திருப்
பல்லவனீச்சுரம்
(காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார்)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
சீர்காழி - பூம்புகார்
(காவிரிப்பூம்பட்டினம்) சாலையில் இத்திருத்தலம் உள்ளது. பூம்புகாருக்குள்
நுழையும்போது, எல்லையில் உள்ள
கண்ணகி வளைவைத் தாண்டியதும் சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது.
சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து
காவிரிப்பூம்பட்டினம் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.
இறைவர்
: பல்லவனீச்சுரர்.
இறைவியார்
: சௌந்தர நாயகி.
தல
மரம் : மல்லிகை, புன்னை. (தற்போதில்லை)
தீர்த்தம் : காவிரி.
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - 1. அடையார்தம் புரங்கள்
2.
பரசு
பாணியர் பாடல்
ஐந்து நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன்
விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடக்கும் போது இடதுபுறம் அதிகார நந்தி
சந்நிதியுள்ளது. வாயிலைக்கடந்து வந்தால் வெளிச்சுற்றில் சூரியன், நான்கு சிவலிங்கத் திருமேனிகள், கைகூப்பிநின்ற நிலையில் பட்டினத்தார்
சந்நிதி ஆகியவை உள்ளன. விநாயகரையடுத்துள்ள சுப்பிரமணியர் சந்நிதியில் உள்ள முருகப்
பெருமானின் உருவம் பெரியதாகவுள்ளது. அடுத்து கஜலட்சுமி சந்நிதியும், ஒரே சந்நிதிக்குள் சனிபகவான் பைரவர், சந்திரன் ஆகிய திருமேனிகள்
வைக்கப்பட்டும் உள்ளன.
வெளிமண்டபத்தில் வலதுபுறம் அம்பாள்
சந்நிதி, நேரே இத்தலத்து
இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பல்லவனேஸ்வரர் பெரிய, பருத்த சிவலிங்க பாணத்துடன் கூடிய
கம்பீரமான காட்சியுடன் எழுந்தருளியுள்ளார். உள்மண்டபத்தில் வலதுபுறம்
சிதம்பரத்தில் உள்ளது போன்றே அமைந்துள்ள சபாபதி சபை தரிசிக்கத்தக்கது. இங்குள்ள
நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி மேற்கு பார்த்தபடி
பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற
கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது. கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை
இருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர்.
இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி நதி வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது.
இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை
வழிபட்டுள்ளார்.
காவிரிப்பூம்பட்டினம் பட்டினத்தார்
அவதாரத் தலம். பட்டினத்தார் தனிச் சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.
இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார், மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன்
ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது. இங்கு சிவனுக்கு பிரம்மோற்சவம் கிடையாது.
பட்டினத்தாருக்கே விழா எடுக்கப்படுகிறது. பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி
பெரியளவில் நடக்கும். பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, தொண்டை நாட்டுத் தலமான திருவொற்றியூரில்
முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர்
"பட்டினத்தார்" என்றழைக்கப்பட்டார்.
பட்டினத்தடிகள்
வரலாறு
திருக்கயிலையிலே எம்பெருமாட்டியுடன்
வீற்றிருக்கும் எம்பெருமானைத் தரிசிக்க வேண்டி, எம்பெருமான் தோழனும், அளகாபுரிக்கு வேந்தனும் ஆகிய குபேரன், வெள்ளிமலையின் திருவாயிலை அணுகி, நந்தியெம்பெருமானைப் பணிந்து, அவர் தம் ஆணை பெற்றுத் திருச்சந்நிதி
அடைந்து, சிவபிரான்
உமாதேவியாரோடு எழுந்தருளி உள்ள திருக்கோலம் கண்டு, ஆனந்த பரவசனாய், "ஆண்டவனே! இத்திருக்கோலக் காட்சியை, மண்ணுலகில் உள்ள பல திருப்பதிகளிலும்
காண விரும்புகின்றேன். அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டி நின்றான்.
அடியவர்கள் வேண்டியதை வேண்டியவாறே அளிக்கும்
கருணைக் கடலாகிய பரம்பொருள், குபேரன்
வேண்டுகோளுக்கு இணங்கி, பார்வதி தேவியாருடன்
இடப ஊர்தியின் மேல் எழுந்தருளி,
தேவர்களும், முனிவர்களும், கணநாதர்களும் தம்மைப் புடைசூழ்ந்து வர, காசி, காளத்தி, காஞ்சி முதலிய திருத்தலங்களில் எழுந்தருளி, ஆங்காங்கே
குபேரனுக்குத் திருக்கயிலாயத் திருக்காட்சி வழங்கியருளி, சிதம்பரத்தை அடைந்தார். அங்கே சிலநாள்
குபேரன் அம்மையப்பரைத் தொழுது வருகையில், ஒருநாள், இறைவனை வணங்கி, "என்னுள் கோயில் கொண்ட பெருமானே! இச்
சோழநாட்டில் உள்ள திருவெண்காட்டிலே தேவரீரைத் தரிசிக்க விரும்புகிறேன்" என்று
விண்ணப்பித்தான். பெருமானும் அவ்வாறே அருள் செய்தார். குபேரனும் அம்பிகை பாகனைத் திருவெண்காட்டிலே தரிசித்து
இன்புற்று இருந்தான். திருவெண்காட்டிலே இருந்து வரும் நாளில், அருகில் உள்ள காவிப்பூம்பட்டினத்தை அவன்
கண்ணுற்றான். அதன் அழகைக் கண்டு மயங்கி, அதனை
நீங்க மனம் எழாது, அங்கே வசிக்க
விரும்பினான். குபேரனது நிலையை உணர்ந்த சிவபெருமான், "தோழனே! உன் உள்ளம் காவிரிப்பூம்பட்டினத்தைப்
பற்றி நிற்கிறது. நீ தாங்கியுள்ள தேகம் போக பூமியில் வாழ்வதற்கு உரியது. மானுடர்
வாழும் இந்தக் கர்ம பூமிக்கு உரியது அல்ல. நீ இக் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறக்கக்
கடவாய்" என்று அருளினார். அதுகேட்ட, அளகேசன், மெய் நடுங்கி, உள்ளம் கலங்கி, "ஐயனே, தேவரீர் ஆணையை மறுக்க எவராலும் இயலாது. அதன்
வழி நிற்கவேண்டுவதே அடியேன் கடமை. சிறியேன் மானுடப் பிறவி எடுத்து, இவ்வுலக இன்ப நூகர்ச்சியில் திளைத்து, அழுந்தும் காலத்து, ஏழையேனைத் தடுத்து ஆட்கொண்டு அருள
வேண்டும்" என்று வேண்டினான். அவ்வாறே
பெருமான் அருளிச் செய்து, உமையம்மையாரோடு
திருக்கயிலைக்கு எழுந்தருளினார்.
காவிரிப்பூம்பட்டினத்திலே வேளாள மரபிலே, சிவநேசர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர்
ஞானகலாம்பை என்னும் கற்புக்கரசியாரை மணந்து இல்லறம் நடத்தி வந்தார். அவருக்கு ஒரு
பெண் குழந்து பிறந்தது. பின்னர்,
நீண்டகாலம்
தமக்கு ஆண் குழந்தை இல்லாதது குறித்துத் தமது மனைவியாருடன் தவம் செய்வாராயினார். அத்தவப்
பேறாக, குபேரன், சிவாக்ஞைப்படி, ஞானகலாம்பையார் கருவில் உற்றான். பத்துத்
திங்களில் ஆண் குழந்தையை ஈன்று எடுத்தார். சிவநேசர் அக் குழந்தைக்குத்
திருவெண்காடர் என்னும் பெயர் சூட்டி, பொன்னே
போல் வளர்த்து வந்தார். திருவெண்காடர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து, ஐந்தாம் வயது எய்தப்
பெற்றார்.
சிவநேசர் இறைவன் திருவடி நீழலை
அடைந்தார். திருவெண்காடர் தந்தையாருக்கு
ஈமக் கடன்களைக் குறைவறச் செய்து,
அற்புதத்
திருவிளையாடல்களால் அன்னையார் துயரம் போக்கிக் கொண்டு இருந்தார். அறிவில் சிறந்த
அன்னையார், தக்க ஆசிரியரைக்
கொண்டு, திருவெண்காடருக்குக்
கல்வி கற்பித்தார். சகல கலைஞானமும் இளமையிலேயே அடைந்ததன் பலனாக, "கல்வியினால் ஆய பயன், கங்காதரன் திருவடியைப் பூசித்தலே"
என்று தெளிந்து, அப் பூசனையைக்
குருமுகத்தால் பெறவேண்டும் என உறுதிகொண்டு, உணவும் கொள்ளாது, குருத் தியானமே செய்து கொண்டிருந்தார். ஒருநாள், சிவபெருமான், ஓர் அந்தணராகத் திருவெண்காடர் கனவில்
தோன்றி, "திருவோண நட்சத்திரம் கூடிய சோமவாரப்
பிரதோஷ தினம் நாளை நேர்கின்றமையால்,
நீ
திருவெண்காடு செல்வாயாக. அங்கு ஒரு வேதியர் உனக்குச் சிவதீட்சை செய்து, சிவபூசை முறையைக் கற்பிப்பர்"
என்று அருளிச் செய்து மறைந்தார். உடனே, திருவெண்காடர், விழித்து எழுந்து, தாம் கண்ட கனவினைத் தாயாருக்கு உணர்த்தி, அவ்வம்மையாரோடு திருவெண்காடு சேர்ந்து, சிவதரிசனம் செய்து, குருநாதனை எதிர்நோக்கிக் கொண்டு
இருந்தார். அப்பொழுது கனவில் தோன்றிய அந்தணரே அங்குக் குருமூர்த்தியாக எழுந்தருளினர்.
திருவெண்காடர் வியப்புற்று, குருநாதன்
திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
குருநாதன் திருநோக்கம் செய்து, "குழந்தாய், நம் ஊர் வியாக்கிரபுரம். நேற்றிரவு
இங்கு வந்தோம். எமது கனவில் மறையவர் தோன்றி, திருவெண்காடு சென்று, அங்குத் திருவெண்காடன் என்னும் சிறுவனுக்குத்
தீட்சை செய்து வைக்கக் கட்டளையிட்டு, இச்
சம்புடத்தைக் கொண்டு உன்னிடம் சேர்க்கச் சொன்னார். இதன் உள்ளே ஒரு சிவலிங்கம்
இருக்கிறது. அது உன்னால் முற்பிறப்பில் பூசிக்கப் பெற்றது. உன் கைப்பட்டதும் தானாகத் திறந்துகொள்ளும்
என்று சொல்லி, ஒரு மண்டலம் உன்னோடு
இருக்க மொழிந்தார்" என்று சொல்லித் தமது திருவுருக் கரந்தார். இங்கு வந்து
உன்னைக் கண்டேன்" என்று சொல்லினார். அதனைச் செவிமடுத்த திருவெண்காடர், குருமூர்த்தியின்
திருவடிகளில் பலமுறை விழுந்து வணங்கிப் போற்றினார். குருமூர்த்தியாக எழுந்தருளிய
பெருமான் திருவெண்காடருக்குச் சிவதீட்சை செய்து, கனவில் தான் பெற்ற சம்புடத்தைக்
கொடுத்தருளினார். திருவெண்காடரின்
கைப்பட்டதும் தானாகத் திறந்து கொண்ட அச் சம்புடத்தில் சிவலிங்கமும் விநாயக
மூர்த்தமும் இருந்தன. அவைகளை முறைப்படி
பூசித்து வந்தார். குருநாதரும் திருவெண்காடரோடு நாற்பது நாள் இருந்து, பின்னர் தமது இச்சை வழிச்
சென்றார்.
திருவெண்காடர் திருவெண்காட்டிலிருந்து
கொண்டே, சிவபூசையும் மகேசுர பூசையும்
செய்து வந்தார். செல்வம் சுருங்கி, வறுமை வந்தது. ஒரு நாள் இரவு, திருவெண்காடரின் கனவில் சிவபெருமான்
தோன்றி, "அன்பனே, வருந்தாதே. உன் இல்லம் முழுதும்
பொன்னும் மணியும் திரள் திரளாக மலியச் செய்தோம்" என்று திருவருள் செய்தனர். திருவெண்காடர்
தாம் கண்ட கனவைத் தாயாருக்குச் சொன்னார். பொழுது விடிந்ததும், காவலர் முலமாகத் தம் வீடு முற்றிலும்
பொன்னும் மணியும் நிரம்பி இருத்தலைத் கேள்வியுற்று, அவைகளைக் கொண்டு, சிவபூசை, குருபூசை, அடியவர் பூசை முதலிய பதி புண்ணியங்களைச்
செய்து, காவிரிப்பூம்பட்டினத்தை
அடைந்து, தமது அறச் செயல்களைத்
தொடர்ந்து வந்தார்.
திருவெண்காடருக்குத் திருமணப் பருவம்
வந்தது. அப் பட்டினத்திலே, வேளாண் மரபிலே
தோன்றிச் சிவபத்தி, சிவனடியார் பத்தியில்
சிறந்து விளங்கிய சிதம்பரச் செட்டியார் மனைவியாகிய சிவகாமியம்மையார் ஈன்ற
அருந்தவப் புதல்வியாகிய சிவகலை என்னும் அம்மையாரைத் திருமணம் செய்துக் கொண்டார். இல்லறத்தைச்
சிறப்புற நடத்துங்கால், தமக்கு முப்பத்தைந்து
வயதாகியும் மகப்பேறு இல்லாமை குறித்துச் சிறிது வருந்தி, மருதவாணர் திருவடிகளை இடையறாது பூசித்து
வந்தார்.
திருவிடைமருதூரிலே சிவசருமர் என்னும்
வேதியர். அவர் மனைவி சுசீலை. இருவரும் சிவபூசை, அடியவர் பூசை செய்து வறுமையில் அழுந்தி
இருந்தனர். மருதவாணர் அவர்கள் கனவில் தோன்றி, "நமது தீர்த்தக் கரையில் இருக்கும் வில்வ
மரத்தின் அடியில் நாம் ஒரு குழந்தையாக இருப்போம். அக் குழந்தையை எடுத்துக்
கொண்டுபோய், காவிரிப்பூம்பட்டினத்திலே
குழந்தைப் பேறு இன்றி அருந்தவம் செய்யும் திருவெண்காடரிடம் கொடுத்து, அக் குழந்தை அளவு எடையுள்ள பொன் பெற்று
உங்கள் வறுமையைப் போக்குவீர்களாக" என்று அருள்செய்து மறைந்தார். சிவசருமர், வில்வ மரத்தடியில் குழந்தை இருக்கக்
கண்டு, மகிழ்ந்தார். "தோன்றி
நின்று அழியும் பொருட்செல்வத்தின் பொருட்டுக் குழந்தையை விற்பதா" என்று
வருந்தினார். திருவெண்காடரின் கனவிலும் அவர் மனைவியார் சிவகலையம்மையின் கனவிலும், சிவசருமர் கொண்டு வரும் குழந்தையப்
பெற்றுக் கொள்ளுமாறு சிவபெருமான் அருளினார்.
சிவாஞ்ஞைப்படி, குழந்தையைப் பெற்றுக்
கொண்டு, சிவசருமருக்கு
வேண்டுவனவற்றைச் செய்தார். சிவசருமர் திருவிடைமருதூர் சென்றார்.
திருவருளால் பெற்ற அருமைக் குழந்தைக்குத்
திருவெண்காடர், மருதப் பிரான்
என்னும் திருப்பெயர் இட்டு வளர்த்து வந்தார். மருதப் பிரான் வளர்ந்து பதினாறு வயது
ஆனது. தீவாந்தரங்களுக்குச் சென்று வாணிபம்
செய்து வர விரும்பினார். குலமுறைப்படி திருவெண்காடர், மருதப்பிரானுக்கு விடைகொடுத்து
அனுப்பினார். கொண்டு சென்ற பொருள்களை எல்லாம் விற்றுத் திருப்பணிகள் செய்தார். எஞ்சிய
பொருளைக் கொண்டு வரட்டியும், அவல், கடலையையும், மூட்டை மூட்டையாக வாங்கிக் கப்பலில்
நிரப்பிக் காவிரிப்பூம்பட்டினத்துக்குத் திரும்பினார். இடையில் மருதவாணர்
திருவருளால், காற்றும் மழையும் உண்டாகக்
கப்பல் திசைமாறிப் போயிற்று. உணவுப் பொருள் ஒழியும் மட்டும் நேர்வழி
புலனாகவில்லை. "ஐயா, பசியாற்ற அவல் கொடுங்கள். குளிர்காய
எருமுட்டைகள் கொடுங்கள்" என்று உடன் வந்தவர்கள் கேட்டார்கள். அதற்கு மருதப் பிரான், "நண்பர்களே, நான் பட்டினம் சேர்ந்ததும் இப்பொழுது
என்னால் அளிக்கப் படப் போகிற எருமுட்டைகள் எவ்வளவோ அவ்வளவு எருமுட்டைகளைத்
தரவேண்டும்" என்று கூறி, உறுதிப் பத்திரம்
எழுதி வாங்கிக் கொண்டு, தம்பால் உள்ள
எருமுட்டைகளை வழங்கினார். கப்பல் கரைகண்டு சேர்ந்தது. கப்பலில் இருந்தவர்கள்
திருவெண்காடரிடம் சென்று, நடந்ததைச் சொல்லிச்
சென்றனர். திருவெண்காடர் தமது மகன் கொணர்ந்த, வரட்டி மூட்டைகளையும், அவல் மூட்டைகளையும், அவிழ்த்துப் பார்த்தார். எருமுட்டைகள்
மாணிக்கக் கற்களாக ஒளி விடுகின்றன. அவலோடு சிறுசிறு பொன்கட்டிகள் பொலிகின்றன. அவைகளோடு, கடலில் மருதப்பிரானோடு சென்றவர்கள்
எழுதிக் கொடுத்த உறுதிப் பத்திரம் திருவெண்காடர் கையில் அகப்பட்டது. அது கண்ட மருதப் பிரான் நண்பர்களும்
மற்றவர்களும், "அந்தோ, இது என்ன மாயம். நாம் எருமுட்டைகளுக்காகப்
பத்திரம் எழுதி இருந்தோம். இப்போது அவை, அரதனங்களாக
ஒளிர்கின்றனவே. என்ன செய்வோம்" என்று துயருற்றார்கள். திருவெண்காடர் தமது
மகனாரின் வாணிபத் திறமையை வியந்து அவரைக் காணச் சென்றார். மருதப்பிரானைக்
காணவில்லை. அவர் திருவிடைமருதூரில் தம்மை மறவாது போற்றிப் பூசித்து வந்த
சிவசருமருக்கும், அவரது
குடும்பத்தாருக்கும் அத்துவித முத்தி அருளி, தாம் மகாலிங்கத்தில்
சாந்நித்தியமாயிருந்தார்.
திருவெண்காடர் நெஞ்சம் கலங்கி
வேதனைப்படுகின்ற நேரத்தில், அவரது மனைவியார் ஒரு
சிறிய பெட்டியைக் கொண்டு வந்து,
"நாதா, நமது புதல்வன் இப் பெட்டியைத்
தேவரீரிடம் சேர்க்கும்படிச் சொல்லிவிட்டுப் போய் விட்டான்" என்றார். திருவெண்காடர்
ஆவலோடு பெட்டியைத் திறந்தார். அதில்
காதற்ற ஊசி ஒன்றும், ஓலைச் சீட்டு ஒன்றும்
இருந்தன. ஓலைச் சீட்டில், "காதற்ற ஊசியும்
வாராது காணும் கடைவழிக்கே" என்று எழுதப்பட்டு இருந்தது. உடனே துறவறம்
மேற்கொண்டார். தமது கணக்கராகிய சேந்தனாரை அழைத்துத் தமது பொருட்கள் எல்லாவற்றையும்
கொள்ளையிடச் செய்யுமாறு பணித்து,
தாயாரின்
பொருட்டு வெளியூர் செல்லாது, அங்குள்ள ஒரு
பொதுமண்டபத்தில் தங்கி, வீடுதோறும் பிச்சை
ஏற்று உண்டு, ஞானநிட்டை செய்து
கொண்டு இருந்தார். அவரது செயல்
சுற்றத்தார்க்கு வெறுப்பைத் தந்தது.
தமக்கையார் அவரைக் கொல்ல வேண்டி, நஞ்சு
கலந்த அப்பத்தைக் கொடுத்தார். அந்த வஞ்சனையைத் திருவருளால் உணர்ந்து, அதனைப் பிட்டு ஒரு பகுதியைத்
தமக்கையாரின் வீட்டு இறப்பில் செருகினார்.
வீடு தீக்கிரையானது.
சிலநாள் கழித்து அன்னையார் சிவபதம்
அடைந்தார். திருவெண்காடர் சுடலைச் சென்றார்.
அடுக்கப்பட்டு இருந்த சிறு விறகுகளை அகற்றி, பச்சை வாழை மட்டைகளை அடுக்கி, அதன் மீது தாயாரைக் கிடத்தி, சில பாடல்களைப் பாடவும் அனல் மூண்டது. தாயாருக்குச்
செய்ய வேண்டிய கடன்களைச் செய்து,
திருவிடைமருதூர்
சென்று, தலங்கள் தோறும்
வழிபட்டுத் திருவாரூர் சேர்ந்தார். அங்கே சன்னி நோயால் மரணமுற்ற ஒரு தொண்டனைத்
திருவருள் துணையால் எழுப்பினார்.
திருவெண்காடர் கொங்கு நாட்டை அடைந்து, மவுனவிரதம் மேற்கொண்டு, நிட்டையில்
இருந்தபோது, ஒருநாள் பசி
மேலீட்டால், ஒரு மூர்க்கன் வீட்டு
வாயிலில் நின்று கை தட்டினார். சுவாமிகளின் அருமையை உணராத, அக் கயவன் தடிகொண்டு புடைத்தான். அன்று
தொட்டு, அடிகள், தாம் இருக்கும் இடம் தேடி அன்னம் கொண்டு
வந்தால் அன்றி உணவு கொள்வது இல்லை என உறுதிகொண்டு, கொங்கு நாட்டினின்றும் நீங்கித் துளுவ
நாட்டினை அடைந்து, பல திருத்தலங்களை
வணங்கி, உஞ்சேனை மாகாளம் சென்று ஒரு விநாயகர்
திருக்கோயிலில் நிட்டையில் இருந்தார்.
ஒருநாள் இரவு, திருடர்கள் அந்த விநாயகர் ஆலயத்திற்கு
வந்து அவரை வணங்கி, அவ்வூரை ஆளும்
பத்திரகிரி மன்னருடைய மாளிகையில் பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்து, மீண்டும் அக் கோயிலை அடைந்து, விலை உயர்ந்த மணிப் பதக்கம் ஒன்றை
விநாயகருக்குக் காணிக்கையாக்க வேண்டி, இருட்டில்
மயங்கி, அங்கே நிட்டையில்
இருந்த பட்டினத்துப் பிள்ளையாரை விநாயகர் எனக் கொண்டு, பதக்கத்தை அவர் கழுத்தில் வீசிச்
சென்றார்கள். பட்டினத்துப் பிள்ளாயர் கழுத்தில் மணிமாலையைக் கண்டு, அதைக் களவு செய்தவர் அவரே என்று கொள்ளப்பட்டு, மன்னனால் பிள்ளையார் ஒறுக்கப்பட்டு, கழுமரத்தில் ஏற்றுமாறு ஆணை பிறந்தது.
"என் செயல் ஆவது யாதொன்றுமில்லை" என்னும் திருப்பாட்டினை பட்டினத்துப் பிள்ளையார்
ஓத, உடனே கழுமரம்
தீப்பிடித்தது. மன்னன் தன் தவறினை உணர்ந்து, பிள்ளையாரைக் குருவாக ஏற்று, அவரடி பணிந்தான். ஞானோபதேசம் செய்து, திருவிடைமருதூருக்குச் செல்லுமாறு
பணித்து, தாமும் பல தலங்களை
வழிபட்டுத் திருவிடைமருதூரை அடைந்தார்.
அங்கே பத்திரகிரியார் பிச்சையேற்றுக்
கொண்டு வந்து அளிக்கும் அன்னத்தை உண்டு வந்தனர். பத்திரகிரியார் வளர்த்த நாயனாது
இறந்து, காசி மன்னன் தவப் புதல்வியாகப்
பிறந்து மீண்டும் திருவிடைமருதூரில் உள்ள பத்திரகிரியாரையே குருவாகக் கொண்டு, அவரை அடைந்து, அவரது திருவடிகளில்
வீழ்ந்து வணங்கிற்று. அப்போது பெருஞ்சோதி ஒன்று தோன்றியது. அதிலே அவர்கள் கலந்து
அருளினார்கள். அந்த அற்புதத்தைக் கண்ட
பட்டினத்தடிகள், "பெருமானே, அடியேனை இவ்வுலகத்தில் இருத்தி
இருப்பதன் குறிப்பு என்னவோ, அறிகிலேன்"
என்று முறையிட்டார். "திருவெண்காடா, திரு
ஒற்றியூர் வருக" என்று ஒரு வானொலி எழுந்தது.
பட்டினத்தடிகள் இறைவன் திருவுள்ளக்
குறிப்புணர்ந்து திருவெண்காடு சேர்ந்தார். செய்தியை அறிந்த சேந்தனாருடைய மனைவியும்
அவரது மகனும் வந்து வணங்கினர்.
திருவெண்காடர் அவர்களை நோக்கி, "நீங்கள்
யார்" என்றார். சேந்தனார் மனைவியார், "சுவாமி அடியேன்
தேவரீர்பால் கணக்குப் பிள்ளையாய் இருந்த சேந்தனாரின் மனைவி. இவன் என் மகன். சுவாமிகள் ஆணைப்படி சேந்தனார், சுவாமிகளின் பொருள்கள் அனைத்தையும்
கொள்ளையிட வைத்தார். அரசன் அறியாமையால் ஐயங்கொண்டு, அவரை விலங்கிட்டுச் சிறையில்
அடைப்பித்தான். அவரது சிறையை நீக்கி அருளவேண்டும் சுவாமி" என்று வேண்டி
நின்றார். திருவெண்காடர் சிவபிரானைத் தியானிக்க, விநாயகர் திருவருளால் சேந்தனார் விலங்கு
இரியப் பெற்று, சிறை நீங்கி வெளியே
போந்து, பட்டினத்தடிகளைக்
கண்டு பணிந்து, "அடியேன் ஆத்ம
சிறையையும் நீக்கி அருளவேண்டும்" என்று பணிந்து நின்றார். திருவெண்காடர்
சேந்தனாரது அதி தீவிர நிலையை ஓர்ந்து, "நீ
சிதம்பரத்தை அடைந்து விறகு விற்று,
அதனால்
பெறும் ஊதியம் கொண்டு சிவபூசை, மாகேசுவர பூசை முதலிய
பதிபுண்ணியங்களை ஆற்றிக் கொண்டு குடும்பத்தோடு வாழ்வாயாக" என்று அருள்
புரிந்தார்.
பின்னர், பட்டினத்தடிகள் சீர்காழி, சிதம்பரம், திருவேகம்பம், திருக்காளத்தி, திருவாலங்காடு முதலிய திருத்தலங்களை த்
தரிசித்துப் பாடல்களைப் பாடி, திருவொற்றியூரை
அடைந்தார். அத் திருத்தலத்திலும் அவர்
சிலநாள் தங்கி பல பாடல்களைப் பாடியருளினார். சிலவேளைகளில் கடலோரம் சென்று, அங்கே விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுவர்களோடு கூடி அதியற்புத ஆடல்கள் பல ஆடுவாராயினார். ஒருநாள் ஒரு குழியில்
இறங்கி மறைந்தார். அவரோடு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், "அந்தோ, இது என்ன. நம்முடன் கலந்து பல அற்புதச்
செயல்கள் புரிந்து கொண்டிருந்த பெரியவர் இக்குழியில் மறைந்தார். அவரைக் காணோம். எங்கு சென்றார்" என்று
தேடுகையில் சுவாமிகள் ஒரு மணல் குன்றின்மேல்
தோன்றினார். சிறுவர்கள் அவரை அணுகியபோது சுவாமிகள் குழியில் குதித்து
மறைந்தார். இங்ஙனம் அடிகள் பலமுறை இளையவர்கட்கு
ஆடல்காட்டி, ஒருமுறை குழியில்
இறங்கி, உட்கார்ந்து, சிறுவர்களை நோக்கி, "நண்பர்களே, என்மீது ஒரு சாலைக் கவிழுங்கள்"
என்று அருளிச் செய்தார். ஒன்றும் அறியாச் சிறுபிள்ளைகள் அவ்வாறே செய்து, சிறிது நேரம் கழித்துச் சாலைப்
புரட்டிப் பார்த்தார்கள். அவர்கள் சுவாமிகளைக் காணாது, அவ்விடத்தில் ஒரு சிவலிங்கப் பெருமான் விளக்கம் கண்டு, வியந்து, ஊரில் உள்ள பலர்க்குத் தாங்கள் கண்ட அற்புதச்
செயலைத் தெரிவித்தார்கள். ஊரவர்,
கடலோரம்
போந்து, சுவாமிகளது சிவலிங்க
வடிவத்தைத் தரிசித்துப் பேரானந்தம் எய்தினர். பல அன்பர்கள் திருவொற்றியூர் சென்று
சுவாமிகள் திருமேனியை வழிபடலாயினர்.
பட்டினத்தடிகளின் மனைவியாராகிய சிவகலையம்மையார், சுவாமிகட்கு முன்னரே அவர்களது திருவடித்
தாமரைகளை இடையறாது தியானம் செய்துகொண்டு இருந்து, சிவலோக பதவி அடைந்தார். சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
ஆடிஉத்தி ராடம் அருட்சிவத்தில்
பட்டினத்தார்
நாடிஅறக் கலந்த நாள்.
இயற்பகை நாயனார் அவதரித்துச்
சிவத்தொண்டாற்றிய திருப்பதி.
அவதாரத் தலம் : திருப்பல்லவனீச்சுரம் (பூம்புகார்)
வழிபாடு : சங்கம வழிபாடு.
முத்தித் தலம் : திருச்சாய்க்காடு.
குருபூசை நாள் : மார்கழி - உத்திரம்.
இயற்பகை நாயனார்
வரலாறு
இயற்பகையார் நாயன்மார்களுள் ஒருவர்
ஆவார். இவரை “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில்
வைத்துப் பாடப்பட்டவர். இவர் சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித
தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார். வணிக குலத்தினரான
அவர் தம் வணிகத் திறத்தால் பெரும் செல்வராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு
இறையடியார் தம் குறைமுடிப்பதென்பது அவர் கொள்கை. ஆதலால் சிவனடியார் யாவர் எனினும்
அவர் வேண்டுவதை இல்லை என்னாது கொடுக்கும் இயல்பினராய் வாழ்ந்து வந்தார். அவ்வாறு
வாழ்ந்து வரும் நாளில் அவர் பெருமையை உலகோர்க்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளம்
பற்றினார்.
சிவபெருமான் தூய திருநீறு பொன்மேனியில்
அணிந்து, தூர்த்த வேடமுடைய
வேதியர் கோலத்தினராய், இயற்பகையாரது
வீட்டினை அடைந்தார். நாயனார் அவ்வடியாரை உளம் நிறைந்த அன்புடன் எதிர்கொண்டு, "முனிவர் இங்கு
எழுந்தருளியது என் பெருந்தவப் பயன்" என்று வழிபட்டு வரவேற்றார். வேதியர்
அன்பரை நோக்கி, "சிவனடியார்கள்
வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காத, உம்மிடத்திலே
ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன்,
அதனை
நீர் தருவதற்கு இணங்குவீராயின் வெளியிட்டுச் சொல்வேன்" எனக் கூறினார். அது
கேட்ட இயற்பகையார், "என்னிடமிருக்கும்
எப்பொருளாயினும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை. இதில் சிறிதும் ஐ.மில்லை.
நீர் விரும்பியதனை அருளிச் செய்வீராக" என்றார். அதுகேட்ட வேதியர், "உன் மனைவியை விரும்பி
வந்தேன்" எனச் சொன்னார்.
நாயனார் முன்னைவிட மகிழ்ச்சியடைந்து
"எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயனாகும்"
எனக் கூறி, விரைந்து வீட்டினுள்
புகுந்து கற்பிற் சிறந்த மனைவியாரை நோக்கி, "பெண்ணே! இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு
நான் கொடுத்துவிட்டேன்’"என்றார். அதுகேட்ட மனனவியார், மனங்கலங்கிப் பின் தெளிந்து தன் கணவரை
நோக்கி “என் உயிர்த் தலைவரே! என் கணவராகிய நீர் எமக்குப் பணித்தருளிய கட்டளை
இதுவாயின் நீர் கூறியதொன்றை நான் செய்வதன்றி எனக்கு வேறு உரிமை உளதோ?" என்று சொல்லிப் தன்
கணவராகிய இயற்பகையை வணங்கினார். இயற்பகையாரும் இறைவனடியார்க்கு எனத் தம்மால்
அளிக்கப் பெற்றமை கருதி அவ்வம்மையாரை வணங்கினார். திருவிலும் பெரியாளாகிய
அவ்வம்மையார், அங்கு எழுந்தருளிய
மறைமுனிவர் சேவடிகளைப் பணிந்து திகைத்து நின்றார்.
மறைமுனிவர் விரும்பிய வண்ணம், மனைவியாரைக் கொடுத்து மகிழும் மாதவராகிய
இயற்பகையார், அம்மறையவரை நோக்கி, "இன்னும் யான்
செய்தற்குரிய பணி யாது?" என இறைஞ்சி நின்றார்.
வேதியராகிய வந்த இறைவன், "இந்நங்கையை யான்
தனியே அழைத்துச் செல்லுவதற்கு உனது அன்புடைய சுற்றத்தாரையும், இவ்வூரையும் கடத்தற்கு நீ எனக்குத்
துணையாக வருதல் வேண்டும்" என்றார். அதுகேட்ட இயற்பகையார் "யானே
முன்னறிந்து செய்தற்குரிய இப்பணியை விரைந்து செய்யாது எம்பெருமானாகிய இவர்
வெளியிட்டுச் சொல்லுமளவிற்கு காலம் தாழ்த்து நின்றது பிழையாகும்" என்று எண்ணி, வேறிடத்துக்குச் சென்று போர்க்கோலம்
பூண்டு, வாளும் கேடயமும்
தாங்கி வந்தார். வேதியரை வணங்கி மாதினையும் அவரையும் முன்னே போகச் செய்து
அவர்க்குத் துணையாக பின்னே தொடர்ந்து சென்றார்.
இச்செய்தியை அறிந்த மனைவியாராது
சுற்றத்தாரும், வள்ளலாரது
சுற்றத்தாரும் "இயற்பகைப் பித்தனானால் அவன் மனைவியை மற்றோருவன் கொண்டு போவதா?” என வெகுண்டனர். தமக்கு நேர்ந்த பழியைப்
போக்குவதற்கு போர்க்கருவிகளைத் தாங்கியவராய் வந்து மறையவரை வளைத்துக் கொண்டனர்.
"தூர்த்தனே, போகாதே. நற்குலத்தில்
பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு, உமது
பழிபோக இவ்விடத்தை விட்டுப்போ’"எனக்கூறினார். மறைமுனிவர் அதுகண்டு அஞ்சியவரைப்போன்று
மாதினைப் பார்த்தார். மாதரும் "இறைவனே, அஞ்சவேண்டாம்; இயற்பகை வெல்லும்" என்றார்.
வீரக்கழல் அணிந்த இயற்பகையார்,
"அடியேனேன்
அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன்" என வேதியருக்கு தேறுதல் கூறி, போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, "ஒருவரும் எதிர் நில்லாமே
ஓடிப்பிழையும். அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகித் துணிபட்டுத் துடிப்பீர்"
என்று அறிவுறுத்தினார். அது கேட்ட சுற்றத்தவர், "ஏடா! நீ என்ன காரியத்தைச் செய்துவிட்டு
இவ்வாறு பேசுகிறாய்? உன் செயலால் இந்நாடு
அடையும் பழியையும், இது குறித்து நம்
பகைவரானவர் கொள்ளும் இகழ்ச்சிச் சிரிப்பினையும் எண்ணி நாணாது, உன் மனைவியை வேதியனுக்கு கொடுத்து வீரம்
பேசுவதோ! நாங்கள் போரிட்டு ஒருசேர இறந்தொழிவதன்றி உன் மனைவியை மற்றையவனுக்குக்
கொடுக்க ஒருபொழுதும் சம்மதியோம்" என்று வெகுண்டு எதிர்த்தனர். அது கண்ட
இயற்பகையார் "உங்கள் உயிரை விண்ணுலகுக்கு ஏற்றி இந்த நற்றவரை தடையின்றிப்
போகவிடுவேன்" என்று கூறி, உறவினரை எதிர்த்துப்
போரிடுவதற்கு முந்தினார். உறவினர்கள் மறையவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு
வெகுண்ட இயற்பகையார், சுற்றத்தார் மேல்
பாய்ந்து இடசாரி வலசாரியாக மாறிமாறிச் சுற்றிவந்து அவர்களுடைய கால்களையும்
தலைகளையும் துணித்து வீழ்த்தினார். பலராய் வந்தவர் மீதும் தனியாய் அகப்பட்டவர்
மீதும் வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து ஓடியவர் போக, எதிர்த்தவரெல்லாம் ஒழிந்தே போயினர்.
எதிர்ப்பவர் ஒருவருமின்றி உலாவித் திரிந்த இயற்பகையார், வேதியரை நோக்கி, "அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக்
கடக்கும் வரை உடன் வருகின்றேன்" என்று கூறித் துணைசென்றார்.
திருச்சாய்க்காட்டை சேர்ந்த பொழுதில், மறை
முனிவர் "நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்" என்று கூறினார்.
இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார்.
மனைவியாரை உவகையுடன் அளித்து
திரும்பியும் பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார்.
மெய்ம்மையுள்ளமுடைய நாயனாரை மீளவும் அழைக்கத் தொடங்கி “இயற்பகை முனிவாஓலம், ஈண்டு நீ வருவாய் ஓலம்; அயர்ப்பு இலாதானே ஓலம்; செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம்
ஓலம்” என அழைத்தருளினார். அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகையார், "அடியேன் வந்தேன்; வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என்
கைவாளுக்கு இலக்காகின்றார்" என்றுகூறி விரைந்து வந்தார். மாதொருபாகனாகிய
இறைவனும் தனது தொன்மைக் கோலத்தைக் கொள்ளுவதற்கு அவ்விடத்தைவிட்டு மறைந்தருளினார்.
சென்ற இயற்பகையார் முனிவரைக் காணாது அவருடன் சென்ற மாதினைக் கண்டார். வான்வெளியிலே
இறைவன் மாதொருபாகராக எருதின்மேல் தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார்.
நிலத்திலே பலமுறை தொழுதார்; எல்லையில்லாத இன்ப
வெள்ளம் அருளிய இறைவனை உள்ளம் கசிந்து போற்றி வாழ்த்தினார். அப்பொழுது
அம்மையப்பராகிய இறைவர் "பழுதிலாதாய், உன் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம்.
உன் மனைவியுடன் நம்மில் வருக" எனத் திருவருள் புரிந்து மறைந்தருளினார்.
உலகியற்கை மீறிச் செயற்கரும் செய்கை செய்த திருத்தொண்டராகிய இயற்பகையாரும், தெய்வக் கற்பினையுடைய அவர் தம்
மனைவியரும் ஞானமாமுனிவர் போற்ற நலமிகு சிவலோகத்தில் இறைவனைக் கும்பிட்டு
உடனுறையும் பெருவாழ்வு பெற்றனர். அவர் தம் சுற்றத்தாராய் அவருடன் போர் செய்து
உயிர் துறந்தவர்களும் வானுலகம் அடைந்து இன்புற்றனர்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "வாய்க்கு அமையச்
சொல்ல அல் நீச்சர் அங்கு தோய, உம்பர் ஆம் பெருமைப் பல்லவனீச்சரத்து எம் பாவனமே"
என்று போற்றி உள்ளார்.
காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர் திருப்பதிக
வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 121
பன்னகப்
பூணி னாரைப்
பல்லவன் ஈச்ச ரத்துச்
சென்னியால்
வணங்கி ஏத்தி,
திருந்துஇசைப் பதிகம்
பாடி,
பொன்னிசூழ்
புகாரில்நீடு
புனிதர்தம்
திருச்சாய்க் காட்டு,
மன்னுசீர்த்தொண்டர்
எல்லாம்
மகிழ்ந்து எதிர் கொள்ளப்புக்கார்.
பொழிப்புரை : பாம்புகளை அணியாய்ப்
பூண்ட சிவபெருமானைத் திருப்பல்லவனீச்சரத்தில் தலையினால் வணங்கிப் போற்றி, திருந்தும் இசையையுடைய இரு
திருப்பதிகங்களைப் பாடி, காவிரியாறு சூழும்
புகார் நகரத்தில் என்றும் எழுந்தருளியிருக்கும் புனிதரான இறைவர் வீற்றிருக்கும்
திருச்சாய்க்காட்டில் நிலைபெற்ற பெருஞ்சிறப் பினையுடைய திருத்தொண்டர்கள்
மகிழ்வுடன் எதிர்கொள்ளப் புகுந்தனர்.
குறிப்புரை : திருப்பல்லவனீச்சரத்தில்
அருளிய பதிகங்கள் இரண்டு.
1. அடையார்தம் புரங்கள்
- தக்கேசி (தி.1 ப.65),
2. பரசு பாணியர் - பழம்
பஞ்சுரம் (தி.3 ப.112).
1. 065
காவிரிப்பூம்பட்டினத்துத்திருப்பல்லவனீச்சரம
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
அடையார்தம்
புரங்கள் மூன்றும் ஆர்அழலில் அழுந்த
விடையார்மேனி
யராய்ச் சீறும் வித்தகர் மேயஇடம்,
கடைஆர்மாடம்
நீடிஎங்கும் கங்குல் புறம்தடவப்
படைஆர்
புரிசைப் பட்டினம்சேர் பல்லவன் ஈச்சரமே.
பொழிப்புரை :பகைவராய அசுரர்களின்
திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச்
சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம், வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும்
உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும்
மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்த
திருப்பல்லவனீச்சரமாகும்.
பாடல்
எண் : 2
எண்ணார்
எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான், இமையோர்
கண்ணாய்
உலகங் காக்கநின்ற கண்ணுதல் நண்ணும்இடம்,
மண்ஆர்சோலைக்
கோலவண்டு வைகலும் தேன்அருந்திப்
பண்ஆர்செய்யும்
பட்டினத்துப் பல்லவன் ஈச்சரமே.
பொழிப்புரை :பகைவராய
அசுரர்களின் கோட்டைகளாய திரி புரங்களைச் சினந்தழித்த எந்தையாகிய பெருமானும், தேவர்களின் கண்களாய் விளங்குவோனும், இவ்வுலகைக் காக்கின்ற கண்ணுதலும் ஆகிய சிவபிரான்
மேவிய இடம், நன்கு அமைக்கப்பட்ட
சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசைபாடும் காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரமாகும்.
பாடல்
எண் : 3
மங்கை
அங்குஓர் பாகம்ஆக, வாள்நிலவு ஆர்சடைமேல்,
கங்கை
அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம்,
பொங்குஅயம்சேர்
புணரிஓத மீதுஉயர் பொய்கையின்மேல்
பங்கயம்
சேர் பட்டினத்துப் பல்லவன் ஈச்சரமே.
பொழிப்புரை :உமையம்மையை ஒரு
பாகமாகக் கொண்டு ஒளி பொருந்திய பிறை தங்கிய சடையின்மேல் கங்கை நங்கையையும் வாழ
வைத்துள்ள கள்வனாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மிக்க ஆழமான கடலினது வெள்ள நீரால்
தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்துள்ள
காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.
பாடல்
எண் : 4
தார்ஆர்
கொன்றை பொன்தயங்கச் சாத்திய மார்புஅகலம்,
நீர்ஆர்
நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னும்இடம்
போர்ஆர்
வேல்கண் மாதர்மைந்தர் புக்குஇசை பாடலினால்
பார்ஆர்கின்ற
பட்டினத்துப் பல்லவன் ஈச்சரமே.
பொழிப்புரை :மாலையாகக் கட்டிய
கொன்றை மலர்கள் பொன் போல் விளங்குமாறு சூட்டியுள்ள மார்பின் பரப்பில், நீரில் குழைத்த சாம்பலைச் சந்தனத்தைப்
போலப் பூசியுள்ள குற்றமற்ற சிவபிரான் எழுந்தருளிய இடம், போர்செய்யத் தகுதியான கூரிய வேல் போலும்
கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள்
வெள்ளம்போல் திரண்டுள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.
பாடல்
எண் : 5
மைசேர்கண்டர், அண்டவாணர் வானவரும்
துதிப்ப
மெய்சேர்
பொடியர், அடியார்ஏத்த மேவி
இருந்தஇடம்,
கைசேர்
வளையார் விழைவினோடு காதன்மை யால்கழலே
பைசேர்
அரவுஆர் அல்குலார்சேர் பல்லவன் ஈச்சரமே.
பொழிப்புரை :கருமை நிறம்
பொருந்திய கண்டத்தினை உடைய வரும்,
மண்ணக
மக்களும் விண்ணகத் தேவரும் துதிக்க மேனிமிசைத் திருநீறுபூசியவனும் ஆகிய நிமலன், அடியவர் புகழ மேவியிருந்தருளும் இடம், கைகளில் மிகுதியான வளையல்களை
அணிந்தபாம்பின் படம் போன்ற அல்குலை உடைய இளமகளிர் விழைவோடும் காதலோடும் திருவடிகளை
வழிபடச் சேர்கின்ற திருப்பல்லவனீச்சரமாகும்.
பாடல்
எண் : 6
குழலின்
ஓசை, வீணைமொந்தை கொட்ட, முழவுஅதிரக்
கழலின்ஓசை
ஆர்க்கஆடும் கடவுள் இருந்தஇடம்,
சுழியில்ஆரும்
கடலில் ஓதம் தெண்திரை மொண்டுஎறியப்
பழியிலார்கள்
பயில்புகாரில் பல்லவன் ஈச்சரமே.
பொழிப்புரை :குழலோசைக்கு ஏற்ப
வீணை, மொந்தை ஆகியன
முழங்கவும், முழவு ஒலிக்கவும், காலில் அணிந்துள்ள வீரக்கழல் நடனத்துக்கு
ஏற்பச்சதங்கை போல இசைக்கவும் ஆடும் கடவுளாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், சுழிகள் பொருந்திய கடலில் காவிரி
வெள்ளநீர் தெளிந்த நீரை முகந்து எறியுமாறு விளங்குவதும், பழியற்ற நன்மக்கள் வாழ்வதுமான புகார்
நகரிலுள்ள பல்லவனீச்சரமாகும்.
பாடல்
எண் : 7
வெந்தல்ஆய
வேந்தன்வேள்வி வேர்அறச்சாடி,
விண்ணோர்
வந்து
எலாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்,
மந்தல்ஆய
மல்லிகையும் புன்னைவளர் குரவின்
பந்தல்ஆரும்
பட்டினத்துப் பல்லவன் ஈச்சரமே.
பொழிப்புரை :தகுதி இல்லாத மிக்க
கூட்டத்தை உடைய தக்கன் என்னும் வேந்தன் செய்த வேள்வியை அடியோடு அழித்துத் தேவர்கள்
எல்லோரும் வந்து தன்னை விரும்பி வழிபட நின்ற பெருவீரனாகிய சிவபிரானது இடம், மென்மையான மல்லிகை, வளர்ந்து பரவியுள்ள புன்னை குராமரம்
ஆகியவற்றில் படர்ந்துள்ள, காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரமாகும்.
பாடல்
எண் : 8
தேர்அரக்கன்
மால்வரையைத் தெற்றி எடுக்க,அவன்
தார்
அரக்கும் திண்முடிகள் ஊன்றிய சங்கரன்ஊர்,
கார்அரக்கும்
கடல்கிளர்ந்த காலம்எலாம் உணரப்
பார்அரக்கம்
பயில்புகாரில் பல்லவன் ஈச்சரமே.
பொழிப்புரை :சிறந்த தேரை உடைய
இராவணன் பெருமை மிக்க கயிலை மலையைக் கைகளைப்பின்னி அகழ்ந்து எடுக்க, மாலைகள் அழுத்தும் அவனது திண்ணிய தலைகள்
பத்தையும் கால் விரலால் ஊன்றி நெரித்த சங்கரனது ஊர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது
உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை
பூண்டு போற்றி வாழும் பெருமையுடையதுமாகிய, புகார் நகரைச் சேர்ந்த
பல்லவனீச்சரமாகும்.
பாடல்
எண் : 9
அங்கம்
ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடுமால்,
தம்கணாலும்
நேடநின்ற சங்கரன் தங்கும் இடம்,
வங்கம்
ஆரும் முத்தம் இப்பி வார்கடல் ஊடுஅலைப்பப்
பங்கம்இல்லார்
பயில்புகாரில் பல்லவன் ஈச்சரமே.
பொழிப்புரை :ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும், முறையே ஓதும் பிரமனும், திருமாலும் தம் கண்களால் தேருமாறு
உயர்ந்து நின்ற சங்கரன் தங்கும் இடம், மரக்கலங்களை
உடைய கடல் முத்துக்களையும் சங்கங்களையும் அலைக்கரங்களால் அலைத்துத் தருவதும், குற்றமற்றோர் வாழ்வதுமாய புகாரில்
அமைந்துள்ள பல்லவனீச்சரம் ஆகும்.
பாடல்
எண் : 10
உண்டுஉடுக்கை
இன்றியேநின்று, ஊர்நக வேதிரிவார்,
கண்டுஉடுக்கை
மெய்யில்போர்த்தார், கண்டுஅறி யாதஇடம்,
தண்டு
உடுக்கை தாளம் தக்கை சார நடம்பயில்வார்
பண்டு
இடுக்கண் தீரநல்கும் பல்லவன் ஈச்சரமே.
பொழிப்புரை :அளவுக்கு மீறி உண்டு
ஆடையின்றி ஊரார் சிரிக்கத் திரியும் சமணர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு
திரியாது ஆடையை மெய்யில் போர்த்து உழலும் புத்தர்களும் கண்டு அறியாத இடம், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவை பொருந்த நடனம் புரிபவராய், அடியவர் இடுக்கண்களைப் பண்டு முதல்
தீர்த்தருளிவரும் பரமனார் எழுந்தருளிய பல்லவனீச்சரமாகும்.
பாடல்
எண் : 11
பத்தர்ஏத்தும்
பட்டினத்துப் பல்லவன் ஈச்சரத்துஎம்
அத்தன்தன்னை
அணிகொள்காழி ஞானசம் பந்தன்சொல்
சித்தம்
சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோய்இலர்ஆய்
ஒத்துஅமைந்த
உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.
பொழிப்புரை :பக்தர்கள் போற்றும்
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விளங்கும் எம் தலைவனாகிய இறைவனை அழகிய
சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செழுந்தமிழை மனம் ஒன்றிச்
சொல்லி வழிபடும் மக்கள், தீ வினையும் நோயும்
இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர்
என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
3. 112 திருப்பல்லவனீச்சரம் பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பரசுபாணியர், பாடல்வீணையர்,
பட்டினத்துஉறை
பல்லவனீச்சரத்து
அரசுபேணி
நின்றார், இவர்தன்மை
அறிவார்ஆர்.
பொழிப்புரை : சிவபெருமான்
மழுப்படையைக் கையில் ஏந்தியவர் . வீணையில் பாட்டிசைப்பவர் .
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் ஆட்சி புரிந்து அருள்புரிபவர் . இவரது
தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார் ? ஒருவரும்
அறியார் .
பாடல்
எண் : 2
பட்டநெற்றியர், நட்டம் ஆடுவர் ,
பட்டினத்து உறை
பல்லவனீச்சரத்து
இட்டமாய்
இருப்பார், இவர்தன்மை
அறிவார்ஆர்.
பொழிப்புரை : தலைமைப்
பட்டத்திற்குரிய அடையாள அணிகலன் அணிந்த நெற்றியர் . திருநடனம் செய்பவர் .
காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் .
இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார் ?
பாடல்
எண் : 3
பவளமேனியர், திகழும் நீற்றினர் ,
பட்டினத்துஉறை
பல்லவனீச்சரத்து
அழகராய்
இருப்பார், இவர்தன்மை
அறிவார்ஆர்.
பொழிப்புரை : சிவபெருமான் பவளம்
போன்ற சிவந்த மேனியுடையவர் , ஒளிபொருந்திய
திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவர் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில்
விரும்பி வீற்றிருந்தருளும் அழகர் . இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்
?
பாடல்
எண் : 4
பண்ணில்யாழினர், பயிலும் மொந்தையர்,
பட்டினத்துஉறை
பல்லவனீச்சரத்து
அண்ணலாய்
இருப்பார், இவர்தன்மை
அறிவார்ஆர்.
பொழிப்புரை :இறைவன் பண்ணிசைக்கும்
யாழினை உடையவர் . மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர் .
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர் .
இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார் ?
பாடல்
எண் : 5
பல்இல்
ஓட்டினர் பலிகொண்டு உண்பவர்,
பட்டினத்துஉறை
பல்லவனீச்சரத்து
எல்லிஆட்டு
உகந்தார், இவர்தன்மை
அறிவார்ஆர்.
பொழிப்புரை : சிவபெருமான் பற்களே
இல்லாத மண்டை யோட்டில் பிச்சையேற்று உண்பவர் . காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் . இரவில் நடனம் ஆடுதலை
விரும்புபவர் . இவர் தன்மை யார் அறிவார் ?
பாடல்
எண் : 6
பச்சைமேனியர், பிச்சைகொள்பவர் ,
பட்டினத்துஉறை
பல்லவனீச்சரத்து
இச்சையாய்
இருப்பார், இவர்தன்மை
அறிவார்ஆர்.
பொழிப்புரை : சிவபெருமான்
பச்சைநிறம் கொண்ட திருமேனி உடையவர் . பிச்சையேற்று உண்பவர் .
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . இவர்
தன்மை யார் அறிவார் ?
பாடல்
எண் : 7
பைங்கண்
எற்றினர், திங்கள்சூடுவர் ,
பட்டினத்துஉறை
பல்லவனீச்சரத்து
எங்குமாய்
இருப்பார், இவர்தன்மை
அறிவார்ஆர்.
பொழிப்புரை : இறைவன் பசிய
கண்களையுடைய எருதின்மேல் ஏறுபவர் . பிறைச்சந்திரனை சூடியுள்ளவர் .
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும் , எங்கும் வியாபித்துள்ளவர் . இவர் தன்மை
யார் அறிவார் ?
பாடல்
எண் : 8
பாதம்
கைதொழ வேதம் ஓதுவர்,
பட்டினத்துஉறை
பல்லவனீச்சரத்து
ஆதியாய்
இருப்பார், இவர்தன்மை
அறிவார்ஆர்.
பொழிப்புரை : தம் திருவடிகளைக்
கைகளால் தொழுது உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவ பெருமான்
அருளிச்செய்தார் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி
வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியாய் இருப்பவர் . இவரது தன்மையை யார் அறிவார் ?
பாடல்
எண் : 9
படிகொள்மேனியர், கடிகொள் கொன்றையர் ,
பட்டினத்துஉறை
பல்லவனீச்சரத்து
அடிகளாய்
இருப்பார், இவர்தன்மை
அறிவார்ஆர்.
பொழிப்புரை : இறைவன் உலகம்
முழுவதையும் தம் திருமேனியாகக் கொண்டவர் . நறுமணம் கமழும் கொன்றை மாலையை
அணிந்துள்ளவன் . காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் தலைவனாய் விரும்பி
வீற்றிருந்தருளுபவன். இவன் தன்மை யார் அறிவார் ?
பாடல்
எண் : 10
பறைகொள்பாணியர், பிறைகொள்சென்னியர் ,
பட்டினத்துஉறை
பல்லவனீச்சரத்து
இறைவராய்
இருப்பார், இவர்தன்மை
அறிவார்ஆர்.
பொழிப்புரை : இறைவன் பறை என்னும்
இசைக்கருவியை உடையவன் . பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன் .
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய் விரும்பி
வீற்றிருந்தருளுபவன் . இவர் தன்மை யார் அறிவார் ?
பாடல்
எண் : 11
வானம்
ஆள்வதற்கு ஊனம் ஒன்றுஇலை,
மாதர்பல்லவ
னீச்சரத்தானை
ஞானசம்பந்தன்
நல்தமிழ், சொல்லவல்லவர்
நல்லவரே.
பொழிப்புரை : அழகிய
காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து இறைவனைப் போற்றி , ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த்
திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர் . அவர்கள் மறுமையில்
வானுலகை ஆள்வதற்குத் தடையொன்றுமில்லை .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment