தை அருணகிரியாரேயன்றி மற்று யாரே புகழவல்லார்.
“சக்ரப்ரசண்டகிரி
முட்டக்கிழிந்துவெளி
பட்டுக்ரவுஞ்ச சயிலந்
தகரப்
பெருங்கனக சிகரச் சிலம்புமெழு
தனிவெற்பு மம்புவியுமெண்
டிக்குத்
தடங்குவடு மொக்கக் குலுங்கவரு
சித்ரப்பதம் பெயரவே
சேடன்முடி
திண்டாட ஆடல்புரிவெஞ்சூரர்
திடிக்கிட நடிக்கு மயிலாம்” --- மயில்விருத்தம்.
அந்தண்மறை
வேள்வி காவற்கார ---
அந்தண்
என்பதை யாகத்திற்கு அடைமொழியாகக் கொண்டு அழகியதும் குளிர்ந்ததுமாகிய யாகமென்பாரும்
உளர்.
வேதவிதிப்படி
அந்தணர்களால் நியமத்துடன் புரியப்படும் யாகத்திற்கு முருகப்பெருமான் காவல்காரராக
இருந்து இடையூறுகளை நீக்கி இன்பத்தை நல்குகின்றனர்.
யாக ரக்ஷக வரலாறு
காசிப
முனிவர்க்கு அதிதி என்னும் பத்தினியிடம் தோன்றியவர்கள் ஆதித்யர் என்னும் தேவர்கள்.
திதி என்னும் பத்தினியிடம் தோன்றியவர்கள் தைத்தியர்கள். திதி மைந்தர்களாகிய
அசுரர்களுக்கும் சுரர்களுக்கும் போர்த் தொடங்கி இருதிறத்திலும் பலர் மடிந்தனர்.
தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி திருமால் பாற்கடல் கடைந்து அமிர்தத்தை
தேவர்களுக்கீந்து, அசுர குலத்தை அடியோடு
அழித்தனர். அஃதறிந்த திதி என்பாள் மிகவும் மனம் வருந்தி, காசிபரிடம் வந்து தன் குலநாசத்தைக் கூறி, “நாயக! என் சந்ததி வளருமாறு ஒரு
புதல்வனைத் தந்தருள்வீர்” என்று முறையிட்டனள். காசிப முனிவர் “அன்புள்ளவளே!
அஞ்சற்க, நின் அவாவின்படி
குலவிருத்தி செய்ய ஒரு புதல்வனைத் தருகின்றோம்” என்று அருளுரை கூறி, குமாரக்கடவுள் வீற்றிருந்தருள்கின்ற
திருத்தலங்கள் அறுபத்து நான்கனுள் ஒன்றாய புத்திரகாமம் என்னும் புனிதக்ஷேத்திரத்தை
அடைந்து, ஆங்கோர் தூய இடத்தில்
சால்யோத்தாரணம், தரைசுத்தி
முதலியவைகளுஞ் செய்து யாகசாலை வகுக்கத் தொடங்கினார். மனு சூத்திரம், இரவி சூத்திரம், முனிசூத்திரம், மானவ சூத்திரம், திரபாக மண்டபம் என்னும் ஐவகைப்படும்
யாகசாலைகளுக்குள் தங் கருமத்துக்குரிய யாகசாலை மானவ சூத்திரமாதலின் அதனை வகுத்து, வேதிகை, ஊர்த்வபட்டி, அதோபட்டி, துவாரம், குண்டலங்கள் இவை கற்பித்து வேதியின்
நடுவிலே பிரமபதமெனவும், நாற்புறத்திலும்
தெய்வ பதம், மானுடபதம், பைசாசபதம், இராக்கதபதம், என்னும் பதங்களும், அவைகளில் ஊர்த்துவமேகலை, அதோமேகலை, மத்தியமேகலை, முதலியவைகளும் கற்பித்துக்குண்டயோனி
முதலியவைகளும் வகுத்தார். மேலும் யாகசாலைக் குரியனவெல்லாம் செய்து, மறை முறைப்படி சிவாகம மந்திரங்களைக்
கூறிச் செய்வாராயினார்.
அந்த
யாகம் முற்றுமேல் திதியென்பாள் வயிற்றில் கருப்பம் உண்டாகும்; அங்ஙனம் உண்டாயின் நமக்கும் நம்
குலத்தார்க்கும் அழிவு நேரிடும் என்று தேவர் கோமானும் திருமாலும் இடையூறுகளை
இயற்றத் தொடங்கினர்.
காசிபர்
அஃது உணர்ந்து வேள்விப் பதியாகிய வேல்கரத்து அண்ணலை வேண்டுவாராயினர்.
யாவன் அங்கி
வடிவு ஆனோன், யாவன் அயத்தை ஊர்ந்திடுவான்,
யாவன் அங்கி பூ என மா மறைகள் இயம்பு மகபலத்தை
யாவன்
கொடுக்கும் பொறியாகத் தோன்றும் எழிலோன், முக்கண்ணன்
யாவன் அவன்றன்
பதமலர்க்கு இங்கு அடியேன் சரணம் புகநின்றேன்.
“யாவன் அக்கினி
வடிவாயிருப்போன். எவன் மேடவாகனத்தை யூர்வோன், அம்மூர்த்தி அடியேனையும், யாகத்தையும் காத்தருள்க. “சிவாக்கினிபூ”
என்று வேதங்கள் முழங்கும் பொருளாயிருப்பவன் எவன்? யாக பல ப்ரதானமூர்த்தி யாவன்? ஊர்த்வரேசனும் அறு திசைகளையும்
காப்பவனும் யாவன்? குமாரன் திரியம்பகன்
யாவன்? அக்கடவுள்
அடியேனையும் யாகத்தையும் காத்தருளும்படி அடைக்கலம் புகநின்றேன். யாகத்திலே
“சுப்ரமண்யோம்! சுப்ரமண்யோம்! சுப்ரமண்யோம்! என்று மும்முறை வேதங்களால்
அழைக்கப்பெறும் ஆறுமுகப் பரம்பொருளுக்கு அடைக்கலம்” என்று துதித்தார்.
இவ்வொலி
கேட்டதும் சேய் குரல் கேட்ட தாய்போல் தண்ணருள் சுரந்து தனிவேல் பரமன் பாலவடிவத்துடன்
வேலாயுதமும் பல்லவமும் தரித்த திருக்கரத்தினராய்த் தோன்றி “அருந்தவத்தோய்! அஞ்சற்க, யாம் காத்தருள் புரிகின்றோம்; யாகத்தை முடிக்குதி” என்றருளினார்.
காசிப முனிவர் கந்த சகத்திரநாமத்தால் அர்ச்சித்துச் சோடசரூப தியானஞ்செய்து யாகம்
புரிவாராயினார்.
தேவர்கள்
புரியும் அபிசார வேள்வியினின்றுந் தோன்றி மலையன், மாரன் என்னும் அசுரர் இருவர் அனுப்பப்பட்டனர்.
அவ்வசுரர்கள் முனிவரையும் யாகப் பொருள்களையும் விழுங்கவேண்டும் என்று ஆரவாரித்து
நெருங்கினார்கள், காசிபர் பயந்து.
“ஞானசத்திதரா! பாலரூபா! பரஞ்சுடரே! ஓலம் ஓலம்” என்று துதித்தனர். அதுகேட்ட
என்றுமகலாத இளமைக்கார எந்தையார் தம் கரத்திருந்த பல்லவத்தால் அவ்வசுரர் இருவரையும்
கொன்று யாகத்தை நிறைவேற்றி, ஆங்கு முருகவேளைப்
பிரதிட்டை செய்தனர், அதுவே புத்திரப்
பேற்றை யளித்ததால் புத்திரகாமம் என்னும் பெயர் பெற்றது.
வரனயன்
சுதன்றன் மனையருட் டிதிதன்
வமிசத்தை யழித்த மாயவனை
எரிசதக்
கிருதை யழிசுதற் றருகென்
றிரக்கவோர்வேள்வியை யியற்ற
வரியிருவருஞ்
செயல்லலவை தீர
வந்தடர் மாரனார் மலையார்
பரிவற
வழித்துத் காத்தனன் வேள்விப்
பதிபுதர காமநற் றலேம.
இன்னணம்
எம்பெருமான் அந்தணர்கள் மறைமுறை வழாது புரியும் யாகங்களைக் காத்தருள் புரிவதை
நக்கீர தேவரும் கூறுமாறு காண்க.
“மந்திர விதியின்
மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒருமுகம்” --- திருமுருகாற்றுப்படை
செந்தமிழ்
சொல்பாவின் மாலைக்கார ---
செந்தமிழ்ப்
பரமாசிரியனாம் செவ்வேட்பரமன் அடியார்களால் சூட்டப்படும் செந்தமிழ்ப் பாமாலைகளை
அன்புடன் தரித்துக் கொள்ளுகிறார்.
“விரித்து அருண
கிரிநாதன் உரைத்த தமிழ் எனுமாலை
மிகுந்தபல முடன் ஓத மகிழ்வோனே” --- (வரிக்கலை) திருப்புகழ்.
அண்டர்
உபகார
---
அண்டர்-தேவர்.
உபகாரன்- உபகரித்தவன். சூரபன்மனால் சிறைபட்டு
108 யுகங்களாக மிகவும்
வருந்தி இனி உய்வு பெறுவோமோ என்று ஏங்கி இருந்த தேவர்களுடைய சிறையை மீட்டு, பொன்னாடு தந்து இன்ப வாழ்வில் இருக்க
வைத்தவர் நம் குமாரமூர்த்தியே யாதலால் தேவசகாயனானார்.
சேவற்கார ---
பக்தர்கள்
இடையூறுற்று முறையிட்ட காலத்தில் முருகப் பெருமான் தான்வரும் குறிப்பை முன்னரே
ஒலியால் புலப்படுத்தும் சேவற்கொடியைக் கரத்தில் தாங்கிக்கொண்டு வருவார். இதனை நம்
அருணகிரியார் பிறிதோரிடத்தில் “முருகா! நான் கந்தா என்று அழைக்கும் போது தாங்கள்
சிவந்த சேவற் கொடியைக் கரத்திலேந்திய வண்ணம் வரவேணும்” என்று கூறுவதை உற்றுநோக்கி
உள்ளம் மகிழ்க.
“சென்றே இடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு வரவேணும்” --- (அன்பாக) திருப்புகழ்.
சிறைபட்டிருந்த
இந்திர குமாரனாகிய சயந்தனுடைய கனவில் அறுமுகனார் அருள்புரிந்த போது கோழிக்கொடியுடன்
சென்றார்.
“ஆரணம் பயில் ஞான புங்கவ
சேவலங் கொடி யான பைங்கர
ஆவினன்குடி வாழ்வுகொண்டருள் பெருமாளே.” --- (மூலமந்திர) திருப்புகழ்.
முடிமேலே
அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார ---
இறைவனை
வழிபாடு செய்யுங்கால் கரங்களை சிரங்களுக்கு மேல் பன்னிரண்டங்குலம் உயரக் கூப்பி
வணங்க வேண்டும். அங்ஙனம் அன்புடன் அஞ்சலியஸ்தராக நின்று வழிபாடு செய்வோர்களுக்கு
தேவர்களும் காண ஒண்ணாத தேவ தேவனால் திருமுருகேசன் நேயக்காரனாக எளிதில் இரங்கி
இன்னருள் புரிகிறான்.
சிந்துரமின்
மேவு போகக்கார
---
உயிர்களுக்கு
இன்பத்தை நல்குவதற்காக இறைவன் கிரியா சக்தியாகிய தேவகுஞ்சரியுடன் போக மூர்த்தியாக
விளங்குகின்றனன்.
செஞ்சொலடியார்கள்
வாரக்கார
---
இனிய
சொற்களையுடைய அடியார்களுக்கு அன்புடையவராக ஆண்டவன் விளங்குகின்றனர்.
“அடிபோற்றி அல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல பெருமாளே.” --- (குடிவாழ்க்கை) திருப்புகழ்.
துங்க
ரணசூர சூறைக்கார ---
“துரித மிடு நிருதர்புர சூறைக்காரப்
பெருமாளே.” --- (ஒருபொழுது) திருப்புகழ்.
ஆண்மைக்கார :-
“ஆரிய, பரம ஞானமும் அழகும்
ஆண்மையும் உடைய பெருமாளே.” --- (தோரண) திருப்புகழ்.
கருத்துரை
யாகரக்ஷகரே! தமிழ் மாலையை யணிபவரே!
தேவசகாயரே! சேவற் கொடி யுடையவரே! வணக்கம் புரிவாரது நேயரே! குன்றெறிந்த
குமாரமூர்த்தியே! வள்ளி தேவசேனா சமேதரே! அடியார்க்கு அன்பரே! அசுரகுலகாலரே!
செந்திலதிபரே! தமிழ்ப்பாக்களைப் பாடி அழிகின்ற மனிதர்கள் வாசல் தோறும் அலையாமலும், பண்டை வினை நீங்கவும், பெண்ணாசை அறவும், செம்பொன் மயில்மீது வந்தருள்வீர்.
No comments:
Post a Comment