திருச்செந்தூர் - 0097. வஞ்சம் கொண்டும்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வஞ்சம் கொண்டும் (திருச்செந்தூர்)

முருகா!
உனக்கே அடைக்கலம்
முத்தி வீட்டைத் தந்து அருள்.

தந்தந்தந் தந்தன தானன
     தந்தந்தந் தந்தன தானன
     தந்தந்தந் தந்தன தானன ...... தனதான


வஞ்சங்கொண் டுந்திட ராவண
     னும்பந்தென் திண்பரி தேர்கரி
     மஞ்சின்பண் புஞ்சரி யாமென ...... வெகுசேனை

வந்தம்பும் பொங்கிய தாக
     வெதிர்ந்துந்தன் சம்பிர தாயமும்
     வம்புந்தும் பும்பல பேசியு ...... மெதிரேகை

மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு
     ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ
     குண்டுங்குன் றுங்கர டார்மர ...... மதும்வீசி

மிண்டுந்துங் கங்களி னாலெத
     கர்ந்தங்கங் கங்கர மார்பொடு
     மின்சந்துஞ் சிந்தநி சாசரர் ...... வகைசேர

வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி
     ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க
     ளுந்துந்துந் தென்றிட வேதசை ...... நிணமூளை

உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்
     டிண்டிண்டென் றுங்குதி போடவு
     யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் ...... மருகோனே

தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி
     கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்
     தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே

சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட
     மெங்கெங்கும் பொங்கம காபுநி
     தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வஞ்சம் கொண்டும் திட ராவண-
     னும் பந்துஎன் திண் பரி தேர்கரி
     மஞ்சின் பண்பும் சரி ஆமென ...... வெகுசேனை

வந்தம்பும் பொங்கிய தாக
     எதிர்ந்தும், தன் சம்பிரதாயமும்
     வம்பும் தும்பும் பல பேசியும் ...... எதிரே கை

மிஞ்ச என்றும் சண்டை செய் போது
     குரங்கும் துஞ்சும் கனல் போலவெ
     குண்டும் குன்றும் கரடு ஆர் மரம் ...... அதும்வீசி

மிண்டும் துங்கங்களினாலெ
     தகர்ந்து அங்கம் கம் கர மார்பொடு
     மின் சந்தும் சிந்த, நிசாசரர் ...... வகைசேர-

வும், சண்டன் தென்திசை நாடி,
     விழுந்து, ங்கும் சென்றுஎம தூதர்கள்
     உந்து உந்து உந்து என்றிடவே, தசை ...... நிணமூளை

உண்டும் கண்டும் சில கூளிகள்
     டிண்டிண்டு என்றும் குதி போட,
     உயர்ந்த அம்பும் கொண்டுவெல் மாதவன் ......மருகோனே!

தஞ்சம் தஞ்சம் சிறியேன் மதி
     கொஞ்சம் கொஞ்சம், துரையே! அருள்
     தந்து, இன்று இன்பம் தரு வீடு அது ...... தருவாயே.

சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம்
     எங்கெங்கும் பொங்க, மகா புனி
     தம் தங்கும் செந்திலில் வாழ் உயர் ...... பெருமாளே.


பதவுரை

      வஞ்சம் கொண்டும் --- வஞ்சக நினைவு கொண்டவனாய்,

     திட ராவணனும் --- உறுதியுடைய இராவணன்,

     பந்து என் திண் பரி, தேர், கரி --- பந்துபோல் வேகமாகச் செல்லுகின்ற வலிமையுடைய குதிரை, தேர், யானை,

     மஞ்சின் பண்பும் சரியாம் என --- மேகம்போல் திரண்டு வருகின்ற,

     வெகு சேனை --- மிகுந்த சேனைகளுடன்,

     வந்து --- போர்க்களத்திற்கு வந்து,

     அம்பும் பொங்கியதாக --- அம்பின் கூட்டம் நிறைந்து எழ,

     எதிர்ந்தும் தன் சம்பிரதாயமும் --- எதிர்த்துத் தனது ஆற்றலைப் பற்றியும்,

     வம்பும் தும்பும் பல பேசியும் --- வீண் வார்த்தைகளும் இழிவான சொற்களும் பல பேசி,

     எதிரே கை மிஞ்ச என்றும் --- எதிரிகள் சேனைகள் மிகுதி என்று கூறி,

     சண்டை செய்போது --- போரிடும் போது,

     குரங்கும் துஞ்சும் கனல் போலவெ --- குரங்குகளும் எதிர்த்து அணைகின்ற நெருப்புப்போல் சினந்து,

     குண்டும் குன்றும் கரடு ஆர் மரம் அதும் வீசி --- கல்குண்டுகளையும் சிறு மலைகளையும் கரடு முரடான மரங்களையும் பிடுங்கி வீசி,

     மிண்டும் துங்கங்களினாலே தகர்ந்து --- நெருங்கிய அந்த மலைகளினாலே நொறுங்கி,

     அங்கம், கம், கரம், மார்பொடு --- உடம்பு, தலை, கை, மார்பு இவைகள்,

     மின் சந்தும் சிந்தி --- ஒளியுடைய உடற் பொருத்தங்களையும் சிதறச் செய்து,

     நிசாசரர் வகை சேரவும் --- இரவில் உலாவுகின்ற அசுரர்களுடைய இனங்கள் முழுவதும்,

     சண்டன் தென் திசையை நாடி விழுந்து --- யமனுடைய தென் திசையை நாடி விழவும்,

     அங்கும் சென்று எம தூதர்கள் --- அந்த இடத்திலும் எமதூதர்கள் போய்,

     உந்து உந்து உந்து என்றிட --- தள்ளு, தள்ளு, தள்ளு, என்று கூறுமாறு,

     சில கூளிகள் தசை நிணம் மூளை உண்டும் கண்டும் --- சில பேய்கள் மாமிசம் மூளை இவைகளை உண்டும் பார்த்தும்,

     டிண் டிண்டென்றும் குதிபோடவும் --- டிண்டிண்டென்ற ஓசையுடன் கூத்தாடவும்,

     உயர்ந்த அம்பும் கொண்டு வெல் --- சிறந்த அம்புகளைக் கொண்டு வென்ற,

     மாதவன் மருகோனே --- இராமருடைய திருமருகரே!

      சங்கம் கஞ்சம் கயல் சூழ் --- சங்குகளும், தாமரைகளும், மீன்களும் நிறைந்த,

     தடம் எங்கு எங்கும் பொங்க --- குளங்கள் பல இடங்களிலும் விளங்குகின்ற,

     மகா புநிதம் தங்கும் --- மிகுந்த பரிசுத்தம் பொருந்திய,

     செந்திலில் வாழ்வு உயர் பெருமாளே --- திருச்செந்தூரில் எழுந்தருளி மேன்மையுடன் வீற்றிருக்கும் பெருமையின் மிகுந்தவரே!

      தஞ்சம் தஞ்சம் --- அடைக்கலம், அடைக்கலம்,

     சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சம் --- சிறியேனுடைய அறிவு அற்பம், அற்பம்;

     துரையே --- தலைவரே!

     அருள் தந்து --- உமது திருவருளைப் பாவித்து,

     இன்பம் தரு வீடு அது என்று தருவாயே --- இன்பத்தைத் தருகின்ற முத்தியை அடியேனுக்கு எந்நாள் தருவீரோ?


பொழிப்புரை

         வஞ்சனையும் திடமும் உடைய இராவணன், பந்துபோல் விரைந்து செல்லும் வலிய குதிரைகள், தேர், யானை, மேகம் எழுந்தது போன்ற பல சேனைகளுடன் வந்து கணைகளைச் சொரிந்து கொண்டு எதிர்த்து, தனது ஆற்றலைப் பற்றியும் வீண் பேச்சும் இகழுரையும் பேசி, அவன் எதிரே சேனைகள் மிகுந்து நிற்க, நாள் முழுவதும் போர் புரியும் போது, குரங்குகள் மிகுந்து நெருப்பைப் போல் கொதித்து எழுந்து கல் குண்டுகளையும், குன்றுகளையும், கரடு முரடான மரங்களையும் பேர்த்து எறிந்து, மிகுந்த மலைகளினால் நொறுங்கிய உடம்பு தலை கை இவைகளுடன் ஒளி விடுகின்ற உடற்கீல்களையும் சிதற வைத்து, அந்த அரக்கருடைய கூட்டம் முழுவதும், இயமனுடைய தென்திசையை நாடி விழவும், யமதூதர்கள் அங்குஞ்சென்று தள்ளு தள்ளு என்று கூறும்படி, மாமிசம் மூளை இவைகளை சிலபேய்கள் தின்றும் பார்த்தும் டிண்டிண்டென்று கூத்தாட, உயர்ந்த பாணத்தை விடுத்துக் கொன்ற ஸ்ரீராமருடைய திருமுருகரே!

         சங்குகளும், தாமரைகளும், மீன்களும் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்துள்ள, பெரிய தூய்மையான செந்தில்மா நகரின் கண் வாழ்ந்து உயர்ந்துள்ள பெருமிதம் உடையவரே!

         அடியேன் உமக்கே அடைக்கலம்; அடைக்கலம்; சிறியேனுடைய அறிவு மிகவும் அற்பமானது; ஆதலால் அருள் தந்து இன்ப மயமான முத்தி நலத்தை என்று எனக்கு அருளுவீரோ?

விரிவுரை

வஞ்சம் கொண்டு திட ராவணன் ---

இராவணன் வஞ்சனை உடையவன் என்று அருணகிரிநாதர் கூறுகின்றார். இராவணன் சீதையைச் சிறை பிடித்தது பிழை அன்று என்றும், தன் தங்கை சூர்ப்பணகையை இலட்சுமணன் மூக்கு அறுத்தபடியால் பழிக்குப் பழி வாங்கும் பொருட்டுச் சீதையைச் சிறை பிடித்தான். ஆகவே அது வீரச் செயல் என்றும், இராவணன் சீதையைச் சிறைப் பிடித்தானே அன்றி பத்து மாதகாலமாக அவளைத் தீண்டாமல் இருந்ததுவே அவன் பெருந்தன்மைக்கு அறிகுறி என்றும் வாதிக்கின்றவர்களும் உண்டு.

இராவணன் தன் தங்கை சூர்ப்பணகையின் மூக்கரிந்த இராம லட்சுமணரைப் பழிக்குப் பழி வாங்க நினைத்திருப்பான் ஆயின், ’இன்ன நேரத்தில் நான் வருவேன்’ என்று ஓர் அறிக்கை மூலம் எச்சரிக்கைத் தந்து, அதுபடி சென்று போர் புரிந்து, இராம லட்சுமணரை வென்று, சீதையைச் சிறை எடுப்பது அல்லவா வீரச் செயல்? அதுதானே, வீரர்கட்கு முறை? அப்படிக்கு இன்றி, மான் அனுப்பி, மான் பின்னே இராமலட்சுமணர்கள் சென்ற பின், சன்னியாச வடிவில் வந்து, அன்னங்கேட்டு, அன்னமிட வந்த சீதையைக் கன்னமிட்டனன். இராமர் இல்லாதபோது ஒரு பெண்மணியைச் சிறை செய்வது என்ன முறை? ஆகவே, ராவணன் செய்தது வீரச்செயல் அன்று, காம மயக்கத்தால் செய்த வஞ்சனைச் செயல். இலட்சுமணரைப் பழிவாங்க நினைத்தால், அவர் மனைவி ஊர்மிளையை அல்லவா கவர்ந்து வரவேண்டும். இவைகளை அன்பர்கள் உணர்க.

பந்து என் திண்பரி ---

பந்து என் திண்பரி --- பந்துபோல் விழுந்து எழுந்து பாய்கின்ற வேகமுள்ள குதிரைகள்.

பரித்தல் --- தாங்குதல்.

போர் வீரனைத் தாங்கிச் செல்வதால் குதிரை பரி என்ற பேர் பெற்றது.

மஞ்சின் பண்புஞ் சரியாமென வெகு சேனை ---

மேகம் பந்தி பந்தியாக எழுவதுபோல், பலவகைப்பட்ட சேனைகள் அணிவகுத்து வந்தன.

தன் சம்பிரதாயமும் வம்பும் தும்பும் பல பேசி ---

இராவணன் சேனைகளுடன் போருக்கு வந்து எதிர்த்து, தனது பராக்கிரமத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசி, வம்பு வார்த்தைகளும் இகழ்ச்சி யுரைகளும் பேசித் தனது சிறுமையைப் புலப்படுத்தினான்.


எதிரே கை மிஞ்சென்றும் ---

கை --- சேனை. சேனைகள் மிகுதியாக வந்து போர் புரிந்தன.

வெல் மாதவன் மருகோனே ---

திருமால் இராமராக அவதரித்து, இராவணாதி அவுணரை வென்றனர். வெற்றி என்பது ஸ்ரீராமருக்கு மிகவும் உரியது. அவருடைய கணை வெற்றி பெறாது மீளாது. அதனால் ஸ்ரீராம ஜெயம் என்று குறிக்கின்ற வழக்கம் ஏற்பட்டது.

தஞ்சம் தஞ்சம் ---

தஞ்சம் --- அடைக்கலம்.

ஆன்மாக்களாகிய நாம் இறைவனிடம் அடைக்கலம் புகவேண்டும். தஞ்சம் புகுந்தாருக்கு முருகன் அருள் புரிவான். “தஞ்சத்து அருள் சண்முகன்” என்று கந்தரநுபூதியில் கூறுகின்றனர்.

மணிவாசகப் பெருமான் அடைக்கலப்பத்து என்று ஒரு அருமையான திருப்பதிகத்தையே திருவாசகத்தில் தந்நுள்ளார்.

படைக்கலமாக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்,
இடைக்கலம் அல்லேன், எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்,
துடைக்கினும் போகேன், தொழுது வணங்கித் தூநீறு அணிந்து, உன்
அடைக்கலம் கண்டாய், அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே.   --- அப்பர்.

மைவரும் கண்டத்தர் மைந்த 'கந்தா' என்று வாழ்த்தும் இந்தக்
கைவரும் தொண்டு அன்றி மற்று அறியேன், கற்ற கல்வியும் போய்ப்
பை வரும் கேளும் பதியும் கதறப் பழகி நிற்கும்
ஐவரும் கைவிட்டு மெய்விடும்போது, உன் அடைக்கலமே.   --- கந்தர் அலங்காரம்.

                                         
இருவினை விலங்கொடும் இயங்கு புன்கலளை,
நடுவன் வந்து அழைத்திட நடுங்கும் யாக்கையை,
பிணம் எனப் படுத்தி, யான் புறப்படும் பொழுது,நின்
அடிமலர்க் கமலத்துக்கு அபயம், நின் அடைக்கலம்,
வெளி இடை உரும் இடி இடித்து என வெறித்து எழும்
கடுநடை வெள் விடைக் கடவுள்! நின் அடைக்கலம்,
இமையா நாட்டத்து இறையே! அடைக்கலம்,
அடியார்க்கு எளியாய்! அடைக்கலம், அடைக்கலம்,
மறையவர் தில்லை மன்றுள் நின்று ஆடிக்
கருணை மொண்டு அலைஎறி கடலே! அடைக்கலம்,
தேவரும் முனிவரும் சென்று நின்று ஏத்த,
பாசு இழைக் கொடியொடு பரிந்து அருள் புரியும்
எம்பெருமான் நின் இணை அடிக்கு அபயம்,
அம்பலத்து அரசே! அடைக்கலம் உனக்கே. --- பட்டினத்தார்.


சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சம் ---

ஆன்மாக்களின் அறிவு அறிவிக்க அறிவது; சிற்றறிவு.

இறைவன் முற்றறிவுடையவன்.

கதிரொளித் துணை செய்யக் கண்ணொளி ஒரு பொருளைக் காண்பதுபோல், இறைவனுடைய அருளறிவு துணை செய்தால்தான் ஆன்ம அறிவு பொருளை அறியும்.

ஆன்ம அறிவு தெளிவு இல்லாதது; விட்டு விட்டு அறிவது; ஏகதேச அறிவு. மின்மினி ஒளியைப் போன்றது.

மகா புனிதம் தங்கும் செந்தில் ---

திருச்செந்தூர் கயிலைமலைக்குச் சமானமானது. மிகுந்த பரிசுத்தமானது. பிறவிப் பெருங்கடலில் அழுந்திக் கரை காணாது பல்லூழி காலமாக உழலும் ஆன்மாக்கட்கு முத்திக்கரை போன்றது. வந்து வழிபட்டோருக்கு எல்லா நலன்களும் வழங்குவது.
கருத்துரை

         திருமாலின் மருகரே! செந்திலாண்டவரே! அடியேன் உமது அடைக்கலம். முத்தி வீட்டைத் தந்து அருள் புரிவீர்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 16

  "நாயாய்ப் பிறந்திடின் நல்வேட்டை ஆடி நயம்புரியும், தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய், காயா மரமும், வறளாம் குளமும், கல...