திருச்செந்தூர் - 0051. கொங்கைகள் குலுங்க


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொங்கைகள் குலுங்க (திருச்செந்தூர்)

பிறவிக் கடல் விட்டு ஏறி, பெருமான் திருவடி சேர

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
     தந்ததன தந்ததன ...... தந்ததான


கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்
     கொண்டலைய டைந்தகுழல் ......     வண்டுபாடக்

கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்
     கொஞ்சியதெ னுங்குரல்கள் ...... கெந்துபாயும்

வெங்கயல்மி ரண்டவிழி அம்புலிய டைந்தநுதல்
     விஞ்சையர்கள் தங்கள்மயல் ......     கொண்டுமேலாய்

வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது
     மின்சரண பைங்கழலொ ......         டண்டஆளாய்

சங்கமுர சந்திமிலை துந்துமித தும்பவளை
     தந்தனத னந்தவென ......             வந்தசூரர்

சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ
     தண்கடல்கொ ளுந்தநகை ......        கொண்டவேலா

சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி
     தங்களின்ம கிழ்ந்துருகு ......          மெங்கள்கோவே

சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு
     சம்புபுகழ் செந்தில்மகிழ் ......         தம்பிரானே.


பதம் பிரித்தல்


கொங்கைகள் குலுங்க, வளை செங்கையில் விளங்க, இருள்
     கொண்டலை அடைந்த குழல் ......   வண்டுபாட,

கொஞ்சிய வனங்குயில்கள், பஞ்ச நல் வனங்கிளிகள்,
     கொஞ்சியது எனும் குரல்கள், ......    கெந்துபாயும்

வெங்கயல் மிரண்ட விழி, அம்புலி அடைந்த நுதல்,
     விஞ்சையர்கள் தங்கள் மயல் ......    கொண்டு,மேலாய்

வெம்பிணி உழன்ற, பவ சிந்தனை நினைந்து, னது
     மின்சரண பைங்கழலொடு ......       அண்டஆளாய்.

சங்க முரசம் திமிலை துந்துமி ததும்ப, வளை
     தந்தன தனந்த என ......              வந்த சூரர்

சங்கை கெட, மண் திகை எங்கிலும் மடிந்துவிழ,
     தண்கடல் கொளுந்த, நகை ......       கொண்டவேலா!

சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி
     தங்களின் மகிழ்ந்து உருகும் ......     எங்கள்கோவே!

சந்திர முகம் செயல் கோள் சுந்தர குறம்பெணொடு
     சம்பு புகழ் செந்தில் மகிழ் ......       தம்பிரானே.

 பதவுரை


      சங்க முரசம் --- கூட்டமான முரசு வாத்தியமும்,

     திமிலை --- திமிலை என்னும் பறையும்,

     துந்துபி ததும்ப --- பேரிகையும் ஒலிக்கவும்,

     வளை தந்தன தனந்த என - சங்குகள் தந்தன தனந்த என்று ஒலிக்கவும்,

     வந்த சூரர் --- போருக்கு வந்த சூராதிய அவுணர்கள்,

     சங்கை கெட மண்டி --- அவர்களின் எண்ணிக்கைக் கெடுமாறு நெருங்கி,

     திகை எங்கிலும் மடிந்து விழ --- எல்லாத் திசைகளிலும் இறந்து விழவும்,

     தண்கடல் கொளுந்த --- குளிர்ந்த சமுத்திரம் எரிபட்டு ஒழியவும்,

     நகை கொண்ட வேலா --- சிரித்தருளிய வேலாயுதக் கடவுளே!

         சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் --- சிவபெருமான் மகிழ்ந்து அன்புடன் கொண்ட குருநாதர் என்று கூறி,

     சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே --- வேதங்கள் தமக்குள் மகிழ்ச்சியுற்று உள்ளம் குழையும் எமது தலைவரே!

         சந்திர முகம் --- சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகமும்,

     செயல் கொள் --- குளிர்ந்த செயலையும் கொண்ட,

     சுந்தர குறம்பெணொடு --- அழகிய வள்ளியம்மையுடன்,

     சம்பு புகழ் --- சிவபிரான் புகழ்கின்ற,

     செந்தில் மகிழ் தம்பிரானே --- திருச்செந்தூரில் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள தனிப்பெருந்தலைவரே!

         கொங்கைகள் குலுங்க --- தனங்கள் அசையவும்,

     வளை செங்கையில் விளங்க --- சிவந்த கரங்களின் வளையல்கள் ஒளி செய்யவும்,

     இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட --- இருளும் மேகமும் போன்ற கூந்தலில் வண்டுகள் இருந்து பாடவும்,

     கொஞ்சிய வன குயில்கள் --- கொஞ்சுகின்ற சோலைக் குயில்களும்,

     பஞ்ச நல் வன கிளிகள் --- நல்ல பஞ்ச வர்ணக் கிளிகளும்,

     கொஞ்சியது எனும் குரல்கள் --- கொஞ்சுகின்றனவோ என்று கூறுமாறு இனிய குரலும்,

     கெந்து பாயும் வெம் கயல் மிரண்ட விழி --- தாண்டித் தாண்டிப்பாயும் வெம்மையான மீன் போல மிரளும் கண்களும்,

     அம்புலி அடைந்த நுதல் --- பிறைச்சந்திரன் போன்ற நெற்றியையும் படைத்த,

     விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய் --- மாய வித்தையுடைய பொதுமாதர் மீது மையல் கொண்டு மென்மேலும் பித்தாகி,

     வெம்பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து --- வெய்ய நோய் கொண்டு வேதனையுற்று பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்த அடியேனை, உய்ந்து கடைத் தேறவேண்டும் என்று தேவரீர் திருவுளத்தில் கருதி,

     உனது மின் சரண பைங் கழலொடு அண்ட ஆளாய் --- உமது ஒளி மிக்க இனிய வீரக்கழல் ஒலிக்கும் திருவடியில் பொருந்துமாறு ஆண்டருள் புரிவீர்.


பொழிப்புரை

         கூட்டமான முரசு வாத்தியங்களும், திமிலை என்ற பறை வாத்தியமும், பேரிகையும், ஒலிக்கவும் சங்குகள் தந்தனதனம் என்று முழங்கவும், போருக்கு வந்த சூராதி அவுணர்கள், எல்லாத் திசைகளிலும், அவர்களுடைய எண்ணிக்கைக் குறைந்து நெருங்கி விழுந்து மடியவும், குளிர்ந்த சமுத்திரம் எரிபட்டு அழியவும், சிரித்தருளிய வேலாயுதரே!

     சிவபெருமான் மகிழ்ந்து அன்பு செய்யும் குருவே என்று வேதங்கள் கூறித் தமக்குள் மகிழ்ச்சி கொண்டு குழையும்படி பெருமை கொண்ட எமது தலைவரே!

         சந்திரனைப் போல் குளிர்ந்த முகமும் குளிர்ந்த செயலும் கொண்ட அழகிய வள்ளியம்மையுடன் சிவபிரான் புகழ்கின்ற திருச்செந்தூரில் எழுந்தருளி மகிழ்கின்ற தனிப்பெருந் தலைவரே!

         தனபாரங்கள் அசையவும், சிவந்த கைகளில் வளையல்கள் விளங்கவும், இருளும் மேகமும் போன்ற கூந்தலில் வண்டுகள் பாடவும், கொஞ்சுகின்ற சோலைக்குயிலும், அழகிய பஞ்ச வண்ணக் கிளியும், கொஞ்சுகின்றனவோ என்று ஐயுறக் கூடிய குரலும், தத்திப்பாயும் வெண்மையான மீன் போன்ற மிரண்ட கண்களும், பிறைச் சந்திரனைப்போன்ற நெற்றியும் படைத்த மாயவித்தையில் வல்ல பொது மாதர்களிடம் மயக்கங் கொண்டு மிகுதியாக வெய்ய நோய் கொண்டு வேதனையுற்று பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்த அடியேனை, உய்யவேண்டும் என்று தேவரீர் திருவுளத்தில் கருதி, ஒளி மிகுந்த வீரக்கழல் அணிந்த உமது திருவடியில் சேருமாறு அடியேனை ஆட்கொண்டு அருள்புரிவீர்.

விரிவுரை

மயல்கொண்டு மேலாய் வெம்பிணி உழன்ற ---

பொதுமாதர் மீது மயல்கொண்டு அவருடன் உறவாடிய பயன், பற்பல நோய்களையடைந்து துன்புறுதல்.

அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து
 பிணியுழன்று”                  ---  (கருவடைந்து) திருப்புகழ்.

பவ சிந்தனை ---

சிந்து-சமுத்திரம்.

பவ சிந்தன் - பவக்கடலில் விழுந்தவன். பிறவிப் பெருங்கடல் என்பார் திருவள்ளுவர். ஆன்மாக்கள் பல்லூழி காலமாக அப்பெருங்கடலில் அழுந்தி அல்லுறுகின்றன.


நினைந்து உனது மின்சரண பைங்கழலொடு  
அண்ட ஆளாய் ---

நினைந்து -- “முருகா! உன் அடிமையாகிய என்னை, உனது அடிமை என்றும், நான் ஈடேற வேண்டும் என்றும், உனது திருவுள்ளத்தில் சற்று நினைத்தருள வேண்டும்” என்று சுவாமிகள் வேண்டுகின்றார்.

என்னை நினைந்து அடிமை கொண்டு,ன் இடர்கெடுத்து,
தன்னை நினையத் தருகின்றான், --- புன்னை
விரசு கமழ்சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசுமகிழ் அத்தி முகத்தான்”         --- நம்பியாண்டார் நம்பி

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
 நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே” ---  கந்தரநுபூதி

இறைவன் திருவடியில் ஞானவொளி இடையறாது வீசுவதனால் “மின் சரணம்” என்றனர்.

வீரர்கள் புனைவது வீரக்கழல், வீரர்க்கெல்லாம் சிறந்த வீராதி வீரராகிய வெற்றி வீர முருகன் திருவடியில் வீரக் கழல் விளங்குகின்றது. “கழலணிந்த திருவடி நிழலில் என்னைச் சேர்த்து ஆட்கொள்வாய்” என்று விண்ணப்பம் புரிகின்றனர்.

சங்க முரசம் ---

சங்கம்-கூட்டம்; முரசம்-முரச வாத்தியம். முரசு என்பது வெற்றிக்கு அறிகுறியாக வாசிக்கும் வாத்தியம். இசையால் விளையும் பயன் பல; போர்க்களத்தில் பேரிகை சங்கு முதலிய வாத்தியங்களை ஒலித்தால் நாடி நரம்புகள் முறுக்கேறி வீர உணர்ச்சியுண்டாகும். போரில் பெரும் ஊக்கம் உண்டாகும். இவைகட்குச் “செருப்பறை” என்றுபேர். சூரன் முதலியோர் போருக்கு இந்தப் போர்ப்பறைகளை முழக்கிக் கொண்டு வந்தனர்.


கொளுந்த நகைகொண்ட வேலா ---

ஆயிரத்தெட்டு அண்டங்களில் நிறைந்து வந்த அசுர சேனைகள் வெந்த சாம்பராகவும் கடல் எரிந்து வற்றவும் முருகவேள் சிறிது சிரித்தருளினார்.

தளத்துடன் நடக்கும் கொடுசூரர்
  சினத்தையும் உடற்சங் கரித்த மலைமுற்றும்
  சிரித்தெரி கொளுத்தும்          கதிர்வேலா”
                                                --- (சினத்தவர் முடிக்கும்) திருப்புகழ்.

சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் ---

சுருதி-வேதம். வேதம் எழுதாக் கிளவி. காது வழியே கேட்டுக் கேட்டு வருவதால் சுருதி எனப்பட்டது.

ஆதிகுருவாகிய சிவபெருமானும் மகிழ்ந்து தனக்குக் குருநாதர் என்று முருகப்பெருமானைக் கொண்ட அதி அற்புதத்தைக் கூறி வேதங்கள் உவந்து உருகுகின்றன.


சந்திரமுகஞ் செயல்கொள் சுந்தரகுறம் பெண் ---

வள்ளிநாயகியின் திருமுகம் சந்திரனைப் போல் குளிர்ந்த தன்மையுடையது. அன்றியும் அவருடைய செயல்களும் குளிர்ந்தவை. அத்தகைய உத்தம பத்தினியுடன் முருகன் செந்திலம்பதியில் எழுந்தருளியுள்ளான்.

சம்பு புகழ் செந்தில் ---

சம்பு-சுக காரணன். திருச்செந்தூர் தென் கயிலாயம். அதற்கு நிகரான திருத்தலம் யாண்டும் இல்லை. “கயிலைமலை அனைய செந்தில்” என்று திருப்புகழில் அருணகிரிநாதரே கூறுகின்றார். அதனால் சிவமூர்த்தி திருச்செந்தூரைப் புகழ்கின்றார்.

கருத்துரை

         சூர குல காலரே! செந்திற் குமாரரே! பிறவிக் கடலினின்றும் கரையேற்றி உன் பாதத்தில் சேர்த்து அருள்வாய்.


No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...