திருச்செந்தூர் - 0061. தகர நறை


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தகரநறை (திருச்செந்தூர்)

மனிதரைப் பாடாது, முருகனையே பாடி உய்ய

தனதனன தாந்த தந்தத்
     தனதனன தாந்த தந்தத்
          தனதனன தாந்த தந்தத் ...... தனதான


தகரநறை பூண்ட விந்தைக்
     குழலியர்கள் தேய்ந்த இன்பத்
          தளருமிடை யேந்து தங்கத் ...... தனமானார்

தமைமனதில் வாஞ்சை பொங்கக்
     கலவியொடு சேர்ந்து மந்த்ரச்
          சமயஜெப நீங்கி யிந்தப் ......    படிநாளும்

புகலரிய தாந்த்ரி சங்கத்
     தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப்
          புவியதனில் வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர்

புநிதமிலி மாந்தர் தங்கட்
     புகழ்பகர்தல் நீங்கி நின்பொற்
          புளகமலர் பூண்டு வந்தித் ...... திடுவேனோ

தகுடதகு தாந்த தந்தத்
     திகுடதிகு தீந்த மிந்தித்
          தகுகணக தாங்க ணங்கத் ...... தனதான

தனனதன தாந்த னந்தத்
     தெனநடன மார்ந்த துங்கத்
          தனிமயிலை யூர்ந்த சந்தத் ...... திருமார்பா

திசையசுரர் மாண்ட ழுந்தத்
     திறலயிலை வாங்கு செங்கைச்
          சிமையவரை யீன்ற மங்கைக் ...... கொருபாலா

திகழ்வயிர மேந்து கொங்கைக்
     குறவனிதை காந்த சந்த்ரச்
          சிகரமுகி லோங்கு செந்திற் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தகரநறை பூண்ட விந்தைக்
     குழலியர்கள், தேய்ந்த இன்பத்
          தளரும் இடை ஏந்து தங்கத் ...... தன மானார்

தமை, மனதில் வாஞ்சை பொங்கக்
     கலவியொடு சேர்ந்து, மந்த்ரச்
          சமய ஜெப நீங்கி, இந்தப் ......   படி, நாளும்

புகல் அரியதாம் த்ரி சங்கத்
     தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சி,
          புவி அதனில் வாழ்ந்து, வஞ்சித்து ...... உழல்மூடர்

புநிதம் இலி மாந்தர் தங்கள்
     புகழ் பகர்தல் நீங்கி, நின் பொன்
          புளக மலர் பூண்டு வந்தித் ...... திடுவேனோ?

தகுடதகு தாந்த தந்தத்
     திகுடதிகு தீந்த மிந்தித்
          தகுகணக தாங்க ணங்கத் ...... தனதான

தனனதன தாந்த னந்தத்
     தென நடனம் ஆர்ந்த துங்கத்
          தனிமயிலை ஊர்ந்த சந்தத் ...... திருமார்பா!

திசை அசுரர் மாண்டு அழுந்த,
     திறல் அயிலை வாங்கு செங்கை!
          சிமையவரை ஈன்ற மங்கைக்க் ......ஒருபாலா!

திகழ்வயிரம் ஏந்து கொங்கைக்
     குற வனிதை காந்த! சந்த்ரச்
          சிகர முகில் ஓங்கு செந்தில் ...... பெருமாளே.


பதவுரை

         தகுடதகு தாந்த தந்த திகுடதிகு தீந்தமிந்தித் தகுகணக தாங்கணங்கத் தனதான தனனதன தாந்தனந் தத்தென --- இந்த ஒலிக்குறிப்புடன்,

     நடனம் ஆர்ந்த --- நடனம் நிறைந்த

     துங்க --- பரிசுத்தமுடைய

     தனி மயிலை ஊர்ந்த --- ஒப்பில்லாத மயிலின் மீது ஆரோகணித்து வரும்

     சந்த திருமார்பா --- சந்தனம் அணிந்த அழகிய திருமார்பை உடையவரே!

         திகை அசுரர் மாண்டு அழுந்த --- திசையில் உள்ள அசுரர்கள் இறந்து ஒழியும்படி

     திறல் அயிலை வாங்கு செங்கை --- வலிய வேலை விடுத்தருளி சிவந்த திருக்கரத்தை உடையவரே!

         சிமயவரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா --- இமயமலை பெற்ற உமாதேவியாருக்கு ஒப்பற்ற புதல்வரே!

         திகழ் வயிரம் ஏந்து கொங்கை --- விளங்குகின்ற வைர மணிமாலை தரித்த தனபாரங்களையுடைய,

     குற வனிதை காந்த --- வள்ளியம்மையாருடைய கணவரே!

         சந்த்ர சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே --- சந்திரன் தவழும் கோபுரத்தின் மீது மேகங்கள் உலாவும் திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         தகர நறை பூண்ட விந்தைக் குழலியர்கள் --- மயிர்ச்சாந்தின் நறுமணங்கொண்ட அழகிய கூந்தலையுடையவர்களும்,

     தேய்ந்த இன்பத் தளரும் இடை --- மெலிந்ததும் இன்பத்தைத் தருவதும் ஆகிய தளர்ந்த இடை

     ஏந்து தங்க தன மானார் தமை --- தாங்குகின்ற பொன்னிறம் பொருந்திய கொங்கைகளை உடையவர்களுமான பெண்களை,

     மனதில் வாஞ்சை பொங்க --- மனதில் ஆசை மேல் எழ

     கலவியொடு சேர்ந்து --- கலவி இன்பத்துடன் கூடி,

     மந்த்ர சமய  ஜெபம் நீங்கி --- சமய நெறி, மந்திர ஜெபம் ஆகிய இவைகளை விட்டு விலகி,

     இந்தப்படி நாளும் --- இவ்வாறாக நாள்தோறும்,

     புகல அரியதாம் --- சொல்லுதற்கு அரியதாகிய

     த்ரி சங்க தமிழ் பநுவல் ஆய்ந்து கொஞ்சி --- முச்சங்கத் தமிழ் நூல்களை ஆராய்ந்து பேசியும்,

     புவியதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர் --- பூமியில் வாழ்ந்து அநேகரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும்,

     புனிதம் இலி மாந்தர் தங்கள் --- தூய்மையில்லாதவர்களும் ஆகிய மனிதர்களிடம் போய் அவர்களை,

     புகழ் பகர்தல் நீங்கி --- புகழ்ந்து பேசுதலை விடுத்து,

     நின் பொன் புளக மலர் பூண்டு வந்தித்திடுவேனோ --- தேவரீருடைய அழகுடையதும் இன்பந் தருவதுமாகிய பாதமலரைச் சிந்தையிலும் சென்னியிலும் தரித்து துதிக்கமாட்டேனோ?


பொழிப்புரை


         `தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்தமிந்தித் தகுகணக தாங்கணங்கத் தனதான தனனதன தாந்தனந்தத்தென’ என்னும் ஒலிக் குறிப்புடன், நடனஞ் செய்கின்ற, பரிசுத்தம் உடைய ஒப்பற்ற மயில் வாகனத்தின்மீது எழுந்தருளி வரும், சந்தனந் தரித்த அழகிய திருமார்புடையவரே!

         திசைகளில் வாழ்ந்த அசுரர்கள் மாண்டு அழியுமாறு வலிய வேலாயுதத்தை விடுத்த திருக்கரத்தை உடையவரே!

         இமயவரை வேந்தன் ஈன்ற பார்வதி தேவியின் திருக்குமாரரே!

         ஒளி வீசுகின்ற வைரமணி மாலை தரித்த தனபாரங்களையுடைய வள்ளி நாயகியின் கணவரே!

         சந்திரன் தவழ்கின்ற கோபுரத்தின்மீது மேகம் உலாவுகின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         மயிர்ச்சாந்து பூசிய அழகிய கூந்தலை யுடையவர்களும், தேய்ந்ததும், இன்பத்தைத் தருவதும் ஆகிய தளர்ந்த இடையானது ஏந்துகின்ற பொன்நிறமுடைய கொங்கைகளை யுடையவர்களும் ஆகிய பெண்களை, மனதில் ஆசை மிகுந்து கலவியொடு கூடி, சமய சம்பந்தமான மந்த்ர ஜெபம் முதலியவைகளை விடுத்து, இவ்வாறு நாள்தோறும், சொல்லுதற்கு அரிய மூன்று சங்கங்களின் தமிழ் நூல்களை ஆராய்ந்து பேசி, பூதலத்தில் வாழ்ந்து பலரையும் வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும் தூய்மையில்லாதவர்களுமாகிய மனிதர்களிடம் போய், அவர்களைப் புகழ்ந்து பேசுவதை விடுத்து, இன்பந்தரும் அழகிய உமது திருவடி மலரைச் சிந்தையிலும் சென்னியிலும் தரித்துப் புகழ்ந்து உய்ய மாட்டேனோ?
     
விரிவுரை

தகர நறை பூண்ட விந்தைக் குழலியர் ---

தகரம்-மயிர்ச் சாந்து-வாசனைப் பண்டம்; இதனைக் கூந்தலில் பெண்கள் அணிந்துகொள்வர்.

  தகர நறுமலர் பொதுளிய குழலியர்”       ---  திருப்புகழ்.

தேய்ந்த இன்பத் தளரும் இடை ---

பெண்களுடைய அழகிய லட்சணங்களுள் சுருங்கிய இடை ஒன்று. நூல் போன்று மெல்லிய இடையிருத்தல் வேண்டும். “தெரியாதனவும் வரிவளையார் தங்கள் மருங்கே” என்பது நள வெண்பா. தனபாரங்களைத் தாங்கமாட்டாமல் இடைத் தளர்கின்றது என்கிறார்.

மந்த்ர சமய ஜெப நீங்கி ---

மனிதனுக்கும், விலங்குகளுக்கும், உண்பதும், உறங்குவதும், உலாவுவதும், மக்களைப் பெறுதலும் பொதுவானவை. ஆகவே, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையில் உள்ள எல்லைக்கல், தெய்வவுணர்ச்சி ஒன்றே. மனிதனாகப் பிறந்ததனால் மட்டும் மனிதனாகிவிட முடியாது. மனிதத் தன்மையிருத்தல் வேண்டும். மனிதப் பண்பினை நமக்குத் தெளிவாக உணர்த்துவது சமயம்.

மந்-நினைப்பு. த்ர-காப்பாற்றுவது. நினைப்பவரைக் காப்பாற்றுவது மந்த்ரம். மந்திர ஜெபத்தால் ஆத்மசக்தி வளரும். நல்லுணவினால் உடல் வளரும். நல்ல நூல்களினால் உணர்வு வளரும். திருஐந்தெழுத்தோதிய ஆத்ம சக்தியால் அப்பரடிகள் “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்றார். அன்றிக்கல்லைத் தெப்பமாக்கிக் கடலில் மிதந்து கரை சேர்ந்தார். திருஐந்தெழுத்தை ஓதும் சிவனடியார்கள் திருமடத்தில் சமணர்கள் ஏவிய மந்திரத் தீ செல்லவில்லை.

ஆதிமந்திரம் அஞ்செழுத்து ஓதுவார் நோக்கும்
 மாதிரத்தினும் மற்றை மந்திரவிதி வருமே!”    ---  சேக்கிழார்

சாமானியமானவர்கள், சாமானியமான சில மந்திரங்களைச் செபித்து, பாம்பு தேள் முதலிய விஷபயங்களைப் போக்குவது கண் கூடு. மந்திர ராஜாவாகிய திருவைந்தெழுத்துக்கு எத்துணைப் பெருமை என்பதை உய்த்து உணர்மின்.

த்ரி சங்கத் தமிழ்ப் பநுவல் ---

மூன்று சங்கம். முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம். முதற் சங்கம் கடலால் அழிக்கப்பட்டதாகிய கபாட புரத்தில் இருந்தது. அதில் நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பது புலவர்கள் இருந்தார்கள். இடைச் சங்கம், கடலால் அழிக்கப்பட்ட தென்மதுரையில் இருந்தது. அதில் நானூற்று நாற்பத்தொன்பது புலவர்கள் இருந்தார்கள். கடைச்சங்கம் இப்போதுள்ள மதுரையில் இருந்தது. அதில் நாற்பத்தொன்பது புலவர்கள் இருந்தார்கள்.

இந்த மூன்று சங்கத்தார்கள் அனேக செந்தமிழ் நூல்களை இயற்றினார்கள். முதற்சங்க நூல்களும், இடைச்சங்க நூல்களும் கடற் கோளால் அழிந்தொழிந்தன. இந்த முச்சங்க காலத்தில் எழுந்த தமிழ் நூல்களை யெல்லாம் ஆராய்ந்து, அவற்றைப் பற்றிப் பேசிப் புலவர்கள் நல்வழிப் பட வேண்டும்.

வஞ்சித்து உழல்.....மாந்தர் தங்கள் புகழ் பகர்தல் நீங்கி ---

பிறரை மோசஞ் செய்து உழல்கின்ற மூடர்களும், தூய்மை இல்லாதவர்களும் ஆகிய மனிதர்களைப் புகழ்ந்து பாடுவது கூடாது. உயர்ந்த தமிழை அவர்கட்குப் பயன்படுத்துவது காமதேனுவின் பாலைக் களரில் சிந்துவது போலாகும். பழங்காலத்தில் பல புலவர்கள் இங்ஙனம் உழன்றனர்.

ஒரு புலவன், ஒரு உலோபியிடம் போய் இல்லாத பெருமைகளை உண்டென்று பாடினான். அந்த உலோபி இல்லை இல்லை என்றான்.

கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்,
          காடுஎறியும் அவனைநாடுஆள்வாய் என்றேன்,
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்,
          போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்,
மல்ஆரும் புயம் என்றேன் சூம்பல் தோளை,
         வழங்காத கையனை யான் வள்ளல் என்றேன்,
இல்லாது சொன்னேனுனக்கு இல்லை என்றான்,
          யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.

எனவே, இன்றிருந்து நாளை மாளுகின்ற மனிதர்களைப் புகழ்தல் கூடாது.

நின்பொற் புளகமலர் பூண்டு வந்தித் திடுவேனோ?” ---

முருகனுடைய சரணாம்புயத்தைப் புகழ்ந்து கவி பாடித் துதிக்க வேண்டும்.

முகே மே பவித்ரம் சதா தச் சரித்ரம்”

மே-என்னுடைய, முகம்-வாயானது, சதா-எப்பொழுதும், தத்-அவருடைய (முருகனுடைய), பவித்ரம் சரித்திரம்-புனிதமான சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்” என்று ஆதிசங்கரர் கூறுகின்றார்.

பாடும் பணியே பணியா அருள்வாய்”      ---  கந்தர் அநுபூதி.

நடனம் ஆர்ந்த துங்கத் தனிமயில் ---

அறுபத்துநான்கு கலைகளில் உயர்ந்தது நடனக்கலை;  அதில் வல்லவர் நடராஜப் பெருமான். எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்களில் மயில் ஒன்று; இயற்கையில் நடனஞ் செய்யவல்லது. நடராஜப் பெருமானுக்கு நீல கண்டர் என்று பேர். மயிலுக்கும் நீல கண்டம் என்று பேருண்டு. க்ரீவம் என்றால் கழுத்து. “நீளக்காள புயங்க கால நீலக்ரீவ கலாபத்தேர் விடு நீபச் சேவக” என்று அருணகிரிநாதர் மற்றொரு திருப்புகழிலும் பாடுகின்றார்.

சிமய வரை ஈன்ற மங்கை ---

அகில உலகங்களுக்கும் அன்னையாகிய ஆதி பராசக்தி, இமவான் செய்த அளவற்ற தவத்தினால், ஒரு தாமரை மலரில் திருக் குழந்தையாகத் தோன்ற இமவான் எடுத்து வளர்த்தான். அதனால் மலையரையன் மகள் என்று அம்பிகை, அளவற்ற கருணையினால், அவன்பால் வளர்ந்து அவனை மகிழ்வித்தனர்.


கருத்துரை

         மயில் வாகனரே! வள்ளி மணாளரே! செந்திற் கந்தப் பெருமானே! மனிதர்களைப் பாடாது தேவரீரையே பாடி உய்ய அருள் புரிவீர்.



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...