அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வந்து வந்து முன்
(திருச்செந்தூர்)
முருகா மரணம் அடையும்
நாளில் சரணம் தந்து ஆட்கொள்.
தந்த
தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த ...... தனதான
வந்து
வந்து முன்த வழ்ந்து
வெஞ்சு கந்த யங்க நின்று
மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ......
ழந்தையோடு
மண்ட
லங்கு லுங்க அண்டர்
விண்ட லம்பி ளந்தெ ழுந்த
செம்பொன் மண்ட பங்க ளும்ப ......
யின்றவீடு
கொந்த
ளைந்த குந்த ளந்த
ழைந்து குங்கு மந்த யங்கு
கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ......
மங்குகாலம்
கொங்க
டம்பு கொங்கு பொங்கு
பைங்க டம்பு தண்டை கொஞ்சு
செஞ்ச தங்கை தங்கு பங்க ......
யங்கள்தாராய்
சந்த
டர்ந்தெ ழுந்த ரும்பு
மந்த ரஞ்செ ழுங்க ரும்பு
கந்த ரம்பை செண்ப தங்கொள் ......
செந்தில்வாழ்வே
தண்க
டங்க டந்து சென்று
பண்க டங்க டர்ந்த இன்சொல்
திண்பு னம்பு குந்து கண்டி ......
றைஞ்சுகோவே
அந்த
கன்க லங்க வந்த
கந்த ரங்க லந்த சிந்து
ரஞ்சி றந்து வந்த லம்பு ......
ரிந்தமார்பா
அம்பு
னம்பு குந்த நண்பர்
சம்பு நன்பு ரந்த ரன்த
ரம்ப லும்பர் கும்பர் நம்பு ......
தம்பிரானே.
பதம் பிரித்தல்
வந்து
வந்து முன் தவழ்ந்து,
வெம் சுகம் தயங்க நின்று,
மொஞ்சி மொஞ்சி என்று அழும் ......
குழந்தையோடு
மண்டலம்
குலுங்க, அண்டர்
விண் தலம் பிளந்து எழுந்த,
செம்பொன் மண்டபங்களும், ...... பயின்றவீடு
கொந்து
அளைந்த குந்தளம்
தழைந்து, குங்குமம் தயங்கு
கொங்கை வஞ்சி தஞ்சம் என்று ......
மங்குகாலம்,
கொங்கு
அடம்பு கொங்கு பொங்கு
பைங் கடம்பு தண்டை கொஞ்சு
செஞ்ச தங்கை தங்கு பங்க- ...... யங்கள்
தாராய்.
சந்து
அடர்ந்து எழுந்து அரும்பு
மந்தரம், செழுங் கரும்பு,
கந்த அரம்பை, செண் பதம் கொள் ......செந்தில்வாழ்வே!
தண்
கடம் கடந்து சென்று,
பண்கள் தங்கு அடர்ந்த இன்சொல்
திண் புனம் புகுந்து கண்டு ...... இறைஞ்சு கோவே!
அந்தகன்
கலங்க வந்த,
கந்தரம் கலந்த சிந்து-
ரம் சிறந்து வந்து, அலம் ......
புரிந்தமார்பா!
அம்
புனம் புகுந்த நண்பர்
சம்பு நன் புரந்தரன்
தரம்பல் உம்பர் கும்பர் நம்பு ......
தம்பிரானே.
பதவுரை
சந்து அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம்
--- சந்தன மரம், நெருக்கமாகத் தோன்றி
அரும்பு விடும் மந்தாரம்,
செழும் கரும்பு --- செழுமையான கரும்பு,
கந்த அரம்பை --- கிழங்குடன் கூடிய வாழை
முதலியவைகள்,
செண்பதம் கொள் --- ஆகாய மட்டும் வளர்ந்து ஓங்கியுள்ள,
செந்தில் வாழ்வே --- திருச்செந்தூரில்
வாழ்பவரே!
தண் கடம் கடந்து சென்று --- குளிர்ந்த
கானகத்தைத் தாண்டிப்போய்,
பண்கள் தங்கு அடர்ந்த இன்சொல் --- பண் இசைகள்
தங்கி நெருங்கியுள்ள இனிய மொழிகளையுடைய (வள்ளியம்மையின்),
திண்புனம் புகுந்து --- வலிய தினைப்
புனத்திற் சென்று,
கண்டு இறைஞ்சு கோவே --- அவ்வம்மையைக் கண்டு
வணங்கிய தலைவரே!
அந்தகன் கலங்க வந்து --- இயமன்
அஞ்சுமாறு வந்து,
கந்தரம் கலந்த --- குகையில் சேர்ந்த,
சிந்துரம் சிறந்து வந்து --- தெய்வயானையம்மை
சிறப்புடன் நெருங்கி,
அலம் புரிந்த மார்பா --- திருப்தியுடன்
பொருந்தும் திருமார்பினரே!
அம்புனம் புகுந்த நண்பர் --- அழகிய
வனத்தில் வாழும் முனிவர்களும்,
சம்பு --- சிவமூர்த்தியும்,
நன் புரந்தரன் --- நல்ல தேவேந்திரனும்,
தரம்பல் உம்பர் --- உயர்ந்த பலதேவர்களும்,
கும்பர் --- அகத்தியரும்,
நம்பு தம்பிரானே - விரும்புகின்ற தனிப்பெருந்தலைவரே!
வந்து வந்து முன் தவழ்ந்து --- அடிக்கடி
முன்னே தவழ்ந்து வந்து,
வெம் சுகம் தயங்க நின்று --- விரும்பத்தக்க
இன்பம் விளங்க நின்று,
மொஞ்சி மொஞ்சி என்று அழும் --- பாச்சி பாச்சி
என்று அழுகின்ற,
குழந்தையோடு --- குழந்தையும்,
மண் தலம் குலுங்க --- பூதலம் தாங்கமுடியாது
குலுங்குமாறு,
அண்டர் விண்தலம் பிளந்து எழுந்த --- தேவர்கள்
வாழும் விண்ணுலகம் வரைத் தாவி எழுந்த,
செம்பொன் மண்டபங்களும் --- சிவந்த
பொன்னாலாகிய மண்டபங்களும்,
பயின்ற வீடு --- பழகிய வீடும்,
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து ---
பூங்கொத்துகள் தழுவிய கூந்தல் தழைத்து,
குங்குமம் தயங்கு கொங்கை --- குங்குமப்
பூவுடன் விளங்கும் தனங்களுடன் கூடிய,
வஞ்சி --- வஞ்சிக் கொடியனைய மனைவியும்,
தஞ்சம் என்று --- அடைக்கலம் என்று கூற,
மங்கு காலம் --- இறக்கும்போது,
கொங்கு அடம்பு --- கொங்கு மலரும், அடம்பு என்ற கொடிப் பூவும்,
கொங்கு பொங்கு பை கடம்பு --- வாசனை மிகுந்த
பசிய கடப்ப மலரும்,
தண்டை --- தண்டையும்,
கொஞ்சு செம் சதங்கை --- இனிமையாக ஒலிக்கின்ற
செவ்விய சதங்கையும்,
தங்கு --- தங்கி அழகு செய்கின்ற,
பங்கயங்கள் தாராய் --- பாத தாமரை மலர்களைத்
தந்து அருள்புரிவீர்.
பொழிப்புரை
சந்தன மரம், நெருக்கமாக வளர்ந்து அரும்புவிடும்
மந்தாரமரம், செழித்துள்ள கரும்பு, கிழங்குடன் கூடிய வாழை முதலிய மரங்கள், ஆகாயம் வரை வளர்ந்துள்ள திருச்செந்தூர்
என்னும் திருத்தலத்தில் வாழ்கின்றவரே!
குளிர்ந்த வனத்தைக் கடந்துபோய், பலவித பண் இசைகள் தங்கிய இனிய சொற்களைப்
பேசும் வள்ளிப்பிராட்டி இருந்த திண்ணிய தினைப்புனத்தில் சென்று அவ் அம்மையாரைக்
கண்டு வணங்கிய தலைவரே!
இயமன் கலங்குமாறு வந்து குகையில்
சேர்ந்த தெய்வயானையம்மை சிறப்புடன் நெருங்கி வந்து திருப்தியுடன் தழுவிய
திருமார்பை உடையவரே!
அழகிய கானகத்தில் வாழும் முனிவர்களும், சிவமூர்த்தியும், நல்ல இந்திரனும், உயர்ந்த பல தேவர்களும், அகத்திய முனிவரும் விரும்புகின்ற
தனிப்பெருந் தலைவரே!
அடிக்கடி முன்னே
தவழ்ந்து வந்து, விரும்புகின்ற
இன்பத்துடன் நின்று, பாச்சி பாச்சி என்று
அழுகின்ற குழந்தையும், மண்ணுலகமே
குலுங்குமாறு, தேவர்கள் வாழும்
விண்ணுலகம் வரை ஓங்கி உயர்ந்த சிவந்த பொன் மண்டபங்களும், பழகிய வீடும் மலர்க் கொத்துக்களுடன்
கூடிய கூந்தல் தழைந்து, குங்குமப்பூ பூசிய
தனங்களுடன் வஞ்சிக்கொடிப் போன்ற மெல்லிய
மனையாளும் அடைக்கலம் என்று கூறி வந்த, உயிர்
பிரியும்
தருணத்தில், கோங்குமலர், அடம்புமலர் நறுமணமிகுந்த பசிய கடப்ப
மலர், தண்டை, இனிது ஒலிக்கும் சதங்கை என்ற இவைகளுடன்
கூடிய தாமரைத் தாள்களைத் தந்து அருளுவீர்.
விரிவுரை
வந்து
வந்து முன் தவழ்ந்து ---
குழந்தைகள்
தாய் தந்தையரது முன்னே தங்கச் சிலைகளைப் போல் அழகாகத் தவழ்ந்து வந்து உள்ளத்தில்
உவகைத் தேனை ஊட்டும்.
மொஞ்சி
மொஞ்சி என்று அழும் ---
மொஞ்சி
- முலை. தாய்ப்பாலை விரும்பி குழந்தை அழுவதைக் குறிக்கின்றது.
மண்டலங்
குலுங்க.....மண்டபம் ---
சிறந்த
மண்டபம் மிக உயரமாகப் புதுக்கி அதில் தனவந்தர்கள் வாழ்வார். அம்மண்டபத்தின்
பாரத்தினால் பூதலங் குலுங்குகின்றது என்றும், விண்ணுலகம் கிழிபடுகின்றது என்றும்
உயர்வு நவிற்சியாக அடிகள் உரைக்கின்றனர். எத்துணைப் பெரிய வீட்டிலும்
அரண்மனையிலும் வாழ்ந்தாலும், அங்கும் இயம தூதுவர்
வந்தே தீருவர்.
தஞ்சமென்று
மங்கு காலம்
---
மனைவி
மக்கள் முதலியோர், “அந்தோ! நீர்
போகின்றீரே? எங்களுக்கு வேறு யார்
ஆதரவு? நீரே எமக்குத் தஞ்சம்; இனி நாங்கள் எவ்வாறு வாழ்வோம்? எமக்குத் துணையேது?” என்று கூறிப் புலம்பி அழுவார்கள்.
அவ்விதம் அவர் விம்மிவிம்மி அழுது புலம்ப உயிர் பிரியும்.
கொங்கு
அடம்பு ---
கோங்கு-என்பது
கொங்கு என வந்தது. அடம்பு-ஒரு கொடிப்பூ. கொங்கடம்பு என்பது கொங்கு அடம்பு எனப்
பிரிக்கப்பட்டது.
கடம்பு ---
முருகனுக்குப்
பிரியமானமலர் கடம்பு; நறுமணம் வீசும்.
’உருள்பூந் தண்தார்
புரளு மார்பினன்’ --- திருமுருகாற்றுப்படை.
`பரிமள மிஞ்சக் கடப்ப
மாலையும் அணிவோனே’ --- (மலரணி) திருப்புகழ்.
சந்து
அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம் ---
சந்து
அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம் எனப் பதச்சேதஞ் செய்க. சந்து- சந்தனம். மந்தாரம்
என்பது மந்தரம் என வந்தது.
கந்தரம்பை
---
கந்தம்-கிழங்கு.
அரம்பை-வாழை. கிழங்குடன் கூடிய வாழை.
செண்பதங்கொள்
---
சேண்
என்பது செண் என்று சந்தத்தை நோக்கி குறுகி நின்றது. சேண்- ஆகாயம். ஆகாயம்வரை ஓங்கி
வளமையுடன் வளர்ந்த அழகிய சோலைகள் சூழ அழகாகத் திகழ்கின்றது திருச்செந்தூர்.
தண்கடம் ---
குளிர்ந்த
காடு. கடம்-காடு ’கடத்திற் குறத்திப்பிரான்’ என வரும் கந்தரலங்காரத்தையும் காண்க.
பணகடங்
கடர்ந்த இன்சொல் ---
பண்கள்
தங்கு அடர்ந்த இன்சொல் என்று பதப் பிரிவு புரிக. இனிய பண்கள் தங்கி நெருங்கிய
இன்னுரைகள் பேசுகின்றவர் வள்ளியம்மை. அருண கிரிநாதர் வள்ளியம்மையின் இன்சொல்லைக்
குறித்துப் பல இடங்களில் பாராட்டிக் கூறியிருக்கிறார்.
“பாகுகனிமொழி
மாதுகுறமகள்” --- (பாதிமதி) திருப்புகழ்.
“தேனென்று பாகென்று
உவமிக்க ஒணா மொழித் தெய்வவள்ளி”
--- கந்தர் அலங்காரம்
அந்தகன்
கலங்க வந்து
---
தெய்வயானையம்மை
முருகனை மணக்குமாறு ஐராவதத்தின் மீது எழுந்தருளித் திருப்பரங்குன்றத்துக்கு
வந்தபோது, அந்த வேகத்தைக் கண்டு
இயமனும் அஞ்சினான்.
கந்தரம்
கலந்த சிந்துரம் ---
கந்தரம்-குகை.
சிந்துரம்-யானை. திருப்பரங்குன்றத்திலுள்ள குகையில் தெய்வயானையம்மை வந்தனர்.
இன்றும் திருப்பரங்குன்றத்தில் குகைக்கோயிலில் ஒரு புறம் நாரதரும், மற்றொரு புறம் தெய்வயானையம்மையும்
வீற்றிருக்க முருகவேள் அடியார்கட்குக் காட்சியளிக்கின்றார்.
அலம்
புரிந்த மார்பா ---
அலம்-திருப்தி; தெய்வயானையம்மை திருப்தியுடன்
தழுவுகின்ற திருமார்பையுடையவர் முருகர்.
அம்புனம்
புகுந்த நண்பர் ---
அழகிய
வனத்தில் நின்று தவம்புரிகின்ற நட்புடையவர்களாகிய தவ முனிவர்கள்.
சம்பு ---
சம்-சுககாரணர்; சிவமூர்த்தி.
புரந்தரன் ---
புரங்களை
வென்ற இந்திரன்.
தரம்பலும்பர் ---
தரம்-உயர்வு.
உயர்வுடைய பலதிறப்பட்ட தேவர்கள். தேவர்களில் வசுக்கள் மருத்துக்கள், ஆதித்தர்கள், உருத்திரர்கள் இப்படிப் பல பிரிவுகள்
உண்டு.
கும்பர் ---
கும்பத்தில்
பிறந்த படியால் அகத்தியருக்கு இப்பெயர் அமைந்தது.
கருத்துரை
செந்திற்குமரா! வள்ளி மணவாளா!
தெய்வகுஞ்சரி கணவா! மரணமடையும் நாளில் உமது சரணமலர் தந்து ஆண்டருள்வீராக.
No comments:
Post a Comment