அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முலை முகம்
(திருச்செந்தூர்)
விலைமாதர் உறவு அற, முருகன் அருள் உற
தனன
தந்த தந்த தனன தந்த தந்த
தனன தந்த தந்த ...... தனதான
முலைமு
கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு
முறுவ லுஞ்சி வந்த ...... கனிவாயும்
முருக
விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த
முகிலு மின்ப சிங்கி ...... விழிவேலும்
சிலைமு
கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த
திருமு கந்த தும்பு ...... குறுவேர்வும்
தெரிய
வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று
செயல ழிந்து ழன்று ...... திரிவேனோ
மலைமு
கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழிதி றந்த செங்கை ...... வடிவேலா
வளர்பு
னம்ப யின்ற குறம டந்தை கொங்கை
மணிவ டம்பு தைந்த ...... புயவேளே
அலைமு
கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க
மலறி வந்து கஞ்ச ...... மலர்மீதே
அளிக
லந்தி ரங்க இசையு டன்து யின்ற
அரிய செந்தில் வந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
முலை
முகம் திமிர்ந்த கலவையும், துலங்கு
முறுவலும், சிவந்த ...... கனிவாயும்,
முருகு
அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த
முகிலும், இன்ப சிங்கி ...... விழிவேலும்,
சிலை
முகம் கலந்த திலதமும், குளிர்ந்த
திருமுகம் ததும்பு ...... குறுவேர்வும்,
தெரிய
வந்து நின்ற மகளிர் பின் சுழன்று,
செயல் அழிந்து உழன்று ...... திரிவேனோ?
மலை
முகம் சுமந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழி திறந்த செங்கை ...... வடிவேலா!
வளர்
புனம் பயின்ற குற மடந்தை கொங்கை
மணி வடம் புதைந்த ...... புயவேளே!
அலை
முகம் தவழ்ந்து, சினை முதிர்ந்த சங்கம்
அலறி வந்து, கஞ்ச ...... மலர்மீதே
அளி
கலந்து இரங்க, இசையுடன் துயின்ற
அரிய செந்தில் வந்த ...... பெருமாளே.
பதவுரை
மலைமுகம் சுமந்த புலவர் --- மலையின்
கண்ணுள்ள குகையில் அடை பட்ட புலவராகிய நக்கீரரது,
செம்சொல் கொண்டு --- செவ்விய சொல்லாகிய
திருமுருகாற்றுப்படையை ஏற்றுக்கொண்டு,
வழி திறந்த --- மலையைப் பிளந்து வழித்
திறந்துவிட்ட,
செங்கை வடிவேலா --- சிவந்த திருக்கரத்தில்
கூரிய வேலை உடையவரே!
வளர் புனம் பயின்ற --- வளர்கின்ற
தினைப்புனத்தில் காவல் புரிந்திருந்த,
குற மடந்தை --- குறவர் குலமகளாகிய
வள்ளியம்மையின்,
கொங்கை மணி வடம் புதைந்த --- தனபாரங்களில்
உள்ள இரத்தின மணிமாலை அழுந்திய,
புய வேளே --- திருப்புயங்களையுடைய
குமாரவேளே!
அலைமுகம் தவழ்து --- கடலின் அலைகளிலே
தவழ்ந்து,
சினை முதிர்ந்த சங்கம் --- கருமுதிர்ந்த
சங்குகள்,
அலறி வந்து --- மிக ஒலித்து வந்து,
கஞ்ச மலர் மீது --- தாமரை மலரின் மீது,
அளி கலந்து இரங்க --- வண்டுகள் மொய்த்து
ஒலிக்க,
இசையுடன் துயின்ற --- அந்த இசையைக்
கேட்டுக் கொண்டே துயில் புரிகின்ற,
அரிய செந்தில் வந்த பெருமாளே ---
அருமையான திருத்தலமாகிய திருச்செந்தூரில் வந்து எழுந்தருளியுள்ள பெருமையிற்
சிறந்தவரே!
முலை முகம் திமிர்ந்த கலவையும் ---
கொங்கையின் மீது பூசப்பட்ட சந்தனமும்,
துலங்கு முறுவலும் --- விளங்குகின்ற பற்களும்,
சிவந்த கனிவாயும் --- சிறந்த கொவ்வைக்
கனியனைய வாயும்,
முருகு அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த
முகிலும் --- நறுமணம் அவிழ்ந்து உதிர்ந்த மலர்கள் சரிந்துள்ள மேகம் போன்ற
கூந்தலும்,
இன்ப சிங்கி விழி வேலும் --- இன்பமும்
நஞ்சும் அமைந்த வேல் போன்ற கண்ணும்,
சிலைமுகம் கலந்த திலதமும் --- வில் போன்ற
நெற்றியில் உள்ள பொட்டும்,
குளிர்ந்த திருமுகம் ததும்பு குறுவேர்வும் ---
குளிர்ந்த அழகிய முகத்தில் நிரம்பி வெளிப்பட்ட சிறு வியர்வையும்,
தெரிய வந்து நின்ற --- தெரியுமாறு வந்து
நின்ற,
மகளிர் பின் கழன்று --- பொதுமாதர்களின்
பின்னே சுழன்று,
செயல் அழந்து உழன்று திரிவேனோ --- என்னுடைய
செயல் அழிந்து அடியேன் திரியலாமோ?
பொழிப்புரை
மலையின் கண் குகையில் அடைபட்ட
நக்கீரருடைய செவ்விய சொல்லாகிய திருமுருகாற்றுப்படையை ஏற்றுக்கொண்டு, அம்மலையைப் பிளந்து வழிதிறந்து விட்ட
கூரிய வேலைச் சிவந்த கரத்தில் கொண்டவரே!
வளர்கின்ற தினைப் புனத்தில் காவல் புரிந்த
குறவர் குல மகளாகிய வள்ளிப்பிராட்டியின் தனங்களின் மீதுள்ள இரத்தின மணிமாலைகள்
அழுந்திய திருப்புயத்தை உடையவரே!
கடலின் அலையின்மீது தவழ்ந்து ஒலித்துக்
கொண்டு சூல்முதிர்ந்த சங்குகள் வந்து தாமரை மலர் மீது சேர்ந்து, அங்கே வண்டினங்கள் இனிது ஒலிக்க அந்த
இசையைக் கேட்டுத் துயில்கின்ற அருமைத் தலமாகிய திருச்செந்தூரில் வந்து
எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
கொங்கையின் மீது பூசப்பட்ட சந்தனமும், விளங்குகின்ற பற்களும், சிவந்த கொவ்வைப் பழம் போன்ற வாயும், நறுமணம் வெளிப்பட்டு உதிர்ந்த மலர்கள்
நிறைந்த கரிய முகில் போன்ற கூந்தலும், இன்பமும்
நஞ்சும் ஒருங்கேயமைந்த வேல் போன்ற கண்ணும், வில் போன்ற நெற்றியில் தீட்டிய பொட்டும், குளிர்ந்த அழகிய முகத்தில் ததும்புகின்ற
சிறு வியர்வையும் தெரியுமாறு வந்து முன்னே நிற்கின்ற பொதுமகளிர் பின்னே சென்று
சுழன்று, என் செயல் அழிந்து, அடியேன் திரியக் கடவேனோ?
விரிவுரை
இத்
திருப்புகழில் பொது மகளிரது உறவு அற்று உய்வு பெற்று நலமுறுமாறு அடிகளார்
கூறுகிறார்.
இன்ப
சிங்கி விழி வேலும் ---
சிங்கி-குளிர்ந்து
கொல்லும் நஞ்சு. மகளிருடைய கண் பார்வையில், இரு தன்மைகள் உள; ஒன்று மயக்கமாகிய நோய் செய்யும்; மற்றொன்று அந்நோயைத் தணிக்கும்
மருந்தாகி இன்பத்தைத் தரும்.
இருநோக்கு
இவள்உண்கண் உள்ளது, ஒருநோக்கு
நோய்நோக்கு,
ஒன்றுஅந்நோய் மருந்து --- திருக்குறள்.
சிலைமுகம்
கலந்த திலதமும் ---
சிலை-வில்.
இங்கே வில்போன்ற நெற்றியைக் குறிக்கின்றது. உவம ஆகு பெயர். நெற்றியிலேயே அம்மகளிர்
பலப்பல நிறமுடன் கூடிய பொட்டினை அழகுறத் தீட்டி நிற்பர். அப்பொட்டும் ஆடவரை
மயக்கும்.
மகளிர்
பின் சுழன்று செயல் அழிந்து உழன்று திரிவேனோ?
---
பிறப்புக்கு
விதை அவா; ஒவ்வொரு பிறப்பை
நல்கும். பெண்ணவர் பெருந்துன்பத்தைத் தரும். இதிலும் பொதுமகளிர் உறவு திருவையும்
தெளிவையும் உருவையும் அழிக்கும்.
இருமனப்
பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப்
பட்டார் தொடர்பு. ---
திருக்குறள்.
கள்ளைப்போல், அறிவை மயக்கும் தன்மை விலை மகளிர் உறவு.
அதனால் திருவள்ளுவர் “வரைவின் மகளிர்” என்ற அதிகாரத்துக்குப் பின் “கள்ளுண்ணாமை”
என்ற அதிகாரத்தை அமைத்தனர்.
விலைமாது
ஒருத்தி, தனது தோழியிடம் கேட்கின்றாள். "தோழி, என்னைப் புணர ஆசைப்பட்டு வருபவர்கள்
எனக்கு இன்பத்தைத் தருவதோடு, தமது பொன்னையும் கொடுத்து, எனது பாதத்திலும் விழுவது
ஏன்?"
அன்னையே
அனைய தோழி,
அறம்தனை வளர்க்கும் மாதே
உன்னை
ஓர் உண்மை கேட்பேன்,
உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையே
புணரு வோர்கள்
எனக்கும் ஓர் இன்பம் நல்கி,
பொன்னையும்
கொடுத்து, பாதப்
போதினில் வீழ்வது ஏனோ.
இதற்குத்
தோழி பகரும் மறுமொழி... "செல்வத்தை நிரம்பப் படைத்து இருந்தும், செம்மையாக
அறம் செய்யாதவர்களுடைய செல்வமானது சிதறிப் போகவேண்டும் என்பதற்காகவே,
விலைமாதர்களாகிய உம்மையும், கள்ளையும், சூதாட்டத்தையும் பிரமதேவன் படைத்து
வைத்தான்."
பொம்மெனப்
பணைத்து விம்மி
போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர்
முளையி னாளே,
கூறுவேன் ஒன்று கேண்மோ,
செம்மையில்
அறஞ்செய் யாதார்
திரவியம் சிதற வேண்டி
உம்மையும்
கள்ளும் சூதும்
நான்முகன் படைத்த வாறே. --- விவேகசிந்தாமணி.
விலைமாதருடைய
மெல்லிய தோள்கள், அறிவில்லாத மூடர்கள்
அழுந்துகின்ற நரகம் என்றும் திருவள்ளுவனார் கூறுகின்றார்.
வரைவிலா
மாண்இழையார் மென்தோள், புரைஇலாப்
பூரியர்கள்
ஆழும் அளறு.
ஆதலின், அம்மகளிர் பின் சென்று அவமே அலைந்து
திரியாது, ஆன்றோர் பின்சென்று
மாந்தர் உய்தல்வேண்டும்.
“திகழ்மாதர்
பின்செருமி அழிவேனோ” ---
(சிவஞான
புண்டரிக) திருப்புகழ்.
மலைமுகஞ்
சுமந்த புலவர் செஞ்சொல் கொண்டு விழிதிறந்த செங்கை வடிவேலா ---
இந்த அடி நக்கீரருடைய வரலாற்றைத்
தெரிவிக்கின்றது. கீரம்-சொல், நக்கீரர்-நல்ல இனிய
சொற்களை யுடையவர். இவர் கடைச் சங்கத்து நாற்பத்தொன்பது புலவர்களில் தலைமை
பெற்றவர். அஞ்சா நெஞ்சும் ஆழ்ந்த அறிவும் உறுதியும் உடைய நல்லிசைப் புலவர்.
சிவ பூசையில் வழுவியவரை ஒன்று கூட்டி
ஆயிரம் என்ற எண்ணிக்கை யானவுடன் உண்ணுகின்ற ஒரு பெண்பூதம் இருந்தது. அதன் பேர்
கற்கிமுகி. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனந்திரிந்து வழுவியவர்களையெல்லாம் கொண்டு
போய் ஒரு பெரிய மலைக்குகையில் அடைத்துவைத்து அவர்கட்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999 பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர்
குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.
நக்கீரர் ஒரு சமயம் தலயாத்திரை
மேற்கொண்டு சென்றார். ஒரு குளக்கரையில் சிவபூசை செய்துகொண்டிருந்தார். அப்பூதம்
அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி
நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும்
மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன; இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர்
பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை
எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற
எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம்
குளித்துவிட்டுத்தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.
அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர்
அனைவரும் “பாவி! நீ அல்லவா எங்கட்கு எமனாக வந்தனை; நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை
இப்போது உண்ணமாட்டாதே; பால் பழம் முதலிய
உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை
விழுங்குமே? என் செய்வோம்” என்று
கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள். நக்கீரர் அவர்களுடைய அவல நிலையைக்
கண்டு இரங்கினார். “நீவிர் அஞ்சற்க. முன் இலக்கத்து ஒன்பது பேர் அடைபட்ட
கிரவுஞ்சம் என்ற பெருமலையை வேலால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப்
பாடினால், அவன் வேல் நமக்குத்
துணை புரியும்” என்று கூறி, முருகவேளை நினைத்து
உருகினார். “மலையைப் பிளந்த கருணை மலையே! மன்னுயிர்களைக் காக்கும் மயிலேறிய
மாணிக்கமே! இப்போது எம்மைக் காத்தருள்வாய்” என்று வேண்டினார் .
'உலகம் உவப்ப' என்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை
என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய
அத்திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய எந்தைக் கந்தவேள், தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை
விடுத்தருளினார். அவ்வேல் மலையையும், கற்கிமுகி
என்ற பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும், அவருடன் சேர்ந்த மற்றையோரையுங் காத்தருளியது.
“அருவரை திறந்து,வன்
சங்க்ராம கற்கிமுகி
அபயம் இட, அஞ்சல் என்று அம் கீரனுக்கு உதவி” --- பூதவேதாள
வகுப்பு
பழுத்தமுது
தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்குஉருகி வரைக்குகையை
இடித்துவழி
காணும் --- வேல்வகுப்பு.
ஓராயிரம்
பேரை வருடத்தில் ஒருநாளில்
உண்கின்ற கற்கி முகிதான்
ஒன்று
குறை ஆகிவிடும் அன்று நக்கீரர்வர,
ஓடிப் பிடித்து, அவரையும்
காராய
குன்றத்து அடைத்து,உரிய நியதிக்
கடன் துறை முடிக்க அகலக்
கருதி
முருகாறு அவர் உரைத்தருள, நீலக்
கலாப மயில் ஏறி அணுகிப்
பேரான
குன்றம் திறந்து,இவுளி முகியைப்
பிளந்து, நக்கீரர் தமையும்
பெரியவேல்
கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,
பிரான் முகலி நதியின் மேவச்
சீராய
திருவருள் புரிந்தகரன் ஊராளி
சிறுதேர் உருட்டி அருளே,
செய
செயென அமரர்தொழ, அசுரர் மிடி
சிதறுமுனி
சிறுதேர் உருட்டி அருளே.
--- திருவிரிஞ்சை முருகன்
பிள்ளைத் தமிழ்.
அலைமுகந்
தவழ்ந்து சினைமுதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே அளிகலந்து இரங்க
இசையுடன் துயின்ற ---
திருச்செந்தூரில்
கடல் ஒழியாது ஆரவாரத்துடன் அலைகள் வீசிய வண்ணம் இருக்கின்றது. கருமுதிர்ந்த சங்குகள்
அந்த அலையினால் எடுத்து எறியப்பெற்று, அதனால்
வருந்தின. மெல்லத் தவழ்ந்து வந்து கரையில் உள்ள குளங்களில் மலர்ந்துள்ள தாமரை
மலர்களாகிய கட்டிலில் படுத்தன. பாவம்! அவை நிறை கருப்பம் உடையவை. அலைகளால்
மோதப்பட்ட வருத்தம். அங்கே தேனையுண்ண வந்த வண்டுகள், இனிது ரீங்காரஞ் செய்தன. அந்த
இன்னிசையைக் கேட்டு இசையில் மயங்கி முத்து மணிகளைக் கருவில் கொண்ட சங்குகள்
அப்படியே உறங்கி விட்டன. என்ன அழகான இயற்கை வருணணை! பிறவிப் பெருங் கடலில்
நெடுங்காலமாக அலைப்புண்ட ஆன்மாக்களும், திருச்செந்தூரில்
வந்து முருகன் திருவடித் தாமரையில் அடியவர் படும் இனிய துதிப்பாடலாகிய இன்னோசையைக்
கேட்டு இன்பத்துயில் புரிவர் என்ற குறிப்பை இது நமக்கு உணர்த்துகின்றது.
“கத்துந் தரங்கம்
எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்தில்
கான்ற மணி”
(தரங்கம்-அலை, வாலுகம்-மணல், கான்ற-ஈன்ற) என்று பகழிக்கூத்தரும்
கூறுகின்றார்.
கருத்துரை
நக்கீரருக்கு அருளிய வேலாயுதரே!
செந்திற்குமாரரே! விலைமாதருடைய உறவு அற அருள்புரிவீர்.
No comments:
Post a Comment