திருச்செந்தூர் - 0052. கொங்கைப் பணையில்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொங்கைப் பணை (திருச்செந்தூர்)

முருகா!
பொதுமகளிருடன் சேராமல்,
சுக நிலை பெற்று உய்ய,
திருவடி தீட்சை அருள்வாய்


தந்தத் தனனத் தந்தத் தனனத்
     தந்தத் தனனத் ...... தனதானா


கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்
     கொண்டற் குழலிற் ......     கொடிதான

கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்
     கொஞ்சுக் கிளியுற் ......     றுறவான

சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்
     சந்திப் பவரைச் ......        சருவாதே

சந்தப் படியுற் றென்றற் றலையிற்
     சந்தப் பதம்வைத் ......       தருள்வாயே

அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
     கந்திக் கடலிற் ......         கடிதோடா

அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
     றஞ்சப் பொருதுற் ......      றொழியாதே

செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
     சென்றுற் றவர்தற் ...... பொருளானாய்

சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
     செந்திற் குமரப் ......        பெருமாளே.


பதம் பிரித்தல்


கொங்கைப் பணையில், செம்பொன் செறிவில்,
     கொண்டல் குழலில், ......   கொடிதான

கொன்றைக் கணை ஒப்ப அந்தக் கயலில்,
     கொஞ்சுக் கிளிஉற்று ......   உறவான

சங்கத் தொனியில், சென்று ல் கடையில்,
     சந்திப் பவரைச் ......        சருவாதே,

சந்தப் படிஉற்று என்தன் தலையில்
     சந்தப் பதம்வைத்து ......     அருள்வாயே.

அங்கு அப் படை விட்டு, ன்றைப் படுகைக்கு
     அந்திக் கடலில் ......        கடிது ஓடா

அந்தப் பொழிலில் சந்துத் தலைஉற்று
     அஞ்சப் பொருதுஉற்று ...... ஒழியாதே,

செங்கைக் கதிர்உற்று ஒன்றக் கடலில்
     சென்று உற்றவர் தற் ......   பொருள்ஆனாய்!

சிந்தைக் கனிவைத்து அந்தப் பொழிலில்
     செந்தில் குமரப் ......        பெருமாளே.

பதவுரை

      அங்கு அப்படை விட்டு --- அங்கு அந்தச் சேனைகளை விட்டு நீங்கி,

     அன்றைப் படுகை அந்தி கடலில் கடிது ஓடா --- அந்நாளில் நீர் நிலையாகிய (வீரமகேந்திரத்திற்கு இடையில்) சந்தியாகவுள்ள கடலைக் கடந்து விரைந்து சென்று,

     அந்த பொழிலின் --- அந்த பூமியாகிய மகேந்திரபுரியில்,

     சந்து தலையுற்று --- தூதாகச் சென்று,

     அஞ்ச பொருது --- அவுணர்கள் அஞ்சுமாறு போர் செய்து,

     உற்று ஒழியாதே --- அவர்களுக்கு அஞ்சி நீங்காமல்,

     செங்கை கதிர் உற்று ஒன்ற கடலில் சென்று உற்றவர் --- சிவந்த கிரணங்களையுடைய சூரியனைப்போல் கடல் கடந்து போய் வந்தவரான வீரவாகு தேவருடைய,

     தற்பொருள் ஆனாய் --- ஆன்மார்த்தப் பொருளாக விளங்குபவரே!

      சிந்தை கனி வைத்து --- உள்ளத்தில் கனிவு கொண்டு,

     அந்த பொழிலில் --- அழகிய சோலை சூழ்ந்த,

     செந்தில் குமர --- திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!

      பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

      கொங்கை பணையில் --- பருத்த தனபாரங்களுடனும்,

     செம்பொன் செறிவில் --- சிவந்த பொன்னால் செய்த அணிகலன்களுடனும்,

     கொண்டல் குழலில் --- மேகம் போன்ற கரிய கூந்தலுடனும்,

     கொடிது ஆன கொன்றைக் கணை ஒப்பு --- கொடுமையுடன் வலிமையாகத் தைக்கின்ற அம்புக்கு நிகரானதும்,

     அந்த கயலில் ---- அழகிய மீன் போன்றதுமாகிய கண்களுடனும்,

     கொஞ்சு கிளியுற்று உறவு ஆன --- கொஞ்சுகின்ற கிளிபோல் பேசி அதற்கு உறவு கொண்ட,

     சங்க தொனியில் --- சங்கம் போன்ற இனிய குரலுடனும்,

     இல் கடையில் சென்று --- தங்கள் வீட்டின் வாயிலிற் சென்று,

     சந்திப்பவரை சருவாதே --- தம்பால் வருபவர்களைச் சந்தித்துக் கலக்கும் பொது மகளிருடன் சேராமல்,

     சந்த படி உற்று --- சுகநிலையைப் பெற்று உய்ய,

     என்றன் தலையில் --- அடியேனுடைய தலைமீது,

     சந்தப் பதம் வைத்து அருள்வாயே --- அழகிய திருவடியைச் சூட்டி அருள்புரிவீர்.


பொழிப்புரை

         அங்கு அச் சேனைகளை விட்டு நீங்கி இடையே நின்ற கடலைக் கடந்து விரைந்து சென்று வீரமா மகேந்திரபுரிக்குத் தூதாகச் சென்று, அங்குள்ள அசுரர் அஞ்சப் போர்செய்து, அவர்களிடம் தோல்வி உறாமல் சிவந்த கதிருடைய சூரியனைப்போல் விளங்கி மீண்டும் கடலைக் கடந்து வந்த வீரவாகு தேவருடைய வழிபடு மூர்த்தமாய் விளங்குபவரே!

         திருவுள்ளத்தில் கனிவுகொண்டு அழகிய சோலைச் சூழ்ந்த திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!

         பெருமையின் மிக்கவரே!

         பருத்த தனங்களுடனும், செம்பொன்னால் ஆகிய ஆபரணங்களுடனும், கரிய மேகம்போன்ற கூந்தலுடனும், கொடுமையான வலிமையுடன் தைக்கின்ற அம்புபோன்றதும் அழகிய மீன் போன்றதுமாகிய கண்களுடனும், கொஞ்சுகின்ற கிளிபோல் பேசி உறவு செய்கின்ற சங்கநாதம் போன்ற இனிய மொழிகளுடனும் தமது வீட்டின் வாயிலின் முன்வந்து நின்று, அங்குவரும் ஆடவரை மயக்கும் விலைமகளிருடன் இணங்காமல் பேரின்ப நிலைபெற்று உய்ய, அடியேனுடைய தலைமீது அழகிய திருவடியை வைத்து அருள்புரிவீர்.

  
விரிவுரை

கொங்கைப் பணையில்..........சருவாதே ---

     தம்பால் நாடி வருபவரை தலைவாயிலில் நின்று இன்னுரைக் கூறி, கண்கள் கூந்தல் முதலிய அழகிய உறுப்புகளால் இன்புறுத்திப் பொருள் பறிக்கும் பொதுமகளிர் வசப்படாது இருக்கவேண்டும்” என்று இந்த மூன்று அடிகளால் அடிகளார் கூறுகின்றனர்.

சந்தப் படியுற்று ---

     படி --- உலகம். சந்தப் படி --- அழகிய இன்ப உலகம்; முத்தியுலகம்.

என்தன் தலையில் சந்தக் கழல் வைத்து அருள்வாயே ---

     அயனார் நமது தலையில் எழுதும் கையெழுத்து அறுமுகனார் திருவடிப்பட்ட மாத்திரத்தில் அழிந்துபோகும்.

சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில், தேங் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்! அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு, என் தலை மேல், அயன் கையெழுத்தே!!
                                                                           --- கந்தரலங்காரம்.

     இறைவனுடைய திருவடி சென்னியில் சூடப் பெறுவதே பேறுகளுள் சிறந்த பேறு ஆகும். திருநாவுக்கரசு சுவாமிகள் விண்ணப்பம் செய்ய சிவபெருமான் அவருடைய சென்னியிலே மாலும் அயனும் காணாத மலரடியைத் திருநல்லூரிலே சூட்டியருள் புரிந்தார்.

நன்மைபெருகு அருள்நெறியே வந்துஅணைந்து, நல்லூரில்
மன்னுதிருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும்பொழுதில்,
உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்” என்றுஅவர்தம்
சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான். --- பெரியபுராணம்.

நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்,
     நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்,
சினந்திருகு களிற்றுஉரிவைப் போர்வை வைத்தார்,
     செழுமதியின் தளிர்வைத்தார், சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
     இனமலர்கள் போதுஅவிழ்ந்து, மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடி,என் தலைமேல் வைத்தார்,
     நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.    --- அப்பர்.

     அதுபோல், முருகவேள்பால் அருணகிரிநாதர் ’என் சென்னி மிசை திருவடி சூட்டியருளும்’ என்று இப்பாடலில் விண்ணப்பம் செய்கின்றார். அது படி சூட்டினாரோ? எனின், சூட்டியருளினார். அதனை அடியில் வரும் அருணகிரிநாதர் அமுதவாக்குகளினால் அறிக.

இபமுகவனுக்கு உகந்த இளையவ, மருக்கடம்ப,
 எனது தலையிற் பதங்கள்            அருள்வோனே” --- (களபமுலை) திருப்புகழ்.

சாடுந் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லும்அதோ,
வீடுஞ்சுரர் மாமுடி வேதமும் வெம்
காடும் புனமும் கமழும் கழலே”.           --- கந்தர்அநுபூதி.

     அளவற்ற மாதவத்தின் பயனாக அருணகிரிநாதருக்கு அத் திருவடிப்பேறு கிடைத்தது. முருகன் திருவடி வேதாகமங்களுக்கும் எட்டாதது. அது  சென்னி மிசைச் சூட்டப்பெற்ற அருணையடிகளின் பெருமை அளவிடற் கரியது.

அங்கப்படை விட்டு ---

     திருச்செந்தூரில் திருவேல் இறைவன் எழுந்தருளி, அரச தருமத்தின் படி சூரபன்மன்பால் ஒரு தூது அனுப்பி, தேவரைச் சிறை விடுமாறு அறிவுரைப் பகரவேண்டும். அவன் அச்சொற்களைக் கேட்டுத் திருந்தவில்லையானால் பின்னர்த் தண்டிப்போம் என்று கந்தவேள் கருதி, அக்கருத்தினை மாலயனாதி வானவர்பால் உரைத்தருளினார்.

     பிரமதேவர் முருகக் கடவுளைத் தொழுது, “எங்களை ஆளவந்த இளம் பூரணரே! வாயுதேவனும் கூட பேராற்றல் படைத்த சூரபன்மன் வாழும் வீரமகேந்திரபுரிக்குச் சென்று திரும்புதல் முடியாது. நாங்கள் அனைவரும் சூரன்பால் பணிவிடைப் புரிபவர்கள். அஞ்சா நெஞ்சுடன் அவன் எதிர்நின்று அறிவுதர பகரும் ஆற்றல் எமக்கு இல்லை. இதோ இங்கு இருக்கும் வீரவாகுதேவர் ஒருவரே தூதுசென்று திரும்பவல்லவராவார்” என்றனர்.

மெல்என உலவைக் கோனும் வீரமா மகேந்திரத்தின்
செல்லரிது எனக்கும் அற்றே செய்பணி நெறியால் அன்றி
ஒல்லையில் அங்கண் ஏகி ஒன்னலர்க் கடந்து மீள
வல்லவன் இளைய வீரவாகுவே ஆகும் என்றான்.

     ஆறுமுகப் பெருமான் அதுகேட்டு அது நன்று என்று “அமரர்களைச் சிறைவிடுமாறு சூரபன்மன்பால் சென்று அறிவுரைப் பகர்ந்து வருக” என்று வீரவாகுதேவரைப் பணிந்தருளினார்.

     வெற்றிவேற் பெருமான்பால் விடைபெற்ற வீரவாகு தேவர் இரு தோளும் ஒரு வாளும் உடையவராய்ப் புறப்பட்டுக் கடல் கடந்து பேருருவுடன் செல்வாராயினார். இடையில் இலங்கையைக் காவல் புரிந்த வீரசிங்கனையும் அதிவீரனையும் அங்குள்ள சேனைகளையும் அழித்து வீரமகேந்திரம் புகுந்தனர்.

     சிறைச்சாலையில் ஆற்றுவாரும் தேற்றுவாரும் இன்றித் தவித்துக் கிடந்த இந்திரன் புதல்வனாகிய, சயந்தனைத் தேற்றி, சூரபன்மன் வீற்றிருந்த அரசவை புகுந்து, முருகவேள் கருணையால் அங்கு வந்த மணித் தவிசின் மீது வீற்றிருந்து, சூரபன்மனை நோக்கி, அமரர்களைச் சிறைவிடுமாறு நல்லுரைகளும், முருகவேளின் முழுமுதல் தன்மைகளும் கூறியருளினார். அதுகேட்டு சூரன் திருந்தினானில்லை. தன்னுடன் போர் புரியவந்த அசுரர்களையும், சூரபன்மனுடைய கடைசி மகன் வச்சிரவாகுவையும், பிறரையும் கொன்று, அங்குள்ள வேரத்தைப் பிடுங்கி நகரை அழித்துவிட்டு மீண்டுங் கடலைக் கடந்து செந்தில்மா நகரஞ் சேர்ந்து கந்தநாயகனை வணங்கினார், “மூடர்கள் திருந்தார்” என மொழிந்தார். (வேரம்-செய்குன்று).

     இதனை எட்டு வரிகளில் இங்கு அடிகளார் கூறியருளினார்.

அந்திக்கடல் ---

     திருச்செந்தூருக்கும் வீரமகேந்திரபுரிக்கும் இடையிலே உள்ள கடல்.

அந்தப் பொழில் ---

அழகிய வீரமகேந்திரபுரி

சந்துத் தலையுற்று ---

சந்து --- தூது. தூது சென்று.

அஞ்சப் பொருது ---

பகைவர் அஞ்சுமாறு போர் செய்து.

ஒழியாதே ---

அவர்கள்பால் தோல்வியுறாமல்.

தற்பொருள் ஆனாய் ---

அவர் வணங்குகின்ற ஆன்மார்த்தப் பொருளாக விளங்குவோன்.


கருத்துரை

         வீரவாகு தேவர் போற்றும் வேலவரே! செந்திலாண்டவரே! அடியேன் சென்னிமேல் திருவடி சூட்டி அருள்புரிவீர்.


No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...