திருச்செந்தூர் - 0096. வஞ்சத்துடன் ஒரு


 அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வஞ்சத்துடன் ஒரு (திருச்செந்தூர்)

எமன் வரும்போது திருவடி தந்து அருள

தந்தத் தனதன தந்தத் தனதன
     தந்தத் தனதன ...... தனதான


வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை
     வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும்

வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு
     மண்டிக் கதறிடு ...... வகைகூர

அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
     அங்கிக் கிரையென ...... வுடன்மேவ

அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
     அன்றைக் கடியிணை ...... தரவேணும்

கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
     கன்றச் சிறையிடு ...... மயில்வீரா

கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்
     கண்டத் தழகிய ...... திருமார்பா

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
     செந்திற் பதிநக ...... ருறைவோனே
  
செம்பொற் குலவட குன்றைக் கடலிடை
     சிந்தப் பொரவல ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பலநினை
     வஞ்சிக் கொடிஇடை ...... மடவாரும்,

வந்திப் புதல்வரும், அந்திக் கிளைஞரும்,
     மண்டிக் கதறிடு ...... வகைகூர,

அஞ்சக் கலை படு பஞ்சிப் புழுஉடல்
     அங்கிக்கு இரை என ...... உடன்மேவ,

அண்டிப் பயம் உற, வென்றிச் சமன்வரும்
     அன்றைக்கு அடி இணை ...... தரவேணும்.

கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர் செய்து,
     கன்றச் சிறை இடும் ...... மயில்வீரா!

கண்டு ஒத்தன மொழி அண்டத் திருமயில்
     கண்டத்து அழகிய ...... திருமார்பா!

செஞ்சொல் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
     செந்தில் பதிநகர் ...... உறைவோனே!

செம்பொன் குல வட குன்றைக் கடல்இடை
     சிந்தப் பொரவல ...... பெருமாளே.

பதவுரை

      கஞ்ச பிரமனை அஞ்ச --- தாமரை மலரிலிருக்கும் பிரமனை அஞ்சுமாறு,

     துயர் செய்து --- துன்பத்தைச் செய்து,

     கன்ற --- அவன் மனம் நோவ,

     சிறை இடும் --- சிறைச்சாலையில் அடைத்த,

     அயில் வீரா --- வேலாயுதத்தையுடைய வீர மூர்த்தியே!

     கண்டு ஒத்தன மொழி --- கற்கண்டுக்குச் சமானமுடைய மொழி பேசும்,

     அண்டத் திருமயில் --- தேவகுலத்து அழகிய மயில் போன்ற தெய்வயானையம்மையின்,

     கண் தத்து அழகிய திருமார்பா --- பார்வை பாய்கின்ற அழகிய திருமார்பை உடையவரே!

      செம் சொல் புலவர்கள் சங்க --- செவ்விய சொற்களையுடைய புலவர்களின் குழுவினது,

     தமிழ் தெரி --- தமிழை ஏற்று அருள்கின்ற,

     செந்தில் பதி நகர் உறைவோனே --- திருச்செந்தூர் என்ற திருத்தலத்தில் உறைபவரே!

         செம்பொன்குல வட குன்றை --- செம்பொன்னாய்ச் சிறந்து வடக்கே இருந்த கிரவுஞ்ச மலையை,

     கடல் இடை சிந்த --- கடலுக்கு நடுவில் சிதறுமாறு,

     பொர வல பெருமாளே --- போர் செய்யவல்ல பெருமையின் மிகுந்தவரே!

         வஞ்சத்துடன் --- வஞ்சனையுடன்,

     ஒரு நெஞ்சில் பல நினை --- நெஞ்சமாகிய ஒன்றில் பல வேறு சிந்தனைகளை உடையவரும்,

     வஞ்சி கொடி இடை மடவாரும் --- வஞ்சிக் கொடிபோன்ற இடையயுடைய வருமாகிய பெண்களும்,

     வந்தி புதல்வரும் --- வணங்குகின்ற புதல்வர்களும்,

     அந்தி கிளைஞரும் --- நெருங்கிய சுற்றத்தாரும்,

     மண்டி கதறிடு வகை கூர --- ஒன்றுபட்டு கதறியழுகின்ற செயல் மிகுதியாகவும்,

     அஞ்ச கலைபடு --- உடலின் அம்சங்கள் கலைபட்டுப் போகின்ற,

     பஞ்சிப் புழுவுடல் --- பஞ்சுபோன்ற புழுக்கள் நிறைந்த இந்த உடம்பானது,

     அங்கிக்கு இரை என உடன் மேவ --- நெருப்புக்கு உணவென்று உடனே செல்லும்படியும்,

     அண்டி பயம்உற --- நெருங்கி அஞ்சுமாறும்,

     வென்றி சமன்வரும் --- வெற்றிப் பொருந்திய இயமன் வரும்,

     அன்றைக்கு --- அந்தநாளில்,

     அடி இணை தரவேணும் --- தேவரீருடைய சரண கமலங்கள் இரண்டையும் தந்து அருள்புரிவீர்.

பொழிப்புரை

         தாமரை மலரில் உறைகின்ற பிரமன் அஞ்சுமாறு அவனுக்குத் துயர் புரிந்து அவன் மனம் நோவச் சிறையில் அடைத்த வேலை ஏந்திய வீர மூர்த்தியே!

         கற்கண்டை ஒத்த இனிய மொழியையுடைய தேவமாதாகிய அழகிய மயில் போன்ற தெய்வயானையம்மையின் கண்பார்வை பாய்கின்ற திருமார்பினரே!

         செவ்விய சொற்களையுடைய புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச் சூடிக்கொண்டு செந்திலம்பதி என்ற திருநகரில் உறைகின்றவரே!

         செம்பொன் நிறத்துடன் வடக்கே நின்ற கிரவுஞ்சமலைக் கடலில் சிந்தி அழியுமாறு போர் புரிவதில் வல்ல பெருமிதம் உடையவரே!

         வஞ்சனையுடன் நெஞ்சில் பல நினைவுகளுடன் கூடிய வஞ்சிக்கொடி போன்ற இடையுடைய பெண்களும், வணங்குகின்ற மைந்தர்களும், நெருங்கிய சுற்றத்தார்களும் ஒன்று பட்டுக் கதறுகின்ற செயல் அதிகப்படவும், உறுப்புக்கள் பிரியும்படியான பஞ்சு போன்ற இந்தப் புழுத்த உடம்பு நெருப்புக்கு இரையாகும்படி உடனே செல்லவும், நெருங்கி அஞ்சுமாறும் வெற்றியை உடைய இயமன் வருகின்ற அந்நாளில், உமது இரு திருவடிகளைத் தந்தருளவேண்டும்.

விரிவுரை

வஞ்சத்துடன் ஒரு நெஞ்சிற் பலநினை வஞ்சிக்கொடியிடை மடவாரும் ---

பெண்களில் சிலர் குடும்பத்தில் பல வஞ்சனைகளைப் புரிவதும், பல்வேறு நினைவுகளைக் கொண்டு உழல்வதுமாக இருப்பர். இதனை இங்கே சுவாமிகள் குறித்தனர்.

வந்திப் புதல்வர் ---

வந்தித்தல் - வணங்குதல். வணங்குகின்ற புலவர்கள்.

அந்தி கிளைஞரும் ---

அந்தி-நெருக்கம். நெருங்கிய உறவினர்கள்.

வகை கூர ---

வகை-செயல்; கூர-மிகுதிப்பட.

அஞ்சக் கலை படு ---

அஞ்சம்-அம்சம் (உறுப்பு). பல உறுப்புகளும் கலைந்து போகின்றன.

மஞ்சிப் புழுவுடல் ---

பஞ்சுபோல் நிலை குலைவதும், புழுக்கள் நிறைந்ததுமான இந்த உடம்பு முடிவில் எரிக்கப்படும்.

சமன் வரும் அன்றைக்கு அடியிணை தரவேணும் ---

இயமன் வருகின்ற அந்நாள் வந்து அடியேனுக்குத் திருவடிகளைத் தரவேண்டும்.

கண்டு ஒத்தன மொழி ---

தெய்வயானையம்மையாருடைய திருமொழி கற்கண்டைப் போல் இனிக்கும் தன்மையது.

கண் தத்து அழகிய ---

கண் தத்து எனப் பதச் சேதம் செய்க. தத்துதல்-தாவிச் செல்லுதல். தெய்வயானையம்மையாருடைய பார்வை முருகவேள்மீது வேதமாகப் பாய்ந்து செல்லுகின்றது.

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி செந்தில் ---

செஞ்சொற்களையுடைய சங்கப் புலவர்கள் திருச்செந்தூரைச் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்கள்.

உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச் சீரலைவாய்”      ---  நக்கீரர்

திருமணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேஎய்”    --- பரணர்

வெண்டலைப் புணரி அலைக்குஞ் செந்தில்
 நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறை”   ---  மதுரை மருதன் இளநாகனார்

நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்”   ---  தொல்காப்பியம்.

சீர்கெழு செந்திலும் நீங்கா இறைவன்”    ---இளங்கோவடிகள்.


கருத்துரை

         பிரமனைச் சிறை செய்த செந்திற்குமரா! இயமன் வரும் நாளில் வந்து தேவரீரது திருவடி இணையைத் தந்தருள வேண்டும்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 16

  "நாயாய்ப் பிறந்திடின் நல்வேட்டை ஆடி நயம்புரியும், தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய், காயா மரமும், வறளாம் குளமும், கல...