திரு வெண்காடு


திரு வெண்காடு

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

     சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.


இறைவர்            : சுவேதாரண்யேசுவரர், வெண்காட்டு நாதர்.

இறைவியார்       : பிரமவித்யாநாயகி.

தல மரம்           : வடஆலமரம்.

தீர்த்தம்             : முக்குளம்(சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)                                                                     ( முதலில் அக்கினி தீர்த்தம், பிறகு சூரிய தீர்த்தம், இறுதியாக         
                               சந்திர  தீர்த்தம் என்ற முறையில்  நீராடுதல்.)

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - 1. கண்காட்டு நுதலானும்                                                                             2. உண்டாய் நஞ்சை,
                                                             3. மந்திர மறையவை.

                                2. அப்பர் -     1. பண்காட் டிப்படி,
                                                     2. தூண்டு சுடர்மேனி

                                      3. சுந்தரர்  -  1. படங்கொள் நாகம்


         காவிரிக் கரையில் உள்ள 6 திருத்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.

         சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் அமைந்திருக்கிறது. கோயிலைச் சுற்றி நான்கு தேரோடும் வீதிகள் உள்ளன. கோயில் உள்ளே நான்கு திருச்சுற்றுக்கள் இருக்கின்றன. இந்த ஆலயத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் இராஜ கோபுரங்கள் உண்டு. வெளிச் சுற்றில் இபருந்து உள்ளே செல்ல இரு கூடகோபுரங்கள் இருக்கின்றன. சூரியனும் சந்திரனும் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர். இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இருந்து அக்காலத்து சோழ மன்னர்கள் ஆதித்திய சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் பல தானங்களைச் இக்கோயிலுக்கு செய்திருப்பது தெரிய வருகிறது.

         ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் திருவெண்காடு தலத்திற்கு உண்டு. மூலவர் சுயம்பு வடிவானவர். இங்கும் சிதம்பரம் போன்றே நடராஜர் சபை, படிக லிங்கம், ரகசியம் அமைந்துள்ளது. படிக லிங்கத்திற்கு தினமும் 4 முறை அபிஷேகமும் நடராஜருக்கு வருடத்திற்கு 6 முறையும் அபிஷேகம் நடைபெறுகின்றன.

         இத்தலத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும், காளி சந்நிதியும் மிகவும் பிரசித்தி பெற்றவை. துர்க்கை அம்மனின் உருவச் சிற்பமும், காளிதேவியின் உருவச் சிற்பமும் மிகுந்த கலை அழகுடன் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதே போன்று இங்குள்ள நடராஜ மூர்த்தியும் மிகுந்த கலை அழகு கொண்டது. சிதம்பரத்தில் உள்ளதைப் போன்றே இங்கும் நடராஜர் சபைக்கு அருகில் மஹாவிஷ்ணுவின் சந்நிதி இருக்கிறது.

         இங்குள்ள அகோரமூர்த்தி இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு பெற்றவர். பிரம்மாவிடம் பெற்ற வரங்கள் காரணமாக மருத்துவன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியதனால் அவர்கள் திருவெண்காடு வந்து தங்கி இருந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து மேலும் தேவர்களுக்கு துன்பத்தைத் தர ரிஷபதேவர் அசுரனுடன் தேவர்களைக் காப்பாற்ற போரிட்டார். மருத்துவாசுரன் ரிஷபதேவர் மீது மாயச் சூலத்தை ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று. இஃதையறிந்த இறைவன் கோபமுற்று அவருடைய 5 முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோரமூர்த்தியைக் கண்டவுடன் அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்தான். அகோரமூர்த்தியாக வடிவு கொண்டு வந்து மருத்துவாசுரனை அழித்தநாள் ஞாயிற்றுக்கிழமை பூரநட்சத்திரம். இதனால் இன்றும் இத்திருக்கோயிலில் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 10 மணிக்குமேல் (இரண்டாங்கால முடிவில்) அகோரமூர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருவெண்காடு வருவோர், ஞாயிறு நாளாக அமைந்தால் அன்றிரவு தங்கி, ஆலயத்தில் இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டாயம் இவ்வழிபாட்டைத் தரிசிக்க வேண்டும். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமி சந்நிதிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.

இத்திருத்தலத்தில்........................................

மூர்த்திகள் மூன்று - சுவேதாரண்யேசுவரர், நடராஜர்அகோரமூர்த்தி

சக்திகள் மூன்று - பிரம்மவித்யாநாயகி, காளிதேவி, துர்க்கை

தீர்த்தங்கள் மூன்று - சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம்

தலவிருட்சங்கள் மூன்று - வடவால், வில்வம், கொன்றை.

         இக்கோயிலில் உள்ள சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் ருத்ரபாதம் இருக்கிறது. இங்கே சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இந்த ஆலமரத்தின் அருகில் நமது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். திதி தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த தலங்களில் திருவெண்காடு தலமும் முக்கியமான ஒன்றாகும்.

         திருவெண்காடு தலம் ஆதி சிதம்பரம் என்று போற்றப்படுகிறது. நடராச சபை சிதம்பரத்தில் உள்ளது போன்றே செப்பறையில் அமைந்துள்ளது. உள்ளே இருக்கும் படிக லிங்கத்திற்கும் சிதம்பரத்தில் நடப்பது போன்று நாடொறும் பூசை நடைபெறுகிறது. சிதம்பர ரகசியமும் இங்குள்ளது. சிவபெருமான் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம், காளி தாண்டவம், கெளரி தாண்டவம், முனி தாண்டவம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க தாண்டவம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம் ஆகிய ஒன்பது தாண்டவங்களை ஆடியுள்ளார்.

         திருவெண்காடு நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய தலமாகும். அம்பாள் பிரம்மவித்யா நாயகியின் கோயிலுக்கு இடது பக்கத்தில் தனி சந்நிதியில் புதபகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். புதனின் தந்தையான சந்திரனின் சந்நிதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும் புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. புதபகவானை வழிபட்டால் உடலில் உள்ள நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்குதல், கல்வி மேன்மை, நாவன்மை, செய்யும் தொழில் சிறப்பு ஆகிய நலன்கள் உண்டாகும்.இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர்.

         திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் ஆலயத்தில் உள்ள அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், என்னும் முக்குளங்களிலும் முறையே நீராடி மூலவர் சுவேதாரண்யேசுவரை வழிபட்டால் பெரும் பலனும் நன்மக்கட்பேறும் இறைவன் அருளால் கிடைக்கும். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய திருப் பதிகம் ஒன்றின் இரண்டாவது பாடலில் இதை குறிப்பிடுகிறார். அச்சுத களப்பாளர் என்பார் பிள்ளைப் பேறு இல்லாமல் வருந்தியதை அவருடைய குருவான அருள்நந்திசிவம் அறிந்து, திருமுறையில் கயிறு சாத்திக் கிடைத்தது, திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய கண்காட்டு நுதலானும் என்னும் திருப்பதிகம். குருநாதரின் வாக்கின்படிக்கு, திருவெண்காடு வந்து, முக்குளங்களிலும் நீராடி வழிபட்டதன் பயனாக, மெய்கண்ட நாதனார் அவதரித்து, ஈராண்டில் சிவஞானம் பெற்று உயர்ந்தார்.

         நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டுநங்கை பிறந்த தலம் என்ற சிறப்பும் திருவெண்காட்டிற்கு உண்டு. இந்திரன், ஐராவதம், சுவேதகேது, சுவேதன், மகாவிஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர்.

          "சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து, முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ" என்று ஒரு தாலாட்டுப் பாட்டும் இத்தல முக்குளச் சிறப்பை விளக்குகின்றது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நல்லவர்கள் கண்காட்டு நெற்றிக் கடவுளே என்று தொழ வெண்காட்டின் மேவுகின்ற மெய்ப்பொருளே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 123
சீரினில் திகழ்ந்த பாடல்
         திருக்கடைக் காப்புப் போற்றி,
பாரினில் பொலிந்த தொண்டர்
         போற்றிடப் பயில்வார், பின்னும்
ஏர்இசைப் பதிகம் பாடி,
         ஏத்திப்போந்து, இறைவர் வெண்காடு
ஆரும்மெய்க் காதலோடும்
         பணிவதற்கு அணைந்தார் அன்றே.

         பொழிப்புரை : சிறப்புடன் விளங்கும் பாடலால் திருக்கடைக் காப்புச் செய்து போற்றி, உலகில் விளங்கிய திருத்தொண்டர்கள் போற்ற அங்கு இருந்த பிள்ளையார், மேலும், அழகும் இசையும் கொண்ட பதிகத்தைப் பாடிப் போற்றிப் பின், இறைவர் எழுந்தருளி இருக்கும் திருவெண்காட்டினை நிறைந்த மெய்யன்புடன் பணிய, அதுபொழுதே புறப்பட்டார்.


பெ. பு. பாடல் எண் : 124
பொன்இதழ்க் கொன்றை வன்னி
         புனல்இள மதியம்நீடு
சென்னியர் திருவெண் காட்டுத்
         திருத்தொண்டர் எதிரே சென்றுஅங்கு,
இன்னதன் மையர்கள் ஆனார்
         எனஒணா மகிழ்ச்சி பொங்க,
மன்னுசீர்ச் சண்பை ஆளும்
         மன்னரைக் கொண்டு புக்கார்.

         பொழிப்புரை : பொன்போன்ற இதழ்களையுடைய கொன்றை மலரும், வன்னியும், கங்கையும், பிறைச் சந்திரனும் ஆகிய இவற்றை அணிந்துள்ள தலைமை பொருந்திய சிவபெருமானின் திருவெண்காட்டில் உள்ள தொண்டர்கள், திருமுன்வந்து, இன்ன தன்மை ஆனார் என்று இயம்பலாகாதவாறு மேன்மேலும் மகிழ்ச்சி பெருக, நிலை பெற்ற சிறப்பினையுடைய சீகாழியை ஆண்டு வரும் தலைவரான பிள்ளையாரை வரவேற்று, அழைத்துக் கொண்டு அந்நகரத்துள் புகுந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 125
முத்தமிழ் விரகர் தாமும்
         முதல்வர்கோ புரத்து முன்னர்ச்
சித்தம் நீடு உவகை யோடும்
         சென்றுதாழ்ந்து, எழுந்து, புக்கு,
பத்தராம் அடியார் சூழப்
         பரமர்கோ யிலைச்சூழ் வந்து,
நித்தனார் தம்முன்பு எய்தி,
         நிலம்உறத் தொழுது வீழ்ந்தார்.

         பொழிப்புரை : முத்தமிழ் வித்தகரான பிள்ளையார், சிவபெருமானின் திருக்கோபுரத்தை, உள்ளத்தில் பெருகிய மகிழ்ச்சியுடன் முன் தாழ்ந்து வணங்கி, எழுந்து, உட்சென்று, பத்திமை மிக்க தொண்டர்கள் சூழ, இறைவரின் திருக்கோயிலை வலம் வந்து, என்றும் நிலைபெற்றிருக்கும் இறைவரின் திருமுன்பு சென்று, நிலம் பொருந்தத் தொழுது விழுந்தார்.


பெ. பு. பாடல் எண் : 126
மெய்ப்பொருள் ஆயி னாரை,
         வெண்காடு மேவி னாரை,
செப்புஅரும் பதிக மாலை
         "கண்காட்டு நுதல்" முன் சேர்த்தி,
முப்புரம் செற்றார் பாதம்
         சேரும்முக் குளமும் பாடி,
ஒப்புஅரும் ஞானம் உண்டார்
         உளமகிழந்து ஏத்தி வாழ்ந்தார்.

         பொழிப்புரை : மெய்ப்பொருளாக விளங்கியருளும் திருவெண்காட்டில் வீற்றிருக்கும் இறைவற்குச் சொலற்கரிய சிறப்புடைய திருப்பதிகமான `கண்காட்டு நுதலானும்\' (தி.2 ப.48) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்த பதிகத்தை மாலையாகச் சாத்தி, முப்புரங்களையும் எரித்த இறைவர் திருவடிகளைச் சேரும் முக்குளங்களையும் அப்பதிகத்தில் அமைத்துப் பாடி, ஒப்பில்லாத ஞானப்பாலமுது உண்ட பிள்ளையார், மனம் மகிழ்ந்து போற்றி அங்கு வீற்றிருந்தருளினார்.

         குறிப்புரை : முக்குளங்கள்: மதி - (சோம குண்டம்), ஞாயிறு - (சூரிய குண்டம்), நெருப்பு - (அக்கினி குண்டம்) ஆகிய மூவர் பெயரானும் அமைந்திருக்கும் குளங்கள். இம்மூன்றனுள் முன்னிரு குளங்களின் சிறப்பை, `இருகாமத்திணையேரி\' (பட்டினப். வரி 39) எனப் பட்டினப்பாலையும், `சோம குண்டம், சூரிய குண்டம் துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடும் தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார் போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர்\' (சிலப். புகார்க் கனாத். 59-63) எனச் சிலம்பும் நவிலும். இம்முக்குளச் சிறப்பினைப் பிள்ளையார் 2, 7 ஆகிய பாடல்களில் போற்றியுள்ளார்.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை 
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும் 
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் 
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.     --- (தி.2 ப.48 பா.2) `

....வினைதுரக்கும் முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே' (தி.2 ப.48 பா.7) 

 என்பன அப்போற்றி உரைகளாம். இப்பதிகப் பயனாகவே மெய்கண்டார் தோன்றியருளினார் என்பதும் இங்கு நினைவுகூரத் தக்கதாம்.


திருஞானசம்பந்தர்  திருப்பதிகம்

2.048 திருவெண்காடு                         பண் - சீகாமரம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கண்காட்டு நுதலானும்,
         கனல்காட்டும் கையானும்,
பெண்காட்டும் உருவானும்,
         பிறைகாட்டும் சடையானும்,
பண்காட்டும் இசையானும்,
         பயிர்காட்டும் புயலானும்,
வெண்காட்டில் உறைவானும்,
         விடைகாட்டும் கொடியானே.

         பொழிப்புரை :வெண்காட்டில் உறையும் பெருமான், நுதலிடைக் கண் கொண்டவன்: கையில் கனல் ஏந்தியவன்: உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியன்: பிறையணிந்த சடைமுடியினன்: பண்ணில் இறைவடிவானவன்: பயிரை வளர்க்கும் மேகமானவன்: விடைஏந்திய கொடியை உடையவன்.


பாடல் எண் : 2
பேய்அடையா, பிரிவுஎய்தும்,
         பிள்ளையினோடு உள்ளநினைவு
ஆயினவே வரம்பெறுவர்,
         ஐயுறவேண் டாஒன்றும்,
வேய்அனதோள் உமைபங்கன்
         வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத்
         தோயாவாம் தீவினையே.

         பொழிப்புரை :மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள முக்குளநீரில் மூழ்கி எழுந்து வழிபடுவாரைப் பேய்கள் சாரமாட்டா. பேய் பிடித்திருந்தாலும் விலகும். மகப்பேறு வாய்க்கும். மனவிருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவர். சிறிதும் சந்தேகம் வேண்டா.


பாடல் எண் : 3
மண்ணொடுநீர் அனல்காலோடு
         ஆகாயம் மதியிரவி
எண்ணில்வரும் இயமானன்
         இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடுஆண் பெருமையொடு
         சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண்
         காடுஇடமா விரும்பினனே.

          பொழிப்புரை :மண், நீர், அனல், காற்று, ஆகாயம், மதி, இரவி, எண்ணற்றனவாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை, மறுமை எண்திசை, பெண் ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை, சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும் புகழாளனாகிய சிவபிரான், இந்திரன் வழிபடத்திருவெண்காட்டைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டு எழுந்தருளியுள்ளான்.

 
பாடல் எண் : 4
விடம்உண்ட மிடற்றுஅண்ணல்
         வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை
         மலர் நிழலைக் குருகுஎன்று
தடமண்டு துறைக்கெண்டை
         தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம்
         நகைகாட்டும் காட்சியதே.

         பொழிப்புரை :நஞ்சுண்ட கண்டனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெண்காட்டை அடுத்துள்ள தண்காட்டில் மடல்விரிந்த வளைந்த தாழைமலர் நிழலைக் குருகு என்றெண்ணி நீர்நிலையில் வாழும் கெண்டைமீன்கள் தாமரைப்பூவின் அடியில் மறைய அதனைக்கண்ட கடல்முத்துக்கள் நகைப்பது போல ஒளி விடும் காட்சியால் புலப்படுகிறது.


பாடல் எண் : 5
வேலைமலி தண்கானல்
         வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால்
         வழிபடுநன் மறையவன்தன்
மேலடர்வெம் காலன்உயிர்
         விண்டபினை, நமன் தூதர்
ஆலமிடற் றான்அடியார்
         என்றுஅடர அஞ்சுவரே.

         பொழிப்புரை :கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த இயமனுடைய தூதர்கள் சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவர்.


பாடல் எண் : 6
தண்மதியும் வெய்யரவும்
         தாங்கினான் சடையின்உடன்
ஒண்மதிய நுதல்உமைஓர்
         கூறுஉகந்தான் உறைகோயில்,
பண்மொழியால் அவன்நாமம்
         பலஓதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல்
         வீற்றிருக்கும் வெண்காடே.

         பொழிப்புரை :தனது சடைமுடியோடு தண்மதியையும் வெய்ய அரவையும் தாங்கியவனும் ஒளி பொருந்திய மதி போன்ற நுதலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான், உறையும் கோயில், பசிய கிளிகள் இனிய குரலால் இறைவன் திருப்பெயர்களை ஓதிக்கொண்டு வெண்முகில் சேரும் உயரிய கரியபனை மீது வீற்றிருக்கும் வெண்காடாகும்.


பாடல் எண் : 7
சக்கரமாற்கு ஈந்தானும்,
         சலந்தரனைப் பிளந்தானும்,
அக்குஅரைமேல் அசைத்தானும்,
         அடைந்துஅயிரா வதம்பணிய
மிக்குஅதனுக்கு அருள்சுரக்கும்
         வெண்காடும், வினைதுரக்கும்
முக்குளம்நன்கு உடையானும்
         முக்கண்உடை இறையவனே.

          பொழிப்புரை :திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவனும், சலந்தராசுரனைப் பிளந்து அழித்தவனும், இடையில் எலும்புமாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், வினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய இறையவனே ஆவான்.


பாடல் எண் : 8
பண்மொய்த்த இன்மொழியாள்
         பயம்எய்த, மலைஎடுத்த
உன்மத்தன் உரம்நெரித்து அன்று
         அருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை
         நடம்ஆடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண்டு
         இசைமுரலும் வெண்காடே.

         பொழிப்புரை :பண்ணிசை போலும் இனிய மொழியினளாகிய பார்வதிதேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவபிரான் உறையும் கோயில், கண்கள் பொருந்திய தோகையைக் கொண்ட நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வானளாவிய பொழிலில் வரிவண்டுகள் இசைபாடவும் விளங்கும் திருவெண்காடாகும்.


பாடல் எண் : 9
கள்ஆர்செங் கமலத்தான்
         கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ஆண்மை கொளற்குஓடி
         உயர்ந்துஆழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும்
         மேதகுவெண் காட்டான்என்று
உள்ஆடி உருகாதார்
         உணர்வுடைமை உணரோமே.

         பொழிப்புரை :தேன் பொருந்திய செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிகஉயர்ந்தும் ஆழ்ந்தும் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபிரான் வெள்ளானை தவஞ்செய்து வழிபடும் நிலையில் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று மனங்கசிந்து உருகாதவரின் ஞானத்தை மதியோம்.


பாடல் எண் : 10
போதியர்கள் பிண்டியர்கள்
         மிண்டுமொழி பொருள்என்னும்
பேதையர்கள் அவர்பிறிமின்
         அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர்
         வியன்திருவெண் காட்டான்என்று
ஓதியவர் யாதும்ஒரு
         தீதுஇலர்என்று உணருமினே.

         பொழிப்புரை :போதிமரத்தின் அடியில் தவம் செய்யும் புத்தர்கள், அசோகமரநிழலில் தவம் செய்யும் சமணர்கள் கூறும் வன்புரைகளைப்பொருளாகக் கருதும் பேதையர்களைப் பிரிவீர்களாக. அறிவுடையவரே! இதனைக் கேளுங்கள். வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் பெயர்களை ஓதியவர் ஒரு தீங்கும் இலராவர் என்று உணருமின்.


பாடல் எண் : 11
தண்பொழில்சூழ் சண்பையர்கோன்
         தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி
         விகிர்தன்உறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை
         பாடியபத்து இவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்துஅவர்போய்
         வான் பொலியப் புகுவாரே.

         பொழிப்புரை :குளிர்ந்த பொழிலால் சூழப்பட்ட சண்பை நகர்த்தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தன், விண்ணிற் பொலியும் பிறைமதி சேர்ந்த சென்னியினை உடைய விகிர்தன் உறையும் திருவெண்காட்டைப் பண்ணிசை பொலியப்பாடிய இச்செந்தமிழ் மாலைபத்தையும் வல்லவர், மண்பொலிய வாழ்வதோடு வான்பொலியவும் சென்று வாழ்வர்.

                                             திருச்சிற்றம்பலம்


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 127
அருமையால் புறம்பு போந்து
         வணங்கி,அங்கு அமரும் நாளில்,
திருமுல்லை வாயில் எய்திச்
         செழுந்தமிழ் மாலை சாத்தி,
மருவிய பதிகள் மற்றும்
         வணங்குவார் மறையோர் ஏத்த,
தருமலி புகலி வந்து
         ஞானசம் பந்தர் சார்ந்தார்.

         பொழிப்புரை : அக்கோயிலினின்றும் பிரிதற்கரிய வகையில் வெளிப்போந்து வணங்கிச் சென்று, அத்திருப்பதியில் அவர் எழுந் தருளியிருந்த அந்நாள்களில், தென் திருமுல்லைவாயிலை அடைந்து செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, அவ்விடத்தினின்றும் அணுகப் பொருந்திய மற்றைய திருப்பதிகளையும் வணங்குவாராய், அந்தணர் போற்ற வந்த ஞானசம்பந்தர், அருட்செல்வம் மிக்க சீகாழியை அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 128
தோணிவீற்று இருந்தார் தம்மைத்
         தொழுதுமுன் நின்று, தூய
ஆணியாம் பதிகம் பாடி,
         அருட்பெரு வாழ்வு கூர,
சேண்உயர் மாடம் ஓங்கும்
         திருப்பதி அதனில், செய்ய
வேணியார் தம்மை நாளும்
         போற்றிய விருப்பின் மிக்கார்.

         பொழிப்புரை : திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கி, திருமுன்பு நின்று, தூய்மை பொருந்திய உரையாணியான திருப்பதிகத்தைப் பாடி, அருள் பெருக்கும் நல்வாழ்வு பெருக, வானளாவ உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த அப்பெரும் பதியில், வீற்றிருந்தருளும் சிவந்த சடையையுடைய சிவபெருமானை நாளும் போற்றிவரும் விருப்பம் மிக்கவராயினர்.


பெ. பு. பாடல் எண் : 129
வைகும்அந் நாளில் கீழ்பால்
         மயேந்திரப் பள்ளி, வாசம்
செய்பொழில் குருகா வூரும்,
         திருமுல்லை வாயில், உள்ளிட்டு
எய்திய பதிகள் எல்லாம்
         இன்புற இறைஞ்சி ஏத்தி,
தையலாள் பாகர் தம்மைப்
         பாடினார் தமிழ்ச்சொல் மாலை.

         பொழிப்புரை : இவ்வாறு அப்பதியில் வாழ்ந்து வந்த நாள்களில் இப்பதியின் கீழ்த் திசையில் உள்ள திருமயேந்திரப்பள்ளியையும், மணம் கமழ்கின்ற சோலை சூழ்ந்த திருக்குருகாவூரையும், திருமுல்லை வாயில் உள்ளிட்ட முன்பு சென்று வணங்கிய திருப்பதிகள் பலவற்றை யும் இன்பம் பொருந்தப் போற்றி, உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் மீது தமிழ்ச் சொல் மாலைகளைப் பாடினார்.

         குறிப்புரை : திருமயேந்திரப்பள்ளியில் அருளிய பதிகம்: `திரைதரு' - பண் : கொல்லி (தி.3 ப.31).

திருக்குருகாவூரில் அருளிய பதிகம் : `சுண்ணவெண்' - பண்: அந்தாளிக் குறிஞ்சி (தி.3 ப.124).

         திருமுல்லைவாயில் உள்ளிட்ட பதிகளாவன: திருக்கலிக்காமூர், திருவெண்காடு, கீழைத் திருக்காட்டுப்பள்ளி முதலியனவாகலாம். இவற்றுள் திருமுல்லைவாயிலுக்குப் பாடிய பதிகம் ஒன்றே இருத்தலின், அது முதல்முறை சென்ற பொழுது பாடியது என முன்னர்க் குறிக்கப்பட்டது. இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது.

         திருக்கலிக்காமூரில் அருளிய பதிகம்: `மடல்வரையின்' - பண்: பழம்பஞ்சுரம் (தி.3 ப.105).

         திருவெண்காட்டில் அருளிய பதிகங்கள்:

1. `உண்டாய் நஞ்சை' - பண்: காந்தாரம் (தி.2 ப.61).
2. `மந்திர மறையவை\' - பண்: காந்தார பஞ்சமம் (தி.3 ப.15).

         கீழைத்திருக்காட்டுப்பள்ளியில் அருளிய பதிகம்: `செய்யருகே' - பண் : நட்டபாடை (தி.1 ப.5).

திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்


2.061 திருவெண்காடு                      பண் - காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
"உண்டாய் நஞ்சை, உமையோர் பங்கா" என்றுஉள்கித்
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்
வெண்தா மரைமேல் கருவண்டு யாழ்செய் வெண்காடே.

         பொழிப்புரை :நஞ்சை உண்டவனே! உமைபங்கா! என்று கூறி மனத்தில் தியானித்துத் தொண்டராகிப் பணிகள் புரியும் அடியவர்களைத் துயரங்கள் நெருங்காவண்ணம் அவற்றை அறத்தீர்த்தருளும் எந்தையினது ஊர், வெண்டாமரை மலர்களில் கருவண்டுகள் யாழ் போல ஒலித்துத் தேனுண்ணும் திருவெண்காடாகும்.


பாடல் எண் : 2
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்திப்
பாதம் பல்நாள் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத்து ஒலியால் கிளிசொல் பயிலும் வெண்காடே.

         பொழிப்புரை :நாதனாகிய பெருமான் நம்மை ஆள்வான் என்று அவன்பெயரைப் பல முறையும் கூறி ஏத்திப் பல நாள்கள் திருவடிகளைப் பரவும் அடியவர்க்கு வரும் குற்றங்களைத் தீர்த்தருள எழுந்தருளியிருப்பவனது ஊர், வேதஒலிகளைக் கிளிகள் பேசும் திருவெண்காடாகும்.


பாடல் எண் : 3
தண்முத்து அரும்பத் தடம்மூன்று உடையான் தனைஉன்னிக்
கண்முத்து அரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள்
உண்முத்து அரும்ப உவகை தருவான் ஊர்போலும்
வெண்முத்து அருவிப் புனல்வந்து அலைக்கும் வெண்காடே.

         பொழிப்புரை :குளிர்ந்த முத்துக்கள் அரும்பும் முக்குளங்களைத் தீர்த்தங்களாகக் கொண்டுள்ளவனை நினைந்து கண்களில் முத்துக்கள் போல நீர் அரும்ப அவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைதொழுவார்களின் உள்ளங்களில் முத்துக்கள் போன்று தூய நன்மை தோன்ற உவகைதரும் இறைவனது ஊர் வெண்மையான முத்துக்கள் போன்ற அருவியின் புனல் வந்து அலைக்கும் திருவெண்காடாகும்.


பாடல் எண் : 4
நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா உள்கு வார்கள் உள்ளத்தே
கரையா வண்ணம் கண்டான்மேவும் ஊர்போலும்
விரைஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே.

         பொழிப்புரை :தலையில் நரை வந்து உடல் நாளுக்கு நாள் குறுகி மூப்பு நணுகுதற்குமுன், உரை வேறாகாது நினைபவர் உள்ளத்தே மெலிந்து கரைந்து ஒழியாதவாறு தன்னைத் தோற்றுவிப்பவனது ஊர், மணம் கமழும் தாமரை மலரில் அன்னங்கள் தங்கிமகிழும் திருவெண்காடாகும்.


பாடல் எண் : 5
பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான்என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப்போக அருளும் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச் சுரிசங்கு உலவித் திரியும் வெண்காடே.

         பொழிப்புரை :இளம்பிறையையும் கங்கையையும் முடியிற் சூடிய பெருமான் என்று மனத்தில் நினைந்து தொழுபவர்களின் பெருகிய நோய்களைத் தள்ளிப் போகுமாறு செய்தருளும் தலைவனது ஊர், வெண்ணிறமான உள்கோடுகளை உடைய சங்குகள் உலவித்திரியும் திருவெண்காடாகும்.


பாடல் எண் : 6
ஒளிகொள் மேனி உடையாய்உம்பர் ஆளீஎன்று
அளியர் ஆகி அழுதுஉற்று ஊறும் அடியார்கட்கு
எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர்போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.

         பொழிப்புரை :ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.


பாடல் எண் : 7
கோள்வித்து அனைய கூற்றம் தன்னைக் குறிப்பினான்
மாள்வித்து, அவனை மகிழ்ந்துஅங்கு ஏத்த மாணிக்காய்
ஆள்வித்து அமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே.

         பொழிப்புரை :உயிர் கவர்வதில் வித்துப் போல்பவனாகிய கூற்றுவனை, சிவபிரானை நினையும் குறிப்பினால் மாள்வித்து அச்சிவபிரானை மகிழ்வொடு ஏத்திய சுவேதகேது முனிவரை அமருலகம் ஆளச்செய்து அணிசெய்தவனது ஊர் வேள்விப்புகையால் வானம் இருள்கூர்கின்ற திருவெண்காடு ஆகும்.


பாடல் எண் : 8
வளைஆர் முன்கை மலையாள் வெருவ வரைஊன்றி
முளைஆர் மதியஞ் சூடி என்று முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர்போலும்
விளைஆர் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே.

         பொழிப்புரை :வளையலணிந்த முன்கையை உடைய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்தகயிலை மலையைக் கால்விரல் ஊன்றி நெரித்து, முளைமதிசூடிய இறைவனே என அடியவர் முப்போதும் தளராது ஏத்துமாறு எழுந்தருளிய எந்தையாகிய சிவபெருமானது ஊர், விளைவைக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்.


பாடல் எண் : 9
கரியா னோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு
உரியான், அமரர்க்கு அரியான் வாழும் ஊர்போலும்
விரிஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.

         பொழிப்புரை :கரிய திருமாலும் கமலமலரில் உறையும் நான் முகனும் அடி முடி காண இயலாதவாறு எரியுருவாய் நிமிர்ந்த எங்கள் பெருமானே! என்பார்கட்கு உரியவனும் அமரர்க்கு அரியவனுமான சிவபிரானது ஊர், வண்டுகள் பாடும் விரிந்த பொழில்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்.


பாடல் எண் : 10
பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்துஏத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவுஇன்றி
மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே.

         பொழிப்புரை :பாடுகின்ற அடியவர் பலரும் கூடிப்பரிவுடன் ஏத்த ஆடும் பாம்பை இடையிற்கட்டியுள்ளவனாகி, அறிவற்ற மூடர்களாகிய சமண் சாக்கியர்கள் உணர இயலாத வேடம் கொண்ட பெருமானது பதி வெண்காடாகும்.


பாடல் எண் : 11
விடைஆர் கொடியான் மேவி ஊறையும் வெண்காட்டைக்
கடைஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடைஆர் இன்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்கு
அடையா வினைகள், அமர லோகம் ஆள்வாரே.

         பொழிப்புரை :விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.

                                             திருச்சிற்றம்பலம்


3.015    திருவெண்காடு         பண் - காந்தார பஞ்சமம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மந்திரம் மறையவை வான வரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்இறை
வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய
அந்தமும் முதல்உடை அடிகள் அல்லரே.

         பொழிப்புரை :பஞ்சாக்கர மந்திரத்தைத் தனி நடுப்பகுதியில் கொண்ட வேதங்களும், தேவர்களும், இந்திரனும் வழிபட வீற்றிருக்கின்ற எங்கள் இறைவனாய், வெந்த வெண்ணீற்றினைத் திருமேனியில் பூசித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் அந்தமும், ஆதியுமாகிய அடிகள் அல்லரோ ?.


பாடல் எண் : 2
படைஉடை மழுவினர், பாய்புலித் தோலின்
உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்,
விடைஉடைக் கொடியர், வெண் காடு மேவிய
சடைஇடைப் புனல்வைத்த சதுரர் அல்லரே.

         பொழிப்புரை :இறைவர் மழுவைப் படையாக உடையவர். பாய்கின்ற புலித்தோலை ஆடையாக உடையவர். கோவணத்தை உகந்து அணிந்தவர். இடபவடிவம் பொறிக்கப்பட்ட கொடியுடையவர். திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் சடையிலே கங்கையைத் தாங்கிய திறமையானவர் அல்லரோ ?


பாடல் எண் : 3
பாலொடு நெய்தயிர் பலவும் ஆடுவர்,
தோலொடு நூல்இழை துதைந்த மார்பினர்,
மேலவர் பரவுவெண் காடு மேவிய
ஆலம் அதுஅமர்ந்த எம் அடிகள் அல்லரே.

         பொழிப்புரை :இறைவர் பாலொடு, நெய், தயிர் மற்றும் பலவற்றாலும் திருமுழுக்கு ஆட்டப்படுபவர். யானைத்தோலைப் போர்வையாகவும், புலித்தோலை ஆடையாகவும் அணிந்தவர். முப்புரி நூலணிந்த மார்பினர், சிவஞானிகள் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்து அறம் உரைத்த எம் தலைவர் அல்லரோ ?


பாடல் எண் : 4
ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப் புன்னையும்
தாழைவெண் குருகுஅயல் தயங்கு கானலில்
வேழம் அதுஉரித்தவெண் காடு மேவிய
யாழினது இசைஉடை இறைவர் அல்லரே.

         பொழிப்புரை :புலிநகக் கொன்றையும், செருந்தியும், நறுமணமிக்க புன்னை மலர்களும், தாழையும், குருக்கத்தியும் விளங்கும் கடற்கரைச் சோலையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில், யானையின் தோலையுரித்த ஆற்றல் உடையவராயும், யாழிசை போன்ற இனிமை உடையவராயும் உள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் அல்லரோ ?


பாடல் எண் : 5
பூதங்கள் பலஉடைப் புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்இறை
வேதங்கள் முதல்வர்வெண் காடு மேவிய
பாதங்கள் தொழநின்ற பரமர் அல்லரே.

         பொழிப்புரை :எம் இறைவர் , பூதகணங்கள் பல உடைய புனிதர் . புண்ணிய வடிவினர் . தம்மை வழிபடுபவர்களின் குற்றங்களையும் , துன்பங்களையும் தீர்த்தருளுபவர் . அவர் வேதங்களில் கூறப்படும் முதல்வர் . திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர்தம் பாதங்கள் அனைவராலும் தொழப்படும் நிலையில் விளங்கும் பரம்பொருள் அல்லவோ ?

பாடல் எண் : 6
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்இறை
விண்அமர் பொழில்கொள்வெண் காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே.

         பொழிப்புரை :மண்ணுலகத்தோரும், விண்ணுலகத்தோரும், மற்றுமுள்ள தேவர்களும் தினந்தோறும் எங்கள் இறைவனை வழிபட்டுப் போற்றுகின்றனர். வானளாவிய சோலைகளையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்பெருமானின் திருவடிகளை வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை .


பாடல் எண் : 7
நயந்தவர்க்கு அருள்பல நல்கி, இந்திரன்
கயந்திரம் வழிபடநின்ற கண்ணுதல்,
வியந்தவர் பரவுவெண் காடுமேவிய
பயந்தரு மழுஉடைப் பரமர் அல்லரே.

         பொழிப்புரை :விரும்பி வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவன வேண்டியவாறு அருளி , இந்திரனின் வெள்ளையானை வழிபட அதற்கும் அருள்புரிந்தவர் நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் ஆவார் . அனைவரும் அந்த இன்னருளை வியந்து போற்றும்படி திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பயந்தரு மழுப்படையுடைய பரமர் அல்லரோ ?


பாடல் எண் : 8
மலையுடன் எடுத்தவல் அரக்கன் நீள்முடி
தலையுடன் நெரித்துஅருள் செய்த சங்கரர்,
விலைஉடை நீற்றர்,வெண் காடு மேவிய
அலைஉடைப் புனல்வைத்த அடிகள் அல்லரே.

         பொழிப்புரை :கயிலைமலையை எடுத்த கொடிய அரக்கனாகிய இராவணனின் நீண்டமுடி , தலை , உடல் ஆகியவற்றை நெரித்து , பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாட , அருள் செய்த சங்கரர் , மதிப்புடைய திருநீற்றினைப் பூசியவர் . அலையுடைய கங்கையைச் சடையில் தாங்கித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளும் பெருமான் அவர் அல்லரோ ?


பாடல் எண் : 9
ஏடுஅவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த்
தேடவும் தெரிந்துஅவர் தேர கிற்கிலார்,
வேடம் அதுஉடையவெண் காடு மேவிய
ஆடலை அமர்ந்தஎம் அடிகள் அல்லரே.

         பொழிப்புரை :பூவிதழ்களுடைய நறுமணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் திருமுடியையும், திருஅடியையும் காணத்தேடியும் காண்பதற்கு அரியவராய் நெருப்புமலையாய் விளங்கியவரும், பலபல வேடம் கொள்பவருமான இறைவன் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து திருநடனம் புரிதலை விரும்பிய அடிகள் அல்லரோ ?
  

பாடல் எண் : 10
போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
வேதியர் பரவுவெண் காடு மேவிய
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.

         பொழிப்புரை :புத்தரும் , சமணரும் பொருத்தம் இல்லாதவராய் , இறையுண்மையை உணர்த்தும் நீதிகளை எடுத்துரைத்தும் , நல்வாழ்வு இல்லாமையால் அவற்றை நினைத்துப் பார்த்தலும் செய்யாதவர் ஆயினர் . எனவே அவர்களைச் சாராது , வேதம் ஓதும் அந்தணர்கள் பரவித் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்ற அனைத்துலகுக்கும் முதற்பொருளாகிய சிவபெருமான் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லையாம் .


பாடல் எண் : 11
நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எம் சிவன்உறை திருவெண் காட்டின்மேல்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே.

         பொழிப்புரை :பசுபுண்ணியம் , பதிபுண்ணியம் செய்த நல்லவர்கள் வசிக்கின்ற திருப்புகலியுள் அவதரித்த ஞானசம்பந்தன் , செல்வனாகிய எம் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவெண்காட்டின் மேல் பாடிய அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் பக்தியோடு ஓதவல்லவர்களுடைய துன்பங்களோடு அவற்றிற்குக் காரணமான அருவினையும் அறும் என்பது நமது ஆணையாகும்.
                                             திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 189
ஆண்டஅரசு எழுந்தருளக் கோலக் காவை
         அவரோடும் சென்றுஇறைஞ்சி, அன்பு கொண்டு
மீண்டுஅருளி னார்அவரும், விடைகொண் டிப்பால்
         வேதநா யகர்விரும்பும் பதிகள் ஆன
நீண்டகருப் பறியலூர், புன்கூர், நீடூர்,
         நீடுதிருக் குறுக்கை,திரு நின்றி யூரும்,
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணி,
         கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.

         பொழிப்புரை : ( சீர்காழியில் இருந்து ) திருநாவுக்கரசர் எழுந்தருளவே அவருடன் சென்று திருக்கோலக்காவைப் பணிந்து அன்பு விடைபெற்று ஞானசம்பந்தர் திரும்பினார். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு மேலும் மறைமுதல்வரான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகளாய பெருமைமிக்க திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடுர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின்றியூர், காணும் தகைமையுடைய திருநனிபள்ளி என்ற இவை முதலான பதிகளைச் சேர்ந்து நெற்றிக்கண் உடையவரின் திருவடிகளை வணங்கி மேற்செல்பவராய்.

         குறிப்புரை : திருக்கோலக்காவில் அப்பர் அருளிய பதிகம் கிடைத்திலது. இனி இப்பாடலில் குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஆறனுள் திருக்கருப்பறியலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. அடுத்து இருக்கும் திருப்புன்கூர், திருநீடுர் ஆகிய இரு பதிகளுக்கும் ஒருங்கியைந்தவாறு ஒரு பதிகம் உள்ளது. அது `பிறவாதே தோன்றிய`(தி.6 ப.11) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும். திருக்குறுக்கை வீரட்டத்திற்கு இரு பதிகங்கள் கிடைத்து உள்ளன. 1. `ஆதியிற் பிரமனார்` (தி.4 ப.49)- திருநேரிசை; 2. `நெடியமால்` (தி.4 ப.50) - திருநேரிசை. இவற்றுள் முன்னைய பதிகத்தில் பாடல் தோறும் வரலாறுகள் அமைந்துள்ளன. இரண்டாவது பதிகத்தில் இரண்டே பாடல்கள் உள்ளன. திருநின்றியூரில் அருளிய திருக்குறுந்தொகைப் பதிகம் `கொடுங்கண் வெண்டலை` (தி.5 ப.23) என்பதாம். திருநனிபள்ளியில் அருளிய பதிகம் `முற்றுணை ஆயினானை` (தி.4 ப.70) எனத் தொடங்கும் திருநேரிசையாம்.

         இனி, இப்பாடற்கண் நனிபள்ளி முதலா நண்ணி என வருதலின் வேறு பிற பதிகளும் தொழுது சென்றமை விளங்குகின்றது. அப்பதிகளும் பாடியருளிய பதிகங்களும்:

1.    திருக்குரக்குக்கா: `மரக்கொக்காம்` (தி.5 ப.75) – திருக்குறுந்தொகை.

2.     புள்ளிருக்கு வேளூர்: (அ). `வெள்ளெருக்கு` (தி.5 ப.79) - திருக்குறுந்தொகை; (ஆ). `ஆண்டானை` (தி.6 ப.54) - திருத்தாண்டகம்.
3.    திருவெண்காடு:
(அ). `பண்காட்டி` (தி.5 ப.49) - திருக்குறுந்தொகை
(ஆ). `தூண்டுசுடர்` (தி.6 ப.35) - திருத்தாண்டகம்.

4.    திருச்சாய்க்காடு: (அ) `தோடுலாமலர்` (தி.4 ப.65) - திருநேரிசை. (ஆ). `வானத்து இளமதியும்` (தி.6 ப.82) - திருத்தாண்டகம்.

5.     திருவலம்புரம்:
(அ). `தெண்டிரை` (தி.4 ப.55) - திருநேரிசை
(ஆ). `மண்ணளந்த` (தி.6 ப.58) - திருத்தாண்டகம்.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

5. 049   திருவெண்காடு      திருக்குறுந்தொகை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பண்காட் டிப்படி ஆயதன் பத்தர்க்குக்
கண்காட்டி, கண்ணில் நின்ற மணிஒக்கும்,
பெண்காட் டிப்பிறை சென்னிவைத் தான்,திரு
வெண்காட் டைஅடைந் துஉய்ம்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமையை உடைய நெஞ்சமே ! பண்ணிசை காட்டி வழிபடுகின்ற , நிலவுலகிற் பொருந்திய தன் அன்பர்களுக்குத் திருக்கடைக்கண் காட்டி அருளி , கண்ணிற்கருமணி போன்றுள்ளவனும் , சென்னியின்கண் பெண் , பிறை ஆகியவற்றை வைத்தவனும் ஆகிய பெருமானது திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக .


பாடல் எண் : 2
கொள்ளி வெந்தழல் வீசிநின்று ஆடுவார்
ஒள்ளி யகணஞ் சூழு்உமை பங்கனார்
வெள்ளி யன்கரி யன்பசு ஏறிய
தெள்ளி யன்திரு வெண்காடு அடைநெஞ்சே.

         பொழிப்புரை : நெஞ்சே ! கொள்ளியாகிய வெவ்விய தழலைவீசி நின்று ஆடுபவரும் ஒள்ளிய பூதகணங்கள் சூழ்பவரும் , உமை பங்கரும் , வெள்ளிய திருவெண்ணீற்றினரும், அயிராவணம் என்ற ஆனைக்குரியவரும் , விடையேறிய தெளிவுடையவரும் ஆகிய பெருமானுக்குரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக .


பாடல் எண் : 3
ஊன்நோக் கும்இன்பம் வேண்டி உழலாதே,
வான்நோக் கும்வழி ஆவது நின்மினோ,
தான்நோக் கும்தன் அடியவர் நாவினில்
தேன்நோக் கும்திரு வெண்காடு அடைநெஞ்சே.

         பொழிப்புரை : நெஞ்சே ! தன்னால் நோக்கப்படும் அடியார்கள் நாவினில் அருள் தேன் பாயுமாறு நோக்கும் திருவெண்காட்டை அடைவாயாக ! உலகீர் ! உடல் நோக்கிய சிற்றின்பங்களை விரும்பி உழலாது , வான்நோக்கும் வழி எதுவோ அதில் நிற்பீர்களாக .


பாடல் எண் : 4
பருவெண் கோட்டுப் பைங்கண்மத வேழத்தின்
உருவம் காட்டிநின் றான்உமை அஞ்சவே,
பெருவெண் காட்டுஇறை வன்உறை யும்மிடம்
திருவெண் காடுஅடைந் துஉய்ம்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : நெஞ்சமே ! பருத்த வெள்ளிய தந்தங்களையும் , பசுங்கண்களையும் , மதத்தையும் உடைய வேழத்தின் உருவத்தை உமையாள் அஞ்சக் காட்டி நின்றவனும் , பெரிய சாம்பலால் வெள்ளிய இடுகாட்டில் தங்குபவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாம் திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக .


பாடல் எண் : 5
பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யான்,உயர் ஞானங்கள்
கற்ற வன்,கய வர்புரம் ஓர்அம்பால்
செற்ற வன்,திரு வெண்காடு அடைநெஞ்சே.

         பொழிப்புரை : நெஞ்சே ! உயிர்களாற் பற்றத்தக்கவனும் , கங்கை , பாம்பு , பிறையுடன் உற்றவனும் சடையினனும் , உயர்ஞானங்கள் கற்றவனும் , கீழ்மைக்குணமுடையார் புரங்களை ஓரம்பாற் செற்றவனும் ஆகிய பெருமான் உறையும் திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக .


பாடல் எண் : 6
கூடி னான்உமை யாள்ஒரு பாகமாய்,
வேட னாய்விச யற்குஅருள் செய்தவன்,
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னார்அடி யேஅடை நெஞ்சமே.

         பொழிப்புரை : நெஞ்சமே ! உமையாளை ஒருபாகமாய்க் கூடிய வரும் , விசயற்கு வேடனாய் அருள்புரிந்தவரும் , உயர்ந்த சிவனாரும் ஆகிய அன்பானினைவார் சிந்தையில்மேவிய திருவெண்காடனாரின் திருவடியே அடைவாயாக .


பாடல் எண் : 7
தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை யான்,கய வர்புரம்
எரித்தவன், மறை நான்கினோடு ஆறுஅங்கம்
விரித்தவன் உறை வெண்காடு அடைநெஞ்சே.

         பொழிப்புரை : நெஞ்சே ! கங்கை , பாம்பு , மதி ஆகியவற்றை ஒருங்கு தாங்கியவனும் , முறுக்குண்ட புன்சடையுடையவனும் , கீழவர் புரங்களை எரித்தவனும் , நான்கு மறைகளையும் , ஆறங்கங்களையும் விரித்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவெண் காட்டை அடைந்து வழிபடுவாயாக .


பாடல் எண் : 8
பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள்
சிட்டன் ஆதிஎன் றுசிந்தை செய்யவே
நட்ட மூர்த்தி, ஞா னச்சுட ராய்நின்ற
அட்ட மூர்த்தி தன் வெண்காடு அடைநெஞ்சே.

         பொழிப்புரை : நெஞ்சே ! பட்டமும் , இண்டைமாலைகளும் கொண்டு அன்பர்கள் ` உயர்ந்தவனே ! ஆதியே !` என்று சிந்தைசெய்ய நடனமாடும் மூர்த்தியாகவும் , ஞானச்சுடராய் நின்ற அட்டமூர்த்தியாகவும் உள்ள பெருமானின் திருவெண்காடடைந்து வழிபடுவாயாக .


பாடல் எண் : 9
ஏன வேடத்தி னானும் பிரமனும்
தான வேடமுன் தாழ்ந்துஅறி கின்றிலா
ஞான வேடன், விசயற்கு அருள்செயும்
கான வேடன் தன் வெண்கா டடைநெஞ்சே.

         பொழிப்புரை : நெஞ்சே ! பன்றி வேடம் கொண்ட திருமாலும், பிரமனும் தானவேடத்தை முன் தாழ்ந்து அறிய வலிமையில்லாத ஞானவேடனும் , அருச்சுனனுக்கு அருள்செய்யும் காட்டு வேடனும் ஆகிய பெருமானின் திருவெண்காடு அடைந்து வழிபடுவாயாக .


பாடல் எண் : 10
பாலை ஆடுவர், பல்மறை ஓதுவர்,
சேலை ஆடிய கண்உமை பங்கனார்,
வேலை ஆர்விடம் உண்டவெண் காடர்க்கு
மாலை ஆவது மாண்டவர் அங்கமே.

         பொழிப்புரை : பாலை நிலத்தில் ஆடுபவரும் , பல மறைகளை ஓதுபவரும் , சேல்மீன்போன்று காதளவும் ஆடுகின்ற கண்ணை உடைய உமையொருபாகரும் , கடலிற் பொருந்திய விடமுண்டவரும் ஆகிய வெண்காடர்க்கு இறந்தவர் உறுப்புக்களாகிய எலும்புகளே மாலையாவது .


பாடல் எண் : 11
இராவ ணஞ்செய மாமதி பற்று
அயிராவ ணம்உடை யான்தனை உள்குமின்
இராவ ணன்தனை உன்றி அருள்செய்த
இராவ ணன்திரு வெண்காடு அடைமினே.

         பொழிப்புரை : அறிவைப் பற்றியிருக்கும் பற்று இல்லாதபடி செய்தற்பொருட்டு அயிராவணத்தை உடைய பெருமானை நினைமின் . இராவணனைக் கால்விரலால் ஊன்றி அருள்செய்த அகோர முகத்தினரின் திருவெண்காட்டை அடைவீராக .

                                             திருச்சிற்றம்பலம்



6. 035    திருவெண்காடு         திருத்தாண்டகம்
                                       திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தூண்டு சுடர்மேனித் தூநீறு ஆடி,
         சூலங்கை ஏந்தி,ஓர் சுழல்வாய் நாகம்
பூண்டு, பொறிஅரவம் காதில் பெய்து,
         பொற்சடைகள் அவைதாழப் புரிவெண் நூலர்,
நீண்டு கிடந்துஇலங்கு திங்கள் சூடி,
         நெடுந்தெருவே வந்து,எனது நெஞ்சங் கொண்டார்,
வேண்டு நடைநடக்கும் வெள்ஏறு ஏறி
         வெண்காடு மேவிய விகிர்த னாரே.

         பொழிப்புரை :தாம் விரும்பியவாறே விரைந்தும் தாவியும் மெல்லென்றும் நடக்கும் காளையை இவர்ந்து திருவெண்காட்டை விரும்பி அடைந்த , உலகியலுக்கு வேறுபட்ட பெருமான் , தூண்டப் பட்ட விளக்கினது ஒளி போன்ற பிரகாசம் உடைய திருமேனியில் வெண்ணீறணிந்து , சூலத்தைக் கையில் ஏந்திச் சுழலும் நாக்கினை உடைய பாம்பினை அணிகலனாகப் பூண்டு , காதிலும் பாம்பினை அணிந்து , பொன் போன்ற சடைகள் தொங்கப் பூணூல் அணிந்தவராய் நீண்டு கிடந்து விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடி நீண்ட தெருவழியே வந்து என் நெஞ்சத்தைக் கைப்பற்றிக் கொண்டார் .


பாடல் எண் : 2
பாதம் தரிப்பார்மேல் வைத்த பாதர்,
         பாதாளம் ஏழ்உருவப் பாய்ந்த பாதர்,
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்,
         ஏழ்உலகு மாய்நின்ற ஏக பாதர்,
ஓதத்து ஒலிமடங்கி ஊர்உண்டு ஏறி
         ஒத்துஉலகம் எல்லாம் ஒடுங்கிய பிபின்
வேதத்து ஒலிகொண்டு வீணை கேட்பார்
         வெண்காடு மேவிய விகிர்த னாரே.

         பொழிப்புரை :வெண்காடு மேவிய விகிர்தனார் தம் திருவடிகளை மனத்துக் கொள்ளும் அடியவர்களுக்குத் திருவடி தீட்சை செய்து , பாதலத்தையும் கடந்து , கீழ் உருவிச் சென்ற திருவடிகளை உடையவராய் , யாருக்கும் தீங்கு நேராதவகையில் ஏழுலகமாய் நின்ற ஒரே திருவடியை உடையவராய் , ஊழி வெள்ளத்தின் ஒலி , உலகை யெல்லாம் வெள்ளம் மூழ்குவித்து அவ்வுலகமெல்லாம் அழிந்த பின்னர் அடங்கியபோது , தாம் ஒடுங்காது வேதம் ஓதி வீணையை இசைத்து அவ்வொலியில் மகிழ்வர் .


பாடல் எண் : 3
நென்னலைஓர் ஓடுஏந்திப் பிச்சைக்கு என்று
         வந்தார்க்கு, வந்தேன்,என்று இல்லே புக்கேன்,
அந்நிலையே நிற்கின்றார், ஐயம் கொள்ளார்,
         அருகே வருவார்போல் நோக்கு கின்றார்,
நும்நிலைமை ஏதோ, நும் ஊர்தான் ஏதோ,
         என்றேனுக்கு ஒன்றாகச் சொல்ல மாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி ஆடும்
         வெண்காடு மேவிய விகிர்த னாரே.

         பொழிப்புரை :மெல்லிய தனங்களை உடைய மகளிர் கூடி விரும்பி விளையாடும் வெண்காடு மேவிய விகிர்தனார் நேற்று ஒரு மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை பெறுவதற்காக வந்தாராக ` இதோ வந்துவிட்டேன் ` என்று வீட்டிற்குள் புகுந்து உணவுடன் நான் மீண்டுவர நின்ற இடத்திலேயே நின்று கொண்டு யான் இடவந்த பிச்சையை ஏற்காமல் பக்கத்தில் வருபவரைப் போல என்னைக் கூர்ந்து நோக்கினார் . ` உம் மன நிலை எவ்வாறு இருக்கிறது ? உம்முடைய ஊர் யாது ?` என்று வினவிய எனக்கு மறுமாற்றம் தாராமலே நின்று பின் சென்று விட்டார் ?


பாடல் எண் : 4
ஆகத்து உமைஅடக்கி, ஆறு சூடி,
         ஐவாய் அரவுஅசைத்து,அங்கு ஆன்ஏறு ஏறிப்
போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப்
         புலித்தோல் உடையாப் புகுந்து நின்றார்,
பாகுஇடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
         பரிசுஅழித்துஎன் வளைகவர்ந்தார் பாவி யேனை,
மேக முகில்உரிஞ்சு சோலை சூழ்ந்த
         வெண்காடு மேவிய விகிர்த னாரே.

         பொழிப்புரை :பார்வதியைப் பாகமாகக் கொண்டு கங்கையைத் தலையில் சூடி ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் காளையை இவர்ந்து சிவபோகத்தை நுகரும் பூதங்கள் பலவும் தம்மைச் சூழப் புலித்தோலை உடுத்து இல்லத்துப்புகுந்து நின்ற அவருக்கு உணவு வழங்க வந்த என்னை உள்ளத்தால் பற்றிக் கூர்ந்து நோக்கி என் அடக்கம் என்ற பண்பினை அழித்துத் தீ வினையை உடைய என் வளைகளை , மேக மண்டலத்தை அளாவிய சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனார் கவர்ந்து சென்றுவிட்டார் .

   
பாடல் எண் : 5
கொள்ளைக் குழைக்காதில், குண்டைப் பூதம்
         கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட,
உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல
         உழிதருவர், நான்தெரிய மாட்டேன், மீண்டேன்,
கள்ள விழிவிழிப்பர் காணாக் கண்ணால்,
         கண்உள்ளார் போலே கரந்து நிற்பர்,
வெள்ளச் சடைமுடியர், வேத நாவர்,
         வெண்காடு மேவிய விகிர்த னாரே.

         பொழிப்புரை :மிக்க ஒளியை உடைய குழைகளை அணிந்த, பருத்துக் குறிய வடிவுடைய பூதங்கள் கொடுகொட்டி என்ற பறையை இசைத்துக் கூத்தாடிப்பாட , என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டு போவாரைப் போல என்னைச் சுற்றி வருகிறார் . நான் அவரை உள்ளவாறு அறிய இயலாதேனாய்த் திரும்பினேன் . என்னை நேரில் பாராதவரைப் போல அரைக்கண்ணால் பார்க்கிறார் . கண்ணுக்கு அகப்படுபவரைப் போலக் காட்டி மறைந்து நிற்கிறார் . அவர் கங்கையைச் சடையில் கொண்டவர் . வேதம் ஓதிய நாவினை உடையவராய் வெண்காடு மேவிய விகிர்தனார் ஆவர் .


பாடல் எண் : 6
தொட்டுஇலங்கு சூலத்தர், மழுவாள் ஏந்திச்
         சுடர்க்கொன்றைத் தார்அணிந்து, சுவைகள் பேசிப்
பட்டிவெள் ஏறுஏறிப் பலியும் கொள்ளார்,
         பார்ப்பாரைப் பரிசுஅழிப்பார் ஒக்கின் றாரால்,
கட்டுஇலங்கு வெண்ணீற்றர், கனலப் பேசிக்
         கருத்துஅழித்து வளைகவர்ந்தார், காலை மாலை
விட்டுஇலங்கு சடைமுடியர், வேத நாவர்,
         வெண்காடு மேவிய விகிர்த னாரே.

         பொழிப்புரை :காலையும் மாலையும் எப்பொழுதும் மின்னுகின்ற சடைமுடியை உடையவராய் , வேதம் ஓதும் நாவினராய் , வெண்காடு மேவிய விகிர்தனார் , ஏவிப்பணி கொள்ளும் சூலம் மழு என்ற படைகளை ஏந்தியவராய் , ஒளி வீசும் கொன்றைப் பூ மாலையை அணிந்து இருபொருள்படச் சுவையான சொற்களைப் பேசித் தொழுவத்தில் தங்கக் கூடிய வெண்ணிறக் காளையை இவர்ந்து வந்து பிச்சையையும் ஏற்காதவராய்த் தம்மை நோக்கி நிற்பவர் இயல்பினை அழிக்கின்றவர் போல , முப்பட்டைகளாகத் திருநீற்றை அணிந்து எனக்குக் காமத் தீ ஏற்படும் வகையில் பேசி என் உள்ளத்தில் அடக்கத்தை நீக்கி என் வளைகளையும் கவர்ந்து சென்று விட்டார் .


பாடல் எண் : 7
பெண்பால் ஒருபாகம், பேணா வாழ்க்கை,
         கோள்நாகம் பூண்பனவும், நாணாம் சொல்லார்,
உண்பார், உறங்குவார், ஒவ்வா, நங்காய்,
         உண்பதுவும் நஞ்சு,அன்றேல் ஓவிஉண்ணார்,
பண்பால் விரிசடையர், பற்றி நோக்கிப்
         பாலைப் பரிசுஅழியப் பேசு கின்றார்,
விண்பால் மதிசூடி வேதம் ஓதி
         வெண்காடு மேவிய விகிர்த னாரே.

         பொழிப்புரை :நங்காய் ! வானத்தில் இயங்கும் பிறையைச் சூடி , வேதம் ஓதி , வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியைப் பாகமாகக் கொண்டு , பெண்கள் விரும்பாத வாழ்க்கை வாழ்ந்து கொடிய பாம்புகளைப் பூண்டு நான் வெட்கப் படும்படியாக என்னை நலம் பாராட்டுவார் . உலகில் உண்பார் உறங்குவார் செயல்களோடு அவருடைய செயல்கள் ஒவ்வா . அவர் விடம் ஒன்றே உண்பார் . அன்றேல் கஞ்சத்தனத்தால் உண்பதனை விடுத்து உண்ணாதே இருப்பார் . அழகாக விரிந்த சடையுடையவர் . என்னை நெருங்கி வந்து கூர்ந்து பார்த்துப் பாலினும் இனிமையாக என்னிடம் பேசுகின்றார் .


பாடல் எண் : 8
மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு
         வானவரும் மால்அயனும் கூடித் தங்கள்
சுருதங்க ளால்துதித்து, தூநீர் ஆட்டி,
         தோத்திரங்கள் பலசொல்லி, தூபம் காட்டி,
கருதும்கொல் எம்பெருமான் செய்குற்றேவல்
         என்பார்க்கு, வேண்டும் வரம் கொடுத்து
விகிர்தங்க ளாநடப்பர் வெள்ஏறு ஏறி
         வெண்காடு மேவிய விகிர்த னாரே.

         பொழிப்புரை :வெண்ணிறக் காளையை இவர்ந்து வெண்காடு மேவிய விகிர்தனார் பார்வதியிடம் அவள் ஊடலைப் போக்கும் சொற்களைப் பேசுபவராய்த் தேவர்களும் திருமாலும் பிரமனும் கூடி வேத வாக்கியங்களால் துதித்து அபிடேகம் செய்து தோத்திரங்கள் பலவற்றைச் சொல்லி நறுமணப் பொருள்களைப் புகைத்து , ` எம்பெருமான் யாங்கள் செய்யும் குற்றேவல்களை மனத்துக் கொள்வாரோ ` என்று வேண்டுபவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்துத் தமக்கு வேறுபட்ட செயல்கள் உளவாகக் கொண்டு அவற்றிற்காக இடம் பெயர்ந்து செல்வர் .


பாடல் எண் : 9
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும்
         காணார், பொறிஅழலாய் நின்றான் தன்னை,
உள்ளானை, ஒன்றுஅலா உருவி னானை,
         உலகுக்கு ஒருவிளக்காய் நின்றான் தன்னை,
கள்ஏந்து கொன்றைதூய், காலை மூன்றும்
         ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார்
         வெண்காடு மேவிய விகிர்த னாரே.

         பொழிப்புரை :வெண்காடு மேவிய விகிர்தனார் , கருடனை உடைய திருமாலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் கீழும் மேலும் தேடிச் சென்றும் காண இயலாதவராய்ப் பொறிகளை வெளிப்படுத்தும் அழற்பிழம்பாய் நின்றவராய் எல்லாப் பொருள்களின் உள்ளிடத்தும் இருப்பவராய் , அடியார்கள் விரும்பும் பல உருவங்களையும் உடையவராய்த் தேன் நிறைந்த கொன்றைப்பூவை அருச்சித்து நீங்காமல் நன்னெறியில் நின்று தவம் செய்த ஐராவதம் என்ற வெள்ளானைக்கு அது வேண்டிய வரங்களைக் கொடுப்பவர் ஆவர் .


பாடல் எண் : 10
மாக்குன்று எடுத்தோன்தன் மைந்த னாகி
         மாவேழம் வில்லா மதித்தான் தன்னை
நோக்கும் துணைத்தேவர் எல்லாம் நிற்க
         நொடிவரையில் நோவ விழித்தான் தன்னை,
காக்குங் கடல்இலங்கைக் கோமான் தன்னைக்
         கதிர்முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி
வீக்கம் தவிர்த்த விரலார் போலும்,
         வெண்காடு மேவிய விகிர்த னாரே.

         பொழிப்புரை :வெண்காடு மேவிய விகிர்தனார் கோவர்த்தனத்தைக் குடையாக உயர்த்திய கண்ணனாகிய திருமாலின் மகனாய்க் கரும்பையே வில்லாகக் கொண்ட மன்மதனுக்குத் துணையாக வந்த தேவர்களெல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற போதே ஒரே நொடி நேரத்தில் அவன் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் நோக்கியவர் . கடலே அரணாகப் பாதுகாக்கப்பட்ட இலங்கை மன்னனான இராவணனுடைய ஒளிவீசும் மகுடம் தாங்கிய தலைகளும் கண்களும் நசுங்கி வெளிப்புறம் தோன்றுமாறு தம் திருவடி விரலை ஊன்றி அவனுடைய செருக்கினை அடக்கியவர் ஆவர் .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு:
         சுந்தரர் திருச்சாய்க்காட்டீசரைப் பணிந்து போற்றித் திருவெண்காடு சென்று வணங்கிப் பாடிப் பரவியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 148.)

பெரிய புராணப் பாடல் எண் : 148
தேவர்பெரு மான்தன்னைத்
         திருச்சாய்க்காட் டினில்பணிந்து,
பாஅலர்செந் தமிழ்மாலைத்
         திருப்பதிகம் பாடிப்போய்,
மேவலர்தம் புரம்எரித்தார்
         வெண்காடு பணிந்து ஏத்தி,
நாவலர் காவலர் அடைந்தார்
         நனிபள்ளித் திருநகரில்.

         பொழிப்புரை : திருச்சாய்க்காடு என்னும் திருப்பதிக்குச் சென்று சேர்ந்து, தேவர் தலைவரான பெருமானைப் பணிந்து, பாடலாக அலரும் செந்தமிழ் மாலைத் திருப்பதிகத்தைப் பாடி, அப்பால் சென்று, பகைவருடைய முப்புரங்களையும் எரித்த பெருமானின் திருவெண்காடு என்னும் திருப்பதிக்குச் சென்று பணிந்து போற்றி, நாவன்மையுடைய புலவர்களுக்கு என்றும் காவலராய நாவலூரர் திருநனிபள்ளித் திருநகரிடத்துச் சென்றார்.

         குறிப்புரை : திருவெண்காட்டில் அருளிய `படங்கொள் நாகம்\' (தி.7 ப.6) எனத் தொடங்கும் திருப்பதிகம் இந்தளப் பண்ணில் அமைந்ததாகும். திருச்சாய்க்காட்டில் அருளிய பதிகம் கிடைத்திலது.



7. 006    திருவெண்காடு                   பண் - இந்தளம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
படங்கொள் நாகம் சென்னி சேர்த்தி,
         பாய்பு லித்தோல் அரையில் வீக்கி,
அடங்க லார்ஊர் எரியச் சீறி
         அன்று மூவர்க்கு அருள்பு ரிந்தீர்,
மடங்க லானைச் செற்று உகந்தீர்,
         மனைகள் தோறும் தலைகை ஏந்தி
விடங்கர் ஆகித் திரிவது என்னே,
         வேலை சூழ்வெண் காட னீரே.

         பொழிப்புரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , படத்தையுடைய பாம்பைத் தலையிலே வைத்து , பாய்கின்ற புலியினது தோலை அரையிற் கட்டி , பகைவரது திரிபுரங்கள் எரிந்தொழியுமாறு வெகுண்டு , அந்நாளிற்றானே அவ்வூரிலுள்ள மூவருக்கு அருள் பண்ணினீர் ; கூற்றுவனை முன்னர்க் கொன்று , பின்னர் உயிர்ப்பித்து , அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டீர் ; இன்ன பெருமைகளையுடையீராய் இருந்தும் , தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு , பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என் ?


பாடல் எண் : 2
இழித்து உகந்தீர் முன்னை வேடம்,
         இமைய வர்க்கும் உரைகள் பேணாது
ஒழித்து உகந்தீர், நீர்முன் கொண்ட
         உயர்த வத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காம வேளை
         அவனு டைய தாதை காண
விழித்து உகந்த வெற்றி என்னே,
         வேலை சூழ்வெண் காட னீரே.

         பொழிப்புரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , அரி பிரமர்க்கும் அவரது முன்னை உடம்புகளை நீக்கி , அவற்றை விரும்பித் தோள்மேற் கொண்டீர் ; ` என்றும் இறவாதபடி காப்பவன் ` என்னும் புகழை விரும்பாது , எல்லாப் பொருள்களையும் அழித் தொழித்து , அதன்பின்னர் அவைகளை மீளத் தோன்றச் செய்தலை விரும்பினீர் ; அங்ஙனமாக , நீர் முன்பு மேற்கொண்ட , மேலான தவத்தினை , தேவர் வேண்டிக்கொண்டமையால் அழித்தற்கு வந்த மன்மதனை , அவனுடைய தந்தையாகிய திருமால் ஒன்றும் செய்யமாட்டாது பார்த்துக் கொண்டிருக்க . நெற்றிக்கண்ணால் எரித்து , பின் உயிர்ப்பித்த வெற்றியை விரும்பியது என் ?


பாடல் எண் : 3
படைகள் ஏந்திப் பாரி டம்மும்
         பாதம் போற்ற மாதும் நீரும்
உடைஓர் கோவ ணத்தர் ஆகி,
         உண்மை சொல்லீர், உம்மை அன்றே,
சடைகள் தாழக் கரணம் இட்டுத்
         தன்மை பேசி இல்ப லிக்கு
விடைஅது ஏறித் திரிவது என்னே,
         வேலை சூழ்வெண் காட னீரே.

         பொழிப்புரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , பூதகணங்கள் பலவகையான படைகளை ஏந்திக் கொண்டு உம் திருவடிகளை வணங்கித் துதிக்க. உம் தேவியுடனே. உடையைக் கோவண உடையாக உடுத்துக் கொண்டு, சடைகள் நீண்டு அசையக் கூத்தாடிக் களித்துப் பின்னர், இல்வாழ்க்கை யுடையாரைப் பெருமையாகச் சொல்லி , அவர்தம் இல்லங்களில் பிச்சைக்குத் திரிதல் என் ? உமது உண்மை நிலையைச் சொல்லியருளீர் .


பாடல் எண் : 4
பண்ணு ளீராய்ப் பாட்டும் ஆனீர்,
         பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்,
கண்ணு ளீராய்க் கருத்தில் உம்மைக்
         கருது வார்கள் காணும் வண்ணம்,
மண்ணு ளீராய் மதியம் வைத்தீர்,
         வான நாடர் மருவி ஏத்த
விண்ணு ளீராய் நிற்பது என்னே,
         வேலை சூழ்வெண் காட னீரே.

         பொழிப்புரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , விண்ணுலத்தில் உள்ளோர் சூழ்ந்து போற்ற ஆங்கு உள்ளீராய் இருந்தும் , இம் மண்ணுலகத்தில் பண்களாகியும் , அவற்றையுடைய பாட்டுக்களாகியும் , அடியார்களது உள்ளத்தில் நிறைந்தும் , மக்கள் முதலிய உயிர்களின் கண்களாகியும் , உம்மை உள்ளத்தில் நினைபவர் , புறத்தேயும் காணும்படி உருவங் கொண்டும் இருத்தல் என் ?


பாடல் எண் : 5
குடம் எடுத்து நீரும் பூவும்
         கொண்டு, தொண்டர் ஏவல் செய்ய,
நடம் எடுத்துஒன்று ஆடிப் பாடி
         நல்கு வீர், நீர் புல்கும் வண்ணம்
வடம் எடுத்த கொங்கை மாதுஓர்
         பாகம் ஆக, வார்க டல்வாய்
விடம் மிடற்றில் வைத்தது என்னே
         வேலை சூழ்வெண் காட னீரே.

         பொழிப்புரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , அடியார்கள் குடத்தைச் சுமந்து நீரையும் பூவையும் ஈட்டிக் கொண்டு வந்து உமக்குப் பணிசெய்ய , நீர் , உம்மை என்றும் பிரியாது உடனிருத்தற் பொருட்டு , மணிவடம் அணிந்த தனங்களையுடைய மங்கை ஒரு பாகத்தில் இருக்க நடனத்தை மேற்கொண்டு , ஆடலும் பாடலும் நன்கு இயைய ஆடியும் பாடியும் அவர்கட்கு இன்பந் தருவீர் ; அவ்வாறிருந்தும் , நீண்ட கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் வைத்தது என் ?
  

பாடல் எண் : 6
மாறு பட்ட வனத்து அகத்தின்
         மருவ வந்த வன்க ளிற்றைப்
பீறி இட்ட மாகப் போர்த்தீர்,
         பெய்ப லிக்குஎன்று இல்லம் தோறும்
கூறு பட்ட கொடியும், நீரும்
         குலாவி ஏற்றை அடர ஏறி,
வேறு பட்டுத் திரிவது என்னே
         வேலை சூழ்வெண் காட னீரே.

         பொழிப்புரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் உம்மொடு மாறுபட்டு நின்ற , காட்டில் வாழப்பிறந்த , வலிய களிற்றை உரித்து , அதன் தோலை , விருப்பம் உண்டாகப் போர்த்தீர் ; அன்ன வீரத்தை உடையீராயும் , உமக்கு ஒரு கூறாகப் பொருந்திய மங்கையும் நீரும் எருதையே ஊர்தியாகச் செறிய ஊர்தலும் , பிறர் இடுகின்ற பிச்சைக்கென்று இல்லந்தோறும் திரிதலும் செய்து , நுமது பெருமையினின்றும் வேறுபட்டு ஒழுகுதல் என் ?


பாடல் எண் : 7
காத லாலே கருதும் தொண்டர்
         கார ணத்தர் ஆகி நின்றே,
பூதம் பாடப் புரிந்து நட்டம்
         புவனி ஏத்த ஆட வல்லீர்,
நீதி யாக ஏழில் ஓசை
         நித்தர் ஆகிச் சித்தர் சூழ,
வேதம் ஓதித் திரிவது என்னே,
         வேலை சூழ்வெண் காட னீரே.

         பொழிப்புரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , உம்மை நினைக்கின்ற அடியார் நிமித்தமாக நின்று , பூதங்கள் பாட , உலகம் உயர்த்துக்கூறுமாறு, நடனத்தை விரும்பி ஆட வல்லீர் ; அவ்வாறாகவும் , உலகியல் விளங்குதற் பொருட்டு , யோகியர் சூழ , ஏழிசையின்வழி நிலைத்து நின்று , வேதத்தை ஓதித் திரிதல் என் ?


பாடல் எண் : 8
குரவு கொன்றை, மதியம், மத்தம்,
         கொங்கை மாதர் கங்கை, நாகம்,
விரவு கின்ற சடை உடையீர்,
         விருத்தர் ஆனீர், கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர்,
         பாகம் ஆய மங்கை அஞ்சி
வெருவ வேழம் செற்றது என்னே
         வேலை சூழ்வெண் காட னீரே.

         பொழிப்புரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , ` குரா மலர் , கொன்றை மலர் , ஊமத்த மலர் , பிறை , தனங்களையுடைய நங்கையாகிய கங்கை , பாம்பு ` ஆகிய எல்லாம் தலைமயங்கிக் கிடக்கின்ற சடையினை யுடையீர் ; யாவர்க்கும் மூத்தீர் ; அங்ஙனமாயினும் , எஞ்ஞான்றும் உம்மையே கருத்தில் வைத்துப் பாடுகின்ற என்மேல் உள்ள பாவத்தைப் போக்கீராதலோடு , உமது பாகத்தில் உள்ள மங்கை மிகவும் அச்சங் கொள்ளுமாறு , யானையை உரித்துப் போர்த்தது என் ?


பாடல் எண் : 9
மாடம் காட்டும் கச்சி உள்ளீர்
         நிச்ச யத்தால் நினைப்பு உளார்பால்,
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்,
         பரவும் வண்ணம் எங்ங னேதான்,
நாடும் காட்டில் அயனும் மாலும்
         நணுகா வண்ணம் அனலும் ஆய
வேடங் காட்டித் திரிவது என்னே
         வேலை சூழ்வெண் காட னீரே.

         பொழிப்புரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , உம்மைத் தெளிந்த உள்ளத்துடன் நினைப்பவர் முன்னே , உயர்ந்த மாளிகைகளையுடைய கச்சியம்பதியில் எழுந்தருளியுள்ளீர் ; என்றாலும் , பேய்கள் பாடும் காட்டில் ஆடலை உடையீர் ; அதுவன்றியும் , அயனும் மாலும் தமது தலைமையை ஆய்ந்து காணுதற்குக்கொண்ட சான்றிடத்து , அவர்கள் உம்மை அணுகாதவாறு தீப் பிழம்பாய் நின்ற வடிவத்தையே எங்கும் காட்டித் திரிவது என் ? உம்மையாங்கள் வழிபடுவது எவ்வாறு ?


பாடல் எண் : 10
விரித்த வேதம் ஓத வல்லார்,
         வேலை சூழ்வெண் காடு மேய
விருத்தன் ஆய வேதன் தன்னை
         விரிபொ ழில்திரு நாவ லூரன்,
அருத்தி யால்ஆ ரூரன், தொண்டன்,
         அடியன் கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார்
         செம்மை யாளர் வான் உளாரே.

         பொழிப்புரை : விரிவாகச் செய்யப்பட்டுள்ள வேதங்களை ஓத வல்லவர் வாழ்கின்ற , கடல் சூழ்ந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள , யாவர்க்கும் மூத்தோனாகிய அந்தணனை , அவனுக்குத் தொண்டனும் , அவன் அடியார்க்கு அடியனும் அகன்ற சோலையையுடைய திருநாவலூரனும் ஆகிய நம்பியாரூரன் விருப்பத்தொடு சில வற்றை வினவிச் செய்த , தமிழ்ச்சொற்களாலாகிய மாலை பத்தினையும் , அவன் தெரித்துச் சொன்ன குறிப்பில் நின்று பாட வல்லவர் , கோட்டம் நீங்கிய உணர்வினையுடையராய் . சிவலோகத்தில் இருப்பவராவர் .
                                             திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...