அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மூளும்வினை சேர
(திருச்செந்தூர்)
முருகா!
அத்துவித முத்தி
அடைந்து,
சிவானந்தப் பெருவாழ்வில்
திளைக்க அருள்
தானதன
தான தானந்த தானந்த
தானதன தான தானந்த தானந்த
தானதன தான தானந்த தானந்த ...... தனதான
மூளும்வினை
சேர மேல்கொண்டி டாஐந்து
பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்
மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி ......
யதிபார
மோகநினை
வான போகஞ்செய் வேனண்டர்
தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற
மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற ......
துளதாகி
நாளுமதி
வேக கால்கொண்டு தீமண்ட
வாசியன லூடு போயொன்றி வானின்க
ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப ...... அமுதூறல்
நாடியதன்
மீது போய்நின்ற ஆநந்த
மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி
நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற ...தொருநாளே
காளவிட
மூணி மாதங்கி வேதஞ்சொல்
பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த
காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ ......டனல்வாயு
காதிமுதிர்
வான மேதங்கி வாழ்வஞ்சி
ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை
காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து ......தொழுமாது
வாளமுழு
தாளு மோர்தண்டு ழாய்தங்கு
சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல்
வாழுமுமை மாத ராள்மைந்த
னேயெந்தை....இளையோனே
மாசிலடி
யார்கள் வாழ்கின்ற வூர்சென்று
தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று
வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற .....பெருமாளே.
பதம் பிரித்தல்
மூளும்வினை
சேர, மேல்கொண்டிடா, ஐந்து
பூதவெகு வாய மாயங்கள் தான் நெஞ்சில்
மூடி, நெறி நீதி ஏதும் செயா. வஞ்சி ...... அதிபார
மோக
நினைவான போகம் செய்வேன், அண்டர்
தேட அரிது ஆய ஞேயங்களாய் நின்ற,
மூல பரயோக மேல் கொண்டிடா நின்றது ......உளதாகி
நாளும்
அதிவேக கால்கொண்டு தீமண்ட,
வாசி அனல்ஊடு போய்ஒன்றி வானின்கண்
நாம மதி மீதில் ஊறுஙம் கலா இன்ப .....அமுது
ஊறல்
நாடி, அதன் மீது போய் நின்ற ஆநந்த
மேலை வெளி ஏறி, நீஇன்றி நான்இன்றி,
நாடிஇனும் வேறு தான்இன்றி வாழ்கின்றது .....ஒருநாளே
காளவிடம்
ஊணி, மாதங்கி, வேதம்சொல்
பேதை, நெடுநீலி, பாதங்களால் வந்த
காலன் விழ மோது சாமுண்டி, பார்அம்பொடு.....அனல்வாயு
காதி
முதிர் வானமே தங்கி வாழ்வஞ்சி,
ஆடல்விடை ஏறி பாகம் குலாமங்கை,
காளி, நடமாடி, நாள்அன்பர் தாம்வந்து ...... தொழுமாது,
வாளம்
முழுது ஆளும் ஓர்தண் துழாய் தங்கு
சோதிமணி மார்ப மாலின் பினாள், இன்சொல்
வாழும் உமை, மாதராள் மைந்தனே! எந்தை ....இளையோனே!
மாசு
இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று
தேடி, விளையாடியே, அங்ஙனே நின்று
வாழும் மயில் வீரனே! செந்தில் வாழ்கின்ற ...பெருமாளே.
பதவுரை
காள விடம் ஊணி --- ஆலகாலம் என்னும்
கொடிய விடத்தை அருந்தியவரும்,
மாதங்கி --- மாதங்க முனிவருக்குப்
புதல்வியாக அவதரித்தவரும்,
வேதம் சொல் பேதை --- வேதங்களால்
புகழப்படுகின்றவரும்,
நெடு நீலி --- பெருந்தகைமை உடைய
துர்க்காதேவியும்,
வந்த காலன் விழ --- (மார்க்கண்டேயரைப்
பற்றும் பொருட்டு) வந்த இயமன் இறந்து விழுமாறு,
பாதங்களால் மோது சாமுண்டி ---
திருவடிகளால் உதைத்து வீழ்த்திய காளியம்மையும்,
பார், அம்பொடு, அனல், வாயு --- மண், நீருடன், தீ, காற்று,
கா(ந்)தி முதிர் வானம் --- (சந்திர
சூரியர் உடுக்கள் இருந்து பிரகாசிப்பதால்) பேரொளி மிகுந்துள்ள ஆகாயம் ஆகிய
ஐம்பெரும் பூதங்களிடத்தில்,
தங்கி வாழ் வஞ்சி --- அந்தர்யாமியாக
இருந்து இயங்கும் கொடியைப் போன்றவரும்,
ஆடல் விடையேறி --- (சிற்பர வியோமத்தில்)
அநவரத ஆனந்தத் தாண்டவமியற்றுபவரும் தரும விடைமேல் வருபவருமாகிய சிவபெருமானது,
பாகம் குலா மங்கை --- இடப்பாகத்தில்
இன்புடன் எழுந்தருளியுள்ளவரும்,
காளி நடம் ஆடி --- பத்ர காளியாக
நின்று சிவமூர்த்திக்கு எதிரில் நிருத்தம் செய்தவரும்,
நாள் அன்பர் தாம் வந்து தொழுமாறு ---
நாள்தோறும் மெய்யன்புடைய அடியார்கள் தமது சந்நிதிக்கு வந்து வழிபட்டு வணங்கப்
பெறுகின்றவரும்,
வாளம் முழுது ஆளும் --- சக்ரவாள கிரியால்
சூழப்பட்டுள்ள உலக முழுவதையும் காத்து அருள் புரியும்,
ஓர் தண் துழாய் --- ஒப்பற்றதும், குளிர்ச்சி பொருந்தியதுமாகிய துளப மாலையும்,
சோதி மணி --- ஒளிவிடும்படியான இரத்தின
மணிமாலையும்,
தங்கு மார்ப --- பொருந்தியுள்ள
திருமார்பினையுடைய,
மாலின் பி(ன்)னாள் --- திருமாலுக்கு
இளையவரும்,
இன்சொல் வாழும் உமை மாதராள் --- இனிய
சொற்கள் நிலையாக வாழும் இன்ப வடிவுடைய உமாதேவியாருமாகிய பரமேசுவரியாரது,
மைந்தனே --- திருக்குமாரரே!
எந்தை இளையோனே --- எமது பிதாவாகிய
எண்தோள் ஈசரது இளைய புதல்வரே!
மாசு இல் அடியார்கள் --- குற்றமில்லாத
மெய்யடியார்கள்,
வாழ்கின்ற ஊர் தேடி சென்று ---
உறைகின்ற ஊருக்குத் தேடிச்சென்று,
விளையாடி --- ஆங்கு பற்பல அருள்
திருவிளையாடல்களைச் செய்து,
அங்ஙனே நின்று வாழும் மயில் வீரனே ---
அவ்வூரிலேயே நிலையாக எழுந்தருளியிருக்கும் மயில் மிசைவரும் வீரம் உடையவரே!
செந்தில் வாழ்கின்ற
பெருமாளே
--- திருச்செந்திலம் பதியில் (அடியார் பொருட்டு) எழுந்தருளியுள்ள பெருமையில் சிறந்தவரே!
மூளும் வினைசேர --- (தீயைப் போல்)
மூண்டு பண்டை வினைகள் (பக்குவப்பட்டு) ஒருங்கே வந்து சேர,
மேல் கொண்டிடா ஐந்து பூத --- (அதனால்
உயர்ந்து எழுந்திரா நின்ற மண் புனல் அனல் காற்று விண் என்ற ஐம்பெரும் பூதங்களின்,
வெகுவாய மாயங்கள் தாம் நெஞ்சில் மூடி ---
பற்பல விதமான மாயைகள் அடியேனது உளத்தில் வந்து நன்கு மூடப்பெற்று,
நெறி நீதி ஏதும் செயா --- பத்தி நெறிக்குரிய
அறச் செயல் ஒன்றேனும் செய்யாமல்,
வஞ்சி அதி பார --- பெண் காதலால்
மிகுந்த பாரத்தைத் தாங்கி,
மோக நினைவான போகம் செய்வேன் --- ஆசை
மனத்தனாகி அசுத்த போகத்தை நுகருகிற நான்,
அண்டர் தேட அரிது ஆய --- தேவர்களும்
தேடித் தெரிந்து கொள்வதற்கு அரியவாகிய,
ஞேயங்களாய் நின்ற --- மெய்யுணர்வால்
நுணுகி அறியப்படுகின்றவையாய் விளங்கும்,
மூல பரயோகம் மேல் கொண்டிடா நின்று அது
உளது ஆகி --- முதன்மையான அனுபவயோகத்தில் முனைந்து நின்று அதனிடத்திலேயே
(அசைவற்று) இருப்பதாகி,
நாளும் அதி வேக கால் கொண்டு ---
நாள்தோறும் மிகவும் வேகமாக எழும் பிராணவாயுவைக் கொண்டு,
தீ மண்ட --- மூலக்கனல் மண்டி
எழுந்திருக்க,
வாசி அனல் ஊடு போய் ஒன்றி ---
பிராணவாயுவானது (சுழுமுனை, நாடியின் வழிபாய)
அவ்வக்கினியுள் சென்று பொருந்தப் பெற்று,
வானின் கண் --- பிரமரந்திரத்திற்கு
அப்பால் உள்ள ஆகாயத்தில்,
நாம மதி மீதில் ஊறும் கலா இன்ப அமுதூறல்
நாடி --- புகழ்பெற்ற பூரண சந்திரனிடத்தில் இருந்து பொழியும் அமிர்தகலை என்னும்
இனிய அமிர்தப் பொழிவை நாடி,
அதன் மீது போய் --- அச் சந்திர
மண்டலத்தில் சென்று,
நின்ற ஆனந்த மேலை வெளி ஏறி ---
நிலைபெற்றுள்ள ஆனந்தப் பெருவெளியின்மீது ஏறி அமர்ந்து,
நீ இன்றி நான் இன்றி நாடி --- நீ நான்
என்ற பிரிவற்றிருக்கும் அத்துவித முத்தியை உணர்ந்து,
இ(ன்)னும் வேறுதான் இன்றி வாழ்கின்றது
ஒருநாளே --- மேலும் பிற பொருள்களும் தோன்றாத மனமிறந்த சுகவாழ்வில் வாழ்கின்ற
ஒருநாள் அடியேனுக்கு உண்டாகுமா?
பொழிப்புரை
(திருப்பாற்கடலில் தோன்றி மால் அயன் ஆதி
வானவர்களுக்குத் துன்பத்தை நல்கிய) ஆலகால விடத்தை உண்டவரும், மதங்க முனிவருக்கு (அவர் செய்த தவம் காரணமாக)
புதல்வியாகத் திருவவதாரம் புரிந்தவரும், வேதங்களால்
புகழப்படுகின்றவரும், பெரிய துர்க்கையாக
அவதரித்தவரும், (மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவன்
உயிர் துறந்து வீழும் வண்ணம் திருவடியில் உதைத்து வீழ்த்தியவரும், காளியும், பிருதிவி, அப்பு, வாயு, (சந்திர சூரியரால்) பிரகாசிக்கின்ற
ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களில் அந்தர்யாமியாக உறைபவரும், கொடியைப் போன்றவரும், (ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு) ஆனந்தத்
தாண்டவம் புரிபவரும், தரும விடையின் மீது
எழுந்தருளி வருபவருமாகிய சிவபிரானுடைய இடப்புறத்தில் குலவிக் கொண்டிருப்பவரும், பத்ரகாளியாகி சிவமூர்த்திக்கு எதிராக
நின்று நிருத்தம் செய்தவரும், நாள்தோறும்
அன்பர்களால் தொழப் பெற்றவரும், சக்கரவாள கிரி
சூழ்ந்த உலக முழுவதையும் காப்பவரும், ஒப்பற்றதும்
குளிர்ச்சியுடையதுமாகிய துளப மாலையைத் தரித்துக் கொண்டிருப்பவரும், ஒளி வீசுகின்ற இரத்தினமணி மாலைகள்
தங்கியுள்ள திருமார்பை உடையவரும் ஆகிய திருமாலினது சகோதரியும், இனிய மொழிகளுக்கு உறைவிட மாகிய
உமாதேவியும், ஆகிய
சிவகாமசுந்தரியாரது திருக்குமாரரே!
உலகங்களுக்குத் தந்தையாகிய
சிவபெருமானுக்கு இளைய புதல்வரே!
குற்றமில்லாத மெய்யடியார்கள் வசிக்கின்ற
ஊருக்கு அவர்களைத் தேடிச்சென்று அவ்வடியாருடன் பற்பல அற்புத அருட்டிரு விளையாடல்களைப்
புரிந்து அவ்வூரிலேயே நிலைத்து இருந்து வாழுகின்ற மயில் வீரரே!
திருச்செந்தூரில் எழுந்தருளி உள்ள பெருமையில்
மிக்கவரே!
பயனைத் தருவதற்குப் பக்குவப் பட்டு, தீயைப்போல் மூண்டு பண்டை வினைகள்
ஒருங்கே வந்து சேர, அதனால் வலிந்து
எழுந்திரா நின்ற ஐம்பெரும் பூதங்களின் அநேக விதமான மாயைகள் அடியேனுடைய உள்ளத்தில்
வந்து வந்து நன்கு மூடப் பெற்று செந்நெறிக்கு உரிய அறச் செயல்களில் ஒன்றேனும்
செய்யாமல், பெண்ணாசையால் மிக்க
பாரத்தைத் தாங்கி, ஆசை மனத்தனாகி அற்ப
சுகத்தை அனுபவிக்கின்றேன்;
இத்தகைய அடியேன், தேவர்களும் தேடி உணர்தற்கு அரியதும், மெய்யறிவால் உணர்தற்பாலதுமாய் விளங்கும், முதன்மையாகிய அனுபவ சிவயோகத்தில்
சிறந்து நின்று அசைவற்று இருப்பதாகி, நாள்தோறும்
மிகவேகமாக வரும் பிராண வாயுவைக் கொண்டு மூலக்கனலை எழுப்பி, (சுழுமுனை நாடி வழியே) சென்று, அந்த சந்திர மண்டலத்திலுள்ள பூரண
சந்திரன் பொழியும் அமிர்த இன்பக்கலையின் பொழிவை நாடி, அவ் அமிர்த மண்டலமாகிய மேலை வெளியில் ஏறி
அங்கு “நீ, நான்” என்ற வேற்றுமை இன்றி
அத்து விதமாகக் கலந்து இருந்து,
மேலும்
பிற பொருளும் தோன்றா வண்ணம் பரமசுகப் பெருவாழ்வில் வாழும் நாள் ஒன்று
(அடியேனுக்கு) உண்டாகுமோ?
விரிவுரை
மூளும்
வினை
---
முற்பிறப்புகளில்
செய்த பழைய வினைகள் பக்குவபடாமலிருந்து உரிய காலத்தில் அனுபவிப்பதற்குப்
பரிபக்குவம் அடைந்து, மிகவும் வேகமாகத்
தன்னை உடையவனிடம் விரைந்து வந்து சேரும். அவ் வினையாவது, தீ விரைந்து மூண்டு எரிப்பதுபோல் மூண்டு
உடையானை எரிக்கும். அவன் எவ்வுழி இருப்பினும் அவனைத் தேடி வந்தடையும். “பலபசுக்களுக்கு
இடையில் ஒரு கன்றை விட்டால் அது எப்படித் தன் தாய்ப் பசுவை விரைந்து நாடியடையுமோ
அப்படியே பழவினையும் தன்னைச் செய்தவனைத் தவறாமல் அடையும்.
பல்ஆவுள்
உய்த்து விடினும், குழக்கன்று
வல்லதாம்
தாய்நாடிக் கோடலைத் --- தொல்லைப்
பழவினையும்
அன்ன தகைத்தே, தற்செய்த
கிழவனை
நாடிக் கொளற்கு. --- நாலடியார்
என்செயல்
ஆவது யாதுஒன்றும் இல்லை, இனித் தெய்வமே,
உன்செயல் என்று உணரப்பெற்றேன், இந்த ஊனெடுத்த
பின்செய்த
தீவினை யாதுஒன்றும் இல்லை, பிறப்பதற்கு
முன்செய்த தீவினையோ இங்ஙனம் வந்து மூண்டதுவே! --- பட்டினத்தார்.
வினை சடம் ஆதலின் தானே வந்தடையாது. இறைவன் அருளாணை
செலுத்தவரும் என்று உணர்க.
ஞேயங்கள்
---
அறியப்படு
பொருள்கள்.
பரயோக ---
பொறி
புலன்களின் சேட்டைகள் அற்று, சமாதி மனோலய முற்று
ஜீவபாபம் ஒழிந்து வெறுந்தானாய் நிலைத்து நிற்கின்ற நிலை.
கால்கொண்டு
தீமண்ட ---
அவமே
கழிக்கின்ற பிராண வாயுவைக் கழிய விடாமல், அஜபா
மந்திரத்துடன், கும்பகம் புரியில், மூலக்கனலை எழுப்பிக்கொண்டு அடைப்பட்டிருக்கின்ற
சுழுமுனை நாடி வழியே அவ்வாயு செல்லும்.
“சூலம் பெற வோடிய
வாயுவை
மூலந் திகழ் தூண்வழியே அளவிட ஓடி” --- (மூலங்கிள) திருப்புகழ்.
“நாலுசதுரத்த பஞ்சறை மூலகமலத்தில்
அங்கியை
நாடியின் டத்தி மந்திர பந்தியாலே” --- திருப்புகழ்.
மதிமீதில்
ஊறும் கலா இன்ப அமுதூறல் ---
சந்திரமண்டலத்தில்
சென்று அங்கு சதா ஊறுகின்ற அமிர்த தாரையை சகோர பட்சியைப் போல் பானம் செய்து பசிதாக
மற்று சித்திர தீபம்போல் சிவயோகிகள் அசைவற்றிருப்பர்.
ஆனந்தமேலை
வெளியேறி ---
சிறிதுகூடத்
துன்பமே இல்லாத தூய வெளியில் சென்றவர் இன்ப மயமாக இருப்பர்.
ஒளியில்
விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல்
அளியில்
விளைந்த்து ஓர்ஆனந்தத் தேனை, அநாதியிலே
வெளியில்
விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய
விளம்பியவா! முகம்ஆறுஉடைத் தேசிகனே. ---
கந்தர்அலங்காரம்.
நீயின்றி
நானின்றி ---
சீவான்மாவானது
இருவினையொப்பு மலபரிபாகம் உற்றபோது அருள் பதிந்து சிவத்தோடு இரண்டறக் கலந்து
ஏகப்பெரு வெறுவெளியில் கரை கடந்த இன்பப் பெருவெள்ளத்தில் அழுந்தி, ஏக சொரூபமாய் நிற்கும். அந் நிலையில்
சிவமும் சீவனும் வேற்றுமையின்றிக் கதிரொளியும் கண்ணொளியும் கலந்தது போல் கலந்து
விளங்கும்.
“இருவினையும் மலமுமற
இறவியொடு பிறவியற
ஏகபோகமாய் நீயுநானுமாய்
இறுகும் வகை பரமசுக மதனையருள்” --- (அறுகுநுனி) திருப்புகழ்.
சீவன்
சிவனாகிப் பூரணம் உற்ற அந்நிலையைச் சொல்லாலும் எழுத்தாலும் விளக்க முடியாது; அனுபவித்து உணரற்பாலது. அந்நிலையை அடைந்த
அனுபவ மெய்ஞ்ஞானப் பெரியார்கள் கூறிய அருட்பாக்களை உற்று நோக்குக.
அவம்ஆய
தேவர் அவகதியில் அழுந்தாமே,
பவமாயம்
காத்துஎன்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி,
நவம்ஆய
செஞ்சுடர் நல்குதலும், நாம்ஒழிந்து
சிவம்ஆன
வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ --- திருவாசகம்.
சீவன்
என்னச் சிவன் என்ன வேறுஇல்லை,
சீவனார்
சிவனாரை அறிகிலர்
சீவனார்
சிவனாரை அறிந்த பின்
சீவனார்
சிவன் ஆயிட்டு இருப்பாரே. --- திருமந்திரம்.
நான்என்றும்
தான்என்றும் நாடினேன், நாடலும்,
நான்என்று
தான்என்று இரண்டுஇல்லை என்பது,
நான்என்ற
ஞான முதல்வனே நல்கினான்,
நான்என்று
நானும் நினைப்புஒழிந் தேனே. --- திருமந்திரம்.
நான்
என்றும் தான்என்றும் நாடிநான் சாரவே
தான்
என்று நான் என்று இரண்டிலாத் தற்பதம்
தான்
என்று நான்என்ற தத்துவம் நல்கலால்
தான்என்றும்
நான்என்றும் சாற்றகில் லேனே. --- திருமந்திரம்.
அதுஇது
என்றும், அவன் நானே என்றும்,
அதுநீயே
ஆகின்றாய் என்றும், --- அதுஆனேன்
என்றும்,
தமையுணர்ந்தார் எல்லாம் இரண்டாக
ஒன்றாகச்
சொல்லுவாரோ உற்று. --- திருக்களிற்றுப்படியார்.
நான்எனவும்
நீஎனவும் இரு தன்மை
நாடாமல், நடுவே சும்மா
தான்
அமரும் நிலை இதுவே சத்தியம் சத்-
தியம் என, நீ தமியனேற்கு
மோனகுரு
ஆகியும், கை கட்டினையே,
திரும்பவும் நான் முளைத்துத் தோன்றி,
மானத
மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே,
பரந்தேனே, வஞ்சனேனே. --- தாயுமானார்.
காளவிடம்
ஊணி
---
சிவமும்
சக்தியும், பொன்னும் ஒளியும்போல், மலரும் மணமும் போல் தாதான்மியம். ஆதலால்
விடம் உண்டதைச் சக்தியின் மேல் ஏற்றிக் கூறினார்.
மாதங்கி ---
மதங்க
ரிஷி சக்தியை மகளாகப் பெறவேண்டிப் பெருந்தவம் இருந்து அத்தவத்தின் பயனாக அம்பிகையை
மகளாகப் பெற்றார்; அதனால் அம்பிகைக்கு
இப் பெயருண்டாயிற்று.
பாதங்களால்
வந்த காலன்விழ மோது சாமுண்டி ---
சிவபக்தராகிய
மார்க்கண்டேயரைப் பற்ற வந்த இயமனை முக்கட் பெருமான் சக்தியின் பாகமாகிய இடத் திருவடியால்
உதைத்த குறிப்பை உணர்த்துகிறார்.
பாரம்பொ........வானமே
தங்கி வாழ்வஞ்சி ---
பஞ்ச
பூதங்களில் நிறைந்து விளங்குவது சத்தியே ஆம். இதனால் யாவும்
சத்திமயமே எனப் புலப்படுத்துகின்றார்.
மாசிலடியார்கள் ---
நெஞ்சில்
கரவைக் கொண்டு, வெளித் தோற்றத்தில்
அடியார் போல் நடிப்பதாகிய குற்றம் இல்லாத மெய்யடியார்கள்.
வாழ்கின்றவூர்...........அங்ஙனே
நின்று
---
அத்தகைய
மெய்த் தொழும்பர் உறையும் உறைவிடத்திற்கு, மறைக்கும் எட்டாத மயூரவாகனப் பெருமாள்
தாமே வலிந்து தேடிச் சென்று, அரிதில் தவம் புரிவார்க்குங்
காட்டாத தமது அருள் திருமேனி புலனாமாறு காட்டி, அவ் அடியாருடன்
கலந்து பற்பல அற்புத அருள் விளையாடல்களைப் புரிந்து, அவ் அடியருடனேயே புறத்தும் அகத்தும்
பிரியாது உறைவார்.
“இமைப்பொழுதும்
என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க”
--- மாணிக்கவாசகர்
திருமாலொடு
திசைமுகனும் தேடித்தேடி தெரிசிக்க முடியாத முழுமுதற்கடவுள், அடியாரைத் தேடி வருவது அவரது
திருவருளின் எளிமையை உணர்த்துகிறது. அளப்பரிய அருட்கடலாகிய அப் பரமபிதா, தன்னை உள்ளபடியே நினைந்து நெஞ்சம்
நெகிழும் நல்ல அன்பரைத் தேடி வந்து அவருடன்
வாழ்கின்றான் என்றால், அப் பிதாவின் கருணையை என்னென்று
வியப்பது?
கருத்துரை
செந்திலபதிபரே! பண்டை வினையால் அழியும்
அடியேன், சிவயோக சாதனையில்
நின்று, ஆனந்த மேலைப்
பெருவெளியில் சென்று, அங்கு நீ நான் என்ற
வேற்றுமை இன்றி அத்துவித முத்தியை அடைந்து சிவானந்தப் பெருவாழ்வில் சிவபோகத்தைத்
துய்க்கும் ஒரு நாள் அடியேனுக்கு உண்டோ?
அரிய ஆழ்ந்த கருத்துக்கள்.இதை அறிந்து கொண்டு பின் பயிலும் போது மனது முருகன் திருவடியில் ஓன்ற ஏதுவாகிறது
ReplyDelete