திருச்செந்தூர் - 0094. மூப்புற்றுச் செவி


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மூப்புற்றுச் செவி (திருச்செந்தூர்)

எம பயம் அகல, முருகன் திருவடி அடைய

தாத்தத் தத்தன தாத்தத் தத்தன
     தாத்தத் தத்தன ...... தனதான


மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
     மூச்சுற் றுச்செயல் ...... தடுமாறி

மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
     மூக்குக் குட்சளி ...... யிளையோடும்

கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
     கூட்டிற் புக்குயி ...... ரலையாமுன்

கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
     கூட்டிச் சற்றருள் ...... புரிவாயே

காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
     காப்பைக் கட்டவர் ...... குருநாதா

காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
     காப்புக் குத்திர ...... மொழிவோனே

வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
     வாய்க்குச் சித்திர ...... முருகோனே

வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
     வாய்க்குட் பொற்பமர் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


மூப்பு உற்று, செவி கேட்பு அற்று, பெரு
     மூச்சு உற்று, செயல் ...... தடுமாறி,

மூர்க்கச் சொல் குரல் காட்டி, கக்கிட
     மூக்குக்கு உள் சளி ...... இளையோடும்

கோப்புக் கட்டி, இனாப் பிச்சு எற்றிடு
     கூட்டில் புக்கு, யிர் ...... அலையாமுன்,

கூற்றத் தத்துவம் நீக்கி, பொற்கழல்
     கூட்டி, சற்று அருள் ...... புரிவாயே!

காப்புப் பொன்கிரி கோட்டி, பற்றலர்
     காப்பைக் கட்டவர் ...... குருநாதா!

காட்டுக்குள் குறவாட்டிக்குப் பல
     காப்புக் குத்திரம் ...... மொழிவோனே!

வாய்ப்பு உற்றத் தமிழ் மார்க்கத் திண்பொருள்
     வாய்க்குச் சித்திர ...... முருகோனே!

வார்த்தைச் சிற்பர! தீர்த்தச் சுற்று அலை-
     வாய்க்குள் பொற்பு அமர் ...... பெருமாளே.  

பதவுரை

         காப்பு பொன் கிரி கோட்டி --- பூமி நிலைத்து நிற்கக் காவலாய் விளங்கும் பொன் மேரு கிரியை வில்லாக வளைத்து,

         பற்றலர் காப்பை --- பகைவராகிய முப்புரத்தாருடைய,
அரண்களை,

     கட்டவர் குருநாத --- அழித்தவராகிய சிவபெருமானுடைய குருமூர்த்தியே!

காட்டுக்குள் குறவாட்டிக்கு --- கானகத்தில் வள்ளிப்பிராட்டிக்கு,

பல காப்பு குத்திரம் மொழிவோனே --- பலவாறாக என்னைக் காத்தருள் என்று மாய வார்த்தைகளை உரைத்தவரே!

வாய்ப்பு உற்ற --- நல்ல வாய்ப்புடைய,

தமிழ் மார்க்க திண் பொருள் --- தமிழின் அகப்பொருள் துறையின் உறுதியான பொருளை,

வாய்க்கு --- உண்மையிதுவே என்று,

சித்திர முருகோனே --- அழகுறத் தெளிவுபடுத்திய முருகக்கடவுளே!

வார்த்தை சிற்பர --- சொல்லுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டவரே!

தீர்த்த சுற்று அலைவாய்க்குள் --- புனிதமான தீர்த்தத் துறைகள் சுற்றியுள்ள கடலின் கரையில், (செந்திமாநகரில்)

பொற்பு அமர் பெருமாளே --- அழகாக அமர்ந்துள்ள பெருமையின் மிகுந்தவரே!

         மூப்பு உற்று --- கிழப் பருவத்தை அடைந்து,

     செவி கேட்பு அற்று --- காது கேட்கும் தன்மையற்று,

     பெருமூச்சு உற்று --- பெருமூச்சு விட்டுக்கொண்டு,

     செயல் தடுமாறி --- செயல்கள் தடுமாற்றத்தை அடைந்து,

     மூர்க்க சொல் குரல் காட்டி --- கொடிய கோபத்துடன் கூடிய சொற்களின் குரலை வெளிப்படுத்தி,

     கக்கிட மூக்குக்கு உள் சளி இளையோடும் --- வெளிப்படுகின்ற மூக்குச் சளியும் நெஞ்சுக் கோழையும்,

     கோப்பு கட்டி --- ஒன்று சேர்ந்து,

     இனா பிச்சு ஏற்றிடு --- துன்பமாகிய பித்தத்தை அதிகரிக்கும்,

     கூட்டில் புக்கு உயிர் அலையா முன் --- இந்த உடலில் புகுந்து என் உயிர் அலைவதற்கு முன்னம்,

     கூற்ற தத்துவம் நீக்கி --- இயமன் வந்து துன்புறுத்தும் உண்மைச் செயலை அகற்றி,

     பொன் கழல் கூட்டி --- உமது அழகிய திருமலரடியில் சேர்த்து,

     சற்று அருள் புரிவாயே --- சிறிது அருள் புரிவீர்.

பொழிப்புரை

         உலகிற்குக் காவலாக அமைந்துள்ள பொன் மேரு கிரியை வில்லாக வளைத்து (தேவர்களுடைய) பகைவராகிய முப்புரத்தாருடைய அரண் மதிலை அழித்த சிவபிரானுடைய குருநாதரே!

         கானகத்தில் வாழ்ந்த வள்ளியம்மையிடம் “என்னைக் காப்பாற்றுவாய்” என்று குறை இரப்பது போன்ற வஞ்சமொழிகளைப் புகன்றவரே!

         நலம் பல வாய்ந்த தமிழின் அகப்பொருட் சூத்திரத்தின் உண்மையுரை இது என்று தெளிவுபடுத்திய அழகிய முருகக் கடவுளே!

     சொல்லுக்கும் அறிவுக்கும் எட்டாதவரே!

         புனித தீர்த்தத் துறைகள் சூழ்ந்துள்ள கடற் கரையின் கண் திருச்செந்தூரில் அழகுடன்  அமர்ந்துள்ள பெருமிதம் உடையவரே!

         முதுமைப் பருவம் அடைந்து, காது கேளாது,  பெருமூச்சு விட்டுக் கொண்டு, செயல்கள் தடுமாற்றமுற்று, கோபச் சொற்கள் பேசி, மூக்கில் சளியும், நெஞ்சில் கோழையும் ஒன்று கூடி வெளிப்பட, துன்பத்தினால் பித்தம் ஏறச் செய்யும் அவ்வுடம்பில் புகுந்து, உயிர் அலைவதற்கு முன்னம், இயம வாதனையைத் தவிர்த்து உமது பொற்பாத கமலத்துள் சேர்த்துச் சிறிது அடியேற்கு அருள்புரிவீர்.

    
விரிவுரை

மூப்பு உற்று ---

உடம்பு எடுத்த நமக்கு மிகுந்த துன்பத்தை தருவது முதுமைப் பருவம். அதை நினைத்தால் மனம் பதைக்கும். முதுமையில் கண் பார்வை குன்றும். செவி மந்தமாகும். நடக்கவோ நிற்கவோ இயலாது. உண்ட உணவு செறிக்காது. ஆசையும் வளர்ந்து நிற்கும். வீட்டில் உள்ளவர்கள் அவமதிப்பார்கள். இருமல் முதலிய நோய்கள் வந்து இடர்ப்படுத்தும். கருவி கரணங்கள் யாவும் நம்முடன் ஒத்துழைக்க மாட்டா. உயிர் வாழ்விலேயே, பெருந் துன்பத்தைத் தருகின்ற காலம் அந்த மூப்புப் பருவம்.

         அதனால் அடிகளார், ஒரு திருப்புகழில் “இளமை கிழம்படு முன்பதம் பெற அருள்வாயே” என்று ஆண்டவனிடம் விண்ணப்பம் கொடுக்கின்றார். இந்த மூப்பிலே விளையும் கொடுமைகளைச் சுவாமிகள் அடியில் வரும் திருப்புகழ்ப் பாடலில் சித்திரிக்கின்றார்.

முனைஅழிந்தது, மேட்டி குலைந்தது,
     வயது சென்றது, வாய்ப்பல் உதிர்ந்தது,         
     முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது,   ப்ரபையான

முகம்இழிந்தது, நோக்கும் இருண்டது,
     இருமல் வந்தது, தூக்கம் ஒழிந்தது,
     மொழி தளர்ந்தது, நாக்கு விழுந்தது, அறிவேபோய்

நினைவு அயர்ந்தது, நீட்டல் முடங்கலும்
     அவச மும்பல ஏக்கமும் உந்தின,
     நெறிமறந்தது, மூப்பு முதிர்ந்தது,         பலநோயும்

நிலுவை கொண்டது, பாய்க்கிடை கண்டது,
     சல மலங்களின் நாற்றம் எழுந்தது
     நிமிஷம் இங்குஇனி ஆச்சுதுஎன் முன்புஇனிது     அருள்வாயே”

பெருமூச்சு உற்று ---

மூப்பிலே இயல்பாகவுள்ள களைப்பினால் பெருமூச்சு வரும்.

செயல் தடுமாறி ---

என்ன என்ன நாம் இயல்பாகச் செயல் கொண்டிருந்தோமோ அச்செயல்கள் யாவும் முதுமையில் தடுமாறிவிடும்.

மூர்க்கச் சொற்குரல் காட்டி ---

முதுமைப் பருவம் அடைந்தவர் அடிக்கடி கோபிப்பர். மேலும் நோயின் துன்பமும் அக்கோபத் தீயில் நெய்விட்டு அதிகப்படுத்தும். சினக்கனல் சுடர்விட்டு அடுத்தவர்கள் மீது பாய்ந்து சுடும். அதன் அடையாளமாகச் சுடுசொற்கள் எரிமலைப் போல் வெளிப்படும்.

மூக்குக்குள் சளி இளையோடும் கோப்புக் கட்டி ---

சளி மூக்கிலும், கோழை நெஞ்சிலும் மிகுந்து, இவை ஒன்றுபட்டு கொய் கொய் என்று இரைந்து வெளிப்படும். அருகில் உள்ளார்க்கு மிகுந்த அருவருப்பை உண்டாக்கும். வாயில் வரும் கோழையைத் துப்பினால் அது கீழே விழுந்ததுடன் அமையாது, வீணையின் தந்திபோல் வாயில் நீண்டு விகாரப்படுத்தும். ஈளை என்பது இளை என வந்தது.

இனாப்பிச் சேற்றிடும் கூட்டில் ---

இனா பிச்சு ஏற்றிடும் கூடு எனப் பிரிக்க. இனா - இன்னா; துன்பம். பிச்சு - பித்தம். ஏற்றிடும் - அதிகப்படுத்தும். கூடு - உடம்பு; துன்பத்தைத் தரும் பித்தம் ஏறி வருத்தும் இந்த உடம்பு. இதில் உயிர் கிடந்து எப்போது இதைவிட்டுப் போவோம் என்று ஏங்கும். “அவ்வாறு அலையா முன்னம் ஆண்டவனே என்னைக் காத்தருள்வாய்” என்று அடிகளார் வேண்டுகின்றனர்.

கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல் கூட்டச் சற்றருள் புரிவாயே ---

தத்துவம் - உண்மை. “இயமன் வருவது தவிர்க்க முடியாத உண்மை. அதனைத் தவிர்த்து அடியேனை உனது காவிக்கமலக் கழலுடன் சேர்த்துச் சிறிது அருள்புரிவாய்” என்று முறையிடுகின்றார்.

காப்புப் பொற்கிரி கோட்டி குருநாதா ---

பூதலத்துக்கு நடுத்தூணாக ஆதாரமாக இருப்பது மேருமலை. அதனை திரிபுர தகன காலத்தில் சிவபெருமான் வில்லாகப் பிடித்து வளைத்தார்.

மாமேரு பூதரத் தநுப்பிடித்து”     ---  (ஆனாதஞான) திருப்புகழ்.

பற்றலர்-பகைவர். தேவருடைய பகைவர்களாகிய முப்புர அசுரர்கள். கட்டவர்-அழித்தவர், முப்புரத்தைச் சிரித்து எரித்த சிவபெருமானுடைய குருநாதர் முருகர். மும்மலங்களை எரித்த பெருமானுக்கும் குருவானவர்.


காட்டுக்குள் குறவாட்டிக்குப் பல காப்புக் குத்திரம் மொழிவோனே ---

ஞானபண்டிதன் வள்ளிப்பிராட்டியை ஆட்கொள்ளும் பொருட்டுக் காட்டிற்குச் சென்று, “நான் உன்னை நம்பித் தஞ்சம் புகுந்தேன்: நீ என்னைக் காத்தருள்” என்பன ஆகிய பலப்பல நயமொழிகளைக் கூறினான். அவை அத்தனையும் உண்மையன்று; திருவிளையாடலே. ஆதலால் குத்திரம் - வஞ்சனை என்று கூறினார்.

வாய்ப்பற்றத் தமிழ் மார்க்கத்திட் பொருள் வாய்க்குச் சித்திர ---

         மாரனை எரித்த கனல் விழியிலிருந்து ஞான ஜோதியாக வந்தவர் குமாரமூர்த்தி.அவர் திருவடியைச் சிந்திப்பார்க்கே ஆசாபாசம் அகலும். அம்மையை ஆட்கொள்வான் வேண்டி அம்மையிடம் குறையிரந்து நிற்பார்போல் நடித்து அம்மைக்கு அருள் புரிந்தார். இதுவே வள்ளித் திருமணத்தின் இரகசியம்.

         தமிழ், எல்லா விதமான நலங்களும் வாய்க்கப் பெற்றது. மதுரையில் எழுந்தருளிய சொக்கலிங்கப் பெருமான் இத்தமிழில் அகப் பொருட் சூத்திரம் அறுபது தந்து அருளினார். “இறையனார் அகப்பொருள்” என்ற அந்நூலுக்கு சங்கப் புலவர்கள் உரை கண்டார்கள். தாம் தாம் கண்ட உரையே சிறந்தது என்று கலாம் விளைத்தார்கள்.

         அப்போது முருகவேள், செட்டி மகனாகிய உருத்திர சன்மர் மூலம் நக்கீரர் உரையே சிறந்தது என்று தெளிவு படுத்தி யருள் புரிந்தார். இந்த வரலாற்றை இந்த அடி குறிப்பிடுகின்றது.

ஏர்ஆரு மாட கூட மதுரையில்
    மீதேறி மாறி ஆடும் இறையவர்
    ஏழ்ஏழு பேர்கள் கூற வருபொரு     ளதிகாரம்

 ஈடுஆய ஏமர்போல வணிகரில்
    ஊடாடி,ஆல வாயில் விதிசெய்த
    லீலா விசார தீர வரதர            குருநாதா”     --- (சீரான) திருப்புகழ்.

வார்த்தைச் சிற்பர  ---

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே” என்ற படி சொல்லுக்கும் சிந்தனைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டவன் இறைவன்.

தீர்த்தச் சுற்று அலைவாய் ---

திருச்செந்தூரில் சுவாமி சந்நிதிக்கு நேரேயுள்ள கடல் வதனாரம்ப தீர்த்தம். மேலும் முத்தித் துறை, சித்தித் துறை எனப் பலப்பல தீர்த்தத் துறைகள் அக்கடலில் உள. ஒவ்வொன்றிலும் ஆடுவார் ஒவ்வொரு பயனை அடைவர்.

கருத்துரை

         சிவகுருவே! வள்ளிமணவாளா! செந்திலாண்டவா! யம வாதனை இன்றி நின் பதமலரில் சேர்த்தருள்வாய்.


        
        

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...