திருச் சாய்க்காடு


திருச் சாய்க்காடு
(சாயாவனம்)

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி 3 கி.மீ. தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம். சாயாவனேசுவரர் கோயிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. சாலையோரத்திலேயே கோவில் உள்ளது.

     மயிலாடுதுறை - பூம்புகார் சாலை வழியாகவும் சாயாவனத்தை அடையலாம்.


இறைவர்              : சாயாவனேசுவரர், அமுதேசுவரர்

இறைவியார்           : குயிலினும் நன்மொழியம்மை

தல மரம்                : பைஞ்சாய் (சாய்-கோரை)

தீர்த்தம்                : காவிரி, ஐராவத தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் 1.மண்புகார் வான்புகார்,                                                                                                       2. நித்தலுந் நியமஞ்செய்து, 

                                               2. அப்பர்  1. தோடுலா மலர்கள் தூவி,
                                                                  2. வானத் திளமதியும்பாம்புந்

         சாய் என்பதற்குத் தமிழில் கோரை என்று பொருள். கோரை என்ற ஒரு வகைப் புல் தாவரம் அடர்ந்து வளர்ந்த காடாக இத்தலம் இருந்ததால் சாய்க்காடு என்று இத்தலம் பெயர் பெற்றது. 

          காவிரிக் கரையில் உள்ள காசிக்கு சமானமாக கருதப்படும் 6 திருத்தலங்களில் திருசாய்க்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.

         கோச்செங்கட் சோழ நாயனாரால் கட்டப்பெற்ற மாடக்கோயில்களுள் இத்தலத்தில் உள்ள சாயவனேசுவரர் ஆலயமும் ஒன்றாகும். கிழக்கிலும், தெற்கிலும் முகப்பு வாயில்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் நேரே ஆலயத்தின் 3 நிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்திற்கு வெளியே இடதுபுறம் ஐராவத தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகை நாயனார் துணைவியாருடன் உள்ள சந்நிதிகள் உள்ளன. விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சந்நிதி முதலிய சந்நிதிகளைத் தொழுதவாறே வலம் முடித்து படிகளேறி வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் பள்ளியறையும் பக்கத்தில் அம்மன் சந்நிதியும் உள்ளன. மூலவர் சாயவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உட்பிரகாரத்தில் மூலவர் சந்நிதிக்கு அருகிலேயே தெற்கு நோக்கிய இறைவியின் குயிலினும் நன்மொழியம்மை சந்நிதியும் உள்ளது.

       இயற்பகை நாயனார் தம் மனைவியை இத் திருத்தலத்து எல்லை வரை வந்து இறைவனுடன் வழி அனுப்பினார் என்பது வரலாறு.

         அம்பாள் சந்நிதிக்கு வெளியே உள்ள மண்டபத்தில் வலதுபுறம் இக்கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தியான முருகப்பெருமான் வில்லேந்தி அபூர்வ வடிவில் காட்சி தருகிறார். ஒரு திருமுகமும், நான்கு திருக்கரஙளும் கொண்டு அருகில் மயிலுடன் காட்சி தருகிறார். ஒரு கரத்தில் கோதண்டம், ஒரு கரத்தில் அம்பு, ஒரு கரத்தில் வில், மற்றெரு கரத்தில் கொடி ஆகியவற்றுடன் அருட்காட்சி தருகின்றார். இத்திருமேனியின் கீழ் திருசெந்திலாண்டவர் என்று பொறிக்கப்பட்டுள்ளது. போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி அளிக்கிறார். காலில் சிவபெருமான் கொடுத்த வீரகண்டமணியை அணிந்திருக்கிறார். சிக்கலில் அம்பாள் எதிரிகளை அழிக்க முருகனுக்குக் கொடுத்த வேல் போன்று சிவபெருமான் கொடுத்த இந்த வீரகண்டமணியும் எதிரிகளை அழிக்க பயன்பட்டது. இவரும் தெற்கு நோக்கியே காட்சி தருகிறார்.

         திருச்செந்தூர் கோயிலைச் சார்ந்த இத்திருவுருவினை வெளிநாட்டிற்குக் கடத்திச் செல்ல முயன்ற போது, கடலில் புயலில் கப்பல் சிக்கவே இத்திருவுருவினை காவிரிப்பூம்பட்டினக் கரையில் போட்டுச் சென்றதாகவும் அதனைக் கண்டெடுத்து இந்த திருக்கோயிலில் வைத்துள்ளதாகவும் கூறுவர்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், " வலிக்காலில் பாய்க்காடுகின்ற ஒரு பச்சை முகில் பரவும் சாய்க்காடு மேவிம் தடங் கடலே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


இயற்பகை நாயனார் வரலாறு 

         நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் அவதரித்து முக்தி அடைந்த தலம் இதுவாகும். இவரது மனைவியும் சிறந்த சிவபக்தை. இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம் " உமது திருத்தொண்டின் திறத்தைக் கேள்வியுற்று, ஒரு பொருள் நாடி இங்கு வந்தோம். அதனை அளிக்க, நீர் இசைவீர் ஆயின், அதனை இன்னது என்று சொல்லுவோம்" என்றார். அன்பில் சிறந்த நாயனார், "எப் பொருளாயினும் ஆக, அது என்பால் இருப்பின், அது அடியவர் உடைமை. அதை அருளிச் செய்க" என்றார். வேதியர், முன்பின் சிந்தியாது, "உமது மனைவியை வேண்டி வந்தோம்" என்றார்.  இயற்பகையார், "அடிகள் என்னிடம் உள்ள பொருளையே நாடியது எனது புண்ணியப் பயன்" என்று அதிக மகிழ்ந்து, உள்ளே விரைந்து எய்தி, இல்லக் கிழத்தியாருக்கு அடிகள் விருப்பத்தையும் தம் கருத்தையும் தெரிவித்தார். மனைவியார் சிறிது மனம் கலங்கி, உடனே தெளிந்து, நாயனார் கருத்துக்கு இணங்கி அவரைத் தொழுதார். நாயனாரும் அவரை வணங்கினார். இயற்பகையாரும் தன் மனைவியை வேதியருடன் அனுப்பி வைத்தார். "அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்" என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், "நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும்" என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். தடுத்த சுற்றத்தார் அனைவரையும் வென்றார். ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், "நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்"' என்றார். இயற்பகையாரும் அதன்படி திரும்பிக் கூட பார்க்காமல் தன் ஊரை நோக்கி செல்லத் தொடங்கினார்.

         சிவபெருமான், "இவன் மனைவியை விட்டுவிட்டுத் திரும்பியும் பாராமல் செல்கின்றான். இவனுடைய அன்பின் நிலை என்னே, என்னே" என்று வியந்து, "இயற்பகை முனிவா ஓலம், ஓலம், இவ்விடம் விரைந்து வருக" என்று ஓலமிட்டார்.  அந்த ஓலத்தைக் கேட்ட நாயனார், "வந்தேன், வந்தேன், இன்னும் துன்பம் செய்பவர்கள் இருக்கின்றார்களா, அவர்களைத் தொலைத்து விடுகிறேன்" என்று முழங்கிக் கொண்டு விரைந்து ஓடி வந்தார். வந்தவர் மறையவரைக் காணவில்லை, மனைவியை மட்டுமே கண்டார்.

     அந் நிலையில் சிவபெருமான் உமாதேவியாரோடும் விடைமேல் காட்சி தந்து, "அன்பனே, உன் தொண்டின் திறம் எமக்குப் பெருமகிழ்வைத் தந்தது. நீ உன் மனைவியுடன் நம்மோடு வரக் கடவாய்" என்று திருவாய் மலர்ந்து அருளினார்.  நாயனார் விழுந்து, விழுந்து, வணங்கி, வணங்கி, வாழ்த்தி, வாழ்த்தி, ஆனந்தக் கூத்து ஆடினார். இயற்பகை நாயனாரும், அவர்தம் மனைவியாரும் சிவலோகம் எய்தி, இன்ப வாழ்வைப் பெற்றனர்.  இறந்துபட்ட உறவினர்களும் விண்ணுலகை அடைந்து பிறவாத இன்பம் நுகர்ந்தார்கள்.

         தேவேந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்து இறைவனை பூஜித்தாள். தேவலோகத்தில் தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். தனது தாய் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில் இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். அப்போது அம்பாள் பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். எனவே தான் அம்மனுக்கு குயிலினும் இனிமொழியம்மை என்ற திருநாமம் ஏற்பட்டது. இறைவன் சாயாவனேஸ்வரர் தோன்றி இந்திரனிடம் இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை விட்டுவிடும் படியும், இங்கேயே தனது அன்னையுடம் இங்கே வந்து வழிபட்டு நலமடையும் படியும் கூறினார். ஐராவதம் கோவிலை இழுத்துச் செலவதற்காக பூமியை தன் கொம்புகளால் கீறியதால் உண்டான இடத்திலுள்ள தீர்த்தமே கோவிலுக்கு எதிரில் உள்ள ஐராவத தீர்த்தம்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 120
கறைஅணி கண்டர் கோயில்
         காதலால் பணிந்து பாடி,
மறையவர் போற்ற வந்து,
         திருவலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது, பாடும்
         கொடியுடை ஏத்திப் போந்து,
நிறைபுனல் திருச்சாய்க் காடு
         தொழுதற்கு நினைந்து செல்வார்.

         பொழிப்புரை : நஞ்சின் கருமை கொண்ட கழுத்தையுடைய சிவபெருமானது கோயிலைப் பெருவிருப்பால் பணிந்து திருப்பதிகம் பாடியபின், அந்தணர்கள் தம்மைச் சூழ நின்று போற்ற, வெளியே வந்து, `திருவலம்புரம்\' என்ற திருப்பதியில் சிவபெருமானைத் தொழுது `கொடியுடை மும்மதில்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றி, வெளியே வந்து, நிறைந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டுப் பதியைத் தொழுதற்கு நினைந்து செல்பவராய்,


பெ. பு. பாடல் எண் : 121
பன்னகப் பூணி னாரைப்
         பல்லவன் ஈச்ச ரத்துச்
சென்னியால் வணங்கி ஏத்தி,
         திருந்துஇசைப் பதிகம் பாடி,
பொன்னிசூழ் புகாரில்நீடு
         புனிதர்தம் திருச்சாய்க் காட்டு
மன்னுசீர்த்தொண்டர் எல்லாம்
         மகிழ்ந்துஎதிர் கொள்ளப் புக்கார்.

         பொழிப்புரை : பாம்புகளை அணியாய்ப் பூண்ட சிவபெருமானைத் திருப்பல்லவனீச்சரத்தில் தலையினால் வணங்கிப் போற்றி, திருந்தும் இசையையுடைய இரு திருப்பதிகங்களைப் பாடி, காவிரியாறு சூழும் புகார் நகரத்தில் என்றும் எழுந்தருளியிருக்கும் புனிதரான இறைவர் வீற்றிருக்கும் திருச்சாய்க்காட்டில் நிலைபெற்ற பெருஞ்சிறப் பினையுடைய திருத்தொண்டர்கள் மகிழ்வுடன் எதிர்கொள்ளப் புகுந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 122
வான்அளவு உயர்ந்த வாயில்
         உள்வலம் கொண்டு புக்கு,
தேன்அலர் கொன்றை யார்தம்
         திருமுன்பு சென்று தாழ்ந்து,
மான்இடம் தரித்தார் தம்மைப்
         போற்றுவார் "மண்புகார்"என்று
ஊன்எலாம் உருக ஏத்தி
         உச்சிமேற் குவித்தார் செங்கை.

         பொழிப்புரை : புகுந்த பிள்ளையார், அக்கோயிலை வலம் கொண்டு, வானளாவ உயர்ந்த திருவாயிலுள் புகுந்து, தேன் சொரிய மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானின் திருமுன் தாழ்ந்து, மானை இடக்கையிற் கொண்ட சிவபெருமானைப் போற்றுபவராய் `மண்புகார்\' என்ற பதிகத்தைத் தொடங்கி, ஊன் எல்லாம் உருகும்படி ஏத்தி, தம் சிவந்த திருக்கைகளை உச்சியிற் கொண்டு கூப்பி வணங்கினார்.

         குறிப்புரை : இது பொழுது அருளிய பதிகம் `மண்புகார்'(தி.2 ப.41) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.


பெ. பு. பாடல் எண் : 123
சீரினில் திகழ்ந்த பாடல்
         திருக்கடைக் காப்புப் போற்றி,
பாரினில் பொலிந்த தொண்டர்
         போற்றிடப் பயில்வார், பின்னும்
ஏர்இசைப் பதிகம் பாடி
         ஏத்திப்போந்து, இறைவர் வெண்காடு
ஆரும்மெய்க் காதலோடும்
         பணிவதற்கு அணைந்தார் அன்றே.

         பொழிப்புரை : சிறப்புடன் விளங்கும் பாடலால் திருக்கடைக் காப்புச் செய்து போற்றி, உலகில் விளங்கிய திருத்தொண்டர்கள் போற்ற அங்கு இருந்த பிள்ளையார், மேலும், அழகும் இசையும் கொண்ட பதிகத்தைப் பாடிப் போற்றிப் பின், இறைவர் எழுந்தருளி இருக்கும் திருவெண்காட்டினை நிறைந்த மெய்யன்புடன் பணிய, அதுபொழுதே புறப்பட்டார்.

         குறிப்புரை : நொம்பைந்து புடைத்து ஒல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார் அம் பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச் சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும் எம்பந்தம் எனக்கருதி ஏத்துவார்க்கு இடர்கெடுமே. (தி.2 ப.41.பா.11) என்பது இங்குப் போற்றப் பெறும் திருக்கடைக்காப்பாகும். பிள்ளையார் தாம் அருளிய இத்திருப்பாட்டில் உயிர் உறுதி பெறுதற்கு எனக் கொளத் தகும் பிணிப்பாகும் இறைவன் என அருளப் பெற்றிருத்தலின், இப்பதிகம் சீரினில் திகழ்ந்த பாடல் திருக்கடைக் காப்புப் போற்றி என்றார். இத்திருப்பதியில் பின்னும் பாடிய பதிகம் `நித்தலும் நியமம் செய்து' (தி.2 ப.38) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும்.


2.041 திருச்சாய்க்காடு                    பண் - சீகாமரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மண்புகார், வான்புகுவர்,
         மனம்இளையார், பசியாலும்
கண்புகார், பிணிஅறியார்,
         கற்றாரும் கேட்டாரும்
விண்புகார் எனவேண்டா,
         வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டுஎம்
         தலைவன்தாள் சார்ந்தாரே.

         பொழிப்புரை :வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மையான புகாரில் விளங்கும் சாய்க்காட்டுள் மேவிய எம் தலைவன் தாளைச்சார்ந்து அவன் புகழைக்கற்றவரும் கேட்டவரும் நில உலகில் பிறவார், பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வாலும் பசியாலும் இடுக்கண் அடையார். நோய் உறார்.


பாடல் எண் : 2
போய்க்காடே மறைந்துஉறைதல்
         புரிந்தானும், பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக
         உடையானும், விடையானும்,
வாய்க்காடு முதுமரமே
         இடமாக வந்துஅடைந்த
பேய்க்குஆடல் புரிந்தானும்
         பெரியோர்கள் பெருமானே.

         பொழிப்புரை :இடுகாட்டுள் மறைந்து உறைதலை விரும்புபவனும், பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காட்டைப் பதியாக உடையவனும், விடையூர்தியனும், காட்டில் உள்ள முதிய ஆலமரத்தை இடமாகக்கொண்ட பேயின் பாடலுக்கு ஏற்ப ஆடுபவனும் ஆகிய சிவபிரான் பெரியோர்களின் தலைவன் ஆவான்.


பாடல் எண் : 3
நீநாளும் நல்நெஞ்சே
         நினைகண்டாய், யார்அறிவார்
சாநாளும் வாழ்நாளும்,
         சாய்க்காட்டுஎம் பெருமாற்கே
பூநாளும் தலைசுமப்ப,
         புகழ்நாமம் செவிகேட்ப,
நாநாளும் நவின்றுஏத்தப்
         பெறலாமே நல்வினையே.

         பொழிப்புரை :நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள். ஆதலின் சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும் செவிகளால் அவன் புகழ் மொழிகளைக்கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப்பயன் பெறலாம்.

  
பாடல் எண் : 4
கட்டுஅலர்த்த மலர்தூவிக்
         கைதொழுமின், பொன்னியன்ற
தட்டுஅலர்த்த பூஞ்செருந்தி
         கோங்குஅமரும் தாழ்பொழில்வாய்
மொட்டுஅலர்த்த தடந்தாழை
         முருகுஉயிர்க்கும் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டுஎம்
         பரமேட்டி பாதமே.

         பொழிப்புரை :பொன்தட்டுப் போல மலர்ந்த செருந்தி, கோங்கு முதலிய மரங்கள் பொருந்திய தாழ்ந்த பொழிலிடத்துத் தாழைமலர்கள் மொட்டுக்களை விரித்து மணம் பரப்பும் காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காட்டுப் பரமேட்டியின் பாதங்களை வண்டுகளால் கட்ட விழ்க்கப்பட்ட மலர்களைத் தூவிக் கைகூப்பி வணங்குமின்.


பாடல் எண் : 5
கோங்குஅன்ன குவிமுலையாள்
         கொழும்பணைத்தோள் கொடிஇடையைப்
பாங்குஎன்ன வைத்துஉகந்தான்,
         படர்சடைமேற் பான்மதியம்
தாங்கினான், பூம்புகார்ச்
         சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினார் ஓங்கினார்
         எனஉரைக்கும் உலகமே.

         பொழிப்புரை :கோங்கரும்பு போன்ற தனங்களையும், செழுமையான மூங்கில் போன்ற தோள்களையும் கொடிபோன்ற இடையினையும் உடைய உமையம்மையைத் தன் பாகமாக வைத்து மகிழ்பவனும், தன் திருமுடிமேல் பால்போன்ற வெள்ளிய மதியைச்சூடியவனுமான பூம்புகார்ச் சாய்க்காட்டு இறைவனின் திருவடி நீழலில் ஓங்கி நின்றவரே ஓங்கினார் எனப்படுவார்.


பாடல் எண் : 6
சாந்துஆக நீறுஅணிந்தான்
         சாய்க்காட்டான், காமனைமுன்
தீந்துஆகம் எரிகொளுவச்
         செற்றுஉகந்தான், திருமுடிமேல்
ஓய்ந்துஆர மதிசூடி,
         ஒளிதிகழும் மலைமகள்தோள்
தோய்ந்துஆகம் பாகமா
         உடையானும் விடையானே.

         பொழிப்புரை :சந்தனம் போலத்திருநீற்றை உடல் முழுவதும் அணிந்தவன். சாய்க்காட்டில் உறைபவன். காமனின் உடல் தீயுமாறு எரிகொளுவச் செய்தவன். திருமுடியில் நுணுகிய மதியைச் சூடியவன். ஒளிதிகழும் மலைமகள் தோளைத் தோய்ந்து அவளைப் பாகமாகக் கொண்டவன். விடையூர்தியன்.


பாடல் எண் : 7
மங்குல்தோய் மணிமாடம்
         மதிதவழு நெடுவீதிச்
சங்குஎலாம் கரைபொருது
         திரைபுலம்பும் சாய்க்காட்டான்
கொங்குஉலா வரிவண்டுஇன்
         இசைபாடு மலர்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச்
         சுவர்க்கங்கள் பொருள்அலவே.

         பொழிப்புரை :மேகங்களைத் தோயுமாறு உயர்ந்து விளங்கும் அழகியமாட வீடுகளின் வெண்ணிற ஒளியை உடைய வீதிகளைக் கொண்டதும், சங்குகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் அலைகளின் ஆரவாரம் கேட்பதுமாய சாய்க்காட்டு இறைவன், தேன் உண்ணவந்த வரிவண்டுகள் இன்னிசைபாடும் மலர் மாலைகளை அணிந்தவன். அப்பெருமானை அடைந்த அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருள் எனத்தோன்றா.


பாடல் எண் : 8
தொடல்அரியது ஒருகணையால்
         புரமூன்றும் எரிஉண்ணப்
படஅரவத்து எழில்ஆரம்
         பூண்டான், பண்டு அரக்கனையும்
தடவரையால் தடவரைத்தோள்
         ஊன்றினான் சாய்க்காட்டை
இடவகையா அடைவோம்என்று
         எண்ணுவார்க்கு இடர்இலையே.

         பொழிப்புரை :தொடற்கரிய வெம்மையையுடைய ஒருகணையால் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவனும் படப்பாம்பை அணிகலனாகப் பூண்டவனும், முற்காலத்தே இராவணனைக் கயிலை மலையால் பெரிய தோள்களை ஊன்றி நெரித்தவனும் ஆகிய சிவபிரானது சாய்க்காட்டைச் சிறந்த ஒரு தலம் எனக்கருதி அடைவோர்க்கு இடர் இல்லை.


பாடல் எண் : 9
வையநீர் ஏற்றானும்
         மலர்உறையும் நான்முகனும்
ஐயன்மார் இருவர்க்கும்
         அளப்புஅரிதால் அவன்பெருமை
தையலார் பாட்டுஓவாச்
         சாய்க்காட்டுஎம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார்
         தெளிவுடைமை தேறோமே.

         பொழிப்புரை --  இவ்வுலகை நீர்வார்த்துத்தர ஏற்ற திருமாலும், தாமரைமலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருதலைமைத் தேவர்க்கும் அவன் பெருமை அளந்து காணுதற்கு அரியதாகும். மகளிர்பாடும் இசைப்பாடல் ஓவாதே கேட்கும் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாக விரும்பாதார் ஞானம்பெறார்.


பாடல் எண் : 10
குறங்குஆட்டும் நால்விரலில்
         கோவணத்துக்கு உலோவிப்போய்
அறங்காட்டும் சமணரும்
         சாக்கியரும் அலர்தூற்றும்
திறங்காட்டல் கேளாதே,
         தெளிவுடையீர், சென்றுஅடைமின்,
புறங்காட்டில் ஆடலான்
         பூம்புகார்ச் சாய்க்காடே.

         பொழிப்புரை :தொடைகளில் அடையும் நால்விரல் கோவண ஆடையோடு உலாவித்திரிந்து அறம் போலக்கூறும் சமண் சாக்கியர்கள் பழித்துரை கூறும் திறங்களைக் கேளாது, சுடுகாட்டில் நடனம் ஆடும் பூம்புகார்ச்சாய்க்காட்டு இறைவன் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக.


பாடல் எண் : 11
நொம்பைந்து புடைத்துஒல்கு
         நூபுரம்சேர் மெல்அடியார்
அம்பந்தும் வரிக்கழலும்
         அரவஞ்செய் பூங்காழிச்
சம்பந்தன் தமிழ்பகர்ந்த
         சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்தம் எனக்கருதி
         ஏத்துவார்க்கு இடர்கெடுமே.

         பொழிப்புரை :பந்து நோகுமாறு அதனைப் புடைத்துக்கொண்டு பாதங்களில் அணிந்த நூபுரம் ஒலிக்க அழகிய பந்துகளும் கழற்சிக்காய்களும் கொண்டு விளையாடி மகளிர் ஆரவாரிக்கும் அழகிய காழிப்பதியுள்தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப்பாடல்கள் பத்தையும் எமக்குப் பற்றுக்கோடு எனக்கருதிச் சாய்க்காட்டு இறைவனை ஏத்துவார்க்கு இடர்கள் கெடும்.
                                             திருச்சிற்றம்பலம்


2.038 திருச்சாய்க்காடு                    பண் - இந்தளம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நித்தலும் நியமஞ் செய்து, நீர்மலர் தூவி,
சித்தம் ஒன்றவல்லார்க்கு அருளுஞ் சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகரம் மேவுசாய்க் காடே.

         பொழிப்புரை :நாள்தோறும் நியமமாக நீரையும் மலரையும் தூவி மனம் ஒன்றி வழிபடுவார்க்கு அருள்புரியும் சிவபிரான் உறையும் கோயில், மதயானைகளின் தந்தங்களையும், மயிலினது வளமான பீலிகளையும் வாரித்தவழ்ந்துவரும் நீரினை உடைய காவிரியாறு கடலிடைக் கலக்கும் இடத்தே அமைந்துள்ளதிருச்சாய்க்காடு ஆகும்.


பாடல் எண் : 2
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின் றாடும்
வெண் தலைக் கருங் காடுஉறை வேதியன் கோயில்
கொண்டலைத் திகழ் பேரி முழங்கக் குலாவித்
தண்டலைத் தட மாமயில் ஆடுசாய்க் காடே.

         பொழிப்புரை :பண்ணிசையோடு பூதங்கள் பாட நின்று ஆடுகின்றவனும் வெண்மையான தலையோடுகளை உடைய கரிய காட்டில் உறைபவனும் ஆகிய வேதியன் கோயில், மேகங்களைப் போலப் பேரிகைகள் முழங்கச் சோலைகளில் பெரிய மயில்கள் குலாவிஆடும் திருச்சாய்க்காடு ஆகும்.

  
பாடல் எண் : 3
நாறு கூவிள நாகுஇள வெண்மதி யத்தோடு
ஆறு சூடும் அமரர் பிரான்உறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலைத்
தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே.

         பொழிப்புரை :மணம்வீசும் வில்வம், மிக இளையபிறை ஆகியவற்றோடு கங்கையையும் முடியில் சூடும் அமரர்தலைவனாகிய சிவபிரான் உறையும் கோயில், சுவை ஊறுகின்ற தெங்கின் காய் மாங்கனி ஆகியன ஒங்கிய சோலைகளும், குளிர்ந்த பழத்தாறுகளை உடைய வாழைப்புதர்களும் பொருந்திய சாய்க்காடு ஆகும்.


பாடல் எண் : 4
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
இரங்கல் ஓசையும் ஈட்டிய சரக்கொடும் ஈண்டித்
தரங்க நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.

         பொழிப்புரை :வரங்கள் பலவும் தரும் வளமையான புகழ் பொருந்திய எந்தையும், பகைவரின் முப்புரங்கள் பொடியாகுமாறு கணைஎய்து அழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில், நெய்தல் நிலத்துக்குரிய இரங்கல் ஓசையைக் கொண்டதும் வணிகர்கள் சேர்த்த சரக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பதும் ஆகிய கடலினது நீண்ட கழியின் குளிர்ந்த கரையில் அமைந்த திருச்சாய்க்காடு ஆகும்.


பாடல் எண் : 5
ஏழை மார்கடை தோறும் இடுபலிக்கு என்று
கூழை வாள்அரவு ஆட்டும் பிரான்உறை கோயில்
மாழை ஒண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே.

         பொழிப்புரை :மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் இடும் பலிக்காகக் கூழையான ஒளிபொருந்திய பாம்பை ஆடச் செய்து மகிழ்விக்கும் பரமன் உறையும் கோயில், பொன் போன்ற ஒண்கண்ணையும், வளையணிந்த கையையும உடைய நுளைச்சியர் வளமையான தாழை மரத்தில் பூத்துள்ள மலரின் வெண்மடல்களைக் கொய்து மகிழும் திருச்சாய்க்காடு ஆகும்.

  
பாடல் எண் : 6
துங்க வானவர் சூழ்கடல் தாம்கடை போதில்
அங்கொர் நீழல் அளித்தஎம் மான்உறை கோயில்
வங்கம் அங்குஒளிர் இப்பியும் முத்து மணியும்
சங்கும் வாரித் தடங்கடல் உந்துசாய்க் காடே.

         பொழிப்புரை :உயர்வுடைய தேவர்கள், உலகைச் சூழ்ந்துள்ள கடலைத்தாங்கள் கடையும் பொழுது எழுந்த நஞ்சினை உண்டு அவர்கட்கு அருள் நிழல் தந்த எம்தலைவன் உறையும் கோயில், பெரிதான கடல், மரக்கலங்களையும், அதன்கண் ஒளிர்கின்ற இப்பி, முத்து, மணி, சங்கு ஆகியவற்றையும் வாரி வந்து சேர்க்கும் திருச்சாய்க்காடு ஆகும்.


பாடல் எண் : 7
வேத நாவினர், வெண்பளிங் கின்குழைக் காதர்,
ஓத நஞ்சுஅணி கண்டர் உகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதல்வண்டு ஆடிய புன்னைத்
தாது கண்டு பொழின்மறைந்து ஊடுசாய்க் காடே.

         பொழிப்புரை :வேதங்களை அருளிய நாவினர். வெண்மையான பளிங்கால் இயன்ற குழையணிந்த காதினர். கடலிடை எழுந்த நஞ்சினை நிறுத்திய கண்டத்தை உடையவர். அத்தகைய சிவபிரானார் எழுந்தருளிய கோயில், பெண் வண்டு தன்மீது காதல் உடைய ஆண் வண்டோடு புன்னைமலர்த்தாதில் ஆடி மகிழ்ந்து பின் பொழிலிடை மறைந்து ஊடும் சாய்க்காடாகும்.


பாடல் எண் : 8
இருக்கு நீள்வரை பற்றி அடர்த்துஅன்று எடுத்த
அரக்கன் ஆகம் நெரித்துஅருள் செய்தவன் கோயில்
மருக்கு லாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக்கு லாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே.

         பொழிப்புரை :தான் வீற்றிருக்கும் நீண்ட கயிலைமலையைப் பற்றிப் பெயர்த்து எடுத்த இராவணனின் உடலை நெரித்துப் பின் அருள்செய்த சிவபிரானது கோயில், மணம் பொருந்திய மல்லிகை, சண்பகம் ஆகிய வளமான பூக்களைக்கொண்ட மரங்கள் விளங்கும் தண்பொழில்களை உடைய சாய்க்காடாகும்.


பாடல் எண் : 9
மாலி னோடுஅயன் காண்டற்கு அரியவர், வாய்ந்த
வேலை ஆர்விடம் உண்டவர் மேவிய கோயில்
சேலின் நேர்விழி யார்மயில் ஆலச் செருந்தி
காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.

         பொழிப்புரை :திருமால் பிரமர்களால் காணுதற்கு அரியவனும் பொருந்திய கடலிடை எழுந்த விடத்தை உண்டவனும், ஆகிய சிவபெருமான் உறையும் கோயில், சேல்மீன் போன்றகண்களைக் கொண்ட மகளிர் வாழ்வதும், தோகையை விரித்து மயில்கள் ஆடுவதும் செருந்திமரங்கள் செம்பொன் போலக் காலையில் மலர்ந்து மணம் பரப்புவதுமான சாய்க்காடு ஆகும்.


பாடல் எண் : 10
ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க்கு என்றும்
ஆத்தம் ஆக அறிவுஅரிது ஆயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.

         பொழிப்புரை :அழுக்கேறிய வாயினை உடைய சமணர்களாகிய கீழ் மக்களுக்கும் சாக்கியர்களுக்கும் எக்காலத்தும் அன்புடையனாதலின்றி அறிதற்கும் அரிதாயிருப்பவனது கோயில், ஏற்புடைய மாளிகைகள் சூழ்ந்த புகார் நகரின் அருகே பூத்துள்ள மலர் வாவிகள் சூழ்ந்து பொலியும் சாய்க்காடாகும்.


பாடல் எண் : 11
ஏனை யோர்புகழ்ந்து ஏத்திய எந்தைசாய்க் காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும்
ஊனம் இன்றி உரைசெய வல்லவர் தாம்போய்
வான நாடுஇனிது ஆள்வர்இம் மானிலத் தோரே.

         பொழிப்புரை :சமண பௌத்தர்கள் அன்றி ஏனையோர்புகழ்ந்து ஏத்தும் எம்தந்தையாகிய இறைவர் விளங்கும் சாய்க்காட்டை, காழியர் கோனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் குற்றமற்றவகையில் உரைசெய்து வழிபட வல்ல இம் மாநிலத்தோர் வான நாடு சென்று இனிதாக அரசாளுவர்.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 189
ஆண்டஅரசு எழுந்தருளக் கோலக் காவை
         அவரோடும் சென்றுஇறைஞ்சி, அன்பு கொண்டு
மீண்டுஅருளி னார்,அவரும் விடைகொண்டு, இப்பால்
         வேதநா யகர்விரும்பும் பதிகள் ஆன
நீண்டகருப் பறியலூர், புன்கூர், நீடூர்,
         நீடுதிருக் குறுக்கை,திரு நின்றி யூரும்,
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணி,
         கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசர் எழுந்தருளவே அவருடன் சென்று திருக்கோலக்காவைப் பணிந்து அன்பு விடைபெற்று ஞானசம்பந்தர் திரும்பினார். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு மேலும் மறைமுதல்வரான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகளாய பெருமைமிக்க திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடுர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின்றியூர், காணும் தகைமையுடைய திருநனிபள்ளி என்ற இவை முதலான பதிகளைச் சேர்ந்து நெற்றிக்கண் உடையவரின் திருவடிகளை வணங்கி மேற்செல்பவராய்.

         குறிப்புரை : திருக்கோலக்காவில் அப்பர் அருளிய பதிகம் கிடைத்திலது. இனி இப்பாடலில் குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஆறனுள் திருக்கருப்பறியலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. அடுத்து இருக்கும் திருப்புன்கூர், திருநீடுர் ஆகிய இரு பதிகளுக்கும் ஒருங்கியைந்தவாறு ஒரு பதிகம் உள்ளது. அது `பிறவாதே தோன்றிய`(தி.6 ப.11) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும்.

         திருக்குறுக்கை வீரட்டத்திற்கு இரு பதிகங்கள் கிடைத்து உள்ளன.

1. `ஆதியிற் பிரமனார்` (தி.4 ப.49)- திருநேரிசை;
2. `நெடியமால்` (தி.4 ப.50) - திருநேரிசை.

         இவற்றுள் முன்னைய பதிகத்தில் பாடல் தோறும் வரலாறுகள் அமைந்துள்ளன. இரண்டாவது பதிகத்தில் இரண்டே பாடல்கள் உள்ளன. திருநின்றியூரில் அருளிய திருக்குறுந்தொகைப் பதிகம் `கொடுங்கண் வெண்டலை` (தி.5 ப.23) என்பதாம். திருநனிபள்ளியில் அருளிய பதிகம் `முற்றுணை ஆயினானை` (தி.4 ப.70) எனத் தொடங்கும் திருநேரிசையாம்.

         இனி, இப்பாடற்கண் நனிபள்ளி முதலா நண்ணி என வருதலின் வேறு பிற பதிகளும் தொழுது சென்றமை விளங்குகின்றது. அப்பதிகளும் பாடியருளிய பதிகங்களும்:

1.    திருக்குரக்குக்கா: `மரக்கொக்காம்` (தி.5 ப.75) – திருக்குறுந்தொகை.

2.     புள்ளிருக்கு வேளூர்:
        (அ). `வெள்ளெருக்கு` (தி.5 ப.79) - திருக்குறுந்தொகை;
        (ஆ). `ஆண்டானை` (தி.6 ப.54) - திருத்தாண்டகம்.

3.    திருவெண்காடு:
        (அ). `பண்காட்டி` (தி.5 ப.49) - திருக்குறுந்தொகை
        (ஆ). `தூண்டுசுடர்` (தி.6 ப.35) - திருத்தாண்டகம்.

4.    திருச்சாய்க்காடு:
        (அ) `தோடுலாமலர்` (தி.4 ப.65) - திருநேரிசை.
        (ஆ). `வானத்து இளமதியும்` (தி.6 ப.82) - திருத்தாண்டகம்.

5.     திருவலம்புரம்:
        (அ). `தெண்டிரை` (தி.4 ப.55) - திருநேரிசை
        (ஆ). `மண்ணளந்த` (தி.6 ப.58) - திருத்தாண்டகம்.


4. 065    திருச்சாய்க்காடு                           திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தோடுஉலா மலர்கள் தூவித்
         தொழுதுஎழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற்று என்று,
         மெய்கொள்வான் வந்த காலன்,
பாடுதான் செலலும் அஞ்சிப்
         பாதமே சரணம் என்னச்
சாடினார் காலன் மாள,
         சாய்க்காடு மேவி னாரே.

         பொழிப்புரை : இதழ்களை உடைய பூக்களால் அர்ச்சித்துத் தொழுது எழுந்த மார்க்கண்டேயன் இறக்கும் நேரம் அணுகிவிட்டது என்று அவன் பொய்யான உடலிலிருந்து மெய்யான உயிரைப் பிரித்து எடுத்துச் செல்ல வந்த கூற்றுவன் அவன் பக்கம் அணுக , அவன் பயந்து சிவபெருமானுடைய திருவடிகளே தனக்குச் சரணம் என்று சொன்ன அளவில் சாய்க்காட்டில் விரும்பி உறையும் பெருமானார் கூற்றுவன் மாயுமாறு உதைத்தார் .


பாடல் எண் : 2
வடங்கெழு மலைமத்து ஆக
         வானவர் அசுர ரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம்
         கண்டு பல்தேவர் அஞ்சி
அடைந்துநும் சரணம் என்ன
         அருள்பெரிது உடையர் ஆகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார்
         சாய்க்காடு மேவி னாரே.

         பொழிப்புரை : பாம்பாகிய கடை கயிறு கோக்கப்பட்ட மந்தர மலையை மத்தாகக்கொண்டு தேவர்கள் அசுரரோடு பாற்கடலைக் கடைய , எழுந்த விடத்தைக் கண்டு பல தேவர்களும் அஞ்சிச் சிவ பெருமானை அடைந்து ` நும்மையே அடைக்கலம் அருளுபவராகக் கொண்டுள்ளோம் ` என்று வேண்டப் பேரருள் உடையவராய் கடல் நஞ்சினை உண்ட பிரான் திருச்சாய்க்காட்டில் எழுந்தருளியுள்ளார் .


பாடல் எண் : 3
அரண்இலா வெளிய நாவல்
         அருநிழல் ஆக ஈசன்
வரண்இயல் ஆகித் தன்வாய்
         நூலினால் பந்தர் செய்ய
முரண்இலாச் சிலந்தி தன்னை
         முடிஉடை மன்னன் ஆக்கித்
தரணிதான் ஆள வைத்தார்
         சாய்க்காடு மேவி னாரே.

         பொழிப்புரை : காவல் அற்ற வெட்ட வெளியில் வளர்ந்த வெண்ணாவல் மரத்தின் குறுகிய நிழலில் சிவபெருமான் இருந்தானாக , தான் இறைவனுடைய அடிமை என்ற கருத்தில் மாறுபாடில்லாத சிலந்தி அம்மரத்தைச் சூழ்ந்து தன் வாய் நூலினால் வெயிலைத் தடுத்து நிழலைச் செய்யும் பந்தரை அமைக்க அச்சிலந்தியை அடுத்த பிறப்பில் முடிசூடும் மன்னனாக்கி உலகை ஆளுமாறு செய்தார் சாய்க்காடு மேவிய சிவபெருமான் .


பாடல் எண் : 4
அரும்பெருஞ் சிலைக்கை வேடன்
         ஆய்விறல் பார்த்தற்கு அன்று
உரம்பெரிது உடைமை காட்டி
         ஒள்அமர் செய்து மீண்டே,
வரம்பெரிது உடையன் ஆக்கி
         வாள்அமர் முகத்தின் மன்னும்
சரம்பொலி தூணி ஈந்தார்
         சாய்க்காடு மேவி னாரே.

         பொழிப்புரை : பெரிய வில்லைக் கையில் ஏந்திய வேட உருவினராய் , ஆற்றல் மிக்க அருச்சுனனுக்கு அவன் தவம் செய்துகொண்டு இருந்த காலத்தில் தம்முடைய பேராற்றலை வெளிப்படுத்தி அவனொடு போர்செய்து , பின்னர்ச் சாய்க்காடு மேவிய பெருமான் அவனைப் பெருமை மிகவும் உடையவனாக்கிப் போர் முகத்தில் நிலைபெற அம்புகள் பொலிகின்ற அம்புப் புட்டிலை அவனுக்கு வழங்கினார் .


பாடல் எண் : 5
இந்திரன் பிரமன் அங்கி
         எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறையது ஓதி
         வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம் அறியாத் தக்கன்
         வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற்கு அருள்செய் தாரும்
         சாய்க்காடு மேவி னாரே.

         பொழிப்புரை : இந்திரன் , பிரமன் , அக்கினி , எட்டு வசுக்கள் இவர்களோடு வேதமந்திரங்களை ஓதித் தேவர்கள் வணங்கி வாழ்த்த , எது செயற்பாலது என்பதனை அறியாத தக்கனுடைய வேள்வியை அழித்தபோது சந்திரனுக்கு அருள் வழங்கினவர் சாய்க்காட்டுப் பெருமான் .


பாடல் எண் : 6
ஆமலி பாலு நெய்யும்
         ஆட்டிஅர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப்
         பொறாததன் தாதை தாளைக்
கூர்மழு ஒன்றால் ஓச்சக்
         குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமம்நல் சண்டிக்கு ஈந்தார்
         சாய்க்காடு மேவி னாரே.

         பொழிப்புரை : பசுவிலிருந்து வெளிப்படும் வெண்ணெய்ப் பிடிப்புடைய பாலை அபிடேகம் செய்து அர்ச்சனைகள் சொல்லிப் பூக்களில் மேம்பட்ட கொன்றை மலர்களைத் தான் வழிபட்ட இலிங்கத்திற்கு விசாரசருமனார் சூட்ட , அவற்றைப் பொறாது பூசனையை அழிக்க முற்பட்ட தன் தந்தையின் காலை அவன் கூரிய மழுவினால் வெட்டவே , அவரை சண்டீசன் ஆக்கித் தாம்சூடிய கொன்றை மாலையை அணியும் உரிமையை அவருக்கு வழங்கினார் சாய்க்காடு மேவிய பெருமான் .


பாடல் எண் : 7
மைஅறு மனத்தன் ஆய
         பகீரதன் வரங்கள் வேண்ட,
ஐயம் இல்அமரர் ஏத்த,
         ஆயிர முகம் அதுஆகி,
வையகம் நெளியப் பாய்வான்
         வந்துஇழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார்
         சாய்க்காடு மேவி னாரே.

         பொழிப்புரை : குற்றமற்ற மனத்தை உடைய பகீரதன் வரங்களால் வேண்டிய அளவில் , சிவபெருமானுடைய பேராற்றலில் ஐயம் ஏதும் இல்லாத தேவர்கள் போற்ற , ஆயிரம் கிளைகளை உடையதாகி இவ் வுலகமே நெளியுமாறு பாய்வதற்காக வானத்திலிருந்து இறங்கிய கங்கை என்ற பெண்ணை தம் சடையில் ஏற்றுள்ளவர் சாய்க்காடு மேவிய பெருமான் .


பாடல் எண் : 8
குவப்பெருந் தடக்கை வேடன்
         கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம்
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித்
         தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர
         ஒருகணை இடந்துஅங்கு அப்பத்
தவப்பெருந் தேவு செய்தார்
         சாய்க்காடு மேவி னாரே.

         பொழிப்புரை : திரண்ட பெரிய தோளினை உடைய திண்ணனார் , ஒரு கையில் வளைந்த வில்லும் , மறு கையில் இறைச்சிப் பாரமுந் தாங்கியிருந்தமையால் காளத்திப் பெருமானுக்கு முன்பு சூட்டப் பட்டிருந்த பூக்களைச் செந்நிறம் பொருந்திய தம் காற் செருப்பினால் நீக்கித் தன் தூய வாயாகிய கலசத்தில் மொண்டு வந்த நீரினால் அப் பெருமானுக்கு அபிடேகம் செய்து பூசிக்க , அதனை உவந்த பெருமான் தம் கண்ணில் உதிரம் ஒழுகச் செய்ய , ஓரம்பினால் தம் கண்ணைப் பெயர்த்துக் குருதி சோரும் கண்ணில் அப்பவே , திண்ணனாரை மிகப் பெரிய தெய்வமாகச் செய்துவிட்டார் சாய்க்காடு மேவிய பெருமான் .


பாடல் எண் : 9
நக்குலா மலர்பல் நூறு
         கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான்
         மென்மலர் ஒன்று காணாது
ஒக்கும்என் மலர்க்கண் என்றுஅங்கு
         ஒருகணை இடந்தும் அப்பச்
சக்கரம் கொடுப்பர் போலும்
         சாய்க்காடு மேவி னாரே.

         பொழிப்புரை : விரிந்து மணம் வீசும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு சிவபெருமானைப் பரம் பொருள் என்ற அறிவினோடு மேம்பட்ட பூசனை புரியும்போது மென்மையான பூ ஒன்று குறையத் தம்கண் தாமரைப் பூவினை ஒக்கும் என்று திருமால் தம் கண் ஒன்றை அம்பினால் பெயர்த்து மலராகக் கொண்டு அர்ச்சிக்க அதனால் மகிழ்ந்த அவர் வேண்டிய சக்கிராயுதத்தை அத்திருமாலுக்கு வழங்கினார் சாய்க்காட்டில் உறையும் சிவபெருமான்.


பாடல் எண் : 10
புயங்கம்ஐஞ் ஞான்கும் பத்தும்
         ஆயகொண்ட அரக்கன் ஓடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத்
         திருமலர்க் குழலி அஞ்ச
வியன்பெற எய்தி வீழ
         விரல்சிறிது ஊன்றி மீண்டே
சயம்பெற நாமம் ஈந்தார்
         சாய்க்காடு மேவி னாரே.

         பொழிப்புரை : இருபது புயங்களும் பத்துத் தலைகளும் கொண்ட இராவணன் ஓடிச் சென்று சிவபெருமானுடைய கயிலைமலையைப் பெயர்க்க , அதனால் அழகிய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதி அஞ்ச , அப்போது அவன் வலிமை நிலை வேறுபாடெய்தி அவன் விழுமாறு சிவன் தம் விரலைச் சிறிது ஊன்றி , அவன் உளம் திருந்தி வழிபட்ட அளவில் அவன் வெற்றி பெறுமாறு அவனுக்குச் இராவணன் என்ற பெயரை வழங்கினார் சாய்க்காட்டுப் பெருமான் ஆகிய சிவனார் . புயங்கம் ஐந்நான்கும் - பாடம் .
திருச்சிற்றம்பலம்




6. 082     திருச்சாய்க்காடு        திருத்தாண்டகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வானத்து இளமதியும் பாம்பும் தம்மில்
         வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்,
தேனைத் திளைத்துஉண்டு வண்டு பாடும்
         தில்லை நடமாடும் தேவர் போலும்,
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்,
         நன்மையும் தீமையும் ஆனார் போலும்,
தேன்ஒத்து அடியார்க்கு இனியார் போலும்,
         திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே வானத்து விளங்கிய இளமதியும் பாம்பும் தம்முள் நிலவும் பகை நீங்கி வாழ அவற்றை நீள் சடைமேல் வைத்தவரும் , வண்டு தேனை உண்டு மகிழ்ந்து பாடும் தில்லையில் நடனமாடும் தேவரும் , ஞானமாகிய ஒளிப்பிழம்பாய் நின்றவரும் , நன்மையும் தீமையும் ஆனவரும் , அடியார்க்குத் தேன் போன்று தித்திப்பவரும் ஆவார் .


பாடல் எண் : 2
விண்ணோர் பரவநஞ்சு உண்டார் போலும்,
         வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்,
அண்ணா மலைஉறையும் அண்ணல் போலும்,
         அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்,
பண்ஆர் களிவண்டு பாடி ஆடும்
         பராய்த்துறையுள் மேய பரமர் போலும்,
திண்ஆர் புகார்முத்து அலைக்கும் தெண்ணீர்த்
         திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :மணல்செறிந்த புகாரின்கண் முத்துக்களை எறிகின்ற தெளிந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , விண்ணோர்கள் தொழுதுவேண்ட நஞ்சுண்டவரும் , பரந்த துருத்தியிடத்தும் வேள்விக்குடியிடத்தும் உறைபவரும் , அண்ணா மலையில் உறையும் அண்ணலவரும் , அதியரைய மங்கையில் அமர்ந்தவரும் , மிக்குப் பொருந்திய மதுக்களிப்பையுடைய வண்டுகள் பண்ணினைப் பாடிப் பறந்துலவும் பராய்த்துறையிடத்து மேவிய பரமரும் ஆவார் .


பாடல் எண் : 3
கான்இரிய வேழம் உரித்தார் போலும்,
         காவிரிப்பூம் பட்டினத்து உள்ளார் போலும்,
வான்இரிய வருபுரம்மூன்று எரித்தார் போலும்,
         வடகயிலை மலையதுதம் இருக்கை போலும்,
ஊன்இரிஅத் தலைகலனா உடையார் போலும்,
         உயர்தோணி புரத்துஉறையும ஒருவர் போலும்,
தேன்இரிய மீன்பாயும் தெண்ணீர்ப் பொய்கைத்
         திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :மலர்களிடத்துத் தேன் ஒழுகும் வண்ணம் மீன்கள் அவற்றைத் தாக்குகின்ற தெளிந்த நீர்ப் பொய்கைகள் மிக்க திருச் சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே காட்டினின்றும் மற்ற விலங்குகள் நீங்கிப்போமாறுவரும் களிற்றியானையை உரித்தவரும் , காவிரிப்பூம்பட்டினத்து உள்ளவரும் , தேவர்கள் கெட்டோடும் வண்ணம் வானத்தில் பறந்து வரும் திரிபுரங்களையும் எரித்தவரும் , வடகயிலையைத் தம் இருக்கையாகக் கொண்டவரும் , தசை நீங்கிய அத்தலையை உண்கலமாக உடையவரும் , பிரளய காலத்து ஊழி வெள்ளத்து மேலே உயர்ந்து விளங்கும் தோணிபுரத்து உறையும் ஒப்பற்றவரும் ஆவார் .


பாடல் எண் : 4
ஊன்உற்ற வெண்தலைசேர் கையர் போலும்,
         ஊழி பலகண்டு இருந்தார் போலும்,
மான்உற்ற கரதலம்ஒன்று உடையார் போலும்,
         மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்,
கான்உற்ற ஆடல் அமர்ந்தார் போலும்,
         காமனையும் கண்அழலால் காய்ந்தார் போலும்,
தேன்உற்ற சோலை திகழ்ந்து தோன்றும்
         திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :தேன் நிறைந்த சோலைகளின் நடுவில் விளங்கித் தோன்றும் திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே , தசை பொருந்தி இருந்த வெள்ளிய தலையோடு சேர்ந்த கையினரும் , பல ஊழிகளைக் கண்டவரும் , மான் பொருந்திய கரதலம் ஒன்றுடையவரும் , திருமறைக்காட்டை அணுகியுள்ள கோடிக்கரையில் மகிழ்ந்து உறைபவரும் , காட்டில் ஆடலை விரும்பியவரும் , காமனைக் கண்ணிடத்துத் தோன்றிய அழலால் அழித்தவரும் ஆவார் .


பாடல் எண் : 5
கார்மல்கு கொன்றைஅம் தாரார் போலும்,
         காலனையும் ஓர்உதையால் கண்டார் போலும்,
பார்மல்கி ஏத்தப் படுவார் போலும்,
         பருப்பதத்தே பல்ஊழி நின்றார் போலும்,
ஊர்மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்,
         ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்,
சீர்மல்கு பாடல் உகந்தார் போலும்,
         திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே கார் காலத்தில் நிரம்பப் பூக்கும் கொன்றைப் பூவாலாகிய தாரினை உடையவரும் , காலனை ஓருதையால் வீழக்கண்டவரும் , நிறைந்து நின்று பூமியினுள்ளாரால் புகழப் படுபவரும் , திருப்பருப்பதத்தில் எக்காலத்தும் மகிழ்ந்து நின்றவரும் , மிக்க பிச்சை பெறுதற்காக ஊரின்கண் அலைபவரும் , ஓத்தூரை ஒருகாலும் நீங்காதவரும் , தாள அறுதியுடன் கூடிய பாடலை விரும்புபவரும் ஆவார் .


பாடல் எண் : 6
மாவாய் பிளந்துஉகந்த மாலும் செய்ய
         மலரவனும் தாமேஆய் நின்றார் போலும்,
மூவாத மேனி முதல்வர் போலும்,
         முதுகுன்ற மூதூர் உடையார் போலும்,
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்
         குரைகழலால் அன்று குமைத்தார் போலும்,
தேவாதி தேவர்க்கு அரியார் போலும்,
         திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, கேசி என்னும் குதிரையின் வாயைக் கிழித்து மகிழ்ந்த திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற நான்முகனும் ஆகிய இருவரும் தாமேயாய் நின்றவரும், என்றும் மாறுபடாமல் ஒருபடித்தாய்த் திகழும் மேனியுடைய முதல்வரும் , முதுகுன்றமாகிய மூதூரினரும், முனிவர் தலைவனாகிய மார்க்கண்டேயன் மேல் வந்த கூற்றுவனை ஒலிக்கும் கழல் அணிந்த பாதத்தால் அன்று உதைத்தழித்தவரும் தேவர்க்குத் தலைவர் ஆகிய பிரமவிட்டுணு இந்திரர்க்கு அரியவரும் ஆவார்.
  

பாடல் எண் : 7
கடுவெளியோடு ஓர்ஐந்தும் ஆனார் போலும்,
         காரோணத்து என்றும் இருப்பார் போலும்,
இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்,
         ஏகம்பம் மேவி இருந்தார் போலும்,
படிஒருவர் இல்லாப் படியார் போலும்,
         பாண்டிக் கொடுமுடியும் தம்ஊர் போலும்,
செடிபடுநோய் அடியாரைத் தீர்ப்பார் போலும்,
         திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, பெரிய ஆகாயத்தோடு கூட்டி எண்ணப்படுகின்ற ஐம்பூதங்களும் ஆனவரும் , காரோணத்தலங்களில் என்றும் இருப்பவரும் , இடிக்கும் குரலைக் கொண்ட வாயையுடைய பூதப்படையினரும் , ஏகம்பத்தை விரும்பி அதன் கண் இருந்தவரும் பிறர் ஒருவரும் ஒப்பில்லாத இயல்பினை உடையவரும், பாண்டிக் கொடுமுடியையும் தம் ஊராகக் கொண்டவரும் அடியாருடைய துன்பத்திற்குக் காரணமான நோயைத் தீர்ப்பவரும் ஆவார் .


பாடல் எண் : 8
விலைஇலா ஆரம்சேர் மார்பர் போலும்,
         வெண்ணீறு மெய்க்குஅணிந்த விகிர்தர் போலும்,
மலையினார் மங்கை மணாளர் போலும்,
         மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும்,
தொலைவுஇலார் புரமூன்றும் தொலைத்தார் போலும்,
         சோற்றுத் துறைதுருத்தி உள்ளார் போலும்,
சிலையின்ஆர் செங்கண் அரவர் போலும்,
         திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, விலையில்லாத மாலையணிந்த மார்பரும் , வெண்ணீற்றை மெய்யிற் பூசிய விகிர்தரும் , ( மற்றையாரின் வேறுபட்டவர் ) மலையரையன் மங்கையின் மணாளரும் , மாற்பேற்றினைத் தம் இடமாய்க் கொண்டு மகிழ்ந்தவரும் , தோல்வி அறியாத பகைவருடைய மூன்று புரங்களையும் தொலைத்தவரும் , சோற்றுத்துறை , துருத்தி ஆகிய தலங்களில் உள்ளவரும் , வில்லில் நாணாகப் பூட்டிய பாம்பினை உடையவரும் ஆவார் .


பாடல் எண் : 9
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்,
         அமர்உலகம் தம்அடைந்தார்க்கு ஆட்சி போலும்,
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்,
         நள்ளாறு நாளும் பிரியார் போலும்,
முல்லை முகைநகையாள் பாகர் போலும்,
         முன்னமே தோன்றி முளைத்தார் போலும்,
தில்லை நடமாடும் தேவர் போலும்,
         திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, அடியாருடைய அல்லலை அறுப்பவரும் , தம்மை அடைந்தார்க்கு அமருலக ஆட்சியை அளிப்பவரும் , நல்லத்திலும் நல்லூரிலும் பொருந்தி நின்று காட்சி அளிப்பவரும் , நள்ளாற்றை என்றும் பிரியா தவரும் , முல்லைமொட்டுப் போன்ற பற்களை உடைய பார்வதியின் பாகரும் , உயர்திணை யஃறிணைப் பொருள்கள் யாவற்றிற்கும் முன்னே தோன்றியவரும் , தில்லை அம்பலத்தில் திருக்கூத்தியற்றும் தேவரும் ஆவார் .


பாடல் எண் : 10
உறைப்புஉடைய இராவணன் பொன்மலையைக் கையால்
         ஊக்கஞ்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச
நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்
         நிலம்சேர விரல்வைத்த நிமலர் போலும்,
பிறைப்பிளவு சடைக்குஅணிந்த பெம்மான் போலும்,
         பெண்ஆண் உருவாகி நின்றார் போலும்,
சிறப்புடைய அடியார்கட்கு இனியார் போலும்,
         திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.

         பொழிப்புரை :திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே! எடுத்த வினையை முடிப்பதில் தீவிரம் மிக்க இராவணன் ஊக்கம் மிக்கு அழகிய கயிலை மலையைக் கையால் பெயர்த்தலும் , உமையாள் அஞ்ச , வெற்றி நிறைதலையுடைய அவன் பெருந்தோள்கள் இருபதும் முடிகள் பத்தும் சோர்ந்து நிலத்தில் வீழும் வண்ணம் கால்விரலை ஊன்றிய நிமலரும் , பிறைச் சந்திரனை அணியாகச் சடையிடத்துக் கொண்ட பெருமானாரும் , பெண்ணுருவும் ஆணுருவும் கலந்து நின்ற அம்மையப்பரும் , பதிஞானச் சிறப்புடைய அடியவர்களுக்கு இனிய வரும் ஆவார் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...