திருக் கலிக்காமூர்


திருக் கலிக்காமூர்
(அன்னப்பன்பேட்டை)

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         சீர்காழி - திருவெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து திருநகரி செல்லும் சாலையில் சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.

     சீர்காழியில் இருந்து கோனையாம்பட்டினம் செல்லும் நகரப் பேருந்து அன்னப்பன் பேட்டை வழியாகச் செல்கிறது. ஊர் சாலையோரத்தில் உள்ளது. ஊர் நடுவே சாலைக்குப் பக்கத்தில் கோயில் உள்ளது. திருக்கலிகாமூருக்கு அருகாமையில் திருபல்லவனீச்சுரம், தென்திருமுல்லைவாயில் என்ற பாடல் பெற்ற திருத்தலங்களும் இருக்கின்றன. 

இறைவர்                  : சுந்தரேசுவரர்

இறைவியார்              : சுந்தராம்பாள், அழகம்மை.

தீர்த்தம்                    : சந்திர தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் -  மடல்வரை யின்மது

         உப்பனாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. கோயிலுக்கு எதிரில் சந்திர தீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள் சென்றால் நந்தி மண்டபத்தைக் காணலாம். இங்கு கொடிமரம் இல்லை. பிராகாரத்தில் சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர மகரிஷி காட்சி தருகிறார். வெளிப் பிராகாரத்தின் மேற்குச் சுற்றில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், வில்வநாதர், அகிலாண்டேஸ்வரி, மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள இடத்தில் பைரவர், சனீஸ்வரன், விநாயகர், கைலாசநாதர், பத்திரகாளி முதலிய சிலாரூபங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

         வலம் முடித்து உட்சென்றால் நேரே மூலவர் சுந்தரேசுவரர் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூலவரைத் தரிசிக்கும் நமக்கு வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இத்தலத்தின் அம்பாள் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டவள். சிவாலயங்களில் தீர்த்தவாரி நடைபெறும் போது இறைவன் கடற்கரை அல்லது நதிக்கரைக்கு எழுந்தருள்வது வழக்கம். ஆனால் இத்தலத்தில் அம்பாள் அழகம்மை மாசி மாத பெளர்ணமி அன்று கடலில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்கிறாள். இது தவிர மாத பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா போன்ற விசேஷங்களும் இத்தலத்தில் விமரிசையாக தடைபெறுகின்றன.

         பராசர முனிவர் அசுரன் உதிரனை அழித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார். பராசர முனிவர் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர். ஆகையால் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

         வணிகன் ஒருவன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டான். திருமுல்லைவாயில் அடைந்து அத்தல இறைவனிடம் தன் வயிற்று வலியைப் போக்கி அருளுமாறு வேண்டினான். அவனூடைய வயிற்று வலியை தீக்காது வேறொரு தலத்திற்கு அவனுக்கு வழிகாட்டினார் இறைவன். கடற்கரை ஓரமாகவே நடந்து வந்த அவன் மீனவர் வலையில் சிக்கிய ஒரு அழகிய அம்பாள் சிலையைக் கண்டான். அதை எடுத்து வந்து வழிபட அவனது தீராத வயிற்று வலி மறைந்தது. பின் இறைவன் ஆணைப்படி இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கும் இத்தல ஈசனுக்கு அருகில் அம்பாளையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இந்தப் புராண வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு இன்றும் தீராத வயிற்று வலியால் அவதிப்படுவர்கள் இத்தல இறைவனை வணங்கி வழிபட்ட்டால் பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில்,  "மேய பலிக்கா ஊர் தோறும் பதம் சேப்பச் சென்று கலிக்காமூர் மேவும் கரும்பே" என்று போற்றி உள்ளார்.

         காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 128
தோணிவீற் றிருந்தார் தம்மைத்
         தொழுதுமுன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி
         அருட்பெரு வாழ்வு கூரச்
சேணுயர் மாடம் ஓங்கும்
         திருப்பதி அதனில், செய்ய
வேணியார் தம்மை நாளும்
         போற்றிய விருப்பின் மிக்கார்.

         பொழிப்புரை : திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கி, திருமுன்பு நின்று, தூய்மை பொருந்திய உரையாணியான திருப்பதிகத்தைப் பாடி, அருள் பெருக்கும் நல்வாழ்வு பெருக, வானளாவ உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த அப்பெரும் பதியில், வீற்றிருந்தருளும் சிவந்த சடையையுடைய சிவபெருமானை நாளும் போற்றிவரும் விருப்பம் மிக்கவராயினர்.


பெ. பு. பாடல் எண் : 129
வைகும்அந் நாளில் கீழ்பால்
         மயேந்திரப் பள்ளி, வாசம்
செய்பொழில் குருகா வூரும்,
         திருமுல்லை வாயில் உள்ளிட்டு,
எய்திய பதிகள் எல்லாம்
         இன்புற இறைஞ்சி ஏத்தி,
தையலாள் பாகர் தம்மைப்
         பாடினார் தமிழ்ச்சொல் மாலை.

         பொழிப்புரை : இவ்வாறு அப்பதியில் வாழ்ந்து வந்த நாள்களில் இப்பதியின் கீழ்த் திசையில் உள்ள திருமயேந்திரப்பள்ளியையும், மணம் கமழ்கின்ற சோலை சூழ்ந்த திருக்குருகாவூரையும், திருமுல்லை வாயில் உள்ளிட்ட முன்பு சென்று வணங்கிய திருப்பதிகள் பலவற்றை யும் இன்பம் பொருந்தப் போற்றி, உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் மீது தமிழ்ச் சொல் மாலைகளைப் பாடினார்.

         குறிப்புரை : திருமயேந்திரப்பள்ளியில் அருளிய பதிகம்: `திரைதரு' - பண் : கொல்லி (தி.3 ப.31).

         திருக்குருகாவூரில் அருளிய பதிகம் : `சுண்ணவெண்' - பண்: அந்தாளிக் குறிஞ்சி (தி.3 ப.124).

         திருமுல்லைவாயில் உள்ளிட்ட பதிகளாவன: திருக்கலிக்காமூர், திருவெண்காடு, கீழைத் திருக்காட்டுப்பள்ளி முதலியனவாகலாம். இவற்றுள் திருமுல்லைவாயிலுக்குப் பாடிய பதிகம் ஒன்றே இருத்தலின், அது முதல்முறை சென்ற பொழுது பாடியது என முன்னர்க் குறிக்கப்பட்டது. இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது.

         திருக்கலிக்காமூரில் அருளிய பதிகம்: `மடல்வரையின்' - பண்: பழம்பஞ்சுரம் (தி.3 ப.105).

         திருவெண்காட்டில் அருளிய பதிகங்கள்: `உண்டாய் நஞ்சை' - பண்: காந்தாரம் (தி.2 ப.61). `மந்திர மறையவை' - பண்: காந்தார பஞ்சமம் (தி.3 ப.15).

         கீழைத்திருக்காட்டுப்பள்ளியில் அருளிய பதிகம்: `செய்யருகே' - பண் : நட்டபாடை (தி.1 ப.5).


3. 105   திருக்கலிக்காமூர்            பண் - பழம்பஞ்சுரம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மடல்வரை யில்மது விம்முசோலை
         வயல்சூழ்ந்து அழகுஆரும்
கடல்வரை ஓதம் கலந்துமுத்தம்
         சொரியும் கலிக்காமூர்,
உடல்வரை யின்உயிர் வாழ்க்கைஆய
         ஒருவன் கழல்ஏத்த,
இடர்தொட ரா,வினை ஆனசிந்தும்,
         இறைவன் அருள்ஆமே.

         பொழிப்புரை : பூ இதழ்களில் அளவற்ற தேன் பெருகுகின்ற சோலைகளும் , வயல்களும் சூழ , மலைபோன்று வரும் அலைகளில் கலந்து முத்துக்களைக் கடல் சொரிகின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனும் , உடல் எல்லையில் தங்கும் உயிர் வாழ்வதற்குக் காரணமான உயிராகிய ஒப்பற்றவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வணங்கித் துதிக்கத் துன்பங்கள் தொடரமாட்டா . அத்துன்பங்கட்குக் காரணமான , அநுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும் அழிந்துபோகும் . இறைவனின் திருவருட்சக்தி பதியும் பேரின்பம் பெறுவர் .


பாடல் எண் : 2
மைவரை போல்திரை யோடுகூடிப்
         புடையே மலிந்துஓதம்
கைவரை யால்வளர் சங்கம்எங்கும்
         மிகுக்கும் கலிக்காமூர்,
மெய்வரை யான்மகள் பாகன்தன்னை
         விரும்ப, உடல்வாழும்
ஐவரை ஆசுஅறுத்து ஆளும்என்பர்,
         அதுவும் சரதமே.

         பொழிப்புரை : மேகம் படியும் மலைபோன்ற அலைகளோடு கூடிவரும் கடல் , கரையின் கண்ணே பருத்த சங்குகளை எங்கும் மிகுதியாகக் குவிக்கும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , மலையரசன் மகளான உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டவரான சிவபெருமானை விரும்பி அடைய , அப்பெருமான் நமது உடலில் வாழும் ஐந்து இந்திரியங்களையும் குற்றமறுத்து நம்மை ஆட்கொள்வர் என்று அறிஞர்கள் கூறுவர் . அஃது உண்மையேயாம் .


பாடல் எண் : 3
தூவிய நீர்மலர் ஏந்திவையத்
         தவர்கள் தொழுதுஏத்தக்
காவியின் நேர்விழி மாதர்என்றும்
         கவின்ஆர் கலிக்காமூர்,
மேவிய ஈசனை, எம்பிரானை
         விரும்பி வழிபட்டால்,
ஆவிஉள் நீங்கலன், ஆதிமூர்த்தி,
         அமரர் பெருமானே.

         பொழிப்புரை : அபிடேகம் செய்யும் பொருட்டுத் தூய நீரையும் , பூசிக்கும் பொருட்டு மலர்களையும் ஏந்தி வந்து இவ்வுலகத்தவர்களும் , நீலோற்பல மலர்போன்ற கண்களை உடைய பெண்களும் வணங்கிப் போற்ற , என்றும் அழகுடன் திகழும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , எம் தலைவனான சிவபெருமானை விரும்பி வழிபட்டால் , ஆதிமூர்த்தியும் தேவர்கட்கெல்லாம் தலைவனுமான அப்பெருமான் உயிரினுள் நீங்கலாகாத தன்மையோடு விளங்குவான் .


பாடல் எண் : 4
குன்றுகள் போல்திரை உந்தி,அந்தண்
         மணிஆர் தர,மேதி
கன்றுடன் புல்கிஆ யம்மனைசூழ்
         கவின்ஆர் கலிக்காமூர்,
என்றுஉணர் உழியும் வாழும்எந்தை
         பெருமான் அடிஏத்தி
நின்றுஉணர் வாரை நினையகில்லார்
         நீசர், நமன்தமரே.

         பொழிப்புரை : குன்றுகளைப் போன்ற உயர்ந்த கடலலைகள் அழகிய குளிர்ச்சி பொருந்திய முத்துக்களைத் தள்ளிக் கொண்டு வந்து சேர்த்தலும் , எருமைக் கூட்டங்கள் கன்றுகளோடு கூடித் தத்தம் மனைகளைச் சென்று சேர்தலுமுடைய அழகு பொருந்திய திருக்கலிக்காமூர் என்ற திருத்தலத்தில் ஊழிக்காலத்திலும் வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி நின்று வழிபடுகின்ற அடியவர்களை நினையாதவர்கள் கீழ்மக்கள் ஆவர் . அவர்கள் இயமனது சுற்றத்தாரும் ஆவர் .
  

பாடல் எண் : 5
வான்இடை வாள்மதி மாடம்தீண்ட
         மருங்கே கடல்ஓதம்,
கான்இடை நீழலில் கண்டல்வாழும்
         கழிசூழ் கலிக்காமூர்,
ஆன்இடை ஐந்துஉகந்து ஆடினானை
         அமரர் தொழுதுஏத்த
நான்அடை வாம்வணம் அன்புதந்த
         நலமே நினைவோமே.

         பொழிப்புரை : வானத்தில் ஒளிரும் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்த மாடங்களும், பக்கங்களில் கடலலைகள் மோதச் சோலைகளில் நிழலில் செழித்து வளரும் தாழைகளும் கொண்டு உப்பங் கழிகள் சூழ்தலுமுடையது திருக்கலிக்காமூர் . இத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும் , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுகின்றவரும் ஆய சிவபெரு மானைத் தேவர்கள் தொழுது போற்ற அவர்கள் அடையாத நலன்களை அடியேன் அடையும் வண்ணம் அன்புடன் அவன் அருள்புரிந்த சிறப்பினை என்றும் நினைந்து போற்றுவோமாக !


பாடல் எண் : 6
துறைவளர் கேதகை மீதுவாசம்
         சூழ்வான் மலிதென்றல்,
கறைவள ருங்கடல் ஓதம்என்றும்
         கலிக்கும் கலிக்காமூர்,
மறைவள ரும்பொருள் ஆயினானை
         மனத்தால் நினைந்துஏத்த,
நிறைவள ரும்,புகழ் எய்தும்,வாதை
         நினையா, வினைபோமே.

         பொழிப்புரை : கடற்கரையில் வளர்ந்துள்ள தாழையின் பூவின் நறுமணத்தைக் கவர்ந்து வீசுகின்ற தென்றலோடு , மிக்க கருநிறமுடைய கடலலைகள் எக்காலத்தும் ஒலிக்கின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, நால்வேதங்களின் உட் பொருளாக விளங்கும் சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும். துன்பம் வந்து சேர நினையாது . அத்துன்பத்திற்குக் காரணமான வினைகளும் நீங்கும் .


பாடல் எண் : 7
கோலநன் மேனியின் மாதர்மைந்தர்
         கொணர்மங் கலியத்தில்
காலமும் பொய்க்கினும் தாம்வழுவாது
         இயற்றும் கலிக்காமூர்,
ஞாலமும் தீவளி ஞாயிறுஆய
         நம்பன் கழல்ஏத்தி
ஓலம் இடாதவர் ஊழிஎன்றும்
         உணர்வைத் துறந்தாரே.

         பொழிப்புரை : அழகிய நல்ல மேனியுடைய மகளிரும் , ஆடவரும் , காலமழை பொய்த்தாலும் , பூசைக்குரிய மங்கலப் பொருள்களை வழுவாது கொண்டுவந்து சேர்த்துப் பூசை நடத்தும் சிறப்புடையது திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலமாகும் . அங்கு வீற்றிருந்தருளுகின்ற நிலம் , நீர் , தீ , காற்று , ஆகாயம் , ஞாயிறு , திங்கள் ஆன்மா என்னும் அட்டமூர்த்தமாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி , உள்ளம் உருகி ஓலமிடாதவர்கள் ஊழிக்காலம் வரை வாழ்ந்தாலும் சிவஞானம் கைவரப் பெறாதவர் ஆவர் .


பாடல் எண் : 8
ஊர்அர வம்தலை நீண்முடியால்
         ஒலிநீர் உலகுஆண்டு
கார்அர வக்கடல் சூழவாழும்
         பதியாம் கலிக்காமூர்,
தேர்அரவு அல்குல்அம் பேதைஅஞ்சத்
         திருந்து வரைபேர்த்தான்
ஆர்அர வம்பட வைத்தபாதம்
         உடையான் இடம்ஆமே.

         பொழிப்புரை : ஊருகின்ற பாம்பைத் தலையிலுள்ள நீண்ட முடியில் அணிந்து , ஒலிக்கின்ற நீரையுடைய இவ்வுலகம் முழுமையும் ஆண்டு , கறுத்த ஆரவாரமுடைய கடல்சூழச் சிவபெருமான் வீற்றிருந்தருளும்பதி திருக்கலிக்காமூர் என்பதாம் . அது தேர் போன்ற அகன்ற அல்குலையுடைய உமாதேவி அஞ்சும்படி திருக்கயிலை மலையைப் பெயர்த்த இராவணன் அதன்கீழ் நசுக்குண்டு அலறும்படி தம் திருப்பாத விரலை ஊன்றிய சிவபெருமானுடைய இருப்பிடமாகும் .


பாடல் எண் : 9
அருவரை ஏந்திய மாலும்மற்றை
         அலர்மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரிஉருவாய்
         எழுந்தான் கலிக்காமூர்,
ஒருவரை யான்மகள் பாகன்தன்னை
         உணர்வால் தொழுதுஏத்த,
திருமரு வும்,சிதைவு இல்லை,செம்மைத்
         தேசுஉண்டு அவர்பாலே.

         பொழிப்புரை : கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிய திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஆகிய இருவரும் அஞ்சும்படி பெருஞ்சோதி வடிவாய் நின்றவரும் , திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும் , ஒப்பற்ற மலை அரசன் மகளை ஒரு பாகமாக உடையவருமான சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச் செல்வம் வந்தடையும் . அவர்கட்கு எவ்விதக் குறைவும் இல்லை . மேலும் அவர்களிடம் செம்மையான சிவஞானம் உண்டாகும் . அச்சிவஞானத்தால் முத்திபெறுவர் என்பது குறிப்பு .


பாடல் எண் : 10
மாசு பிறக்கிய மேனியாரும்,
         மருவும் துவர்ஆடை
மீசு பிறக்கிய மெய்யினாரும்,
         அறியார் அவர்தோற்றம்,
காசினி நீர்த்திரள் மண்டி,எங்கும்
         வளம்ஆர் கலிக்காமூர்,
ஈசனை, எந்தை பிரானை ஏத்தி
         நினைவார் வினைபோமே.

         பொழிப்புரை : நீராடாததால் அழுக்கு உடலையுடைய சமணர்களும் , மஞ்சட் காவியாடையைப் போர்த்திய உடலையுடைய புத்தர்களும் சிவபெருமானது பெருமையை அறியாதவர்கள் . எனவே அவர்களைப் பின்பற்றாது இந்நிலவுலகில் நீர்ப்பெருக்கு எங்கும் நிறைந்து நல்லவளம் பொருந்திய திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எம் தந்தையும் தலைவனுமான சிவபெருமானைப் போற்றித் தியானிப்பவர்களுடைய வினைகள் நில்லாது போம் .


பாடல் எண் : 11
ஆழியுள் நஞ்சுஅமுது ஆரஉண்டு,அன்று
         அமரர்க்கு அமுதுஉண்ண,
ஊழிதொறும் உளரா அளித்தான்,
         உலகத்து உயர்கின்ற
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன
         தமிழால், கலிக்காமூர்
வாழி எம்மானை வணங்கிஏத்த
         மருவா பிணிதானே.

         பொழிப்புரை : பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதமாகத் தாம் உண்டு அன்று தேவர்கட்கு அமுதத்தை அளித்து ஊழிதோறும் நிலைத்திருக்குமாறு அருள்செய்தவர் சிவபெருமான் . இவ்வுலகில் உயர்ச்சியடைகின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாமாலையால் , திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வாழும் எம் தந்தையாகிய சிவபெருமானை வணங்கிப் போற்ற , அவ்வாறு வணங்குபவர்களை நோய்கள் வந்து அணுகா .
                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...