தென் திருமுல்லைவாயில்


தென் திருமுல்லைவாயில்


     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

         சீர்காழியில் இருந்து 14 கி. மீ. தொலைவு. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.


இறைவர்              : முல்லைவன நாதர்

இறைவியார்           : கோதையம்மை

தல மரம்                : முல்லை

தீர்த்தம்                : சக்கர தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - துளிமண்டி யுண்டு நிறம்

         திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற திருத்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள திருத்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள திருத்தலம் தென்திருமுல்லைவாசல் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

         முதலாம் கிள்ளிவளவன் என்ற சோழ மன்னன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை மருத்துவர்கள் கூற, அதன்படி இத்தலத்தற்கு அருகிலுள்ள கடலில் நோய் தீருவதற்காக தன் பரிவாரங்களுடன் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருகியது. அதிர்ச்சி அடைந்த மன்னன் ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே இலிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. மன்னன் தன் தவறு உணர்ந்து தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயல்கையில் இறைவன் ரிஷபாரூடராய்க் காட்சி தந்ததாகத் தல வரலாறு கூறுகிறது. இலிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத் தழும்பை இன்றும் காணலாம்.

         திருமுல்லைவாயில் ஒரு கடற்கரைத் தலம். உப்பனாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபத்தைக் காணலாம். ஒரு பிராகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்தின் இறைவன் முல்லைவனநாதர் மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு மாணிலாமணி ஈசுவரர், யூதிகா பரமேசுவரர் என்ற பெயர்களும் உண்டு. உள் பிராகரத்தில் வரசக்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய ஷண்முக சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பைரவர், திருஞானசம்பந்தர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிக அழகாக உள்ளது. ஆலயத்தின் தலவிருட்சம் முல்லை. தீர்த்தம் பிரம்ம, சந்திர தீர்த்தங்கள். பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால் இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.

         இத்தலத்தில் வாயு திசையிலுள்ள கிணற்றில் கங்கை நித்திய வாசம் செய்கிறாள். அக்னி திசையிலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சந்திரன் தனக்கிருந்த நோயைப் போக்கிக் கொண்ட தலம் இதுவாகும்.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கயேந்திரனைக் காயல் உறாது அன்று வந்து காத்தோன் புகழ் முல்லை வாயிலின் ஓங்கு மணிவிளக்கே" என்று போற்றி உள்ளார்.

         காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய குருக்கள் வீடு அருகில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 126
மெய்ப்பொருள் ஆயி னாரை,
         வெண்காடு மேவி னாரை,
செப்புஅரும் பதிக மாலை
         கண்காட்டு நுதல்முன் சேர்த்தி,
முப்புரம் செற்றார் பாதம்
         சேரும்முக் குளமும் பாடி,
ஒப்புஅரும் ஞானம் உண்டார்
         உளமகிழந்து ஏத்தி வாழ்ந்தார்.

         பொழிப்புரை : மெய்ப்பொருளாக விளங்கியருளும் திருவெண்காட்டில் வீற்றிருக்கும் இறைவற்குச் சொலற்கரிய சிறப்புடைய திருப்பதிகமான `கண்காட்டு நுதலானும்\' (தி.2 ப.48) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்த பதிகத்தை மாலையாகச் சாத்தி, முப்புரங்களையும் எரித்த இறைவர் திருவடிகளைச் சேரும் முக்குளங்களையும் அப்பதிகத்தில் அமைத்துப் பாடி, ஒப்பில்லாத ஞானப்பாலமுது உண்ட பிள்ளையார், மனம் மகிழ்ந்து போற்றி அங்கு வீற்றிருந்தருளினார்.


பெ. பு. பாடல் எண் : 127
அருமையால் புறம்பு போந்து
         வணங்கிஅங்கு அமரும் நாளில்,
திருமுல்லை வாயில் எய்தி,
         செழுந்தமிழ் மாலை சாத்தி,
மருவிய பதிகள் மற்றும்
         வணங்குவா,ர் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து
         ஞானசம் பந்தர் சார்ந்தார்.

         பொழிப்புரை : அக்கோயிலினின்றும் பிரிதற்கரிய வகையில் வெளிப்போந்து வணங்கிச் சென்று, அத்திருப்பதியில் அவர் எழுந்தருளியிருந்த அந்நாள்களில், தென் திருமுல்லைவாயிலை அடைந்து செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, அவ்விடத்தினின்றும் அணுகப் பொருந்திய மற்றைய திருப்பதிகளையும் வணங்குவாராய், அந்தணர் போற்ற வந்த ஞானசம்பந்தர், அருட்செல்வம் மிக்க சீகாழியை அடைந்தார்.

         குறிப்புரை : `திருமுல்லைவாயில்' எனும் பெயருடைய பதிகள் தொண்டை நாட்டிலும் சோழ நாட்டிலுமாக ஈரிடத்தும் உள்ளன. இப்பதி, சோழ நாட்டில் உள்ளதாகும். இவ்வேறுபாடு அறிய இதனைத் தென்திருமுல்லைவாயில் என அழைத்தனர். இங்கு அருளிய பதிகம் `துளிமண்டி' (தி.2 ப.88) எனத் தொடங்கும் பியந்தைக் காந்தாரப் பண்ணமைந்த பதிகமாகும். இங்கு மருவிய பதிகள் எனக் குறிப்பன இவையிவை எனத்தெரிந்தில.


2.088 தென்திருமுல்லைவாயில்      பண் - பியந்தைக்காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
துளிமண்டி உண்டு நிறம்வந்த கண்டன்,
         நடமன்னு துன்னு சுடரோன்,
ஒளிமண்டி உம்பர் உலகம் கடந்த
         உமைபங்கன் எங்கள் அரன்ஊர்,
களிமண்டு சோலை கழனிக் கலந்த
         கமலங்கள் தங்கு மதுவில்
தெளிமண்டி உண்டு சிறைவண்டு பாடும்
         திருமுல்லை வாயில் இதுவே.

         பொழிப்புரை :விடத்தினை விரும்பி உண்டு அதனால் கருமை நிறம் பெற்ற கண்டத்தினனும் , நடனமாடும் ஒளி பொருந்திய வடிவின னும் பேரொளிப் பிழம்பாய் உம்பர் உலகத்தைக் கடந்த உமைபங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர் , களிப்புத்தரும் சோலையை அடுத்துள்ள வயல்களில் மலர்ந்த தாமரைகளில் தங்கிய மதுவின் தெளிவை வயிறார உண்டு சிறை வண்டுகள் பாடும் திருமுல்லை வாயிலாகிய இத் தலம் ஆகும் .


பாடல் எண் : 2
பருவத்தில் வந்து பயன்உற்ற பண்பன்,
         அயனைப் படைத்த பரமன்,
அரவத் தொடுஅங்கம் அவைகட்டி எங்கும்
         அரவிக்க நின்ற அரன்ஊர்,
உருவத்தின் மிக்க ஒளிர்சங்கொடு இப்பி
         அவைஓதம் ஓத வெருவித்
தெருவத்தில் வந்து செழுமுத்து அலைக்கொள்
         திருமுல்லை வாயில் இதுவே.

         பொழிப்புரை :பக்குவம் வந்த காலத்தில் வந்து பேரின்பப் பயன் அருளவல்ல பண்பினனும் , அயனைப்படைத்த பரமனும் , பாம்பினை உடல் முழுதும் கட்டிக் கொண்டு எல்லோராலும் போற்றிப் புகழப் படுவோனுமாகிய அரனது ஊர் , உருவத்தால் பெரிய சங்குகளும் சிப்பிகளும் ஓதநீர் மோதுவதைக் கண்டு வெருவித் தெருவில் வந்து செழுமையான முத்துக்களைப் பல இடங்களிலும் ஈனும் திருமுல்லைவாயிலாகிய இத்தலமாகும் .


பாடல் எண் : 3
வாராத நாடன், வருவார்தம் வில்லின்
         உருமெல்கி நாளும் உருகில்
ஆராத இன்பன் அகலாத அன்பன்
         அருள்மேவி நின்ற அரன்ஊர்,
பேராத சோதி பிரியாத மார்பின்
         அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதிநேர நீடு
         திருமுல்லை வாயில் இதுவே.

         பொழிப்புரை :மீண்டும் வாராத பேரின்ப நாடுடையவன் , உலகிற் பிறந்தோர் வானவில் போன்று விரைவில் தோன்றி மறையும். இவ்வுடல் மெலியுமாறு உருகி வழிபடில் ஆராத இன்பம் அருள்பவன் . அகலாத அன்புடையவன் . அத்தகைய அரன் அருள் செய்ய எழுந் தருளியுள்ள ஊர் , நீங்கா ஒளியுடைய திருமால் மார்பை விடுத்துப் பிரியாத திருமகளின் அன்புடன் செல்வம் தழைத்தோங்கும் பெருமை மிக்க திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .


பாடல் எண் : 4
ஒன்றுஒன்றொடு ஒன்றும் ஒருநான்கொடு ஐந்தும்     
        இருமூன்றொடு ஏழும் உடனாய்,
அன்றுஇன்றொடு என்றும் அறிவான வர்க்கும்
         அறியாமை நின்ற அரன்ஊர்,
குன்றுஒன்றொடு ஒன்று குலைஒன்றொடு ஒன்று     
       கொடிஒன்றொடு ஒன்று குழுமிச்
சென்றுஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த
         திருமுல்லை வாயில் இதுவே.

         பொழிப்புரை :ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு . புருடதத்துவம் இருபத்தைந்தாவது தத்துவம் . இவ்விருபத்தைந்து தத்துவங்கட்கும் வேறாய் நிற்பவன் இறைவன் . இதனை அறியாதார் இருபத்தைந்தாவதாய் உள்ள உயிரையே பதி என மயங்குவர். இவ்வாறு தத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறியாது தடுமாறுகின்ற நிலையில் விளங்கும் அரனது ஊர், குன்றுகள் ஒன்றோடு ஒன்று இணைவன போலும் மாடவீடுகளும், குலைகளும் கொடிகளும் ஒன்றோடு ஒன்று குழுமிச் செறிவால் நிறைந்துள்ள திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .


பாடல் எண் : 5
கொம்புஅன்ன மின்னின் இடையாளொர் கூறன்,
         விடைநாளும் ஏறு குழகன்,
நம்பன், எம்அன்பன், மறைநாவன், வானின்
         மதியேறு சென்னி அரன்ஊர்,
அம்புஅன்ன ஒண்கண் அவர் ஆடுஅரங்கின்
         அணிகோ புரங்கள் அழகார்
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு
         திருமுல்லை வாயில் இதுவே.

         பொழிப்புரை :பூங்கொம்பு போன்றவளும் மின்னல் போலும் இடையினளும் ஆகிய உமையம்மையை ஓரு கூற்றாகக் கொண்டவன் . நாள்தோறும் விடைமீது ஏறிவரும் இளையோன் . நம் மேல் அன்புடையோன் . மறையோதும் நாவினன் . வானில் செல்லும் மதி பொருந்திய சென்னியை உடைய அவ்வரனது ஊர் , அம்பு போன்ற ஒளி பொருந்திய கண்ணினை உடைய குலமகளிர் ஆடும் அரங்குகளும் , அழகிய கோபுரங்களும் உடையதாய்ச் செம் பொன் னின் அழகைத்தரும் மாடவீடுகள் கொண்ட திருமுல்லை வாயிலாகிய இத் தலமேயாகும்.


பாடல் எண் : 6
ஊன்ஏறு வேலின் உருஏறு கண்ணி,
         ஒளிஏறு கொண்ட ஒருவன்,
ஆன்ஏறு அதுஏறி அழகுஏறு நீறன்,
         அரவுஏறு பூணும் அரன்ஊர்,
மான்ஏறு கொல்லை மயில்ஏறி வந்து
         குயில்ஏறு சோலை மருவித்
தேன்ஏறு மாவின் வளம்ஏறி ஆடு
         திருமுல்லை வாயில் இதுவே.

         பொழிப்புரை :ஊன் பொருந்திய வேல் போன்ற கண்ணினள் ஆகிய உமையம்மையின் கருநிறஒளியைப் பெற்றவன் . ஆனேற்றின் மிசை ஏறி , அழகுதரும் திருநீற்றை அணிந்தவன் . பாம்பினை அணி கலனாகப் பூண்டவன் . அவ்வரனது ஊர் , மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும் , மயிலும் குயிலும் வாழும் சோலைகளையும், தேனைப் பொருந்திய வண்டுகளைக் கொண்ட வளத்தையும் உடைய திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .


பாடல் எண் : 7
நெஞ்சுஆர நீடு நினைவாரை மூடு
         வினைதேய நின்ற நிமலன்,
அஞ்சுஆடு சென்னி, அரவுஆடு கையன்,
         அனல்ஆடு மேனி அரன்ஊர்,
மஞ்சுஆரு மாட மனைதோறும் ஐயம்
         உளதுஎன்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர்சோறு அளிக்கொள்
         திருமுல்லை வாயில் இதுவே.

         பொழிப்புரை :மனம் பொருந்த நீடு நினையும் அடியவர்களின் வினைகளைப் போக்கியருள்பவன் . ஆனைந்து ஆடுபவன் . அரவு ஆடும் கையன். அனல்போன்ற மேனியன். அவ் அரனது ஊர், மேகங்கள் தங்கும் உயரிய மாடங்களைக் கொண்ட மனைகள் தோறும் பிச்சையேற்க யார் வரினும் செந்நெற் சோறளித்து மகிழ்வோர் வாழும் திருமுல்லைவாயிலாகிய இத்தலமேயாகும் .


பாடல் எண் : 8
வரைவந்து எடுத்த வலிவாள் அரக்கன்
         முடிபத்தும் இற்று நெரிய
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி
         உமைபங்கன் எங்கள் அரன்ஊர்,
வரைவந்த சந்தொடு அகில்உந்தி வந்து
         மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறிதேறல் ஆடு
         திருமுல்லை வாயில் இதுவே.

         பொழிப்புரை :கயிலைமலையை வந்தெடுத்த வலிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரியச் செய்தவனும் , உரைத்துக்காணப் பெறும் பொன்போலும் மேனியனாகிய உமையம்மை பங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர் , மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்து வந்து விளங்கும் பொன்னியாற்றின் திரைகள் வீசும் வடகரையில் செறிந்த தேன் அடைகள் ஆடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .


பாடல் எண் : 9
மேல்ஓடி நீடு விளையாடல் மேவு
         விரிநூலன், வேத முதல்வன்,
பால்ஆடு மேனி கரியானும் உன்னி
         அவர்தேட நின்ற பரன்ஊர்,
கால்ஆடு நீல மலர்துன்றி நின்ற
         கதிர்ஏறு செந்நெல் வயலில்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு
         திருமுல்லை வாயில் இதுவே.

         பொழிப்புரை :திருமேனிமேல் நீண்டு ஓடிவிளையாடலைப் பொருந்திய முப்புரிநூலை உடையவன் . வேதமுதல்வன் . பிரமனும் திருமாலும் தேடிக்காணாது திகைக்குமாறு உயர்ந்து நின்றோன் . அவனது ஊர் , காற்றில் அசையும் நீலமலர்கள் நிறைந்து நிற்பதாய் , கதிர் மிகுந்த செந்நெல் வயல்களில் சேலும் வாளையும் குதிகொள்ளும் திருமுல்லைவாயிலாகிய இத்தலமேயாகும் .


பாடல் எண் : 10
பனைமல்கு திண்கை மதமா உரித்த
         பரம்அன்ன நம்பன் அடியே
நினைவுஅன்ன சிந்தை அடையாத தேரர்
         அமண்மாய நின்ற அரன்ஊர்,
வனமல்கு கைதை வகுளங்கள் எங்கும்
         முகுளங்கள் எங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
         திருமுல்லை வாயில் இதுவே.

         பொழிப்புரை :பனைபோன்ற திண்ணிய துதிக்கையை உடைய மதயானையை உரித்த பரமன் . நம்பால் அன்புடையவன் . தன் திருவடியை நினையாத சமணர் தேரர் ஆகியோர் அழிந்தொழிய நிற்பவன் . அப்பெருமானது ஊர் , வனங்களில் தாழை மரங்கள், மகிழ மரங்கள் ஆகியன எங்கும் நிறைந்த மொட்டுக்களைத்தரவும் , அரும்பு களை உடைய புன்னை மரங்களின் மணம் வீசவும் விளங்கும் திரு முல்லை வாயிலாகிய இத்தலமேயாகும் .


பாடல் எண் : 11
அணிகொண்ட கோதை அவள்நன்றும் ஏத்த
         அருள்செய்த எந்தை, மருவார்
திணிகொண்ட மூன்று புரம்எய்த வில்லி
         திருமுல்லை வாயில், இதன்மேல்
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான
         மிகுபந்தன் ஒண் தமிழ்களின்
அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர்
         அகல்வானம் ஆள்வர் மிகவே.

         பொழிப்புரை :அணிகொண்ட கோதை என்ற திருப்பெயருடைய இத்தலத்து அம்பிகை மிகவும் ஏத்தி வழிபட அவளுக்கு அருள் செய்த எந்தையாவர் . பகைமை கொண்ட அசுரர்களின் வலிய முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவர் . அப்பெருமான் எழுந்தருளிய திரு முல்லை வாயிலாகிய இத்தலத்தின்மீது தணித்த சிந்தை உடையவனும் காழிப்பதியில் தோன்றியவனுமாகிய ஞானம் மிக்க சம்பந்தன் பாடிய ஒண் தமிழ்ப் பாடல்களின் மாலையாக அமைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பாடும் பக்தர்கள் அகன்ற வானுலகை மிகவும் அரசாள்வர் .
                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...